Monday, May 5, 2025
முகப்புசெய்திபென்னகரத்தில் மண்ணெண்ணை வாங்க பெங்களூருலிருந்தா வர முடியும்?

பென்னகரத்தில் மண்ணெண்ணை வாங்க பெங்களூருலிருந்தா வர முடியும்?

-

செய்தி-47

ரேஷன்-கடை-ஆர்பாட்டம்

ருமபுரி மாவட்டத்திலுள்ள மக்களில் பலரும் அருகிலுள்ள பெங்களூருக்கு கூலி வேலைகளுக்குச் சென்றுவிடுவார்கள். மாதம் ஒரு முறையோ இரு மாதங்களுக்கு ஒரு முறையோ தான் ஊருக்கு வருகிறார்கள். இந்த நிலைமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மாவட்டம் முழுவதுமுள்ள ரேசன் கடைகளை சிறிது சிறிதாக மூடுவதற்கான வேலைகளை துவங்கியுள்ளது உணவு வழங்கல் துறை.

அதன் முதல்கட்டமாக ரேசன் பொருட்களை குறைப்பது, அலைக்கழித்து காத்திருக்க வைப்பது, பொருட்களை வாங்க வேண்டுமானால் குடும்பத்தலைவர் தான் வர வேண்டும், வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும் என்று கெடுபிடி செய்து வருகிறது. வெளி மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றுள்ள குடும்பத்தலைவர் மண்ணெண்ணை வாங்குவதற்காக பெங்களூரிலிருந்து வர முடியுமா ?

பென்னாகரத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் சமீபத்தில்  ஒரு கூட்டம் நடைபெற்றிருக்கிறது. கூட்ட்த்தில் ரேசன் கடை ஊழியர்களும் கலந்துகொண்டிருக்கின்றனர். அக்கூட்டத்தில் பென்னகரம் வட்டத்திலுள்ள அறுபத்து ஐந்தாயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து பொருட்களையும் வழங்கக்கூடாது என்றும், வழங்கப்படும் ரேசன் பொருட்களையும் சிறிது சிறிதாக குறைக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சதித்திட்ட்த்தின் முதல் கட்டமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இருபது சதவீதம் பொருட்களை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் இது பற்றி வெளியில் பேசக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

எந்த ஓட்டுக்கட்சியும் கண்டுகொள்ளாத இப்பிரச்சினையை கண்டித்து பென்னாகரம் பகுதியில் இயங்கி வரும் ’விவசாயிகள் விடுதலை முன்னணி’  கடந்த 13 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் அருண் (வட்டக்குழு உறுப்பினர் – வி.வி.மு) தலைமை தாங்கினார். தோழர் கோபிநாத் (வட்டச் செயலர் – வி.வி.மு) முத்துக்குமார் (வட்டக்குழு உறுப்பினர் – வி.வி.மு) ஆகியோர் கண்ட உரையாற்றினர். தமது கண்டன உரையில் தோழர்கள் கீழ்கண்டவற்றை வலியுறுத்தினர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரேசன் பொருட்களை வாங்க குடும்பத்தலைவர் நேரில் வர வேண்டும், வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என்கிற உத்தரவு கண்டிக்கத்தக்கது இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

ஒவ்வொரு அட்டைக்கும் நூறு சதவீதம் பொருட்களை முழுமையாக வழங்க வேண்டும். அரசு திட்டமிட்டே குறைந்த உணவுப்பொருட்களை கடைகளுக்கு அனுப்பி வைக்கிறது. இவ்வாறு குறைந்த பொருட்களை அனுப்புவதன் மூலம் மக்களை தனியார் கடைகளை நோக்கித் தள்ளி முதலாளிகள் கொள்ளையடிக்க உதவி செய்கிறது. இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக  அனைத்து கிளைகளுக்கும் முழுமையான பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.

உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து கொள்ளையடிக்கும் ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும். ரேசன் கடைகளை மூட உத்தரவிடும் உலக வங்கியின் உத்தரவுக்கு அடிபணியக்கூடாது.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றப்பட்டது. முழக்கமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தோழர் முருகன் (வட்டக்குழு உறுப்பினர்- வி.வி.மு) நன்றியுரையாற்றினார். பென்னாகரம் டெப்போ ஸ்டேண்ட் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை நூற்றுக்கணக்கான பகுதி மக்கள் குழுமி நின்று வரவேற்று ஆதரித்தனர்.

இறுதியில் ஊர்வலமாகச் சென்று மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் குடும்பத்தலைவர் வரவேண்டும் என்கிற உத்தரவை நீக்கவும், அட்டையில் பெயர் உள்ள எந்த நபர் வந்தாலும் உணவுப்பொருட்களை வழங்க உத்தரவிடுவதாகவும் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றவும் உறுதியளித்தார்.

மத்திய,மாநில அரசுகள் எல்லாம் உலக வங்கியின் அடிமைகள். எனவே ரேசன் கடைகளை மூடத் துடிக்கும் ஏகாதிபத்திய அடிமைகளை எதிர்த்து பல லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கும் போது தான் இவர்களை இறுதியில் பணிய வைக்க முடியும்.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: