Sunday, October 13, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசசிகலா நடராஜன் ஊழல் பணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்!

சசிகலா நடராஜன் ஊழல் பணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்!

-

ம.நடராசன் யாரென்று கேட்டால் எவருக்கும் தெரியாது. ஆனால் ஜெயாவின் உடன்பிறவாத் தோழி சசிகலாவின் கணவன் நடராசன் அல்லது சசிகலா நடராசன் யாரென்று எல்லோருக்கும் தெரியும். ஆணாதிக்கம் கோலேச்சும் சமூகத்தில் என்னதான் பிரபலமானவராக இருந்தாலும் மனைவியின் பெயரால் அறியப்படுபவர் இந்த நடராசன். ஆனாலும் இதை வைத்து பெண்ணுரிமையின் மகத்துவம் என்று தவறாக எண்ணி விடக்கூடாது. பிரபலமற்ற பல கணவன்மார்கள் தத்தமது பிரபலமான மனைவியரின் பேரால் அறியப்படுவார்கள் என்றாலும் நடராசனின் கதை வேறு.

80களில் வீடியோக்கடை நடத்தி பிழைத்து வந்த சசிகலா பின்னர் நடராஜனின் வியூகத்தால் ஜெயாவின் அந்தப்புரத்தில் நுழைந்து உடன்பிறவா சகோதரி என்று ஜெ உருகுமளவு தலையெடுத்தார். அடுப்பங்கரை மங்கையாக இருந்தவர் கிச்சன் கேபினட்டின் குயின் மேக்கராக அவதரித்தார். இந்தப் பரிணாம வளர்ச்சியில் அரசு அதிகாரியாக இருந்த நடராசனது பங்கை பலரும் அறிந்திருக்கவில்லை. பிறகு அ.தி.மு.க எனும் மக்கள் அடித்தளமுள்ள மாஃபியா சாம்ராஜ்ஜியத்தை கட்டி மேய்த்ததோடு, கொள்ளையடித்து தரகு முதலாளியானதும் வரலாறு.

ம.நடராசன்
ம.நடராசன்

அதில் சசிகலாவின் ஒவ்வொரு அசைவும் நடராசனால் தீர்மானிக்கப்பட்டது. இடையில் ஜெயா சினம் கொண்டு நடராசனை வெளியேற்றினாலும் மறைமுக அதிகார மையங்களில் ஒன்றாக நடராசனே விளங்கினார். ஒரு வகையில் அவரை தமிழ்நாட்டின் சுப்ரமணிய சுவாமி என்றும் கௌரவமாக அழைக்கலாம். சுவாமி அளவுக்கு நகைச்சுவை உணர்வில்லை என்றாலும் தமிழ்நாட்டின் சக்திவாய்ந்த அரசியல் தரகராக நடராசன் பணியாற்றினார். எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல், அதிகார நியமனம் – பணிமாற்றம், தொழில் ஒப்பந்தங்கள், சொத்து விவகாரங்கள் என அனைத்திலும் நடரசானது பங்கு தீர்மானகரமாக இருந்தது.

குறுகிய காலத்தில் ஜெயா சசி கும்பல் முழு தமிழ்நாட்டையும் மொட்டையடிக்கும் அளவுக்கு நடராசனது வியூகம் விரிந்தது. இது போக அனைத்திந்திய அளவில் கூட்டணி, பல தேசிய பிரமுகர்களோடு நட்பும் நடராசனின் வழியாகவே இயங்கியது. பகுஜன் சமாஜ் கட்சின் இறந்து போன கன்சிராம் கூட நடராசனது நண்பர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் சு.சுவாமியான பிறகே நடராசன் மாணவர் பருவத்தில் 1967 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்றார் போன்ற கீர்த்திகள் புழுதி படிந்த வரலாற்றின் பக்கங்களிலிருந்து எடுத்து வியந்தோதப்பட்டன.

அதில் ஒன்று இவர் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது. என்ன தலைப்பில்? “மகளிர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு”! அந்த வகையில் ஜெயா-சசி எனும் இரட்டை மகளிரது முன்னேற்றத்தில் இவருக்கு முனைவர் பட்டம் நிச்சயமாகக் கொடுக்கலாம். சு.சாமி என்னதான் அரசியல் தரகராக இருந்தாலும், காமடியனாக இருந்தாலும் ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு சென்று பேராசிரியப் பணியாற்றுபவர் என்று அறிவாளியாகவும் இருப்பது போல நடரசானும் “புதிய பார்வை” எனும் இதழை ஆரம்பித்து அப்படிக் காட்டிக் கொண்டார். பத்திரிகையாளர் மணா போன்று பல எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பிழைப்புவாதம் காரணமாக இவரை வியந்து போற்றும் நபராகவும் சித்தரித்தார்கள்.

இவரது கள்ளர் சாதி பிரமுகர்கள் முக்கியமாக குடும்ப உறுப்பினர்கள் முழு அதிமுகவையும் ஆக்கிரமித்து ருத்ர தாண்டவம் ஆடுவதற்கு வழியமைத்தவரும் நடராசன்தான். இது போக காலனியாதிக்க எதிர்ப்பு வீரர்களான புலித்தேவன், மருது பாண்டியருக்கு சாதி ரீதியான விழா எடுத்து தன்னை தேவர் சாதி வெறியராகவும் காட்டிக் கொண்டார். இது போக பொங்கல் பண்டிகையை தஞ்சாவூரில் வருடாவருடம் நடத்தியும் தனது அடியாட்படையை கவனித்துக் கொண்டார். இந்த விழாக்களில் தேவர் சாதியைச் சேர்ந்த நடிகர்களும், மார்க்கெட் இல்லாத கனவுக் கன்னிகளும் கலந்து கொள்வார்கள்.

அண்ணனது கஞ்சா புகழ் செரினா கதை தனி அத்தியாயம். இனி தலைப்புக்கு வருவோம்.

ஜெயாவை விட்டு சசிகலா பிரியும் நாடகம் நடக்கும் போதும், தேர்தல் கூட்டணி கூத்துக்களின் போதும் நடராசன் என்ன சொல்கிறார் என்று கிசுகிசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு அவரை லைம் லைட்டுக்கு கொண்டு வரும். இப்போதும் அப்படித்தான். தற்போது அதிகாரத்திற்கு மயிலாப்பூர் கும்பல், சொத்துக்கு மன்னார்குடி கும்பல் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு வெளியே அடிப்பது போல் அடித்து அழுவது போல அழுது அவர்கள் நடத்தும் நாடகம் கிசுகிசு ஊடகங்களுக்கு ஜாக்பாட் சுரங்கமாக செய்திகளை வழங்குகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூரில் நடராசன் நடத்திய பொங்கல் விழவில் அவர் பேசிய பேச்சு வெளிவந்திருக்கிறது.

இனி அவரது பேச்சை படியுங்கள்: (செய்தி – தினமலர்)

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், மருதப்பா அறக்கட்டளை சார்பில் நடந்து வரும் தமிழர் கலை இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் (சசிகலா) பேசியதாவது: இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். தன் மகள் திகார் சிறையில் இருந்து விடுபட, முல்லைப் பெரியாறு பிரச்னையில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க கருணாநிதி தயங்குகிறார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னை என, அனைத்து பிரச்னைகளிலும், தமிழகத்துக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துள்ளது. கருணாநிதி, காங்கிரஸ் உறவை விலக்கிக் கொண்டால் தமிழகம் வாழ்த்தும்; இல்லையென்றால் உங்களை வீழ்த்தும். நீங்கள், “முடிவெடு’ என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது. அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் எம்.பி., தேர்தலிலும் அது எதிரொலிக்கும். முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. என் மனைவி மீது வழக்கு உள்ளது; அதனால், பொறுமையாக இருக்கிறேன். தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம். மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் என்னால் பேச முடியாது; அவசரப்பட முடியாது. “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!’ இவ்வாறு நடராஜன் பேசினார். இனி, சொந்த காரை பயன்படுத்தாமல், பொது காரை பயன்படுத்துவதாகவும், தூக்கு தண்டனையை, இந்தியாவில் ரத்து செய்ய வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் நடராஜன் தெரிவித்தார். தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.”

இதில் நடராசன் குறிப்பிட்டிருக்கும் இரண்டு விசயங்கள் நமது கவனத்தை கவருகின்றது. ஒன்று அவர் ஐயா பழ.நெடுமாறனுக்கும், மனைவி சசிகலா நடராசனுக்கும் கட்டுப்படுதல் குறித்தது. சசிகலாவுக்கு அவர் கட்டுப்படுவதை நாம் புரிந்து கொள்ளலாம். அதில் அரசியல், சொத்து, கட்சி, அதிகாரம் என்று எவ்வளவோ இருக்கின்றது. ஆனால் அவர் ஏன் பழ.நெடுமாறனுக்கு கட்டுப்பட வேண்டும்? இப்படி ஒரு அன்பான அடிமை பேசியதை ஐயா நெடுமாறனும் மறுத்திருக்கவில்லை.

பழ-நெடுமாறன்
பழ.நெடுமாறன்

ஐயா நெடுமாறனுக்கு கட்டுப்பட்டவர் நடராசன். நடரசானுக்கு கட்டுப்பட்டவர் சசிகலா. சசிகலாவுக்கு கட்டுப்பட்டவர் ஜெயா. பார்ப்பனியமும், பாசிசமும்,  கொள்ளையும் ஜெயாவுக்கு கட்டுப்பட்டவை. இனில் இந்த உறவு இழையில் ஏங்கோ இடிக்கிறதா? அது என்ன இடி?

ஐயா நெடுமாறன் தமிழகத்தில் பிரபலமானவர் என்பதை விட ஈழத்தில் பிரபலமானவர். முக்கியமாக புலிகளின் நெருக்கமான பிரமுகர். அந்த வகையில் தமிழகத்தின் புலி தூதர் என்றும் சொல்லலாம். புலி அபிமானத்திற்காக இந்து மதவெறியர்களையும் அரவணைத்துக் கொள்ளுமளவு ‘மனிதாபிமானம்’ மிக்கவர். பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற இந்துமதவெறி புரவலர்களுக்கெல்லாம் பட்டம் கொடுத்து மகிழும் ஒழுக்கமுடையவர்.

முள்ளிவாய்க்கால் போரின் போது எப்படியாவது ஜெயா வெற்றி பெற்று ஈழத்தை வாங்கி தருவார் என்ற மூடநம்பிக்கையை ஈழத்தமிழர்களிடமும், புலிகளிடமும் செல்வாக்கோடு உருவாக்கியவர். இப்படி இந்தியாவிடமும், அமெரிக்காவிடமும் லாபி வேலை செய்து ஈழப்பிரச்சினையை தீர்த்து விடலாம் என்ற அணுகுமுறை புலிகளிடமும் இருந்தது; ஐயா நெடுமாறனிடமும் இருந்தது. இன்றும் அவர் சீனப்பூச்சாண்டியை எழுதி இந்திய அரசை மனம் குளிர்விப்பவர். ஈழம் மலர்ந்தால் அது வலுவான இந்திய வெளியுறவுக் கொள்கையின் கோட்டையாக இருக்குமென்று பிரகடனப்படுத்தியவர்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும், மத்தியில் பாஜகவும் வெற்றி பெறும், பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக வேலை செய்தார். ஜெயாவை ஈழத்தாயாக போற்றுமளவு அந்த வேலை தொடர்ந்தது. பின்னர் ஈழப் போர் முடிந்து பின்னடைவுக்குள்ளானாலும் தொடர்ந்து அதிமுக பிரச்சார பீரங்கியாக செயல்படுகிறார். ஜெயாவின் சட்டசபைத் தீர்மானம் குறித்து பாராட்டுபா படித்தார். அந்த வகையில் இப்போதும் மூவர் தூக்கிற்கு ஜெயா இழைத்த துரோகம் குறித்தும் மவுனம் சாதிக்கிறார்.

இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் மேற்கண்ட இடியையும், இழையையும் புரிந்து கொள்ளலாம்.

ஆகவே நடராசன் ஏன் அப்படி பேசினார் என்பதும், ஐயா நெடுமாறனது அரசியலும் முரண்படவில்லை எனும் போது இதை புரிய வைக்க நாம் மெனக்கெட வேண்டியதில்லை.

இரண்டாவதாக நடராசன் தனது கார், வாட்ச், செயினை ஏலம்விட்டு ரூ.45 இலட்சத்தை முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்திற்காக ஐயா நெடுமாறனிடம் அளித்த செய்தியைப் பார்க்கலாம்.

இந்த ஏலம் அமெரிக்காவில் நடந்தால் கூட இப்படி வசூலாக வாய்ப்புள்ளது. அப்போதும் கூட இந்த அளவு ஏலம் கொடுத்து வாங்க நடராசன் ஒன்றும் ஜேம்ஸ்பாண்டு படத்தில் வரும் நடிகைகளின் பிகினி உடைகள் அல்ல. ஆதலால் அங்கேயும் அப்படி வசூலாகமுடியாது எனும் போது பட்டினிக்காக எலிக்கறி சாப்பிடும் தஞ்சை மாநகரத்தில் அப்படி யார் ஏலமெடுத்தார்கள் என்பது சிரிப்பதற்குரிய ஒன்று.

அது நிச்சயமாக நடராசனது பினாமிகள்தான் வாங்கியிருக்க வேண்டுமென்பது ஊரறிந்த விசயம்.

அடுத்து அந்த ஏலம் யார் எடுத்திருந்தாலும் நமக்கு பிரச்சினை அல்ல. ஆனால் நடராசனது சொத்து என்பது ஜெயா சசி கும்பலின் கொள்ளை, ஊழல் பணத்தில் வந்தது. இதை நடராசனது வீட்டு நாய் கூட மறுத்து வாதிடாது. இந்த கொள்ளை பணத்தை, இரத்தப் பணத்தை வெட்கம் கெட்டு ஐயா நெடுமாறன் ஏன் வாங்கினார் என்பதுதான் நமது கேள்வி. நடராசனது சொகுசுக் கார் இலண்டனிலிருந்து வரி கட்டாமல் மோசடி செய்து இறக்குமதி செய்யப்பட்டது என்ற போண்டா வழக்கே அண்ணாரது பெருமையை பறைசாற்றும்.

இந்திய தேசியத்திடமிருந்து தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும், இலங்கையில் ஈழம் மலர வேண்டும், அங்கே புலிகள் ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் பாடுபடும் கட்சிகள், இயக்கங்கள், குழுக்கள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. நாள்தோறும் புதிது புதிதாக தோன்றியும் வருகின்றன.

அந்த இயக்கங்கள் மூலம் தமிழக மக்களிடம் வசூலித்து அப்படி ஒரு நினைவுச்சின்னம் கட்ட முடியாதா?

ஒருவேளை அவர்களெல்லாம் லெட்டர் பேடு கட்சிகள், வசூலாகாது என்று ஐயா நெடுமாறன் நினைத்தாரென்றால் அப்படி ஒரு நினைவுச்சின்னம் கட்டாமலேயே இருந்திருக்கலாமே?

நெடுமாறன், வைகோ உள்ளிட்ட ஈழ ஆர்வலர்களை தடா, பொடாவில் போட்டு, போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள், மூவர் தூக்கை எதிர்க்கவில்லை என்பது வரை ஈழ விரோதத்தில் பாசிச சாட்சியாக இருக்கும் ஒரு கட்சியின் கொள்ளைக் காசில்தான் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க முடியுமென்றால் அது எவ்வளவு இழிவானது?

இல்லை இது புலிகளது தவறான அரசியலுக்கு கிடைத்த கவித்துவ நீதியா ?

எது எப்படியோ போகட்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள தமிழன கட்சிகள், குழுக்கள் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அந்த கொள்ளைப் பணத்தை மறுக்க வேண்டும். தூக்கியெறிய வேண்டும். நெடுமாறன் கட்டும் அந்த நினைவுச்சின்னத்தை நிராகரிக்க வேண்டும். இல்லையேல் முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களது தியாகம் உங்களை மன்னிக்காது.

  1. நியூட்ரினோ ஆராய்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன ?

    http://siragu.com/?p=1733

    நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடத்தைப் பற்றிய விரிவான தகவல்களை அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதைக் காணமுடிகிறது. நியூட்ரினோ ஆராய்ச்சி என்றால் என்ன? இந்த ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது? இந்த ஆராய்ச்சியால் கிடைக்கும் முடிவு பலன் யாது? போன்ற கேள்விகளுக்கு தேனி மாவட்ட மக்கள் விடை தேடிக்கொண்டிருக்கின்றனர். இவற்றை பொது மக்களுக்கு விளக்கிச் சொல்வதற்கு அரசு சிரத்தை எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை. இந்த அறிவியல் விளக்கங்கள் மக்களுக்குப் புரியாது என்று அரசு அதிகாரிகளும் ஆராய்ச்சியாளர்களும் கருதுகிறார்களோ என்னவோ?

    • நியூட்ரினோ என்பது அண்ட வெளியிலிருந்து எப்போதும் வந்துகொண்டிருக்கும் கதிரியக்கத் துகள். இவர்கள் புதிதாக எந்தக் கதிரியக்கத்தையும் உருவாக்கப்போவதில்லை. நியூட்ரினோ ஆராய்ச்சியால் பாதிப்புகள் இல்லை. கூடங்குளத்துடன் இதை யாராவது முடிச்சுப்போட (எந்தத்தரப்பு என்றாலும்)முயன்றாலும் அதை முறியடிக்க வேண்டும். நியூட்ரினோ ஆராய்ச்சி, இயற்பியலின் அடிப்படையான, விடை காணப்படாத சில கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க அவசியம். இதைக்கொண்டு மின்சாரமோ, ஆயுதமோ தயாரிக்க முடியாது.

  2. சம்பவம் நடந்த உடனே சவுக்கு சுடச்சுட எழுதி, கிழிகிழி என்று கிழித்து விட்டார். இப்போது தான் வினவுக்கு விழிப்பு வருகிறதா? பத்ரி, சவுக்கு என ஒரு மாதத்துக்கு முன் பிற பதிவர்கள் எழுதிய விஷயங்களாகவே தொடர்ந்து எடுத்து சுறுசுறுப்பை வெளிப்படுத்துவது அருமை!

  3. // இல்லை இது புலிகளது தவறான அரசியலுக்கு கிடைத்த கவித்துவ நீதியா ?//

    இருந்துவிட்டு போகட்டும். அதனால் என்ன? தோல்வி அடைந்துவிட்டார்கள் என்று தீர்மானித்தபின் பூனைகள் கூட புலி வேடமிட்டளைவது கண்கூடுதனே.

    இதற்ட்கு மறுமொழி எதிர்பார்காதிர்கள் சகோதரர்களே.

  4. ஈழ மக்களுக்கு கல்லரை கட்டியாச்சு இனி தமிழ் நாட்டு மக்களுக்கு கல்லரை கட்ட வேண்டியதுதான் பாக்கி

    • //இனி தமிழ் நாட்டு மக்களுக்கு கல்லரை கட்ட வேண்டியதுதான் பாக்கி//

      அதுக்கெல்லாம் ரொம்ப செலவாகும்… அதனால இப்போதைக்கு ‘அணு உலையே’ போதும்…!!!

    • கல்லறை கட்டியாச்சு…
      இனிமேல் “கல்லா”தான் கட்டவேண்டும்….

  5. ம.னடரசன் பற்றிய கருத்து சரியானதே.தமீழினநினைவு சின்னம் பற்றிய பதில்”கூடங்குளமே போதும்” பொருத்தமானது.பாராட்டத் தக்கது.நெய்வேலி பாலு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க