தமிழ்நாடு முழுவதும் நிலவும் மோசமான சுகாதார சீர்கேடுகளே டெங்கு பரவலுக்கு முக்கிய காரணம் !
அரசின் அலட்சியப் போக்கே உயிர் பலிகளுக்கு அடிப்படைக் காரணம் !
மனித உரிமை பாதுகாப்பு மையம் உண்மை கண்டறியும் குழு ஆய்வு முடிவுகள் !
டெங்கு காய்ச்சல் தமிழ் நாட்டை வலம் வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக 75 பேர் வரை உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சூழ்நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு, 7 பேர் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்தது. அக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பல்வேறு தகவல்களைத் திரட்டி வந்துள்ளனர். அதனடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உண்மையறியும் குழு உறுப்பினர்கள் :-
- க.சிவராசபூபதி, வழக்கறிஞர், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர். ம.உ.பா.மையம்.
- தங்கபாண்டி, வழக்கறிஞர், ம.உ.பா.மையம்,துத்துக்குடி
- ஜெயந்தி, வழக்கறிஞர், ம.உ.பா.மையம், நாகர்கோவில்
- ராமர், ஆதிக்க சாதி எதிர்ப்பு கூட்டமைப்பு
- அப்துல் ஜப்பார், வழக்கறிஞர், திருநெல்வேலி
- கேபால், ம.உ.பா.மையம், நெல்லை
- ராஜபாண்டி, ம.உ.பா.மையம், துத்துக்குடி
கடந்த 26.5.12 அன்று நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகில் உள்ள மருதம்புத்துர்,லட்சுமியூர், ராஜபாண்டி, சுந்தரபாண்டியபுரம் ஆகிய டெங்கு அதிகம் பாதித்த ஊர்களில் நேரில் ஆய்வு செய்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு :-
மருதம்புத்துரைச் சேர்ந்த சுரேஷ்-பிச்சம்மா ஆகியோரின் மகன் விஷ்ணு– வயது ஒன்றே முக்கால். காய்ச்சல் வந்தவுடன் குழந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு போகப்பட்டது. அங்கே முதலுதவி கொடுத்து பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 3 வது நாள் இறந்தது.
விஷ்ணுவின் தாத்தா கூறியதாவது :- காய்சல் வந்த 2வது நாள் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றோம். காய்சல் இல்லை என்று கூறினார்கள். மீண்டும் காய்சல் வந்தது. தென்காசி அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். டெங்கு என்று கூறி நெல்லை G.H. கொண்டு போகச் சொன்னார்கள். தென்காசியில் 4 மணி நேரம் காத்திருந்தோம். பின்னர் தான் மருத்துவர் வந்தார். சரியாக கவனிக்க வில்லை.
பென்சா-வயது மூன்று, 3 நாட்கள் காய்ச்சல். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை. அங்கே சாதாரண காய்ச்சல் என்று சொல்லி விட்டனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக் கொண்டு வந்த போதும் சாதாரண காய்ச்சல் என்று கூறி விட்டனர். நாடி பிடித்துக் கூடப் பார்க்கவில்லை. 3வது நாள் சிறுமி இறந்து விட்டாள்.
டிக்சன்-10 மாதம். பெற்றோர் சபில்தேவ்-ராதா. ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை திராவிடமணியில் சேர்க்கப்பட்டது. Vomino என்ற மருந்து கொடுத்ததில் குழந்தை 11 மணிநேரம் துங்கியதாக பெற்றோர் தெரிவித்தனர். குழந்தை ஆரோக்யமாக உள்ளதாக கூறியுள்ளனர். அரசு நடத்திய டெங்கு சிறப்பு முகாமில் காட்டிய போது டெங்கு இல்லை என்று கூறிவிட்டனர். 2 நாட்களில் குழந்தை இறந்துவிட்டது.
அபர்சிகா-11 மாதக் குழந்தை. இளையராஜா-மகேஸ்வரி தம்பதியரின் மகள். கடுமையான காய்ச்சலின் காரணமாக இழுப்பு வந்துள்ளது. பின்னர் மூக்கின் வழியாக ரத்தம் வந்து குழந்தை இறந்து விட்டது.
லட்சுமியூரைச் சேர்ந்த 4 மாதக் குழந்தை கிருத்திகா தேவி. இதயத்தில் ஓட்டை இருந்ததாக திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. நெல்லை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பயனின்றி குழந்தை இறந்து விட்டது. இறப்புச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர்கள் மறுநாள் வீடு தேடி வந்து அந்தச் சான்றிதழை திரும்பப் பெற்றுச் சென்று விட்டனர். சான்றிதழை ஜெராக்ஸ் நகல் கூட எடுக்க விடவில்லை. எதனால் அந்தச் சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டது. அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.
ராஜபாண்டியைச் சேர்ந்த உஷா நந்தினி என்ற 10 வயது சிறுமியும், சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சீலா என்ற 18 வயது பெண்ணும் டெங்கு அறிகுறிகளுடன் இறந்துள்ளனர்.
கடையநல்லுரில் ஆண்டுதோறும் டெங்கு :-
தமிழ்நாட்டில் டெங்கினால் அதிகபட்சம் 40 பேர் கடையநல்லுரில் தான் இறந்து உள்ளனர். கடையநல்லுர் மற்றும் தட்டான்குளம், சுந்தரபாண்டியபுரம் பகுதிகளில் கடந்த 29.5.12 அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடையநல்லுரைச் சேர்ந்த துராப்ஷா என்பவர் எங்களிடம் கூறியதாவது :- கடையநல்லுரில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் மர்மக்காய்ச்சல் வருவது வழக்கம். பல ஆண்டுகளாக இது இருந்து வருகிறது. இதில் 30,40 பேர் வரை உயிர் இழப்பது வாடிக்கை. இந்த ஆண்டு இந்தக் காய்ச்சல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதால் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றார்.
கடையநல்லுரின் சுகாதார நிலைமை படுமோசம். ஊரின் நடுவே வாய்க்கால் ஒன்று குறுக்கு வெட்டக ஓடுகிறது. இது பாசனக் கால்வாய் என்று சொல்லப்படுகிறது. ஆனால் கால்வாயின் இருபுறமும் உள்ள வீடுகளிலிருந்து மனிதக் கழிவுகள் முழுவதுமாக இதில்தான் திறந்துவிடப்பட்டுள்ளது. இதே வாய்க்கால் கரையில்தான் அரசு மருத்துவமனை, பிண அறை, ஆடு அறுக்கும் வதைக்கூடம் (Slaughter House) அனைத்தும் உள்ளன. எனவே சுகாதாரக் கேடு பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
கடையநல்லுருக்கு குடிநீர் தரும் ஆழ்குழாய்க் கிணறும் இங்கே தான் உள்ளது. நீரேற்று நிலையத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் கோடிக் கணக்கில் கொசுக்கள் வாசம் செய்கின்றன. ஆற்றிலிருந்து எடுக்கப்படுகின்ற நீரோடு போர் தண்ணீரும் சேர்த்து குடிநீராக வழங்கப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். கடையநல்லுர், புளியங்குடி, தென்காசி போன்ற ஊர்கள் சுகாதார சீர்கேடு நிறைந்தும், பன்றிகளின் சொர்க்கமாகவும் திகழ்வது பலமுறை ஊடகங்களால் அம்பலமாகியுள்ளது. எனவே கடையநல்லுர் எல்லாவித தொற்று நோய்களுக்கும் இருப்பிடமாக விளங்குவதில் வியப்பேதும் இல்லை தான்.
கடையநல்லுரில் குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் டெங்குவினால் உயிர் இழந்து உள்ளனர். டெங்குவினால் இறந்த N.செய்யது மசூது என்பவரது உறவினர் ஜபருல்லா கூறும் போது, “வந்திருப்பது டெங்கு காய்ச்சல் என்று கூறவே இல்லை. குணமாகி விடும் என்று நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். போதுமான சிகிச்சை அளிக்கவில்லை. அதுபற்றிய விவரமும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. கடைசியில் நோயாளி இறந்து விட்டார். இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று ஜபருல்லா கூறினார்.
கடையநல்லுரின் சுகாதார சீர்கேடு மிகவும் பிரபலம். அதனால் தான் டெங்கி-னால் உயிரிழப்பு அங்கே அதிகம். இவ்வளவு பாதிப்புக்குப்பின், திடீரென்று 50 சுகாதாரப் பணியாளர்களை நிர்வகாகம் இறக்கி விட்டுள்ளது. அவர்கள் சாக்கடையை சுத்தம் செய்யவும், குப்பைகளை அள்ளவும், மருந்து தெளிக்கவும் வந்த போது பொதுமக்கள் அவர்களைத் தடுத்து விரட்டி விட்டுள்ளனர். “இதுவரை இந்தப் பக்கமே வராதவர்கள் இன்று மட்டும் திடீரென்று வந்து என்ன செய்யப் போகிறீர்கள். எங்களுடைய சுகாதாரத்தை நாங்களே பார்த்துக் கொள்வோம் போங்கள்” என்று சொல்லி தடுத்துள்ளனர். அந்தளவுக்கு சுகாதாரப் பணிகள் அங்கு நின்று போயிருந்திருக்கிறது.
அறிகுறிகள் என்ன ?
டெங்கு பாதித்தவருக்கு 105 டிகிரி வரை காய்சல். கடுமையான தலைவலி, தலையில் அதிக சூடு, கருப்பு நிறத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கு, தோலில் தடிப்பு, காய்ச்சல் முற்றிய நிலையில் வலிப்பு, மூட்டுக்களில் வலி, உடல் துளைகளின் வழியாக ரத்தப்போக்கு, சீறுநீர்த் தடை போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு இருப்பதால் உடலின் நீர்ச்சத்து விரைவாக குறைந்து விடும் (De hydration) ஆபத்து உருவாகிறது. அபாய கட்டத்தை நெருங்கும் போது மூக்கு இதர உடல் துளைகள் வழியாக ரத்தக் கசிவு ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. டெங்கு வைரஸ் ரத்தத்தில் அதிவிரைவில் பெருகுகிறது. இந்த வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டுக்களை (Platelets) அழித்து விடுகிறது. இதன் காரணமாக ரத்தம் அதன் தன்மை மாறி துளைகளின் வழியாக வெளியேறுகிறது. மேலும் ரத்தம் உறைகிற தன்மையும் குறைந்து விடுகிறது.
முதல் உதவி :-
“பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்சலுக்கு உரிய சிலவகைமருந்துகளைக் கொடுத்து விட்டு நீர்ச்சத்து குறைந்து விடாமலிருக்க பழரசங்கள், துய்மையான குடிநீர், இளநீர் ஆகியவற்றைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரையும் உப்பும் கலந்த கரைசலையும் கொடுக்கலாம்” என்று மருத்துவர் மனோகரன் தெரிவித்தார். ரத்தத்தின் மூலப் பொருட்களுள் ஒன்றாகிய பிளேட்லெட்ஸ் வெகுவேகமாக குறைவதால் ரத்தத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட பிளேட்லெட்டை தனியே உடலில் ஏற்ற வேண்டும். பிளேட்லெட் கிடைக்காத போது ரத்தத்தையே ஏற்றலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப் பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல் குன்றிவிடுவதால் அவருக்கு வேறு வகையான தொற்றோ அல்லது பாதிப்போ ஏற்பட்டால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிர்சேதம் ஏற்படலாம் என்றும் தெரிவித்தனர்.
டெங்குக்கு மருந்து இல்லை :
மருத்துவ அறிவியல் வானளாவ உயர்ந்திருக்கிற இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் டெங்கு காய்சலுக்கு மருந்து இல்லை என்று சொல்கிறார்கள் அலோபதி மருத்துவர்கள். “சில தற்காப்பு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க முடியும், பாதிக்கப்பட்டவரை உடனிருந்து நன்கு கவனிப்பதன் மூலம் காப்பாற்ற முடியும்” என்கிறார் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை முதல்வர் மனோகரன்.
நெல்லை, துத்துக்குடி மாவட்டங்களில் டெங்கினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகின்றனர். அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் தான். அங்கு நேரில் சென்று பார்த்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் தரையில் பாய் விரித்து படுக்க வைக்கப்பட்டுள்ளனர். போதிய கவனிப்பு இல்லை. குழந்தைகள் அதிகம் என்பதால் உடன் வருவோரின் கூட்டமும் சேர்ந்து பெருங் கூட்டமாக உள்ளது. நோயாளிகளுக்கு குடிக்க வெந்நீர் போடும் வசதி கூட இல்லை. போதிய மருத்துவர்களோ, பணியாளர்களோ, செவிலியர்களோ இல்லை. டெங்கு பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சை பற்றிய விவரம் கேட்டால் மருத்துவக்கல்லுரி முதல்வர் கூட அதற்குப் பதில் சொல்ல மறுக்கிறார். சுகாதாரத்துறை இயக்குநரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
இப்போது மாவட்ட மருத்துவ அதிகாரி மீரான் மைதீன் பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்த அதிகாரி பரிசோதனைக் கூடத்தில் டெங்கு வைரஸ் கண்டறியப்பட்டத்தை கண்டித்து ஊழியர்களை கடுமையாகத் திட்டியுள்ளார். ஊழியர் தவறாக சோதனை மேற்கொண்டு தப்பான முடிவினைத் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் கண்டறிந்தது உண்மைதான் என்று ஆதராப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதன் விளைவாகத்தான் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மருத்துவ அதிகாரி மீரான் மைதீன் அத்தியாவசியமான எந்த நடவடிக்கையையும் தானும் செய்யமாட்டார். பிறரையும் செய்யவிடமாட்டார் என்று மருத்துவ வட்டாரத்தில் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட உண்மையை பரிசீலித்து உடனடி நடவடிக்கையில் இறங்கியிருந்தால் டெங்கு இந்த அளவுக்குப் பரவ விடாமல் தடுத்திருக்கலாம் என்பது பலரும் கூறும் பொதுக் கருத்தாகும். இதனை ஏற்று அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மீரான் மைதீன் மட்டுமல்ல அரசு எந்திரத்தின் ஒவ்வொரு துறையிலும் பல அதிகாரிகள் இவ்வாறு தான் உள்ளனர். தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற தன்மை. அரசும் சிக்கியவர்களைப் பழிவாங்கி விட்டு பின்னர் பிரச்சினையைக் கிடப்பில் போட்டுவிடுவது வாடிக்கை.
தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை :
டெங்கு பாதித்த நபர்கள் ஆரம்பத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் அங்கு தரமான சிகிச்சை தரப்படவில்லை. மருத்துவ மனை சுத்தம் சுகாதாரமாக இல்லை. இதனால் தனியார் மருத்துவமனைக்கு மக்கள் போக ஆரம்பித்து விட்டனர். ஆலங்குளம் திராவிட மணி மருத்துவமனை, நெல்லை சுதர்சன், முத்தமிழ் மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் இறப்புகள் ஏற்பட்டுள்ளன, அநியாய கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற போதிலும் தனியார் மருத்துவமனைகளை வேறு வழியின்றி மக்கள் நாடிச் சென்றுள்ளனர்.
வழக்கம் போல தனியார் மருத்துவமனைகள் பழச்சாறும், இளநீரும், சாதாரண மருந்து மாத்திரைகளையும் கொடுத்து ரூ 30 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள், பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதால் மக்கள் கட்டாயமாக தனியாருக்குத் தள்ளப்படுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை டெங்குவினால் இறந்தவர்களில் 90 விழுக்காடு பரம ஏழை மக்களே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு நேரடியாக ரத்தம் ஏற்றுகின்றனர். ஆனால் தனியாரில் பிளேட்லெட்ஸ் ஏற்றப்படுகிறது. ரத்தம் ஏற்றுவதை விட பிளேட்லெட் ஏற்றுவதே சிறந்த பலனளிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ?
டெங்கு பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் நீர்நிலைகளில், சாக்கடைகளில் மருந்து தெளிப்பது, குடி தண்ணீரில் குளோரின் கலப்பது, கிராமப்புறங்களில் டெங்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது, நகர்ப்புறங்களில், சுவரொட்டி, துண்டறிக்கை, ஆட்டோ பிரச்சாரம் செய்வது, அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு இவை தவிர வேறு சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.
குடிதண்ணீரை மூடிவையுங்கள், காய்ச்சி குடியுங்கள், சிரட்டை, டயர், தேங்காய் மட்டை, நெற்று போன்ற சிறிய கொள்ளளவில் தேங்கும் நல்ல தண்ணீரில் இருந்து தான் டெங்கு கொசு உருவாகிறது. எனவே அவற்றைக் கண்டறிந்து அப்புறப்படுத்துங்கள், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள் என்று அரசு பிரச்சாரம் செய்கிறது. இத்துடன் கடமை முடிந்துவிட்டதாக அரசு கருதுகிறது. வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடித்து வருவதாகவும் அரசு சுகாதாரத்துறை ஊடகங்கள் மூலம் தெரிவிக்கிறது. இது, டெங்கு வருவதற் கான சுற்றுச்சூழல் மக்களால் தான் ஏற்படுவது போன்ற கருத்தை உருவாக்கு கின்றது. ஆனால் உண்மை நிலவரம் அவ்வாறு இல்லை. குப்பைகளை அகற்றுவது, கழிவு நீர் வெளியேற்றும் வசதி, கழிப்பறை வசதி-இவைகள் மிக மோசமான நிலையில் உள்ளன.
உண்மையான காரணங்கள் என்ன ?
நல்ல தண்ணீரில் தான் டெங்கு வைரஸ் உருவாகின்றது என்று சொல்லப் படுவது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. டெங்குவை ஆர்போ வைரஸ்கள் பரப்புகின்றன. மனிதர்களிடமும், கொசுக்களிடமும் மட்டுமே இந்த வைரஸ் குடியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவாது. டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதர்களைக் கடிக்கும் கொசுக்கள் மூலம் பிறருக்கும் வைரஸ் பரவும். எனவே டெங்கு பரவுதலுக்கு மோசமான சுகாதார சீர்கேடு தான் காரணம். அதிலிருந்து தான் மானாவாரியாக கொசுக்கள் உற்பத்தியாகின்றன. கொசு உற்பத்தியைக் கட்டுப் படுத்தவில்லையானால் நோய் பரவலையும் கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை. ஆனால் தண்ணீரைக் காய்ச்சி குடியுங்கள் என்று அரசு பிரச்சாரம் செய்கிறது. குடிநீருக்கும் டெங்குக்கும் சம்பந்தமே இல்லை.
அரசு தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பொது சுகாதார பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைத்து வருகிறது. எனவே தனியார் முதலாளிகள் லாப நோக்கத்தோடு மட்டுமே செயல்படுபவர்கள், அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்ற வாறு அவர்களது வேலை நடைபெறுகிறது. எனவே எல்லா நிலைகளிலும் சுகாதாரம் பராமரிப்பின்றி நோயுற்றிருக்கிறது கண்கூடு. இதில் கொசு, கிருமிகள், வைரஸ் பரவல் & ஒழிப்பும் அடங்கும்.
மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொறுப்பையும் அரசு கை விடுகிறது. தண்ணீர் லாபத்துக்கென்று மாறிவிட்டது. டெங்கு பாதித்தவருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 4 லிட்டர் சுகாதாரமான (மினரல் வாட்டர்) குடிநீர் தரவேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் மருத்துவ மனைகளில் குடிநீர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது, கட்டணக் கழிப்பறை அனுமதிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் குடிக்க சுடுதண்ணீர் வசதி கூட இல்லை.
அரசு மருத்துவமனைகளுக்கு அன்றாடம் கட்டுக்கடங்காத கூட்டம் வருகிறது. டெங்கு தொற்று போன்ற நேரங்களில் சொல்லவே தேவை இல்லை. இந்தக் கூட்டத்திற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. மருத்துவர்கள், பணியாளர்கள், கருவிகள் இல்லை. கவனிப்பும் இல்லை. அரசு மருத்துவ மனையில் கழிவு நீர் வெளியேற்றம், கழிப்பறை வசதி மிக மோசமாக இருப்பதால் பொது மருத்துவமனைகளுக்குச் செல்ல அஞ்சுவதாக மக்கள் கூறுகின்றனர்.
சோதனைக்கூட வசதி இல்லை. ரத்தத்தில் பிளேட்லெட் அளவைக் கண்டறியும் சோதனைக்கு தனியார் சோதனைக் கூடங்களில் ரூ1500/- கட்டணம். இரண்டு மூன்று முறை சோதனை செய்யும் நிலை ஏற்பட்டால் செலவு கூடுதலாகும். இந்த வசதி அரசு மருத்துவமனையில் குறைவாக உள்ளது. பிளேட்லெட் எண்ணிக்கை 3 லட்சம் இருக்க வேண்டியது 10 ஆயிரத்திற்கும் கீழே வந்துவிட்டால் இறப்பு நிச்சயம் எனும் போது ஏழை நோயாளியின் நிலை பரிதாபத்துக்குரியது.
டெங்கு பாதிப்பு முதலில் பாளை அரசு மருத்துவமனை பரிசோதனைக் கூடத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர்கள் அதை அலட்சியப்படுத்தி சோதனை முடிவு தவறு என்று ஊழியர்களைக் கடிந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசு மருத்துவர்கள் டெங்கு பற்றிய விவரங்களை உள்ளமுக்குவதற்கு செய்த முயற்சிகளே பல இடங்களில் வெளிப்பட்டுள்ளது. ஏனெனில் காய்ச்சலில் இறந்த யாருக்கும் அவர்கள் இறப்பு சான்று தரவே இல்லை. தந்ததையும் பறித்துக் கொண்டனர்.
இது போன்ற, மக்களின் சுகாதாரம் தொடர்பான தனிச்சிறப்பான நிலைமைகள் தோன்றும் போது அதை எதார்த்தமாக திறந்த மனதுடன் பரிசீலித்து தீர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கும் தன்மை நமது அரசுக்கும் அரசு எந்திரத்துக்கும் இல்லை என்பது எமது ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. இலவசங்களைக் கொடுத்து நலத்திட்டங்கள் என்று கூறும் அரசு, மக்களின் உடல்நலம் தொடர்பான திட்டங்களை அலட்சியப்படுத்துகிறது.
______________________________________________________________
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
குமரி, துத்துக்குடி மாவட்டங்கள்.
_______________________________________________________
அரசு எந்திரமே! ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுவதற்குதானே இருக்கிறது.
உண்மையிலேயே கவலையூட்டும் தகவல்கள்! இனியாவது அரசு இயந்திரமும், மக்கள்/சேவை இயக்கங்களும் இணைந்து பணியாற்றி டெங்கு மேற்கொண்டு பரவாமல் தடுக்க வேண்டும்!
[…] பதிவு: வினவு இவைகளில் […]
very important news….thank u vinavu…