Wednesday, October 16, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்

ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்

-

ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்பொதுத்துறை நிறுவனமான ஏர்இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து மைய அரசின் தணிக்கைத் துறை நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ள அறிக்கை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்நிறுவனத்தைத் திட்டமிட்டு படுபாதாளத்திற்குள் தள்ளிவிட்டுள்ள சதித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.  மைய அரசும், ஏர்இந்தியா நிர்வாகமும் அமெரிக்காவைச் சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கும், ஐரோப்பாவைச் சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் நிறுவனத்திற்கும் மற்றும் விமான சேவைகளை நடத்திவரும் எமிரேட்ஸ், கிங் ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களுக்கும் சாதகமாக எடுத்த முடிவுகளால், ஏர்  இந்தியா இன்று மீள முடியாத நட்டத்திலும் கடனிலும் சிக்கிக் கொண்டுவிட்டதாகத் தனது அறிக்கையில் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, தணிக்கைத் துறை.

2004ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இலாபத்தில் இயங்கிவந்த ஏர்இந்தியா நிறுவனம், அதன் பின், குறிப்பாக 2004இல் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்ற பிறகுதான் நட்டமடையத் தொடங்கியது.  ஏர்இந்தியா நிறுவனம் தனது வியாபாரம் படுத்துப்போனதால் நட்டமடையவில்லை.  மாறாக, ஏர்இந்தியா நிறுவனத்திற்குரிய வர்த்தகச் சந்தையைத் தனியார் விமான நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததும்; தேவையேயில்லாத விதத்திலும் ஏர்இந்தியாவின் வருமானத்துக்கு மீறிய விதத்திலும் புதிய விமானங்களை வாங்கி அந்நிறுவனத்தின் கடன் சுமையை அதிகரித்ததும்தான் ஏர்இந்தியாவைப் போண்டியாக்கிவிட்டது.  ஏர்இந்தியா நிறுவனத்தை சர்வதேச தரத்துக்கு நவீனப்படுத்துவது எனக் கூறிக்கொண்டு, காங்கிரசு கூட்டணி இந்தச் சதித் திட்டத்தை அரங்கேற்றியிருக்கிறது.

1990களில் விமானச்சேவைத் தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட பின், ஏர்இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை நவீனமயமாக்குவதை மைய அரசு திட்டமிட்டே புறக்கணித்து வந்தது.  குறிப்பாக, ஏர்இந்தியாவிற்குப் புதிதாக 26 விமானங்களை வாங்க வேண்டும் என அந்நிறுவனம் 1996இல் வைத்த கோரிக்கையை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் மைய அரசு பரிசீலிக்கத் தொடங்கியது.  மைய அரசின் இந்த திடீர் பாசத்தின் பின்னே ஏர்இந்தியாவின் நலன்களைவிட, அதன் அமெரிக்க அடிவருடித்தனம்தான் மறைந்திருந்தது.

2003ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்க காங்கிரசைச் சேர்ந்த 43 உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தகக் குழு, ஏர்இந்தியாவிற்கு விமானங்கள் வாங்குவது தொடர்பாக இந்தியப் பிரதம மந்திரி அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியது.  இக்கடிதத்தை பிரதம மந்திரி அலுவலகம் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்த பின்தான் ஏர்இந்தியா நிறுவனத்திற்கு 28 விமானங்கள் வாங்குவது தொடர்பான கோப்பு தூசி தட்டி எடுக்கப்பட்டது.  இச்சமயத்தில் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இந்தியப் பிரதம மந்திரி அலுவலகத்துக்கு எழுதிய கடிதத்தில், எத்தனை விமானங்கள் வாங்குகிறீர்களோ, அதற்கு ஏற்றபடி விலையை அனுசரித்துத் தர முடியும் எனத் தூண்டில் போட்டது.

போயிங்கிடமிருந்து இக்கடிதம் கிடைக்கப் பெற்ற அடுத்த சில மாதங்களுக்குப் பின் பதவியேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 28 விமானங்களுக்குப் பதிலாக 38,149 கோடி ரூபாய் செலவில் 68 விமானங்களை போயிங் நிறுவனத்திடம் வாங்கும் ஆலோசனையை ஆகஸ்ட் 2004இல் முன்வைத்தது.  பிரதமர் மன்மோகன் சிங் ஜூலை 2005இல் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் இராணுவ ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிற்குச் செல்லவிருந்தார்.  அவரது இந்தப் பயணத்திற்கு முன்பாக இந்த ஒப்பந்தத்தை முடித்துவிட வேண்டும் என்று இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்திய வெளியுறவுத் துறையைக் கேட்டுக் கொண்டதாக விக்கி லீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

எனினும், விமானங்கள் வாங்குவது குறித்த ஒப்பந்தம் ஜூலை 2005க்கு முன்பாக முடிவாகவில்லை.  2005ஆம் ஆண்டின் இறுதியில்தான் கையெழுத்தானது.  குறிப்பாக, மன்மோகன் சிங் வெளியுறவு அமைச்சகத்தின் பொறுப்பை நவம்பர் 6, 2005இல் ஏற்றுக் கொண்ட பின், அடுத்த 54ஆவது நாளில், அதாவது டிசம்பர் 30, 2005 அன்று இந்த ஒப்பந்தத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டியும், பிரதமர் அலுவலகமும் அங்கீகரித்து ஒரே நாளில் கையெழுத்திட்டன.  இந்த ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த இரண்டு மாதங்களிலேயே, ஐரோப்பாவைச் சேர்ந்த ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து ஏறத்தாழ 8,339 கோடி ரூபாய் செலவில் 43 விமானங்களை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கும் ஒப்பந்தமும் முடிவானது.  அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மார்ச் 2006இல் இந்தியாவிற்கு வரவிருந்ததையொட்டியே, இந்த ஒப்பந்தங்களை முடிவு செய்வதில் இத்துணை வேகம் காட்டப்பட்டது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பதவியேற்ற பின், இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கும் அமெரிக்கா, கனடா மற்றும் அரபு நாடுகளுக்கும் விமானச் சேவைகளை வழங்கும் உரிமங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த பல தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டன.  அரபு நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஏர்இந்தியாவின் சந்தையை விழுங்கத் தொடங்கிய அதேசமயம், அரபு நாடுகள் ஏர்இந்தியா துபாய் வழியாக வட அமெரிக்க நாடுகளுக்குச் செல்லும் உரிமத்தை வழங்காமல் இழுத்தடித்தன.  இது மட்டுமின்றி, உள்நாட்டிலும் வருமானமிக்க வழித்தடங்களும், நேரங்களும் கிங் ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் ஆகிய தனியார் விமான நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டன.  அதாவது, தனியார் பஸ் முதலாளிகளின் இலாபத்திற்காக அரசு போக்குவரத்துக் கழகம் மொட்டையடிக்கப்பட்டதைப் போல, ஏர்இந்தியாவும் இந்தியன் ஏர்லைன்ஸும் மொட்டையடிக்கப்பட்டன.  இதனால் இந்த நிறுவனங்களின் வருமானம் குறைந்து, அவை நட்டத்தில் தள்ளப்பட்ட நேரத்தில்தான், வெளிச் சந்தையில் கடன்வாங்கியாவது ஏறத்தாழ 47,000 கோடி ரூபாய் பெறுமான இந்த 111 விமானங்களையும் வாங்கும் ஒப்பந்தத்தை முடிவு செய்தது, மைய அரசு.

இதற்கு முன்பாக விமானம் வாங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்பொழுது, தனது நிதி நிலைமையைக் கருத்தில்கொண்டு, வாங்கும் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளும் விதியை ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளும் நடைமுறையை விமான போக்குவரத்து அமைச்சகம் கடைப்பிடித்து வந்தது.  ஆனால், இம்முறையோ ஒப்புக்கொள்ளப்பட்ட 111 விமானங்களையும் வாங்கிக் கொள்ளும்படி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.  மேலும், விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் முடிவான பிறகு ஏர்இந்தியாவையும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தையும் ஒன்றாக இணைக்கும் முடிவும் அரசால் எடுக்கப்பட்டது.  விமானங்கள் வாங்குவதில் ஏற்கெனவே இருந்துவந்த நடைமுறையைப் பின்பற்றியிருந்தால்,  ஏர்இந்தியாவையும் இந்தியன் ஏர்லைன்ஸையும் ஒன்றாக இணைத்த பிறகு விமானங்களை வாங்கும் முடிவை எடுத்திருந்தால், நட்டத்தை ஒரு குறிப்பிட்ட அளவாவது குறைத்திருக்க முடியும் எனத் தணிக்கைத் துறை குறிப்பிட்டுள்ளது.

111 விமானங்களை வாங்கும் முடிவு, ஏர்இந்தியாவையும் இந்தியன் ஏர்லைன்ஸையும் இணைப்பது என்ற முடிவு  இவையிரண்டும் இப்பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன்தான் எடுக்கப்பட்டுள்ளன.  மார்ச் 2006இல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவிற்கு வருகை தந்தபொழுது, போயிங்குடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அவருக்கு நினைவுப் பரிசைப் போல வழங்கப்பட்டது.  அதேசமயம், இந்த ஒப்பந்தங்களாலும், இணைப்பாலும் ஏர்இந்தியா நிறுவனம் இன்று 20,000 கோடி ரூபாய் நட்டத்திலும், 46,000 கோடி ரூபாய் கடனிலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

2ஜி அலைக்கற்றை விவகாரத்தோடு இதனை ஒப்பிட்டால், ஏர்இந்தியா நிறுவனத்தைத் திட்டம் போட்டு நட்டத்தில் சிக்க வைத்த பிரதமர் மன்மோகன் சிங், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் படேல் தொடங்கி அதிகாரிகள் ஈறாக இந்த நம்பிக்கை துரோகத்தோடு தொடர்புடைய அனைவர் மீதும் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.  ஆனால், எதிர்க்கட்சிகளும், கார்ப்பரேட் பத்திரிகைகளும் இந்தச் சதித்தனம் பற்றி வாய்திறக்க மறுக்கின்றன.  அதேபொழுதில், இந்த நட்டத்தைக் காட்டி, இந்நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்திவிட வேண்டும் என்ற பிரச்சாரத்தைதான் மும்மரமாக நடத்தி வருகின்றன.

ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்2ஜி விவகாரத்தில் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவைக் குறிவைத்துத் தாக்கிய பத்திரிகைகள், ஏர்இந்தியாவை நட்டத்திற்குள் தள்ளிவிட்ட சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் படேலைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு, அவரே ஒரு பெரும் முதலாளி, பொருளாதாரப் பத்திரிகைகளுக்கு நெருக்கமான அன்பர் என்பதுதான் காரணம்.  2ஜி அலைக்கற்றை ஏலவிற்பனையில் நடந்த ஊழலைவிட, மிகப் பிரம்மாண்டமான அளவில் ஊழல் நடந்துள்ள கே.ஜி. எண்ணெய் வயல் ஊழலில் (பார்க்க: பு.ஜ; ஜூலை 2011) தொடர்புடைய முகேஷ் அம்பானியையும், பெட்ரோலியத் துறையின் முன்னாள் அமைச்சர் முரளி தியோராவையும் பத்திரிகைகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும், சி.பி.ஐ.யும், நீதிமன்றமும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அம்பானியின் பணபலமும் அரசியல் செல்வாக்கும் காரணமாகும்.  அவர்களின் இந்த செல்வாக்கு இவ்வூழல் தொடர்பான தணிக்கைத் துறையின் அறிக்கையை நீர்த்துப் போன வடிவத்தில் நாடாளுமன்றத்தில் அளிக்கும் அளவிற்குப் பா#ந்திருக்கிறது.

கார்ப்பரேட் பகற்கொள்ளை தொடர்பான ஊழல்களுள் ஒன்றிரண்டு மட்டுமே அரசியல் காரணங்களை முன்னிறுத்தி அம்பலப்படுத்தப்பட்டு, வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன; எஞ்சியவை வெளியே தெரிந்த வேகத்திலேயே அமுக்கப்படுகின்றன என்பதற்கு ஏர்இந்தியா ஒப்பந்தம், கே.ஜி எண்ணெய் வயல் ஏலம், இஸ்ரோ ஊழல் எனப் பல உதாரணங்கள் நம் கண் முன்பே வலம் வருகின்றன.

________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. சுதந்திரத்துக்கு முன்பு அந்நியர்களை எதிர்த்தோம். சுதந்திரத்துக்கு பின்பு அந்நியர்களை அரவணைத்து,ஆதரிக்கிறோம்! நல்ல கொள்கை நமது கொள்கை!

  2. கிங் ஃபிஷர் நிறுவனத்தை அரசு பெயில் அவுட் செய்தால் எவ்வளவ் தவறோ, அதே அளவுக்கு, ஏர் இந்தியாவுக்கு வருடம்தோறும் நம் வரிப்பணத்தில் 5 ஆயிரம், 10 ஆயிரம் கோடி என தாரை வார்ப்பதும் தவறு.

    வரிப்பணம் என்பது பின்தங்கிய பகுதிகளில் பள்ளிகளும், மருத்துவமனைகளும் கட்டவும், குடிநீர் வழங்கவும் பயன்படவேண்டுமே தவிர, பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் மட்டுமே பயன்படுத்தும் விமானக் கம்பெனியை நடத்துவதற்கு அல்ல.

    இதற்குத்தீர்வு, வந்த விலைக்கு விற்றுத் தலைமுழுகுவது மட்டுமே. லாபமோ, நஷ்டமோ, வாங்கியவன் பார்த்துக்கொள்ளட்டும். ஆண்டுதோறும் இதற்குக் கொட்டி அழும் வரிப்பணமாவது மிஞ்சி, உருப்படியான வேலைகளுக்குப் பயன்படுமே.

    மன்மோகன் அரசுக்கு, பொருளாதார சீர்திருத்தங்களையும், தாராள-தனியார் மயத்தையும் முன்னெடுத்துச் செல்ல தைரியம் இல்லாததே நம் துரதிஷ்டம்.

    • ///ஏர் இந்தியாவுக்கு வருடம்தோறும் நம் வரிப்பணத்தில் 5 ஆயிரம், 10 ஆயிரம் கோடி என தாரை வார்ப்பதும் தவறு.///

      முதலாளிகளுக்கு இதுவரை நமது
      வரிப்பணத்திலிருந்து கை நிறைய
      அள்ளிக்கொடுத்ததை பற்றி..

      ///மன்மோகன் அரசுக்கு, பொருளாதார சீர்திருத்தங்களையும், தாராள-தனியார் மயத்தையும் முன்னெடுத்துச் செல்ல தைரியம் இல்லாததே நம் துரதிஷ்டம்.///

      ’முதலாளித்துவத்தையும்’கம்யூனிசத்தையும்
      எதிர்க்கும் சரவணன் நீங்க தானே ?

    • சரவணன் அது எப்படிங்க உங்களுக்கு வேனும் போழுது மட்டும் பின்தங்கிய கிராமபுரம், மக்களுனு பேச ஆரம்பிடிக்கிறேங்க.

      ///கிங் ஃபிஷர் நிறுவனத்தை அரசு பெயில் அவுட் செய்தால் எவ்வளவ் தவறோ, அதே அளவுக்கு, ஏர் இந்தியாவுக்கு வருடம்தோறும் நம் வரிப்பணத்தில் 5 ஆயிரம், 10 ஆயிரம் கோடி என தாரை வார்ப்பதும் தவறு///

      முதல் கேள்வி எதற்கு தனியார் நிறுவனங்களை விமான வற்தகத்தில் நுலயவிட்டிர்கள்.

      ///இதற்குத்தீர்வு, வந்த விலைக்கு விற்றுத் தலைமுழுகுவது மட்டுமே. லாபமோ, நஷ்டமோ, வாங்கியவன் பார்த்துக்கொள்ளட்டும்.///

      தோழர் அதற்காக தான் மன்மோகன் இரவு பகலாக வேலை பார்கிறார். உங்கள் ஆசை நிச்சயம் செய்து முடிப்பார்.

      ///மன்மோகன் அரசுக்கு, பொருளாதார சீர்திருத்தங்களையும், தாராள-தனியார் மயத்தையும் முன்னெடுத்துச் செல்ல தைரியம் இல்லாததே நம் துரதிஷ்டம்.///

      என்னங்க அமெரிக்க விட ஃபாஸ்டா இருக்கிங்க. boss please dont fire them there are some bottle necks they need to resolve give them some more time they will surpass your expectation. otherwise when Team India sits for yearly appraisal with obama administration and american corporate heads you can reduce their ratings and not give any SALARY hikes.

  3. விரைவாக இந்தியவை காலனியாக மாற்றிவிட்டால், மீண்டும் காங்கிரஸ் இந்திய சுதந்திரத்திற்காக போராடலாம் அல்லவா?

  4. இது போல தெளிவான ஒரு கட்டுரையை எதிர்பார்த்திருந்தேன். பிரபுல் பட்டேல் ஒரு கேடி என்பது தெரியும் ஆனால் எந்த அளவுக்கு என்பது இப்போதான் தெரிகிறது. ஆனால் இவரும் ராஜாவை போல ஒரு கருவி தானே? மன்னுமோகனும் அவரது தலைவியும் எத்தனை பனத்தை ஆட்டையப் போட்டாங்களோ! வொய் திஸ் பணவெறி?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க