Thursday, June 19, 2025
முகப்புவாழ்க்கைஅனுபவம்சிரிக்க முடியாத வாழ்க்கை!

சிரிக்க முடியாத வாழ்க்கை!

-

சிரிப்பு

இன்றைக்காவது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வேலைக்குக் கிளம்ப வேண்டும் என்ற உமாவின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. கணவனின் பார்வையில் நொடிக்கு நொடி கடுகடுப்பு ஏறிக்கொண்டிருந்தது. எதுவும் வாய் கொடுக்காமல் இருப்பதே நல்லது என்று முகத்தைப் பார்க்காமல் அவள் டிபன்பாக்சை மூடிக்கொண்டிருந்தாள்.

“”ஏய்! கூப்டா திரும்ப மாட்டியா? நீதான் பெருசா வேல செஞ்சு கிழிக்கிற மாதிரி, நீ பாட்டுக்கு இருக்க? ” ஏதும் சண்டை வளர்ப்பதென்றால் இப்படி ஒரு முகாந்திரத்தில் அவன் ஆரம்பிக்கும் வழக்கத்தை அவள் அறிந்திருப்பதினால் சுருக்கமாக “”சொல்லுங்க, கவனிக்கல”  என்று அவன் கூப்பிடாவிட்டாலும் தன்மேல் பழியைப் போட்டுக் கொண்டு காது கொடுத்தாள்.

அவன் தொணத்திக் கொண்டே வந்தான்,   ”எப்படிக் கவனிப்ப? பெரிய கலெக்டர் உத்தியோகம் பார்க்கறேல்ல! தோ பார், வேலைக்குப் போனமா வந்தமானு இருக்கணும்! தேவையில்லாத பேச்சுகள்லாம் அங்க இடம் இருக்கக் கூடாது, புரியுதா”

”இப்ப என்ன தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்கேன்?”

”ஏய்! சொன்னா சரின்னுட்டு போவாம எதுத்து எதுத்துப் பேசுற?”

”என்ன விவரம்னு கேட்டா அது ஒரு தப்பா?”

”ஏய்! ரொம்பத்தான் சம்பாதிக்கிற திமிர்ல பேசிக்கிட்டே போற! வீட்டுக்காரன் சொன்னா அடக்கமா பேசக் கத்துக்க.. பதிலுக்குப் பதில் எகிர்ற!”

”தோ பாரு, நீ என்னவோ மனசுல வெச்சுக்கிட்டு பேசுற…  எனக்கு இந்த மூடிமறைச்செல்லாம் பேசத் தெரியாது, நான்  ஒழுங்கா வேலைக்கு போயிட்டுதான் வாரேன், என்ன தப்பு நடந்து போச்சுண்ணு வெளிப்படையா சொல்லு?”

பொங்கி வந்த கோபத்திலும் நிதானம் தவறாமல் அவள் வெளிப்படையாகப் பேசினாள்.  இந்தப் பேச்சுக்கே பொறுப்பாக பதில் சொல்வதற்குப் பதில் மீண்டும் தாண்டிக் குதித்தான் அவன்.

”ஆமாண்டி நீ வேலைக்குப் போற எடத்துல கண்டவங்கிட்டயும் பேசுற… சிரிச்சு சிரிச்சு வழியுற… சும்மா நீ கத்திப் பேசி சமாளிக்க முடியாது.” ”

அடச்சே! இவ்வளவு நாளா சந்தேகத்தோடதான் என்னோட குடும்பம் நடத்துனியா?… என்னையே சந்தேகப்படுறியே… சூப்பர் மார்க்கெட்ல சேல்ஸ் கேர்ளா வேல பாத்தா கண்டவங்கிட்டயும் பேசித்தான் ஆகணும். இது கூட உனக்குத் தெரியாதா? உன் மனசுல இவ்வளவு கெட்ட எண்ணத்த வெச்சுகிட்டுதான் எரிஞ்சு எரிஞ்சு விழறியா… வேண்டாம் இனிமே நா வேலைக்கே போகல, நீயே சம்பாதிச்சுக் கொடு! வெறும் வயித்தோட ஓடி ஓடிப்போய் சம்பாதிச்சுக் கொடுத்து, கடைசில நீயே என்னக் கேவலமா நெனைக்கறியே.”

”என்ன பிளாக்மெயில் பண்றியா? நீ எப்படி இருந்தாலும் நான் கேக்கக் கூடாதா? வேலைக்குப் போவாட்டி கெட.. அதுக்காக உன் இஷ்டத்துக்கு இருக்க முடியாது.. என்னமோ நீ சம்பாதிச்சுதான் குடும்பம் நெறயர மாதிரி என்னையே மெரட்டுறியா… என்ன இப்ப சந்தேகப்பட்டு அடிச்சா தொரத்திட்டாங்க… மொதல்ல வாய அடக்கு… புருஷன்னா நாலு வார்த்த கேக்கதான் செய்வான்.  சும்மா இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ஆமா!”

போகிற போக்கில் எந்தப் பொறுப்பும் இல்லாமல் தான் பேசிய வார்த்தைகளைப் பற்றி எந்த விவாதமும் இல்லாமல், முக்கியமாக சந்தேகத்துக்குக் காரணமான வேலைக்கு இனிப் போக வே-ண்டாம் என்று திடமாக எந்த முடிவையும் அறிவிக்காமல், தலைக்கேறிய தனது கோபத்தைத் தணித்துக் கொண்டவன் போல இயல்பாக அவன் நகர்ந்து போனான்.

”சீ, இதுவும் ஒரு வாழ்க்கையா,, என்று தனக்குத்தானே வெறுத்துக் கொண்டவள் என்ன செய்வது என்று யோசித்து மறுகணம் பிள்ளைகள் படிப்பு, குடும்பத்தின் சூழ்நிலை அனைத்தும் மனதில் நிழலாட தன் விருப்பத்திற்கு எதிராக வழக்கம்போல வேலைக்குக் கிளம்ப வேண்டியதாயிற்று..  காலையில் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகள் திரும்பத் திரும்ப எதிரொலித்து மனதில் வலி மிகுந்தது.. அவ்வப்போது ஈரம் கசிந்த விழிகளை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு தனக்குரிய சேல்ஸ் செக்சனில் மரம் போல் நின்றாள்.. தொலைவிலிருந்து அவளை கவனித்த சூப்பர்வைசர் நெருங்கி வந்தான்.

”என்ன உமா, காலையிலிருந்து நானும் பாக்கறேன், வர்ற கஸ்டமர சிரிச்ச மூஞ்சியோட அட்டண்ட் பண்ணாம நீ பாட்டுக்கும் ஏனோ தானோன்னு நிக்கற! வர்ற ஆளுங்ககிட்ட ஸ்மைலிங் ஃபேஸோட புரோடக்ட எடுத்துக் காட்டி கான்வாஸ் பண்ணதான உன்ன இங்க போட்டுருக்கோம் . நீ பாட்டும் உம்முன்னு ஓரமா நின்னா எதுக்கும்மா சம்பளம் குடுத்து உன்ன இங்க நிக்க வெச்சுருக்கு… நானும் உன்ன ரொம்ப நாளா கவனிச்சுக்கிட்டுதான் வர்றேன்… வர்றவங்கள பாத்து முதல்ல ஸ்மைல் பண்ணவே மாட்டங்கற.. தானா போயி இண்டரஸ்டா பேசவும் மாட்டங்கற.. இதல்லாம் தெரிஞ்சுதானம்மா வேலைக்கு வந்த! இஷ்டம் இல்லன்னா சொல்லிடும்மா, வேற ஆளா இல்ல… சும்மா கம்பெனிய கவுத்து உட்றாத…”

”இல்ல சார் சில கஸ்டமர் பேசினா டிஸ்டர்பா நினைக்கிறாங்க.. அதான்  ஒதுங்கி நின்னேன்..”
”ஏம்மா ஒதுங்கி நிக்கவா சம்பளம் தர்றோம்.. நீ மேல போயி விழ வேணாம்மா.. பக்கத்துல போயி பக்குவமா பேசு.. அவங்களா சொல்லட்டும், அப்புறம் தள்ளிக்க.. முதல்ல புரோடக்ட எடுத்து டீடெய்ல் சொல்லும்மா..”

”சார்! இன்னிக்கு இருக்கிறது வெஜிடபுள் செக்சன் சார்.. இதுல என்ன சார் கேன்வாஸ் பண்றது?”

”எங்கிட்ட இவ்வளவு பேசுறல்ல? வர்றவங்க கிட்ட வாழப்பூ பத்தி பேசு! தோ அந்த பாவக்காவ காட்டி சுகருக்கு நல்லதுன்னு சொல்லு… கேரட்ட எடுத்துக் காட்டி கண்ணுக்கு நல்லதுன்னு சொல்லேன். சொல்லவா மேட்டர் இல்ல.. வெண்டைக்கா தின்னா மூளைக்கு நல்லதுன்னு சொல்லி சரக்க காலி  பண்ணு.”  சூப்பர்வைசர் பேசப்பேச எரிச்சலையும் மீறி உமாவுக்கு மெல்லிய சிரிப்பு வந்தது.

”பாத்தியா! இப்ப சிரிக்கிற பாரு, இதே மாதிரிதான் .. சிரிச்சாதாம்மா சேல்ஸ் கேர்ளு.. இப்படி சிரிச்சுப் பேசி கலகலப்பா கஸ்டமர கவர் பண்ணுவியா! அத வுட்டுட்டு, எதயோ பறிகொடுத்த மாதிரியே நிக்குறியே.. இனிமேலாவது டிசிப்ளினா வேலய பாரும்மா.. இல்லன்னா வேலய வுட்டு தூக்க வேண்டியதுதான்.. வேற வழியே இல்ல..”

சொல்லிவிட்டு வேகமாக சூப்பர்வைசர் அடுத்த செக்சனுக்கு நகர்ந்தான்.  அடுத்த கஸ்டமர் நெருங்கி வர,  சிரிப்பதற்கு சிரமப்பட்டு அவள் முயற்சியெடுத்தாள். ப்ரெஷ்ஷாக காய்கறிகளைக் காட்ட ஒளியூட்டும் விளக்கின் வெளிச்சம் அவள் முகத்திலும் பட்டது.

__________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. சீறிப் பாயும் கணவன். சிரித்தால்தான் வேலை எனச் சொல்லும் முதலாளி. இவர்களின் இடையில் பொருளாதாரத்தின் அடிப்படையில் சிக்கிக் கொள்ளும் பெண். மொத்தத்தில் சொன்னால் இடையிலே வந்தவர்களின் வார்த்தைகளுக்கு ஏற்ப ஆடவேண்டும் ஒரு பெண். இதுவா வாழ்க்கை! கன்னி கழியாமலே,மலடி எனும் பெயரில்லாமலே தன்னந்தனியாளாக வாழமுடியும் என நினைக்கும் பெண் எப்போது பிறப்பாளோ? வாழத் துணை வேண்டும்;ஆனால் ஓர் ஆண்தான் துணை என்பதன் விளைவினால் இன்று செத்துச் செத்துப் பெண்கள் வாழ்கின்றனர்.இதுவே சிரிக்க முடியாத வாழ்க்கையாகிறது. பிறருக்காகச் சிரிப்பது பொம்மலாட்ட வாழ்க்கையே!

  2. என் பெரிய அண்ணி என் அண்ணணிடம் பட்ட கொடுமைகளை அவரது டயரியில் இருந்து எடுத்து படித்தது போல் உள்ளது. மிக நன்று.

  3. அய்யோ மொக்ச்சாமி…. தாங்கமுடியலடா……

    இத கல்வெட்டுல எலுதி.. பக்கத்துலெயெ நீயும் உக்காந்துக்கோ…..

    • //ப்ரெஷ்ஷாக காய்கறிகளைக் காட்ட ஒளியூட்டும் விளக்கின் வெளிச்சம் அவள் முகத்திலும் பட்டது.//

      இந்தியன் அண்ணே! மேலே குறிப்பிட்டுள்ள பெண்களின் இந்த கொடுமையான வாழ்க்கைக்கு குடும்பத்திலும், வெளியுலகிலும் உள்ள உங்களைப்போன்ற ஆட்கள்தான் என்பதை வரும் காலம் புரிந்து கொள்ள கல்வெட்டுள எழுதிவச்சா பயனுள்ளதுதான்.

  4. In my opinion women should dare to think of a life that is beyond marriage and children. Life within a family automatically fosters patriarchy, hence there is no point in playing a blame-game.

  5. //அடுத்த கஸ்டமர் நெருங்கி வர, சிரிப்பதற்கு சிரமப்பட்டு அவள் முயற்சியெடுத்தாள்.//

    பாவம், பரிதாபகரமான நிலைதான். ஆனால் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தாலும் இருக்கும் சிரிப்பையும் தொலைத்துக்கட்டி சிரமமே இல்லாமல் அழவைத்துவிடுவார்களே மெகா சீரியல் மகானுபாவர்கள்..

  6. எனக்கு மட்டும் தான் இந்த வாழ்க்கை என்று நினைத்தால் பெண்ணாய் பிறந்த எல்லோருக்கும் இதே நிலை தான் உள்ளது. பெண்ணாய் பிறந்தது ஒரு தவறா?

    • பெண்ணாய் பிறந்தது தவற் இல்லை.ஒரு ஆணின் துணையோடு தான் பெண் வாழ வேண்டும் என்று நிர்பந்திக்க படுவது தான் தவறு.இந்தியன் போன்ற ஆணாதிக்க திமிர் கொன்டவர்கள் ஒழியும் வரை.

  7. இந்திய சமூகம் ஆணாதிக்கம் நிறைந்தது, இந்த தலைமுறை பெண்களின் கல்வியும் பொருளாதார வலிமையும் தங்களுக்கு விடுக்கும் சவாலை எதிர்கொள்ள திறனற்ற ஆணாதிக்க வாதிகள் இத்தகய எதிர்வினை புரிவது இயல்பானதே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க