Friday, June 9, 2023
முகப்புவாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !!
Array

வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !!

-

vote-012பதிவர் சங்கம் தொடர்பாக வினவு கருத்து தெரிவிக்க வேண்டுமென்று சில நண்பர்கள் அப்போது தொலைபேசியில் கோரியிருந்தார்கள். அலை ஓய்ந்த பிறகு பொறுமையாக சில கருத்துக்களை தெரிவிக்கலாமென்று காத்திருந்த நிலையில் அலை மட்டுமல்ல கடலையே காணோம்! கடலே காணாமல் போன பிறகு நாம் கடல் கொந்தளிப்பு பற்றி எழுதுவது தேவையில்லைதானே?

எனினும் அண்ணன் உண்மைத்தமிழன் அப்போது எழுதிய பதிவர் சங்க கனவு திட்டம் ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது. அதன்படி சங்கம் ஆரம்பித்த பிறகு அலுவலகம் ஒன்று திறந்து, சில கணினிகளை வாங்கி நிறுவி, முதலில் தன்னார்வத் தொண்டு பதிவர்கள் மூலமும், பின்னர் சம்பளத்துக்கு ஆள் போட்டும், வலைப்பதிவுகள் எப்படி ஆரம்பிக்க வேண்டுமென்று புதியவர்களுக்கு சொல்லி கொடுப்பார்களாம். இதன்மூலம் தமிழுக்கும், பதிவுலகுக்கும் சீரிய பங்கை சங்கம் செய்யுமென்று உண்மையண்ணன் தூய தொண்டுள்ளத்தோடு சிந்தனையை பகிர்ந்திருந்தார். இதில் முதல் படம் பற்றி ஒரு உதவி இயக்குநர் கொண்டிருக்கும் கனவைப் போல அவர் சிலாகித்திருந்தார்.

இங்கே அவரது கனவை கேலி செய்வதாக யாரும் எண்ண வேண்டாம். ஆனால் தமிழுக்கும், பதிவுலகிற்கும் பல முன்னோடிகள் செய்த, செய்துவரும், அமைதியான, பணிவான, ஆர்ப்பாட்டமில்லாத பங்களிப்பையும், தொண்டையும் அண்ணன் உண்மைத்தமிழன்தான் கேலி செய்கிறார் என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறோம். ஏன்?

________________________________________________

ஆங்கிலம் கோலேச்சி வந்த இணையத்தில் தமிழை புகுத்தி, தரப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, இன்னும் அத்தனை மென்பொருள் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைத்து அதற்கான சேவைகளை இலவசமாக வழங்குபவர்கள் யாரென்றே நமக்குத் தெரியாது. ஆனால் அவர்களின்றி தமிழ் பதிவுலகமும் இல்லை, எனவே வினவும் இல்லை.

தமிழை யூனிகோடில் கொண்டு வந்தது, தமிழ் தட்டச்சு முறையை உருவாக்கியது, அதை கற்றுக்கொடுப்பதற்கான வசதிகள், தேடுபொறிகளை தமிழ்ப்படுத்தியது, பிலாக்கர், வோர்ட்பிரஸில் இரண்டிலும் தமிழைக் கொண்டுவந்தது, விக்கி பீடியாவில் தமிழை வளர்ப்பது என்று இன்னும் நமக்குத் தெரியாத மென்பொருள், தொழில்நுட்ப விவகாரங்களையெல்லாம் எந்த விளம்பரமோ, பண ஆதாயமோ இன்றி பல ஆய்வாளர்கள் செய்திருக்கிறார்கள். தமிழார்வலர்கள் தவிர்த்த சில பெரும் நிறுவனங்கள் உள்ளூர் சந்தையைப் பிடிக்க வேண்டுமென்று கூட இதில் இறங்கியிருக்கலாம். அதே சமயம் தமிழார்வமுள்ள திறமையாளரின்றி இதுவும் கூட சாத்தியமில்லை.

இவர்களுக்கு கணினி அறிவும், தமிழார்வமும் சேர்ந்து இருந்தது நமக்கு கிடைத்திருக்கும் பேறு. இவர்கள் செய்யாதவற்றையா உண்மைத் தமிழனும், அவரது கனவும் செய்யப் போகிறது?

இணையம் என்பது மெய்நிகர் உலகம் அதாவது விர்ச்சுவல் உலகம். இங்கே எந்தப் பணியையும் பௌதீக ரீதியாக உடனிருந்து நேரிட்டுப் பார்த்துப் பேசி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி இருப்பதாக நினைப்பவர்களுக்கு இந்த ஊடகம் பற்றி எந்த அறிவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது வலைப்பதிவர்களாக இருப்பவர்களெல்லாம் மெய்நிகர் உலகின் வசதிகளைத் தானே கற்றுக்கொண்டுதான் இன்று தனிராஜ்ஜியம் நடத்தி வருகிறார்கள். சில பதிவர்கள் புதியவர்கள் பதிவு ஆரம்பிப்பதற்கான தொழில் நுட்ப விவகாரங்களை எளிமையாக இன்றும் எழுதி வருகிறார்கள்.

இன்று தமிழ் பதிவுலகில் சுமார் ஏழாயிரம் வலைப்பதிவர்கள் இருப்பதாக தெரிகிறது. பதிவர்கள் கணக்கு இதுவென்றால் வாசகர்கள் கணக்கு சில இலட்சங்களில் இருக்கும். இவர்களில் எழுத்தார்வமும், துறை சார்ந்த அறிவும் கொண்டவர்கள் ஏராளமிருப்பார்கள். இவர்களெல்லாம் எழுத வந்தால்தான் தமிழ் பதிவுலகம் இன்னும் தரமானதாக வளரும். எனினும் வலைப்பதிவு ஆரம்பிப்பது குறித்து நிறைய தயக்கங்களும், சந்தேகங்களும் பலருக்கு இருக்கக்கூடும்.

அவை அத்தனைக்கும் பதிலளித்து, எளிமையாகவும், செய்முறை வரைபடங்கள் மூலமும் பதிவு ஆரம்பிப்பது எப்படி என்று தமிழ்மணம் ஒரு கையேடு தயாரித்திருக்கிறது. இதை முன்னர் தமிழ்மணம் காசி தயாரித்ததை இன்று தமிழ்சசி புதுப்புத்திருக்கிறார். இதை படிக்கும் வாசகர்கள் எவரும் கையோடு ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம். எனவே நண்பர்கள் தமிழ்மணத்தின் அந்த கையேட்டை முதலில் படித்துவிட்டு வாருங்கள்.

பலரும் வலைப்பதிவு என்றால் நிறைய செலவு பிடிக்கும் சமாச்சாரம் என்று நினைக்கலாம். இல்லை, ஒரு கணினியும், இணைய இணைப்பும் இருந்தால் போதும். அதைத்தாண்டி ஒரு நயா பைசா செலவில்லாமல் வலைப்பதிவு என்ற மின் பத்திரிகையை ஆரம்பிக்கலாம். அடுத்து இதற்கு நிறைய தொழில்நுட்ப அறிவு தேவை என்று சிலர் கருதலாம். அப்படி இல்லை. ஒரு செல்பேசியையோ, இல்லை தொலைக்காட்சி ரிமோட்டையோ இயக்கத் தெரிந்த எவரும் அடிப்படைக் கணினி அறிவை விரைவில் கற்கலாம். ஒரு மின்னஞ்சல் கணக்கை பராமரிக்கத் தெரிந்த எவரும் வலைப்பதிவை சுலபமாக நடத்தலாம்.

மற்றபடி போகப் போக இது தொடர்பான தொழில்நுட்ப பிஸ்தாவாக நாம் மாறலாம். வினவு ஆரம்பிக்கும் போது நாங்களும் அப்படித்தான் அறிவிலிகளாக இருந்தோம். பின்னர் மெல்ல மெல்ல கற்றுக் கொண்டு இயங்கி வருகிறோம். அடுத்த சந்தேகம் தமிழில் தட்டச்சு தெரியாமல் இருப்பது, அதற்கான மென்பொருட்கள் எங்கு கிடைக்கும் என்ற கேள்வியெல்லாம் கூட உங்களுக்கு இருக்கலாம். அதற்கும் தமிழ்மணம் விரிவாகப் பதிலளித்திருக்கிறது. பதிவர்கள் எவருக்கும் முறையான தட்டச்சு தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பதிவை எழுதுவது ஓரிரு மணி நேர விடயமென்பதால் ஒலியியல் மூலமாக கூட தமிழில் எழுதலாம். இன்று பின்னூட்டமிடும் வாசகர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள்.

ஆனால் ஒரு நீண்ட காலநோக்கில் தமிழ் தட்டச்சு பயில்வது நல்லது. வினவு அனுபவத்தைப் பொறுத்த வரை நாங்கள் தமிழ் 99 தட்டச்சு முறையை கையாள்கிறோம். இதை நீங்களும் சுலபமாகக் கற்கலாம். எனது அனுபவத்தில்  ஐந்து நாட்களில் இதைக் கற்றுக்கொண்டு ஆறாவது நாளில் கட்டுரை எழுத ஆரம்பித்து விட்டேன். இதைக் கற்பதும், இதற்கான மென்பொருளும் இலவசமாகவே கிடைக்கின்றன. தமிழ்சசி இவற்றை விளக்கமாக விவரித்திருக்கிறார்.

புதிய வலைப்பதிவர்கள் என்ன மாதிரி எழுத வேண்டும் என்பதற்கு நடப்பிலுள்ள பதிவர்களின் வகைமாதிரிகளை பார்த்து முடிவு செய்யலாம். அரசியலா, சமூகமா, இலக்கியமா, சினிமாவா, செய்தியா, டயரிக்குறிப்பா, குழந்தை வளர்ப்பா, சமையலா, என்று ஏகப்பட்ட பதிவர்கள் தமிழில் இயங்கி வருகின்றனர். இவற்றுக்கான எடுத்துக்காட்டுகளை தமிழ்சசி தருகிறார். அதில் பல்சுவைப் பதிவுகள் என்ற வகையினத்திற்கு அண்ணன் உண்மைத்தமிழனை சான்றாக காட்டுகிறார். அந்த வகையில் நமது அண்ணனும் புதிய பதிவர்களுக்கு எப்படியோ ஒரு முன்னோடியாக மாறிவிட்டார்.

அடுத்த பிரச்சினை புதிய பதிவர்கள் எழுத ஆரம்பித்தாலும் அவற்றை யார் படிப்பார்கள் என்ற கேள்வி வருகிறது. அதற்குத்தான் திரட்டிகள் இருக்கின்றன. இந்திய மொழிகளில் மற்றவற்றில் இல்லாத தொழில்நுட்ப வசதிகளுடன் தமிழ்மணம் இயங்கி வருகிறது. தமிழ்மணத்தின் மூலம் உங்கள் எழுத்து உலகெங்கும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐந்து கண்டங்களில் உள்ள தமிழ் மக்கள் உங்கள் எழுத்தை படித்து கருத்து தெரிவிப்பதற்கு இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது. தமிலிஷ் போன்றவற்றில் நாம்தான் நமது இடுகைகளை அளிக்க வேண்டும். அதை படிப்பவர்கள் வாக்கு போட்டு முதல் பக்கத்திற்கு சிபாரிசு செய்வார்கள். இன்னும் பல திரட்டிகள் தமிழில் இருக்கின்றன. இவையெல்லாம் போகப்போக உங்களுக்கு தெரியவரும். ஆரம்பத்தில் நீங்கள் தமிழ்மணத்தின் மூலமாகக் கூட உங்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.

இதன்பிறகு நீங்களும் ஒரு பதிவராக ஆகிவிடுவீர்கள். உடனே உங்களுக்குத் தெரியாமலேயே உங்களிடம் ஒரு மாற்றம் தொடங்கும். பின்னூட்டமிடுவது, மற்ற பதிவர்களுடன் விவாதிப்பது, தனது பதிவில் வரும் வாதங்களுக்கு பதில் சொல்வது, குறிப்பிட்ட பிரச்சினையில் அரசியல் நிலைப்பாடு எடுப்பது எல்லாம் போகப்போக பழக்கமாகும்.

பதிவுலகில் இயங்குவது, எதை எழுதுவது, எதை படிப்பது, இவை பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறோம். இப்போது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது வாசகர் அனைவரும் பதிவு ஆரம்பிக்க முடியும் என்பதையே.

தமிழ்மணம் சார்பாக தமிழ்சசி விரிவாக தயாரித்திருக்கும் இந்த நடைமுறைக் கையேடை பிரபல பதிவர்கள் அறிமுகம் செய்யவேண்டும். அண்ணன் உண்மைத்தமிழன் இதையாவது செய்தாரென்றால் அவரது வாசகர்களில் பலர் பதிவராக சுலபமான வழியில் ஆக முடியும். தமிழ்மணத்தின் இந்த நடைமுறைக் கையேட்டில் இதுவரை நான்கு பேர்தான், அதிலும் மூன்றுபேர்தான் பின்னூட்டமிட்டு இந்த முயற்சியை வாழ்த்தியிருக்கிறார்கள். அதில் முதல் பின்னூட்டமிட்டது யார் என்பது பிரபல பதிவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். அது கற்றாரைக் கற்றாரே காமுறுவர் போல தொண்டரை தொண்டரே புரிந்து கொள்வர் என்றும் சொல்லலாம். உண்மைத்தமிழன் கூட இந்த பதிவை இன்று வரை படித்த மாதிரி தெரியவில்லையே. ஏனோ?

இப்படி சுலபமான முறையில் புதிய பதிவர்களை உருவாக்கும் வசதிகள் இருக்கும் போது உண்மையண்ணன் கானல் நீராக கனவு மடம் கட்ட வேண்டியதில்லை. பதிவுலகில் மட்டுமல்ல இந்த உலகிலேயே மிக வேகமாக தமிழ் தட்டச்சு செய்பவர் இந்த அண்ணன்தான் என்று ஒரு பதிவர் சொன்னார். இருக்கலாம். ஆனால் வேகமிருக்கும் இடத்தில் விவேகம் இருக்க வேண்டியதில்லையே!

புதிய பதிவர்களுக்கான  தமிழ்மணத்தின்  செய்முறைக் கையேடு

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. இந்தப் பதிவின் மூலம் நீங்கள் சமீபத்தில் வந்த தியாகுவின் பதிவை சாடுகிறீர்கள்.. நேரிடையாக அவரையே விமர்சித்து இருக்கலாம், உண்மைத்தமிழன் அண்ணாச்சியை இழுத்தது இவ்வளவு நாளைக்கு பின் சரியெனப் படவில்லை.

    அவர் ஒரு குழுமம் அமைய முயற்சி செய்தார், ஆனால் அதற்குப் பின் நடந்தவை நாம் எல்லோரும் நன்கறிவோம்..

    வினவிலிருந்து இப்படியொரு பதிவு???/

    • எந்த தியாகு, மண்டபத்துல சுகுணா திவாகர்கிட்ட எழுதி வாங்கிட்டு வந்து தன் பெயருல பதிவு எழுதும் அவரா.. அவரையெல்லாம் ஒரு பதிவரா நீங்க எப்படி ஏத்துகுறீங்க செந்தில். பதவரா ஆக சுய மூளை வேண்டாமா? மற்றபடி உண்மைத்தமிழனை விமரிசனம் செய்ததில் என்ன தவறு என்று விலாவாரியாக சொன்னால் நல்லது…. 

      • காலம் கடந்து விமர்சனம் செய்ய என்ன தேவை வந்தது என்பதுதான் என் கேள்வி?

        பதிவர் சங்கம் தேவையா? இல்லையா? என்பதுதான் பொது விவாதமே..

        உண்மைத்தமிழன் தன் கருத்துக்களின் ஒன்றாகத்தான் புதிய பதிவர்களுக்கான உதவியையும் சேர்த்திருந்தார் ..

        இணைய பழக்கம் உள்ள யாரும் சுலபமாக பதிவு போட முடியும்..

        அதற்க்கான பதிவாக என்னால் இதனைப் பார்க்க முடியவில்லை.

        நமக்கான எதிரி நிச்சயம் தியாகுவாக இருக்க முடியாது..

        நம் எதிரிதான் தியாகுவின் எதிரியும்..
        நம்மிடம் இருந்து சில கருத்துகளில்தான் அவர் மாறுபடுகிறார்.

        • @@காலம் கடந்து விமர்சனம் செய்ய என்ன தேவை வந்தது என்பதுதான் என் கேள்வி?@@இங்கே விமரிசனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு அம்சத்துக்கு, அதாவது புதிய பதிவர்களை உறுவாக்கும் வழிமுறையாக உ.த வின் உடோபியா காலக்கெடு இல்லாத ஒரு கருத்து. அதை எப்போது வேண்டுமானாலும் விமரிசனம் செய்யலாம்
          @@பதிவர் சங்கம் தேவையா? இல்லையா? என்பதுதான் பொது விவாதமே உண்மைத்தமிழன் தன் கருத்துக்களின் ஒன்றாகத்தான் புதிய பதிவர்களுக்கான உதவியையும் சேர்த்திருந்தார் @@
          அப்படி ஒரு விவாதம் என்றோ முடிந்துவிட்டதாக வினவு கருதுவதாக முதல் வரியிலேயே எழுதியிருக்கிறார். .உ.த.வின் மற்ற கருத்துக்களை ஏன் விமரிசிக்கவில்லை என்பதும் அதிலிருந்து விளங்கும்.
          @@இணைய பழக்கம் உள்ள யாரும் சுலபமாக பதிவு போட முடியும்..அதற்க்கான பதிவாக என்னால் இதனைப் பார்க்க முடியவில்லை.@@
          கட்டுரையில் வினவு குறிப்பிட்டுளது போல இணைய அறிவுள்ள பலருக்கும் பிளாக் எழுத தெரிவதில்லை, அதனால்தான் பதிவர் எண்ணிக்கையை வளர்த்து பதிவுலகத்திற்கு நன்மை செய்யும் நோக்கத்தில் தமிழ்மணம் சிரத்தை எடுத்து அப்படி ஒரு தொடர்கட்டுரையை வெளியிட்டுள்ளது, வினவினுடைய இந்த பதிவு அதை அறிமுகப்படுத்தவே எழுதப்பட்டுள்ளது.
          சுருக்கமாக கூறின், தன்னை முன்னிருத்தும் ஆர்பாட்டமான ஒரு கருத்துக்கு மாற்றாக, கணிணி உலகில் தமிழை வளர்ப்பதை ஒரு தொண்டுபோல செயல்படும் தனிநபர்களை வினவு முன்னிருத்துகிறது
          @@@நமக்கான எதிரி நிச்சயம் தியாகுவாக இருக்க முடியாது..நம் எதிரிதான் தியாகுவின் எதிரியும்.. நம்மிடம் இருந்து சில கருத்துகளில்தான் அவர் மாறுபடுகிறார். @@@
          நிச்சயமாக தியாகு எதிரியில்லை, உடன் இருப்பதாக இத்தனை காலம் நடித்துக்கொண்டிருந்ந்து தற்போது எதிரியிடம் தஞ்சமடைந்திருக்கும் துரோகி. ஓடுகாலி!

  2. கணணியில் முதன்முதலாக தமிழ் தட்டச்சை கையாள முயல்பவர்கள் ஆங்கிலதமிழ் ஒலியியல் முறையை பின்பற்றினாலும், நாளடைவில் தமிழ் 99 முறைக்கு மாறிக்கொள்வது வரவேற்கத்தக்கது. ஆங்கில தமிழ் ஒலியியல் முறை தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி வாசிக்க வைப்பதால் தமிழ் மொழிக்கு அது ஆரோக்கியமான நிலை அல்ல. மேலும் இது தமிழ் தட்டச்சுக்கு ஆங்கிலமொழியில் எம்மை தங்கியிருக்க செய்யும் ஒரு வழிமுறை. 

  3. உன்மைதமிழன் கூறின வழிமுறை சரியாக இல்லாது இருந்திருக்கலாம், ஆனால் அவரின் ஆர்வம் சரியானதுதான். மற்றபடி வினவின் கருதுக்கள் அனைதும் உண்மை. புதிய பதிவர்கள் அவர்களாகவே கற்றுக்கொள்வார்கள். மேலும் தமிழ்மணத்தின் கையேடும் மிக பயனுள்ளதுதான்.

    //ஆங்கிலம் கோலேச்சி வந்த இணையத்தில் தமிழை புகுத்தி, தரப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, இன்னும் அத்தனை மென்பொருள் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைத்து அதற்கான சேவைகளை இலவசமாக வழங்குபவர்கள் யாரென்றே நமக்குத் தெரியாது. ஆனால் அவர்களின்றி தமிழ் பதிவுலகமும் இல்லை, எனவே வினவும் இல்லை.//

    அவர்களை அறிமுகப்படுத்தி வினவாவது பதிவிடலாமே!

    • @@@அவர்களை அறிமுகப்படுத்தி வினவாவது பதிவிடலாமே!@@@

      நல்ல யோசனை ஆனா அவர்கள் யாரென்றே தெரியாதுன்னு வினவு எழுதிட்டதனால மொதல்ல யாராச்சும் வினவுக்கு அவங்கள அறிமுகப்படுத்தனும். எனக்கு தெரிஞ்சு ரவிசங்கர் தமிழ் விக்கி, தமிழ் வோர்ட்பிரசுன்னு நிறைய நேரம் எடுத்து வேலைசெய்யுறார். 

    • Please refer Junior vikadan dt 27/06/2010 Page 28 ( Main issue with cover story about Rajabakshey’s shocking scheme and not the supplimentary about chemmozhi maanaadu) under title ‘Iduvum mozhi pour thaan ‘ they suggested to approve TACE – 16 in place of unicode and to approve it by our Government which is a good solution.

  4. //வினவு ஆரம்பிக்கும் போது நாங்களும் அப்படித்தான் அறிவிலிகளாக இருந்தோம்.?//

    இப்ப மட்டும் என்னவாம்?!

    • இப்ப எச்பர்ட்ட ஆயிட்டாங்க. அதுக்கு எண்ணான்ற???

      • நல்ல வேலை சொல்லிட்டீங்க இல்லேன்னா தெரியாமலேயே போயிருக்கும்

        • ஜக்கு சரியான மக்குய்யா நீர்.. சொன்னா எப்படி தெரியும் பாத்தாதானே தெரியும் 🙂 🙂 🙂

  5. //தமிழ்சசி இவற்றை விளக்கமாக விவரித்திருக்கிறார்.//
    அக்கட்டுரையின் link தரவும்

    • தமிழ், பதிவோட முடிவுல தமிழில் எழுதலாம் வாருங்கள்னு 5 லிங்க இருக்கு பாருங்க… அதான்

  6. நானும் தட்டித்தடவி பிற அன்பர்களின் உதவியோடுதான் பதிவிட முடிந்தது. தமிழ்சசி சுட்டி என் கணினியில் வேலை செய்யவில்லை, அங்கேயும் வாழ்த்து பதிவிட விரும்புகிறேன்.

  7. . ////ஒரு செல்பேசியையோ, இல்லை தொலைக்காட்சி ரிமோட்டையோ இயக்கத் தெரிந்த எவரும் அடிப்படைக் கணினி அறிவை விரைவில் கற்கலாம். ஒரு மின்னஞ்சல் கணக்கை பராமரிக்கத் தெரிந்த எவரும் வலைப்பதிவை சுலபமாக நடத்தலாம்/// ப்பூ அம்புட்டுத்தானா ஆரம்பிச்சுட்ட போச்சு.

  8. உன்மைதமிலன் போன்ற டுபாகூர் தமிலர்களை வெளிச்சமிட்டு காட்டுவதற்கு நன்றி வினவு

        • நான் உனைதமிலனை டுபாகூர் என்று சொல்லலை தம்பி.
          அனால் பழமொழி தெரியும். ரொம்ப கிறுக்குத்தனமா கேளிவி கேக்க கூடாது.

  9. அண்ணன் உண்மையார் இதனை எளிதாக எடுத்துக்கொள்ளவேண்டும். ஏற்கனவே பங்காற்றியவர்களை நினைவு கூறவில்லை என்ற வகையில் வினவு கட்டுரை உள்ளது. 

    ஆனால் அவரது அந்த இடுகை, அந்த சமயத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள், சிந்தனைகளால் விளைந்ததே என்பது என்னுடைய கருத்து…!!

    இந்த பதிவின் மூலம் ஒரு சிலராவது வலைப்பதிவு தொடங்கினால் மகிழ்ச்சியே !!!

  10. 1987 ல் புஜ, புக அறிமுகமாயிருந்தாலும் 2009 ல் தான் வினவை காண நேர்ந்தது, அதன் ஒரு தொடர்பு மூலமே வலைதளம் இருப்பதை அறிந்தேன், அதுவும் எவ்வித செலவும் இல்லாமல்என்பதால் உடனே ஆரம்பித்தேன்.  ஒரு இரண்டு நாள் செலவழித்து என்னுடைய பழைய எழுத்துகளை பதிவு செய்தேன்.  தமிழ் மணத்திலும் பதிந்தேன்.   இதையெல்லாம் தாங்கள் சொன்னது போல் தட்டு தடுமாறி செய்தேன்.  ஆனால் ஒன்று நேரம் ஒதுக்குவது என் போன்ற ஊர் சுற்றும் நபர்களுக்கு கடினம் இருப்பினும் எழுத வேண்டும் என்கிற ஆர்வம், சகபதிவர்கள் தரும் செய்திகள், அவ்ர்களின் விமர்சனம், எண்ணங்கள் நம்மை  ஊக்குவிக்கிறது என்பதை மறுக்க முடியாது. நன்றி

    • @@2009 ல் தான் வினவை காண நேர்ந்தது@@, வினவு ஆரம்பிச்சதே 2008ல தான் இந்த கதையை படிங்க —  https://www.vinavu.com/2010/05/25/2010/01/18/2009/07/17/vinavu-year-one/

  11. நீங்களும் உண்மைத்தமிழனின்  உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளவில்லையோ என்று வருத்தமாக இருக்கிறது.  அவர் இதற்கு எதிர்ப்பாட்டு பாடமாட்டார்.  உங்கள் அளவுக்கு புரிந்து கொள்ளாமல் இருந்தாலும் அவரின் விவேகம் நான் நன்கு அறிந்ததே.

  12. இப்படி சுலபமான முறையில் புதிய பதிவர்களை உருவாக்கும் வசதிகள் இருக்கும் போது உண்மையண்ணன் கானல் நீராக கனவு மடம் கட்ட வேண்டியதில்லை. பதிவுலகில் மட்டுமல்ல இந்த உலகிலேயே மிக வேகமாக தமிழ் தட்டச்சு செய்பவர் இந்த அண்ணன்தான் என்று ஒரு பதிவர் சொன்னார். இருக்கலாம். ஆனால் வேகமிருக்கும் இடத்தில் விவேகம் இருக்க வேண்டியதில்லையே!
    முதல் முறையாக வருத்தம் தந்த வரிகள்.  தமிழனை நீங்கள் உண்மையாக புரிந்து கொள்ளவில்லை.  .  

    • நண்பரே,

      தமிழ் மணம் நண்பர்கள் குறிப்பாக தமிழ் சசி தயாரித்திருக்கும் கையோடு அதாவது வலைப்பதிவு ஆரம்பிப்பதை விளக்கும் கையேடு குறித்து உண்மைத்தமிழன் இதுவரை தனது பதிவு ஒன்றில் கூட அறிமுகப்படுத்தியவில்லை. புதிய பதிவர்களை உருவாக்கும் அவரது ஆசை உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது அவரது கண்ணுக்கு தெரியாமல் போனது ஏன்? எத்தனையோ பேர் தமிழை கணினியில் அறிமுகம் செய்வதற்காக முகம் தெரியாமல் உழைத்திருக்கின்றனர். ஆனால் முகம் காட்ட நினைப்பவர்கள் இதுவரை எதுவும் செய்த்தில்லை என்பதுதான் யதார்த்தம். ஏதோ இவர்தான் இதற்கு முன்முயற்சி எடுத்து புதியவர்களுக்கு பதிவு எழுத சொல்லிக் கொடுக்கப்போவதாக எழுதியிருப்பது குறித்தே பதிவில் சொல்லியிருக்கிறோம். மற்றபடி உண்மைத்தமிழன் குறித்த தனிப்பட்ட மதிப்பீடு எதையும் இங்கு முன்வைக்கவில்லை.

  13. வழிகாட்டுதலுக்கு நன்றி!

    தமிழ்மணத்தில் பிரசுரம் ஆகும் பதிவுகளில் ஒரு சிலரின் பதிவுகள், சொந்த சரக்காக இல்லாமல், விடுதலை போன்ற பத்திரிக்கைகளில் வெளிவரும் கட்டுரைகளின் மறு பிரசுரிக்கும் மடமாக இருக்கிறதே? இக்கட்டுரைகளை உரிமம் பெற்று தான் வெளியிடுகிறார்களா?

    • இந்த பதிவின் ஆரம்பத்தில் உள்ள பச்சை சட்டை அனிந்த பாப்பாவின் படம் மட்டும் வினவு உரிமம் பெற்று தான் பதிகிறாரா என்ன ???

  14. வினவு அவர்களுக்கு,
    ஆசையை தூண்டி விட்டீர்கள். ஆனாலும் இதை புரிந்து கொள்ளும் அறிவில்லை எனக்கு.
    ஆனாலும் புரிந்து கொண்டவர்கள் சார்பாக நன்றி.

  15. உங்கள் முயுற்சிக்கும் உழைப்பிற்கும் நன்றி வாழ்த்துகள்

  16. வலைத்தளம் அமைக்கலாம்ஆசைதான்…ஆனால்குறைந்தபட்ச கணிணிப் பாமரனுக்குஉதவிகேட்டும்,குறைந்தபட்சம்வினவுகூட உதவ முன்னிற்கவில்லை!
    – புதிய பாமரன்.

  17. ///குறைந்தபட்ச கணிணிப் பாமரனுக்குஉதவிகேட்டும்,குறைந்தபட்சம்வினவுகூட உதவ முன்னிற்கவில்லை!///

    என்ன ஆச்சு புதிய பாமரன்?

  18. எனது படைப்புகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு புதிய கலாச்சாரம் அலுவலகத்திற்கு அனுப்பினேன். பதிலில்லை. வினவு மின்னஞ்சலில் அனுப்பினேன். பதிலில்லை. கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது தொட்டெடுக்கவில்லை. வினவை விடவேகூடாதென்று, நானே தட்டுத் தடுமாறிடமிங்கிலிஷில் தட்டச்சு செய்து, எனது பின்னூட்டங்களை அனுப்பி வருகிறேன். எனது முதல் பின்னூட்டத்தில் உங்களின் உதவி கோரினேன்.
    பத்து வார்த்தைகளை தட்டிவிட கூடுதல் நேரம் செலவாகிறது. பிழைகளுடன் அனுப்பவும் விருப்பமில்லை. விரிவான பின்னூட்டங்களை அறிவுபூர்வமாக அனுபிட அவா. திக்குத் தெரிவிக்கவும்.பி.கு: வினவின் முகப்பிலேயே “தமிழில் தட்டச்சு செய்யும் வழிமுறை” என்று எளிதாக எடுத்துச்சொன்னால், கருத்தைக்கூரத் தவிக்கும் வாசகர்களுக்கு வசதியாயிருக்கும். ஆக்கபூர்வமான பின்னூட்டங்கள் ஐந்து மடங்கு அதிகரிக்குமென்பது எனது கணிப்பு.

    • நான் NHM Writer எனும் மென்பொருள் பயன்படுத்துகிறேன். மேலும், தமிழ் தட்டச்சு பயில்வதற்கு ”ஆசான்” எனும் மென்பொருள் பயன்படுத்துகிறேன். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். இது போன்று தமிழ் மென்பொருள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

      http://download.cnet.com/Aasaan-Tamil-Typing-Tutor/3000-2051_4-10844838.html
      http://software.nhm.in/products/writer

    • புதிய பாமரன்,

      வினவின் பின்னூட்ட பெட்டியில் உள்ள தமிழ் மொழி மாற்றி ஒரு வாரமாக இயங்கவில்லை, கூடிய விரைவில் அதை சீர் செய்கிறோம்
      மேலே உள்ள சுட்டிகளில் பயன்படுத்தக்கூடிய தமிழ் மென்பொருள்கள் பற்றிய விவரம் இருக்கிறது பயன்படுத்திக்கொள்ளவும்.
      தோழமையுடன்
      வினவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க