Tuesday, October 15, 2024
முகப்புசமூகம்சினிமாTHE AXE (2005): வேலை வேண்டுமா? கொலை செய்!

THE AXE (2005): வேலை வேண்டுமா? கொலை செய்!

-

’சரியான விரலை சரியான கட்டையின் மீது வைக்கும் போது இனிமையான இசை எழும்’ என்றார் மாவோ. பொதுவாக ஆங்கிலப் படங்களில் இந்த இனிமையான இசையைக் கேட்பது அரிது. உலகம் முழுவதும் மக்கள் தம் எதிரியை அடையாளம் கண்டு திரளாக “ஆக்கிரமிப்பு (Occupy)” போராட்டங்களைச் செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இனியும் முதலாளிகளை மனிதகுலக் காவலர்களாகக் காட்ட முடியாது என்பதாலோ என்னவோ, திரைப்படப் படைப்பாளிகள் மக்கள் நோக்கில் உண்மையான பிரச்சினைகளை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் பிரெஞ்சுப் படமான ‘தி ஆக்ஸ்‘.

டிரைலர்

படத்தின் கதையைப் பார்த்து விடுவோம்.

காகிதத் தொழிற்துறையில் நிபுணரும், சிறந்த மேலாளருமான புருனொ டவர்ட் பிரான்சில் வாழும் ஒரு உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் பணி புரியும் நிறுவனத்தில் ஆட்குறைப்பு காரணமாக வேலையை இழக்கிறான். இருப்பினும் இந்த வேலை இழப்பு அவனிடையே பெரிய அதிர்ச்சி எதையும் ஏற்படுத்தவில்லை. காரணம், அவனுக்கு 18 மாதச் சம்பளம் இழப்பீடாகக் கிடைக்கிறது. மேலும் தன்னைப் போன்ற திறமையான மேலாளர் பொறுப்பை வகித்தவன் இன்னொரு வேலையை எளிதாகப் பெற்று விடலாம் என்றும் மகிழ்ச்சியாக வெளியேறுகிறான்.

ஆனால், சற்றுக் காலம் கழித்து சுடும் எதார்த்தம் கன்னத்தில் அறைகின்றது. இரண்டு ஆண்டுகளாகியும் வேறு வேலை கிடைக்கவில்லை. சேமிப்புத் தொகை கரையத் துவங்குகின்றது. மனைவி சிறு சிறு வேலைகளில் சம்பாதிக்கும் குறைந்த பணத்தில் வாழும் வாழ்க்கை கடினமாகின்றது. இணையம் முதல் தொலைக்காட்சி கேபிள் வரை அனைத்து வசதிகளும் அந்தக் குடும்பத்தை விட்டு விலகுகின்றன. உணவைக் கூடச் சிக்கனமாக சமைக்க வேண்டிய மோசமான நிலைமையைத் தன் மனைவி, பிள்ளைகளுடன் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறான் டவர்ட். இடையில் பள்ளியில் படிக்கும் மகன் திருட்டு வழக்கில் சிக்குகிறான். மனைவியோ மண விலக்கு செய்யும் முடிவுக்கு வருகிறாள். எல்லாம் சேர்ந்து டவர்டின் மனநிலையைக் கொதிநிலையாக மாற்றுகின்றன.

வேலை கிடைக்க வேண்டுமானால் தனக்கு போட்டியாக இருப்பவர்களைக் கொலை செய்தால் தான் சாத்தியமென இறுதியாக முடிவுக்கு வருகிறான் டவர்ட். ஒரு போலி நிறுவனத்தின் பெயரில் காகிதத் தொழிற்சாலை மேலாளருக்கான வேலை விளம்பரம் ஒன்றைக் கொடுக்கிறான். அந்தப் போலி நிறுவனத்திற்கு வேலை கேட்டு வரும் பல்வேறு சுயவிபரப் பட்டியல்களைச் சரி பார்த்து தனக்குப் போட்டியாக இருக்கக் கூடிய திறமை மிக்க காகித மேலாளர்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து கொலை செய்ய வேண்டும். இவர்கள் அனைவரையும் கொலை செய்த பிறகு, இறுதியாக பிரான்ஸ் நாட்டின் பிரபல காகிதத் தொழிற்சாலையான ஆர்கிடியாவின் காகிதத் துறை மேலாளரைக் கொலை செய்ய வேண்டும். இதுதான் திட்டம்.

கொலை செய்ய திட்டமிட்டவரின் நிழற்படத்தை முதல் நாள் கணிப்பொறியில் அச்செடுத்து, அவர்களின் இடத்திற்குச் செல்கிறான் டவர்ட். ஆரம்பத்தில் கொலை செய்யத் தடுமாறும் டவர்ட் இறுதியில் குழப்பம் ஏதுமில்லாமல் கொல்கிறான். இப்படி ஒவ்வொருவராகக் கொல்லப்படுகிறார்கள். கடைசியில் கொலை செய்யப் போகும் நபரான ஜான் உடன் சாதாரணமாகப் பேசுகையில் அவர் காகிதத் துறையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற திட்டத்தில் இருப்பதைக் கண்டு அவரையும், வேறு வேலை கிடைத்து விட்டதால் இன்னொருவரையும் கொலை செய்யாமல் விடுகின்றான்.

இந்நேரத்தில் தொடர் கொலைகளைத் துப்பறியும் காவல்துறையினர் டவர்ட் வீட்டிற்கு வருகிறார்கள். காகிதத் தொழிலில் உள்ள மேலாண்மைத் துறை நபர்களைக் கொலை செய்தது ஜான் தான் என்றும், அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றும் சொல்கிறார்கள். கொலைப்பழி ஜான் மீது விழுந்ததில் மகிழ்ச்சி அடையும் டவர்ட், ஆர்கிடியா நிறுவனத்தின் மேலாளரையும் கொன்று விட, அந்த இடத்திற்கான நேர்முகத்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறான். மீண்டும் வசதி நிறைந்த நடுத்தர வாழ்விற்கு திரும்பும் டவர்ட், ஒரு நாள் காகிதத் தொழிற்சாலை மேலாண்மை அதிகாரியாகப் பணியாற்றும் பெண் ஒருவரைச் சந்திக்கிறான். அந்தப் பெண் டவர்ட் செய்தது போலவே அவனுடைய சுயவிபரப்பட்டியலுடன் வந்திருக்கிறாள். ‘போட்டியாளர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கும்‘ என்று படம் முடிவடைகின்றது.

வேலை-வாய்ப்புசமீப ஆண்டுகளாக உலகப் பொருளாதாரம் அதாவது முதலாளித்துவத்தால் ஆட்டுவிக்கப்படும் பொருளாதாரம் அமெரிக்கா தொட்டு கிரீஸ் வரை பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதை அறிவோம். இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், ஆட்குறைப்பு, நிறுவனங்கள் மட்டுமல்ல நாடுகளுமே திவால் ஆவது என்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. முடங்க வாய்ப்பில்லாத மூலதனமும், இலாபவெறி பிடித்து அலையும் நிறுவனங்களின் சூதாட்டப் பொருளாதாரமும் தர்க்கபூர்வமான இலக்கை அடைந்திருப்பதன் அறிகுறிதான் இந்த நெருக்கடி.

எனினும் இது அமெரிக்கா போன்ற ஒரு சில வல்லரசு நாடுகளோடு முடிந்து விடும் விடயமல்ல. முழு உலகையே சங்கிலியாகப் பிணைத்திருக்கும் முதலாளித்துவப் பொருளாதரத்தின் பிடியிலிருந்து எந்த நாடும், எந்தத் தனி நபரும் தப்பித்துக்கொள்ள முடியாது.

”உலகமயம், தனியார்மயம், தாராளமயம் எனும் மூன்று மந்திரச் சொற்கள் முழு உலகையும் மாற்றி விடும்” என்று பேசியவர்கள் கூட இன்று வெட்கப்பட்டு வாயடைத்துக் கொள்ளும் நிலை. இம்மூன்று மயத்திற்காகவும் எல்லா நாடுகளின் அரசுகளையும், கொள்கைகளையும் கூட அவர்கள் மாற்றியிருக்கிறார்கள். அப்படித்தான் தொழிற்சங்க உரிமை பறிப்பு, கேள்வி இன்றி செய்யப்படும் ஆட்குறைப்பு, அதிக நேரம் வேலை, உரிமைகள் பறிப்பு என்று பல தொழிலாளர் விரோதக் கொள்கைகள் அமல்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் எதிர்த்து பல நாடுகளின் தொழிலாளர்கள் இன்று வரை போராடுகிறார்கள்.

ஆனால் அந்தப் போராட்டத்தின் சாயலை வேலையிழந்த கதையின் நாயகன் டவர்டிடம் காண முடியவில்லையே, ஏன்?

இந்தப் படத்தில், வேலை போகும் காட்சியில் டவர்டும், அவன் மேலாளரும் ஒரு அறையில் நின்றபடி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பின்னால் பல தொழிலாளர்கள் ஆட்குறைப்பிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பார்கள். தன் 18 மாதச் சம்பளத்துடன் டவர்ட் அவர்களை எளிதாகக் கடந்து விடுகிறான். அவனைப் போன்று நிறுவனங்களின் மேலாளராகப் பணிபுரிபவர்களுக்கு போராட்டம், வேலை நிறுத்தம், முற்றுகை எல்லாம் ஆகாது. அவையெல்லாம் அநாகரீக உலகின் பொறுக்கித்தனங்கள் என்பதுதான் இந்த அதிகார வர்க்கத்தின் பால பாடம். சொல்லப் போனால் போராடும் தொழிலாளர்களை சதி செய்தோ, அடக்குமுறை செய்தோ ஒடுக்குவதுதான் இவர்களுடைய வேலை.

ஆனால் தனக்கும் வேலை இல்லை என்ற போதும் கூட அவன் இதைப் புரிந்து கொள்ளவில்லை. குறைந்தபட்சம் வேலையில்லை என்று வெளியேற்றிய நிறுவனத்தின் மேல் கூட கிஞ்சித்தும் கோபம் வரவில்லை. அதே நேரம் அவன் நினைத்தது போல வேலை கிடைப்பது எளிதல்ல என்று எதார்த்தம் உணர்த்திய போதுதான் அவனுக்கு கோபமும், ஆத்திரமும் வருகின்றது. அதுவும் கூட அவன் பயிற்றுவிக்கப்பட்ட மனநிலையைப் பெரிதும் மீறாமல்தான் வருகிறது. அதாவது தனது போட்டியாளர்களை ஒழிக்க வேண்டுமென்ற முதலாளித்துவத்தின் அரிச்சுவடியை வைத்து டவர்டும் அத்தகைய பாசிசத் தீர்வை நோக்கிப் பயணிக்கிறான். இதனால் அவனை ஒரு தேர்ந்த கொலைகாரனாகக் கருதி விட இயலாது.

முதல் காட்சியில் துப்பாக்கியுடன் தான் கொலை செய்ய வேண்டிய நபரை காரில் பின் தொடரும் டவர்ட், ஒரு கட்டத்தில் அந்த நபரைத் தவற விடுகிறான். வெறுப்புடன் அந்த நபரைத் தேடியவாறு அந்த இரவில் சாலையில் தன் வண்டியில் அலைய, ஒரு சாலையின் திருப்பத்தில் எதிர்பாராத விதமாக அந்த நபரே இவன் காரில் மோதிக் கிழே விழுகிறார். மெதுவாக, மனக் குழப்பத்துடன் அவர் மேலே காரை ஏற்றி விட்டு வேகமாக விடுதிக்குத் திரும்பி விடுகிறான். தன் அறையில் மிகவும் படப்படப்பாக நுழையும் டவர்ட், குழம்பியும், பயந்தும் போகிறான்; கைகள் நடுங்கின்றன, வாந்தியெடுக்கிறான். குற்ற உணர்ச்சி மேலிட தன் நிலமையை எண்ணி அழுகிறான்.

முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு ஒப்பீட்டளவில் ஒரு ’அமைதியான’, வசதியான வாழ்க்கை உண்டுதான். ஆனால் அந்த வாழ்வை அவர்கள் போட்டி நிறைந்த உலகில் தனியாக ஏதாவது செய்துதான் அடைய முடியும். அப்படிப் பிறக்கும் தனிநபர்வாதம், பின்பு பொருட்களை நுகரும் நுகர்வு கலாச்சாரத்தில் தனது ஆளுமையை வடித்துக் கொள்ளும் போது இவர்கள், வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்வது கூட தனிநபராகத்தான். அந்த வகையில் சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு, நேர்மை எதுவும் இந்த ஆளுமையில் இல்லை.

அதன்படி டவர்டும் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண முடியும் எனும் போது, அது சமூக ரீதியாக இருப்பதைக் கவனமாக நீக்கும்போது, இப்படித்தான் தனிநபர் வன்முறை பாதையைத் தேர்ந்து கொள்கிறது. போட்டி போட்டு சௌகரியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது போல, போட்டியை அழித்துத் தனது இடத்தைத் தக்கவைக்க நினைக்கும் டவர்டின் மனநிலை முதலாளித்துவ சமூகத்தின் இயக்கத்திற்கு முரண்படாத ஒன்று என்பதுதான் உண்மை.

ஒரு நடுத்தர வர்க்க மனிதனாகத் தெரியும் டவர்ட் தன் தவறுகளை நியாயப்படுத்த மனைவி, மக்கள் மேலிருக்கும் அன்பைக் குறிப்பிடுவதன் மூலம் தன்னைத் தேற்றிக் கொள்கிறான். குடும்பத்தின் மீதான அன்பைத் தக்கவைக்க வேலை வேண்டும். வேலை வேண்டுமென்றால் போட்டியாளர்களை அதாவது மற்ற குடும்பங்களை அழிக்க வேண்டும். முதலாளித்துவ சந்தையின் நியாயங்களை குடும்பத்திற்கும் டவர்டால் பொருத்த முடிகிறது.

வேலை-வாய்ப்பு
கொலை செய்வதின் குற்ற உணர்வை குடும்பம் ரத்து செய்கிறது

ஒருவனைக் கொலை செய்ய பின்தொடரும் போது அவன் ஒரு இரவு நேர உணவு விடுதிக்குள் நுழைகிறான். அங்கு அவன் கொலை செய்ய வேண்டிய நபர் ஒரு சர்வராகப் பணியாற்றுவதைப் பார்க்கிறான். அவர் இவனைப் போல் துப்பாக்கி எடுத்துக்கொண்டு திரியவில்லை. வேலை செய்து பிழைக்கிறார். ஆனால் அவர் மனதும் மெல்ல துப்பாக்கியை நோக்கி நகர்வதை அவர்கள் உரையாடல் காட்டுகின்றது.

அதே போல் அவரைப் பார்த்தும் டவர்ட் ’தன் தகுதிக்கு’ குறைவான வேலை செய்ய விரும்பவில்லை. கொலையை விட சர்வர் வேலை செய்து பிழைக்க வேண்டுமா என்பதுதான் அவனுக்கு எரிச்சலைக் கொடுக்கிறது. முதல் கொலையில் அவனிடம் இருக்கும் பயம், குற்றவுணர்வு  விலகி முழுமனதுடன் பிறகு வரும் கொலைகளைத் திட்டமிட்டு முடிக்கின்றான். கொலை முடிந்து தப்பித்தவுடன் குதூகலிக்கிறான். ஒவ்வொரு கொலைக்குப் பின்னும் தன் குடும்பத்தினரைப் பார்க்கும் போது முதலில் மனத் தடுமாற்றம் அடையும் டவர்ட் மெல்ல தான் வேலையை நெருங்கி வருவதைச் சொல்லி அந்தக் குற்றவுணர்ச்சியிலிருந்து வெளி வந்து விடுகிறான். அவர்கள் மகிழ்ச்சிக்காக தான் செய்வது சரி என்ற வாதம் அவன் மனச்சாட்சியைக் கேள்வி கேட்க விடாமல் வீழ்த்துகின்றது.

அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் அன்போடு விடுமுறையைச் செலவிடும் ஒரு அமெரிக்க வீரன் பணி நிமித்தமாக ஈராக் வந்து எந்த இரக்க உணர்ச்சியுமின்றி அப்பாவி ஈராக் மக்களைக் கொலை செய்வதற்கும், டவர்டின் வாழ்க்கைக்கும் என்ன வேறுபாடு?

ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஒரு அலகுதான் குடும்பம், அதன் விளைவுதான் ஒரு தனிமனிதன் எனும் போது, இங்கே டவர்ட் முதலாளித்துவ சமூகத்தின் குறியீடாக இருக்கிறான். சமூகம் கார்ப்பரேட் மயமாவது என்பது வெளியே அலங்காரங்களும், உள்ளே அழுக்கும் கொண்ட ஒரு சுரண்டல் அமைப்பு. இலாப வெறியும், சக நிறுவனங்களை மூர்க்கமாக அழிக்க நினைக்கும் முனைப்பும் ஒரு முதலாளிக்கு அடிப்படை எனும் போது அந்தப் பண்பு சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் வேறு வேறு பரிமாணங்களில் இருந்தே தீரும். அதற்கு சாட்சிதான் டவர்ட்.

இதற்கு முன் இதே பிரான்சை மையமாகக் கொண்டு ஒரு தொடர் கொலை திரைப்படம் வெளி வந்திருக்கிறது. அதை இயக்கி ,தொடர் கொலைகாரனாக நடித்தவர் சார்லி சாப்ளின். அந்தப் படம் தான் ‘மோன்ஸர் வெர்டாக்ஸ்‘. அந்தப் படத்தில் பணக்கார விதவைகளைக் கொன்று அவர்கள் பணத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றி தன் கடன்களை அடைப்பார் சாப்ளின். அவரைக் கொடும் குற்றவாளியாக கோர்ட்டில் நிறுத்தும் போது அவர் தன் தரப்பாகச் சொல்வார்,

“ஆம்! எனக்கு மூளை இருந்தது. அதை வைத்து நான் நேர்மையாகவே வாழ்ந்தேன். ஆனால் ஒரு நாள் இந்த சமூகத்திற்கு என் மூளையும், நேர்மையும் தேவையற்றதாகி விட்டது. என்னைக் கொலைகாரன், வெறியன் என்கிறீர்கள்; சரிதான். ஆனால் இந்த உலகில் தன் தேவை என்று கூறிக் கொண்டு கொலைக் கருவிகளையும், ஆயுதங்களையும் உருவாக்கும் நாடுகளை விட நான் சிறியவன். அந்த நாடுகள் போரில் கொன்ற பெண்களையும், குழந்தைகளையும் கணக்கிலெடுக்கும் போது நான் செய்த கொலைகள் சிறியவை. அவர்கள் அதையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாகச் செய்தார்கள். நான் அவர்கள் முன்னால் நிற்க தகுதியில்லாத அற்பன். ஆனால் இறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். என் இடத்தில் உங்களை நான் ஒரு நாள் பார்ப்பேன்”

பார்க்கிறோம் என்பதற்கு டவர்டின் கதையே போதுமானது. இந்தக் கதை ஒரு கற்பனை என்றாலும் இதன் களமும், கருவும் உண்மை என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் முதலாளித்துவ சமூகம் இருக்கும் வரையிலும், அதன் பொருளாதாரம் நீடிக்கும் வரையிலும் நாடுகளுக்கிடையில் மட்டுமல்ல, மனிதர்களுக்கிடையிலும் வன்முறைகள் ஓயாது.

____________________________________________

– புதிய கலாச்சாரம், மே – 2012

____________________________________________

 

  1. முதலாளித்துவ சமூகம் இருக்கும் வரையிலும், அதன் பொருளாதாரம் நீடிக்கும் வரையிலும் நாடுகளுக்கிடையில் மட்டுமல்ல, மனிதர்களுக்கிடையிலும் வன்முறைகள் ஓயாது.எந்த பிரச்சினைகளும் தீராது. வளரும். வளர்ந்துகிட்டே…….

  2. கொலை செய்ய முதலாளித்துவம் என்ன, கம்யூனிசம் என்ன?
    ஜெயமோகனின் பின் தொடரும் நிழல் கதையைப் படிக்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க