Sunday, July 21, 2024
முகப்புசெய்திஏர் இந்தியா- மண்ணெண்ணை: விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு சொன்னது யாரு?

ஏர் இந்தியா- மண்ணெண்ணை: விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு சொன்னது யாரு?

-

செய்தி-22

ற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தடங்களில் கூடுதல் விமானங்களை இயக்குவதற்காக 16 விமானங்களை குத்தகைக்கு எடுத்த வகையில் 2005க்கும் 2010க்கும் இடையே ரூ 4,234 கோடி இழப்பை ஏர் இந்தியா நிறுவனம் சந்தித்திருக்கிறது” என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அந்த நிறுவனத்தின் மொத்த நஷ்டத் தொகையான ரூ 13,385 கோடியில் இது மூன்றில் ஒரு பங்காகும். தேவைப்பட்டதை விட மிக அதிகமாக எண்ணிக்கையில் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டதால் ரூ 68,000 கோடி இழப்பு ஏற்பட்டது என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுனில் அரோரா “முக்கிய முடிவுகள் அனைத்தும் முன்னாள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் பட்டேலின் தலையீட்டால் மாற்றப்பட்டன” என்று குற்றம் சாட்டியிருக்கிறார். மே 28, 2005 தேதியிட்ட அவரது கடிதத்தில், “தேவையை விட அதிகமான ஜெட் விமானங்களை வாங்கும்படி ஏர் இந்தியா நிர்வாகம் வற்புறுத்தப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார். தனியார் விமான நிறுவனங்களுக்கு ஆதாயம் கிடைப்பதற்காக லாபம் தரும் வழித்தடங்களில் இந்தியன் ஏர்லைன்ஸ் சேவை ரத்து செய்யப்பட்டது.

பிரபுல் பட்டேலும் அவரது புரவலர்களான கார்ப்பரேட் நிறுவனங்களும் லாப வேட்டை ஆடுவதற்காக நாட்டின் விமான சேவை நிறுவனம் களமாக்கப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளப்பட்டிருக்கிறது.

ரேஷன்-கடை
படம்-நன்றி தி இந்து

இப்போது விண்ணில் பறக்கும் விமானத்திலிருந்து இறங்கி ஏழை மக்களின் மண்ணிற்கு வருவோம்.

“சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில் இருக்கும் CA -300 ரேஷன் கடையில் 4000 குடும்பத்தினர் இணைக்கப்பட்டிருந்தாலும், அரசாங்கம் கூடுதல் கடைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை” என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஒரு கடையில் 1000-2000குடும்ப அட்டைகளுக்கு மேல் இணைக்கப்படக் கூடாது என்ற வரைமுறையை இது மீறியிருக்கிறது.

இந்தக் கடைக்கு ஒதுக்கப்பட வேண்டிய 23,400லிட்டர் மண்ணெண்ணெயில் 18,000லிட்டர் மட்டுமே அனுப்பப்படுகிறது. ஜூன் மாதம் 16,000 லிட்டர் மட்டுமே அனுப்பப்பட்ட போது அந்த பகுதி மக்கள் போராடி இன்னும் 2,000 லிட்டர் மண்ணெண்ணெய் கொண்டு வரச் செய்தனர்.

“மாதத்துக்கு மூன்று லிட்டர் கிடைக்க வேண்டும் என்று இருந்தாலும் இரண்டரை லிட்டர் மட்டுமே தருகிறார்கள். வீட்டில் கேஸ் அடுப்பு இல்லாததால் சமையலுக்கும் மின்வெட்டு நேரத்தின் போது விளக்கு ஏற்றவும் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. கிடைக்கும் இரண்டரை லிட்டருக்கு மேல் வெளிச் சந்தையில் வாங்க வேண்டியிருக்கிறது” என்கிறார் திரு ஹூசைன் என்பவர்.

இந்த கடையில் இணைக்கப்பட்டுள்ள ஐந்தில் ஒரு குடும்பத்தினருக்கு மண்ணெண்ணெய் கிடைப்பதே இல்லை. நியாயவிலைக் கடையில் லிட்டருக்கு ரூ 15 விலையில் விற்கப்படும் மண்ணெண்ணெய் வெளிச்சந்தையில் ரூ 60க்கு விற்கப்படுகிறது. ஒரு சராசரி குடும்பம் மூன்று வேளை சமைப்பதற்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் எரிபொருள் தேவைப்படும் என்று வைத்துக் கொண்டால், சமையல் எரிபொருளுக்கு மாதம் ரூ 900 செலவழிக்கிறார்கள் இந்த ஏழை மக்கள். ரூ 400 கொடுத்து சமையல் வாயு சிலிண்டர் வாங்கி இரண்டு மாதத்துக்கு பயன்படுத்தும் நடுத்தர குடும்பத்துக்கு மாதம் ரூ 200தான் இந்த வகையில் செலவாகிறது.

ஆளே ஏறாத வழித்தடங்களில் மேட்டுக் குடியினர் பயணம் செய்வதற்காக புதிய விமானங்கள் வாங்கி விமான நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை மடை மாற்றி விடும் இந்திய அரசு, சமையல் வாயு இணைப்பு கூட இல்லாத ஏழை எளிய மக்களுக்கு நியாய விலையில் தேவையான அளவு மண்ணெண்ணெய் வழங்க வக்கற்றிருக்கிறது. இதுதான் இந்திய ‘ஜனநாயகத்தின்’ லட்சணம்.

இதையும் படிக்கலாம் –

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. தமிழ் நாட்டில் மக்களின் போக்குவரத்து வசதி சரிவர இல்லாமல் தவிக்கிறார்கள், காலையிலும், மாலையிலும் பேருந்தில் நிற்க கூட முடியாமல் அலைமோதுகிறார்கள், அதெல்லாம் விட்டு விட்டு இப்படி வெட்டி செலவு செய்கிறார்கள்,

    அதுவும் உழைக்கும் மக்கள், மாலையில் உடல் வலிமை எல்லாம் இழந்து விட்டு உட்காரவாவது இடம் கிடைக்குமா என்று ஏங்குகிறார்கள், ஆனால் ஏறக்கூட முடிவதில்லை, அப்படி எப்படி என்று ஒருவழியாய் வீடு போய் சேர்வதற்குள் நொந்துபோகின்றனர், (அது சரி அந்த வலி எல்லாம் உழைபவர்களுக்கு தானே தெரியும் )ஆனால் இந்த பணக்கார நாய்களுக்கு என்னென்ன வசதி செய்து தருகிறது இந்த அரசு, இதெல்லாம் ஒரு கவேர்மென்ட்?

  2. இந்த செய்திக்கும் கூட பொருளாதாரப்புலி கருத்தை தெரிவிக்காமல் விட்டால் மிகவும் வருத்தம் தான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க