இந்த பதிவை எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
— இணைய இணைப்பு, வலை உலாவி (புரவுசர்) உங்கள் பக்கம்
— இணைய வழங்கி (சர்வர்), வேர்ட் பிரஸ் மென்பொருள் வினவு தளம் இயங்குவதற்கு.
— இந்தப் பதிவு பற்றிய விபரத்தை டுவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் அல்லது தமிழ்மணம் திரட்டியில் பார்த்து வந்திருக்கலாம்
— கூகுள் தேடல் மூலமாக வந்து சேர்ந்திருக்கலாம்.
— இன்னும் சிலர் ஆர்எஸ்எஸ் ரீடர் மூலம் வந்து சேர்ந்திருக்கலாம்.
பதிவர் வலைப்பதிவை எழுதி வெளியிட, வாசகர்களுக்கு அது கொண்டு சேர்க்கப்பட, டுவிட்டரில் 140 எழுத்துகளுக்குள் எழுதப்படும் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு படிக்கத் தர உலகளாவிய ஒரு கட்டமைப்பு செயல்பட வேண்டியிருக்கிறது. இவற்றை எல்லாம் இயக்குவது யார்? ‘முதலாளித்துவத்தின் கொடைதான் இணையம், வலைப்பதிவுகள், சமூக வலைத்தளங்கள்’ என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?
1970களில் அடித்தளமிடப்பட்ட இணையத்தில் ஆரம்பித்து கடந்த 5 ஆண்டுகளில் பிரபலமடைந்திருக்கும் சமூக வலைத்தளங்கள் வரை அனைத்தையும் சாத்தியமாக்குவதும் இயக்குவதும் உலகளாவிய பெருந்திரளான மக்கள்தான்.
— இணையம் எந்த ஒரு நிறுவனத்துக்கும், அரசாங்கத்துக்கும் சொந்தமானதில்லை.
— இணையத்தில் தேடுதல் வசதி ஒற்றை நிறுவனத்தின் பணியினால் மட்டும் உருவானது இல்லை.
— சமூக வலைத்தளங்களின் செயல்பாடு அவற்றில் பங்கு பெறும் பயனர்களால்தான் சாத்தியமாகின்றன.
இணையத்தின் தகவல் தொடர்பு முறைமை
இணையம் என்பது கணினி வலைப்பின்னல்களின் வலைப்பின்னல். இதில் எந்த ஒரு கணினி அல்லது கணினி வலைப்பின்னல் மையமானது இல்லை. ஒரு கணினி அல்லது கணினி வலைப்பின்னல் துண்டித்துக் கொண்டாலும் மீதி இருக்கும் பகுதிகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். இதுதான் இணையத்தின் அடிப்படை வடிவமைப்பு கோட்பாடு. போர்க்காலத்தில் நாட்டின் ஏதாவது ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும், மற்ற பகுதிகள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 1970களில் உருவாக்கப்பட்டதுதான் இணையம்.
தொலைபேசி இணைப்புக்கும் இணைய இணைப்புக்கும் என்ன வேறுபாடு?
சென்னையிலிருந்து ஒருவர் நியுயார்க்குக்கு ஐஎஸ்டி இணைப்பில் பேசினால், சென்னையில் இருக்கும் தொலைபேசியிலிருந்து அவரது தொலைபேசி இணைப்பகத்துக்கு கம்பி வழியாக சிக்னல் போகும், தொலைபேசி இணைப்பகத்திலிருந்து ஸ்விட்சுகள் மூலமாக அமெரிக்காவின் தொலைபேசி சேவை வழங்கும் அமைப்புக்கு செயற்கைக் கோள் அல்லது கடல் அடி கம்பி வழியாக இணைப்பு ஏற்படுத்தப்படும், அமெரிக்க தொலைபேசி சேவை நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பகத்திலிருந்து நியூயார்க் முனையில் இருக்கும் தொலைபேசிக்கு கம்பி வழியாக இணைப்பு இருக்கும். இப்படி சென்னையில் இருக்கும் வீட்டிலிருந்து நியூயார்க்கில் இருக்கும் வீடு வரை நேரடியான ஒன்றுக்கொன்றான இணைப்பு மூலம்தான் தொலைபேசியில் பேச முடிகிறது. இந்த இணைப்புகளில் ஏதாவது ஒரு இடத்தில் தடை ஏற்பட்டாலும் இணைப்பு உடைபட்டு சேவை செயலிழந்து போய் விடும்.
மாறாக, ஒருவர் சென்னையில் இருக்கும் தனது கணினியின் இணைய இணைப்பு மூலம் அமெரிக்காவில் இருக்கும் ஒரு இணைய தளத்துடன் தகவல் பரிமாறிக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சென்னை பயனர், தனது இணைய சேவை நிறுவனத்தின் கணினி வலைப்பின்னலில் ஒரு பகுதியாக இணைந்திருப்பார். அந்த வலைப்பின்னல் உலகளாவிய இணையத்தில் இணைந்திருக்கும். கணினியில் இருந்து, அனுப்பப்படும் தகவல் சிறு சிறு பொதிகளாக (பேக்கட்டுகள்) பிரிக்கப்பட்டு, அனுப்பும் கணினி/பெறும் கணினி விபரங்கள் முகவரியாக இடப்பட்டு, அனுப்பப்படும். இதை Internet Protocol (IP) அல்லது இணைய முறைமை என்று அழைக்கிறார்கள்.
இந்த பொதிகள் அனைத்தும் ஒரே, நேரடி தடத்தில் அமெரிக்கா போய்ச் சேருவது இல்லை. ஒவ்வொரு பொதியும் நெரிசல் குறைவான தடங்களில் வலைப்பின்னல்களின் ஊடே பயணிக்கும். அத்தனை பொதிகளும் அமெரிக்க கணினிக்குப் போய்ச் சேர்ந்த பிறகு அவற்றை ஒன்று சேர்த்து அமெரிக்க கணினி தகவலை புரிந்து கொள்ளும். வழியில் ஏதாவது ஒரு தடம் உடைபட்டாலும் மாற்றுத் தடத்தில் பயணித்து இலக்கை அடைந்து விடுகின்றன பொதிகள்.
உதாரணமாக சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லும் தகவலின் சில பொதிகள் சிங்கப்பூர் வழி தடத்திலும் அதே தகவலின் இன்னும் சில பொதிகள் மும்பை வழியான தடத்திலும் பயணிப்பது சாத்தியம்தான்.
இப்படியாக, உலக கணினி வலையமைப்புகள் அனைத்தும் கை கோர்த்து நிற்பதன் மூலம் உருவாவதுதான் இணையம். யாரும் அதிகார மையத்தில் உட்கார்ந்து கொண்டு இந்த போக்குவரத்தை நிர்வகிப்பது இல்லை.
இணைய தளங்கள் செயல்பட்டுக்கான ஒருங்கிணைப்பு
இணையத்தின் தொழில்நுட்பங்கள், தகவல் கொள்கைகள், பயன்பாடு இவற்றை தினசரி நிர்வாகம் செய்யும் உலகளாவிய அமைப்பு எதுவும் கிடையாது. அந்தந்த பகுதி கணினி வலையமைப்புகள் தமக்கான கொள்கைகளையும் தொழில்நுட்ப வரையறைகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
இன்டர்நெட் புரோட்டகால் முகவரி (ஐபி அட்ரஸ்) மற்றும் இணையதள பெயர் சேவை (டிஎன்எஸ்) இரண்டையும் மட்டும் நெறிப்படுத்த ஐகான் என்ற கூட்டமைப்பும், இன்டர்நெட் புரோட்டகால் (ஐபி) என்பதை தரப்படுத்த ஐஈடிஎப் (இணைய பொறியியல் செயற் குழு) குழுமமும் பல நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டு கூட்டுறவு முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இணையதள முகவரி சொல்லும் சேவை
பயனர் ஒருவர் தனது வலை உலாவியில் இணைய தளத்தின் முகவரியை அடித்ததும், இணைய தளத்துக்கான ஐபி முகவரி என்ன என்பதை தெரிவிப்பது அந்த உறவு பற்றிய விபரங்களை சேமித்து வைத்திருக்கும் டிஎன்எஸ் அமைப்பு. இன்ன இணையதளத்துக்கு (உதாரணம் : வினவு.காம்) இன்ன இணைய முகவரி எண் (உதாரணம் : xxx.xxx.xxx.xxx) என்ற உறவு அந்தந்த வகை இணைய தள முகவரிக்கான (.com, .net, .org முதலியன) மூல வழங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும்.
நாம் இணைய இணைப்பு சேவை பெறும் நிறுவனங்கள் (பிஎஸ்என்எல், ஏர்டெல் போன்றவை) இணைய தள முகவரி<-> இணைய எண் முகவரி உறவுக்கான தரவுத் தளத்தை மூல வழங்கிகளிலிருந்து பெற்று தாமும் சேமித்து வைத்து கொள்ளலாம். இது போன்று டிஎன்எஸ் தரவுத் தளங்களின் ஆயிரக்கணக்கான பிரதிகள் உலகெங்கிலும் பயன்பாட்டில் இருக்கின்றன. திறமையும் ஆர்வமும் இருந்தால் நீங்கள் கூட இலவசமாக சமூக உருவாக்கத்தில் கிடைக்கும் டிஎன்எஸ் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி இணையதள முகவரி விபரங்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஒரு வேளை மூல வழங்கிகளின் சேவை தடைப்பட்டு போனாலும் இணையத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் நகல்களைப் பயன்படுத்தி இணையம் தொடர்ந்து இயங்கும்.
இணைய பக்கங்களின் தர வரிசை நிர்ணயம்
வலை தேடுதலை எடுத்துக் கொள்வோம். 1990களின் பிற்பகுதிகளில் ஒரு இணைய பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றை வகைப்படுத்தும் தேடு எந்திரங்கள் செயல்பட ஆரம்பித்திருந்தன.
அந்த காலத்தில் இணைய தளங்களை குறிப்பிட்ட வகைகளின் கீழ் அட்டவணைப்படுத்தி வைப்பதுதான் யாஹூவின் அணுகுமுறையாக இருந்தது. இணைய தளம் நடத்தும் ஒருவர் (வினவு) யாஹூவின் தேடல் சேவைக்குப் போய் தனது தளத்தை சமர்ப்பிக்க வேண்டும். தளத்தை எந்த குறிச்சொல்லின் கீழ் வகைப்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கலாம். அதை யாஹூ ஊழியர் ஒருவர் பரிசீலித்து, குறிப்பிட்ட தேடுசொல் எத்தனை முறை தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மதிப்பிட்டு வினவு தளம் எந்த வகையின் கீழ் வரும் என்று முடிவு செய்து யாஹூ தரவுத் தளத்தில் சேர்த்து விடுவார்.
பயனர் ஒருவர் தேட வரும் போது, யாஹூவின் வகைப்பாடுகளை கிளிக்கிக் கொண்டே போய் தான் தேடும் வலைத்தளத்தைப் போய் அடையலாம்! ஆனால், இப்படி ஒரு வணிக நிறுவனமும், சில நூறு அல்லது சில ஆயிரம் ஊழியர்களும் சேர்ந்து வெகுவேகமாக வளர்ந்து வரும் வலைப் பக்கங்களை வகைப்படுத்தி தேடுபவர்களுக்கு கொண்டு சேர்க்க முடியாது என்பது சீக்கிரமே தெரிய வந்தது. இந்த சிக்கலான உலகளாவிய பணிக்கு உலகளாவிய சமூக உழைப்பை ஈடுபடுத்த வேண்டியிருந்தது.
கலிபோர்னியாவின் ஸ்டேன்போர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த செர்ஜி ப்ரின், லேரி பேஜ் என்ற ஆராய்ச்சி மாணவர்கள் இணைய பக்கங்களை வரிசைப்படுத்தும் சமூக அடிப்படையிலான முயற்சியை ஆரம்பித்தனர். இணைய பக்கங்களின் வரிசை மதிப்பை அவை மற்ற இணைய பக்கங்களுடன் கொண்டிருக்கும் உறவின் அடிப்படையில் தீர்மானிக்கும் உத்தியை அவர்கள் பரிந்துரைத்தனர்.
‘ஒவ்வொரு சொல்லுக்கும் பொருத்தமான இணைய பக்கங்களை திரட்டி அவற்றுக்கு தரவரிசை அளித்து அந்த சொல்லைத் தேடுபவர்களுக்கு தரவரிசையின்படி பக்கங்களை காட்டலாம்’ என்ற அடிப்படையில் தரவரிசையை நிர்ணயிப்பதற்கான விதிமுறைகளை வரையறுத்தார்கள்.
ஒரு இணைய பக்கத்தின் தரவரிசையை யார் நிர்ணயிப்பார்கள்? மற்ற இணைய தளங்களும், தேடும் பயனர்களும்தான்.
1. ‘இணையம்’ என்ற குறிச்சொல் வினவு தளத்தின் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். ‘இணையம்’ என்ற குறிச்சொல்லுக்கு எதிராக அந்த கட்டுரையின் இணைய முகவரி (யுஆர்எல்) சேர்க்கப்பட்டு விடும்.
2. மற்ற இணைய தளங்களிலிருந்து அந்த கட்டுரைக்கு எத்தனை இணைப்புகள் (லிங்குகள்) கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து அதன் தரவரிசை நிர்ணயிக்கப்படும். அதாவது, கட்டுரையின் தரவரிசை, அந்த கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பொறுத்து மட்டுமின்றி, மற்ற தளங்களிலிருந்து தரப்பட்டுள்ள இணைப்புகளையும் பொறுத்து உள்ளது.
3. அப்படி கொடுக்கப்பட்ட இணைப்புகளில் ‘இணையம்’ என்ற குறிச்சொலுக்கு எதிராக அதிக தரவரிசை மதிப்பீடு உடைய இணைய தளங்களிலிருந்து கொடுக்கப்படும் இணைப்புகள் அதிக மதிப்புடையனவாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இத்தகைய அடிப்படையில் இணையத்தின் கோடிக்கணக்கான பக்கங்கள் வரிசைப்படுத்தப்பட்டு தரவு தளத்தில் சேமிக்கப்படுகின்றன. ‘இணையம்’ என்ற சொல்லை தேடுபவருக்கு தர வரிசையின்படி பக்கங்கள் காண்பிக்கப்படுகின்றன.
4. ‘இணையம்’ என்ற சொல்லை தேடிய பயனர் குறிப்பிட்ட பக்கத்தை கிளிக் செய்து போனால், அவருடைய தேர்வு அந்த பக்கத்துக்கு கூடுதல் மதிப்பெண்களை ஈட்டித் தரும். இது போன்று ஆயிரக்கணக்கான பயனர்கள் தமது தேர்வுகள் மூலம் பக்க வரிசைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அதாவது தேடுதல் முடிவுகளின் பக்க வரிசை,
அ. பிற இணைய தளங்களிலிருந்து கொடுக்கப்படும் இணைப்புகளாலும்
ஆ. தேடுதல் சேவையை பயன்படுத்தும் பயனர்களாலும்
தீர்மானிக்கப்படுகின்றன.
இணையமும், இணைய தளங்களை தேடி தேவையான விபரங்களை பெறும் முயற்சியும் உலகம் முழுவதும் பரந்திருக்கும் மக்களின் கூட்டு முயற்சியில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த தேடுதல் அமைப்புக்கான கட்டமைப்பை உருவாக்கி, இயக்கி, பராமரிக்கும் தேவையான பணியை வணிக நிறுவனங்கள் செய்கின்றன. ஆனால், பயனர்களும் இணையதள உருவாக்குனர்களும்தான் அது செயல்படுவதை சாத்தியமாக்குகிறார்கள். சமூகத்தின் கட்டமைப்பு முதலாளித்துவ அடிப்படையில் இருப்பதால் மட்டுமே முதலாளித்துவ நிறுவனங்கள் பராமரிப்புப் பணியில் ஈடுபடுகின்றன.
கூகுளின் படங்கள் தேடும் சேவையை எடுத்துக் கொள்வோம்.
ஒரு புகைப்படம் அல்லது வரைபடத்தை எந்த குறிச்சொல்லுடன் இணைத்து வைப்பது? படத்தை தனது இணைய தளத்தில் இணைத்திருக்கும் நிறுவனம் அல்லது நபர் சில சொற்களை சேர்த்திருக்கலாம். ஆனால் அதை மட்டும் நம்பியிராமல் பரந்து பட்ட மக்களின் கணிப்பின் அடிப்படையில் படத் தேடலை உருவாக்க கூகுள் ‘பட குறிச்சொல்லிடுதல்‘ (இமேஜ் லேப்லர்) என்ற விளையாட்டை உருவாக்கியது. இரண்டு ஆட்டக் காரர்களுக்கு ஒரே படம் (சச்சின் டெண்டுல்கரின் புகைப்படம் என்று வைத்துக் கொள்வோம்) காண்பிக்கப்படும். அவர்கள் இருவரும் வேறு எந்த வழியிலும் தகவல் பரிமாறிக் கொள்ள முடியாது. ‘அந்தப் படம் எந்தெந்த சொற்களை (சச்சின், டெண்டுல்கர், கிரிக்கெட், இந்தியா) குறிக்கிறது என்று எதிராளி ஊகிப்பார்’ என்று இருவரும் ஊகிக்க வேண்டும். எதிராளி ஊகித்த அதே சொல்லை உள்ளிட்டால் புள்ளிகளை ஈட்டலாம்.
அடுத்த 5 ஆண்டுகளில் பல ஆயிரக் கணக்கானோர் இந்த விளையாட்டை விளையாடியதன் மூலம் இலட்சக்கணக்கான படங்களுக்கு பொருத்தமான தேடுதல் சொற்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். அதன் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டதுதான் கூகுளின் இன்றைய படத் தேடல் சேவை.
சமூக வலைத்தளங்களின் பொருளாதார அடிப்படை
பேஸ்புக், டுவிட்டர், கூகுள்+ போன்ற சமூக வலைத்தளங்களின் மதிப்பை உருவாக்குவது அவற்றைப் பயன்படுத்தும் பயனர்கள்தான்.
1. கூகுள் நிறுவனம் வழங்கும் இணைய தேடுதல் சேவையின் முடிவுகள் காட்டப்படும் போது விளம்பரங்களும் தனியாக காட்டப்படுகின்றன. பயனர் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்து விளம்பரதாரரின் தளத்துக்குப் போனால் கூகுள் விளம்பரதாரரிடமிருந்து வருமானம் ஈட்டுகிறது.
2. இந்த விளம்பரதாரர்களை தேடிப் பிடித்து விற்கும் பணியைக் கூட கூகுள் நிறுவன ஊழியர்கள் செய்ய வேண்டியதில்லை.
குறிப்பிட்ட தேடும் சொல்லுக்கு தமது விளம்பரத்தைக் காட்டுவதற்கு ஆயிரக்கணக்கான சிறு-நடுத்தர-பெரிய விளம்பரதாரர்கள் கூகுள் ஆட்வேர்ட்ஸ் மூலம் போட்டி போடுகிறார்கள். உதாரணமாக, ‘சென்னை வீடு வாடகைக்கு’ என்ற பதம் தேடப்படும் போது தனது விளம்பரம் காட்டப்பட ஒரு கிளிக்கிற்கு எவ்வளவு கட்டணம் தரத் தயார் என்று ஒருவர் தனது ஏலத் தொகையை சமர்ப்பிக்க வேண்டும். அதிக தொகை சொல்பவரின் விளம்பரம் முதலில் காட்டப்படும்.
3. இந்த விளம்பரங்களை காட்டுவதற்கான களத்தை விரிவாக்க புதிய புதிய சேவைகளுக்கான தளங்களை உருவாக்குகிறது கூகுள். ‘இலவசமாக’ வலைப்பதிவுகள், வீடியோ சேவை, புகைப்படங்கள் சேவை போன்றவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது. ஒரு வலைப்பதிவில் எழுதப்பட்டிருக்கும் விஷயத்துக்குப் பொருத்தமான விளம்பரங்கள் (எழுப்பட்டிருக்கும் சொற்களின் அடிப்படையில்) அதன் பக்கங்களில் காட்டப்படுதற்கு விளம்பரதாரர்கள் போட்டி போடுவார்கள். அந்த விளம்பரங்களை கிளிக் செய்து போனால் அவர்கள் கூகுளுக்கு கட்டணம் செலுத்துகிறார்கள்.
அந்த வருமானத்தின் ஒரு பகுதியை வலைப்பதிவர்களுடன், வீடியோ உருவாக்குனர்களுடன் பகிர்ந்து கொள்கிறது கூகுள். இதற்காக ஆட்சென்ஸ் என்ற திட்டத்தை நடத்துகிறது.
4. ‘இலவசமாக’ வழங்கும் மின்னஞ்சல் சேவையில், பயனருக்கு வந்திருக்கும் மின்னஞ்சலை படித்துப் பார்க்கும் கூகுளின் மென்பொருள் மூலம் அதில் இருக்கும் சொற்களுக்குப் பொருத்தமான விளம்பரங்கள் ஆட்வேர்ட்ஸ் மூலம் காண்பிக்கப்படுகின்றன. கிளிக்குகளுக்கு வரும் வருமானம் முழுமையாக கூகுளுக்குப் போய்ச் சேருகிறது.
கூகுளின் இந்த வணிக மாதிரியின் இன்னும் விரிவான வெற்றிகரமான செயல்பாடுதான் பேஸ்புக். ‘நெய்க்கு தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா’ என்று தர்க்கம் செய்த மாணவன், ‘பேஸ்புக்குக்கு பயனர்கள் ஆதாரமா, பயனர்களுக்கு பேஸ்புக் ஆதாரமா’ என்று கேட்டிருந்தால் பயனர்கள் இல்லாமல் பேஸ்புக் இல்லை என்று அறுதியாக சொல்லியிருப்பான்.
மைதானத்தில் பெரிய பந்தல் போட்டு, ஊரெங்கும் நோட்டிஸ் ஒட்டி பிரபலமாக்குவதுதான் பேஸ்புக்கின் வேலை. கூட்டம் சேர சேர பந்தலை விரிவுபடுத்துவது, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது இவைதான் தொடரும் அதன் பணிகள். கூட்டமாக சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளத்தான் வந்திருக்கிறார்கள். சிறு சிறு குழுக்களாக குழுமிக் கொள்கிறார்கள். ஒரு குழுவில் நடனம் நடக்கிறது, ஒரு குழுவினர் நாடகம் போடுகின்றனர், ஒருவர் பாட்டு பாடுகிறார், ஒருவர் உரையாற்றுகிறார், ஒருவர் சமையல் செய்கிறார், ஒருவர் குடிநீர் வழங்குகிறார். கூட்டத்தை நடத்துவது வந்திருக்கும் மக்கள்தான்.
அப்படி கூடும் மக்களுக்கு பொருட்களை விற்க கடை போட வருமாறு வணிகர்களை வரவழைத்து கட்டணம் வசூலித்து வருமானம் பார்ப்பதும் பேஸ்புக்கின் வேலைகளில் ஒன்று.
பயனர்களின் புகைப்படங்கள், கருத்துரைகள், தொடர்புகள் அனைத்தும் பேஸ்புக்குக்கு பணம் சம்பாதித்துத் தரும் கறவை மாடுகள்தான். பேஸ்புக்கில் சேர்க்கப்படும் ஒவ்வொரு புகைப்படமும், அதில் எழுதப்படும் ஒவ்வொரு கருத்துரையும், அதில் தொடங்கப்படும் ஒவ்வொரு விவாதக் குழுவும், அதில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு விளையாட்டும் பேஸ்புக்கின் விளம்பர சந்தையை விரிவாக்கி அதன் வருமானத்தை பெருக்குகின்றன. அந்த வருமானத்தில் ஒரு பகுதியின் மூலம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுபவைதான் அதன் சேவைகள்.
இப்படி தான் பராமரிக்கும் சேவையை பயன்படுத்துகின்ற பயனர்களை பொதிந்து விற்று சம்பாதித்ததுதான் பேஸ்புக்கின் சென்ற ஆண்டு வருமானமான 1 பில்லியன் டாலர் (சுமார் 5,000 கோடி ரூபாய்). அந்த வருமானத்தின் அடிப்படையில் நடக்கும் பங்குச் சந்தை சூதாட்டம்தான் பேஸ்புக் பங்குகளை வெளியிடும்போது தீர்மானிக்கப்பட்ட அதன் மதிப்பான 100 பில்லியன் டாலர் (சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்).
இணையமும் அதில் கிடைக்கும் ‘இலவச’ சேவைகளும் உலகம் முழுவதும் வசிக்கும் மக்கள் தமது சமூக உழைப்பால் உருவாக்கும் சாத்தியங்கள்தான். அதே போல நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் சேவைகளும் சமூக உழைப்பின் மூலமே நம்மை வந்தடைகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
_________________________________________
– அப்துல்
_________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
புரிந்து கொள்வதில் சிரமம் இரந்தாலும்,என்வாயை பிளக்க வைக்கின்றன.
அருமையான பதிவு. இனியாவது பொதியமான்கள் இணையத்தில் வினவு எழுதுவது கூட முதலாளித்துவத்தின் மிகப்பெரிய கருணை என்பது போல் உளர வேண்டாம். எப்பா ! இதுவரை காதுகிழிய கத்திய முதலாளித்துவ தவக்களைகள் இனிமேல் குரங்காக மாறி வேறு ஒரு லிங்குக்கு (விக்கியோ எதுவோ) போய் விடுவார்கள்.
அருமையான பதிவு.இன்னொன்றும் படித்தேன்.
//மார்க்சியம் உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் உற்பத்திக் கருவிகளின் தனியுடமைக்கும் இடையிலான முரணின் அடிப்படையாக சமூகப் பிரச்சினைகளைப் பார்க்கிறது. டாடா தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளியோ அல்லது தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவரோ செலுத்தும் உழைப்பானது சமூகத்திற்கானதே. அதனை உற்பத்திக் கருவிகளின் மீதான தன்னுடைய உரிமையின் காரணமாக முதலாளி தனியுடமை ஆக்கிக் கொள்வதைத்தான் மார்க்சியம் எதிர்க்கிறது. இதன் அர்த்தம் என்பது அந்தத் தொழிலாளிகள் தொழிற்சாலையை புறக்கணித்து அதிலிருந்து வெளியேற வேண்டும் எனபதல்ல மார்க்சியம். மாறாக உற்பத்திக் கருவிகளின் மீதான முதலாளிகளின் உரிமையை ரத்து செய்யப் போராடுவதும், தனியுடமைக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சமூக அமைப்பை உருவாக்குவதை லட்சியமாகக் கொள்வதுமே மார்க்சியம். அச்செயலே அத்தொழிலாளர்களின் படைப்பாற்றலையும், ஆளுமைத்திறணையும் வளர்ப்பதற்கான அடிப்படையாகும். அதுவே அனைத்து வகையான சமூக முரண்களையும் இறுதியாக ஒழிப்பதற்கான அடிப்படையாகும்.//
http://naatkurippugal.wordpress.com/2012/06/21/internetdebatesandleftpolitics/
நாங்கள் ubuntu இயக்குத்தளத்தின் மென்பொருள் வல்லுனராக volunteerயாக வேலை செய்கிறோம். எங்கள் பணி இந்த இயக்குத்தளத்தை தமிழ் மொழிப்பெயர்ப்பில் சுமார் 120 வல்லுனர்கள் ஆர்வலர்கள் ஓர் சேவையாக செய்து வருகிறோம். எங்களின் பாதகம் தமிழைப் பிழையாக எழுதுவது. அதனைத் திருத்துவதும் எங்களின் கடினமான பணிகளில் ஓன்று.
தமிழ் ஆசிரியர்கள்,புதிய சிந்தனையுடைய படைப்பாளிகள், இலக்கணப்பிழைகளை தெளிவாக சூட்டுபவர்கள் தேவை.
எ.கா
முழுநிறுத்தம் SHUTDOWN
மீள்துவக்கம் RESTART
ஆழ்உறக்கம் SLEEP
என எளியத் தமிழில் மொழிமாற்றம் செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
https://wiki.ubuntu.com/TamilTeam
இப்படிக்கு
கல்நெஞ்சம்
7305525849
அழைப்புக்கு முன் ஓர் ( SMS )குறுந்தகவலில் உங்கள் பெயரைக் குறிப்பிடவும்.
இந்த தொழில்நுட்பம் எல்லாம் உருவாக தேவைப்பட்ட ஆராய்ச்சிக்கு முதலீடு செஞ்சது யாரு? மோதளலீங்க தானே ?
Who spent for the ISRO researches?
அதுசரி முதலீடு செய்ய காசு முதலாளி பொறக்கும்போதே கொண்டுவந்தாராமா மிஸ்டர்ர்ர் கரி……
எல்லாரிடமும் பணம் எப்படி வந்ததோ உள்ளதோ அப்படி தான் அவரிடமும் உள்ளது. வியாபரம் செஞ்சிருப்பார்,தொழில்கள் நடத்தியிருப்பார்.
Government on Tax Payers Money, But then private funded research for a specific purpose has done much better than government funded research.
True, but without Capitalism and the potential to make Profit there is no incentive to create Facebook or Microsoft.
very useful. thanks.
இணையத்தை முதலில் உருவாக்கியது அமெரிக்க ராணுவத்திற்காக. அதன்பின் அமெரிக்க பல்கலைகழகங்களுக்கு அது விரிவடந்தது. பின்னர் கமெர்சியல் உபயோகத்திற்கு வந்தது.. ஆகவே உங்கள் தலைப்பில் உள்ள கேள்விக்கு விடை – அமெரிக்க அரசு (முதலாளியும் இல்லை மக்களும் இல்லை)
இணையத்தின் அடிப்படைக் கட்டுமானங்கள் தனியார் வசமும், அரசுகளின் வசமும் இருந்தாலும், தொழில்நுட்பத்துறை தொழிலாளர்களும், வல்லுநர்களும் இணையத்தின் தோற்றம், பராமரிப்பு, வளர்ச்சிக்கு முக்கியப் பங்குவகிப்பவர்கள்.. இணைய சேவைகள் எதுவும் முதலாளிகளுக்கு வருமானம் கொடுக்காத இலவச சேவைகள் அல்ல. பயனாளர்கள் இல்லாமல் தனியார் முதலீட்டுக்கு லாபம் இல்லை. லாபம் மட்டுமல்ல, இணையத்தைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தனியார்களாலும், அரசுகளாலும் முடியும். இதன் மூலம், பயனாளர்களின் ஜனநாய உரிமை ‘அளவுக்கு மீறிய ஆபத்து’ என்று தோன்றினால், தனியாரும் அரசுகளும் ‘இணைய ஒடுக்குமுறையை’ எளிதாக அமல் படுத்தமுடியும் என்பதும் பயனாளர்கள் முன் இருக்கும் உரிமைப் பிரச்சினை..
அம்பியின் கூற்றில் முக்கியமான உண்மை இருக்கிறது. அது இணையத்தின் உரிமையாளர்கள் கார்ப்பரேட்டுகள் என்பது. மக்கள் அதன் வெளிப்புற பயனாளர்களே(end users).
இணையத்தில் மக்களுக்கு இருக்கும் உரிமைகள் என்பது ஒரு ஜனநாயக ஆட்சியில் இருக்கும் உரிமைகள் போன்றதே. குறிப்பிட்ட எல்லையைத் தாண்டாத பட்சத்தில், அதன் பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படும் என்று மதிப்பிடப்படாத வரை இவ்வுரிமைகள் நீடிக்கும்.
ஒரு கட்டத்தில் இவ்வுரிமைகள் அரசுகளையும், கார்ப்பரேட்டுகளையும் அழித்துவிடும் என்கிற நிலைக்கு வரும் போது அவர்களால் அதை எளிதில் தணிக்கை செய்துவிடமுடியும் என்பதாலேயே இவ்வுரிமைகள் மக்களுக்கு விட்டுவைக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் இணைய பாதுகாப்பு பற்றி ஏதோ மசோதா நிறைவேற்றினார்கள். அது கூட இந்த உரிமைகளுக்கு வைக்கும் மறைமுகத் தடை என்கிறார்கள்.
“நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் சேவைகளும் சமூக உழைப்பின் மூலமே நம்மை வந்தடைகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ” …. அது எங்களுக்கு எப்பவோ தெரியும்..
நீங்கள் சொல்வது தரவுகள் மட்டுமே சரி.. ஆனால் இதில் பெரும் கருத்துக் குழப்பம் உள்ளது.. செல்வம் பெருகுவது மக்களால்தான் என்பது சரிதான்.. லாபம் என்பது உபரி உற்பத்தி என்பது சரிதான்… ஆனால் நீங்கள் சொன்ன விசயம் மட்டுமல்லாது எல்லா விசயங்களும் ஒன்றொடுஒன்று ஒட்டிப் பிறந்தது.. கிட்டத்தட்ட குரங்கிலிருந்து பிறந்த முதல் மனிதன் யார் என்பதைத் தேடுவதைப் போன்றது…venture capitalist என்பவர்கள் போடும் முதலால்தான் ஒரு விஞ்ஞானி தன் உழைப்பை செலுத்த முடியும்.. அந்த வென்சர் முதலாளிக்கு பணம் எங்கிருந்து வந்தது என்று அனுமார் வால் போல பிடித்துக் கொண்டு சென்றால் சீக்கிரம் பைத்தியம் மட்டும்தான் பிடிக்கும்… ஆக அந்த விஞ்ஞானியே முதல் போடுபவனாக இருந்தால் அவனும் முதலாளியாகத்தான் இருப்பான்… அதனால் உங்கள் தரப்பு என்பது எப்படியிருக்கிறது என்றால் ஒருவன் காஸ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வந்துவிட்டபின், நாம் புறப்பட்ட இடத்திலிருந்து மறுபடியும் போய்ப் பார்ப்போம் என்பதைப் போல இருக்கிறது.. பெரும் குழப்பம்தான் மிஞ்சும்