கடந்த ஜூலை மாதத்தில் அசாமின் போடோலாந்து பிராந்தியத்தில் முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினர் 78 பேர் கொல்லப்பட்டு, ஏறத்தாழ 400 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 4 இலட்சம் போடோ அல்லாத பழங்குடி மக்களும் முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். போடோ அல்லாத மக்கள் மீது, குறிப்பாக முஸ்லிம்களைக் குறிவைத்து போடோக்கள் நடத்திய இந்தப் பயங்கரவாத வெறியாட்டமும் அட்டூழியங்களும் கேள்விமுறையின்றித் தொடர்ந்த போதிலும், அசாம் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும், உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால், தென்மாநிலங்களுக்குப் பிழைப்புத்தேடி வந்துள்ள தங்களது உறவினர்களை ஊருக்குத் திரும்பிவிடுமாறு அசாமியர்கள் அழைத்துள்ளனர். அதையொட்டி, வடகிழக்கிந்திய மாநிலத்தவர் அனைவரும் தாக்கப்படக்கூடும் என்ற அச்சமும் பீதியும் கைபேசி குறுந்தகவல்களாகப் பரப்பப்பட்டு, கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து வடகிழக்கிந்திய மாநிலத்தவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்லாயிரக்கணக்கில் வெளியேறியுள்ளனர்.
அசாமின் போடோ சுயாட்சி கவுன்சில் பிராந்திய மக்கள் தொகையில் போடோ இனக்குழுவினர் மூன்றிலொரு பங்கினராக உள்ளனர். பாரம்பரியமாக வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் மூன்றிலொரு பங்கினராகவும், போடோ அல்லாத அசாமியர்கள், கூலித் தொழிலாளர்களாக பீகார், உ.பி. மாநிலங்களிலிருந்து குடியேறிய சந்தால், முண்டா முதலான பழங்குடியினர் மூன்றிலொரு பங்கினராகவும் உள்ளனர். இவர்கள் தவிர, வங்கதேசப் போரின் போது அகதிகளாகக் குடியேறிய வங்கதேச முஸ்லிம்களும் கணிசமாக உள்ளனர்.
ஆனால், தமது சமூகம் முன்னேறாததற்கு அகதிகளாக ஊடுருவியுள்ள வங்கதேச முஸ்லிம்களே காரணம் என்றும், முஸ்லிம்களும் இதரப் பழங்குடியினரும் நதிக்கரை, காட்டுநிலங்களை ஆக்கிரமிப்பதாகவும் வெறியூட்டப்பட்ட போடோக்கள் 90களிலிருந்து அடுத்தடுத்து போடோ அல்லாதவர்கள் மீது கொடிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடித்த வடகிழக்கிந்திய தேசிய இனங்களின் போராட்டங்களைப் பழங்குடி இனரீதியில் பிளவுபடுத்தி மோதவிட்டு இரத்தம் குடிப்பது காங்கிரசின் அரசியல் நரித்தனம்; அந்த வகையில் அனைத்து அசாம் மக்களின், அனைத்து அசாம் மாணவர்களின் போராட்டத்துக்கு எதிராக போடோக்களை ஆயுதபாணியாக்கி, இனவெறிக் குழுக்களை உருவாக்கியதே காங்கிரசு அரசின் உளவுப்படையான “ரா” தான்.
இதுவரை சிதறிக்கிடந்த அசாமிலுள்ள முஸ்லிம்கள் இப்போது தனிக் கட்சியாக வளர்ந்துள்ளதால், முன்போல அவர்களை வளைத்து ஓட்டு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ள காங்கிரசால் முடிவதில்லை. எனவே, பா.ஜ.க. வழியில் முஸ்லிம் அல்லாதோரின் ஓட்டுக்களைக் கைப்பற்றும் நோக்கத்துடன், அசாம் காங்கிரசு இப்போது போடோக்களுடன் புதிய கூட்டணி கட்டிக் கொண்டு அரவணைத்துச் செல்கிறது. போடோ இனவெறிக் குழுக்கள் இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்கள் மீதும் பிற பழங்குடியினர் மீதும் தற்போதைய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளன.
போடோ இனவெறிக் குழுக்களின் பயங்கரவாதத் தாக்குதல் அட்டூழியங்களுக்குத் தமது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் மும்பையில் முஸ்லிம்கள் பேரணி நடத்தியபோது, போலீசைக் குவித்து அச்சுறுத்தியதால், அக்கெடுபிடிகளை எதிர்த்து சில முஸ்லிம் இளைஞர்கள் போலீசு வாகனங்களைச் சேதப்படுத்தி எரித்தனர். இதைச் சாக்கிட்டு போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, போலீசுக்குப் பாதுகாப்பில்லை, மும்பையில் குடியேறியுள்ள முஸ்லிம்கள்தான் வன்முறைக்குக் காரணம் என்று அவதூறு பரப்பி, இந்துவெறிஇனவெறி பாசிஸ்டான ராஜ்தாக்கரே திடீர் பேரணி நடத்தினார். அத்வானியோ, வங்கதேச முஸ்லிம்களின் ஊடுருவல்தான் போடோலாந்தில் நடந்துள்ள வன்முறைத் தாக்குதலுக்கு முதன்மைக் காரணம் என்கிறார்.
அசாமில் நடந்துள்ள இந்த பயங்கரவாதத் தாக்குதலை, பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பலும் ராஜ்தாக்கரேவும் நாடு தழுவிய விவகாரமாக்கி, அனைத்து இஸ்லாமியருக்கும் எதிராகத் திருப்பிவிட்டுத் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கின்றன. இந்து ஓட்டுக்களை இழந்துவிடாதிருக்க காங்கிரசு அரசு இச்சக்திகளை அனுசரித்துப் போகிறது. அசாம் விவகாரத்தைத் தமது அரசியல் நோக்கங்களுக்குச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டு, நாட்டு மக்களை இனக்குழு அடிப்படையிலும் மதவாத அடிப்படையிலும் பிளவுபடுத்தி மோதவிட்டு , அரசு பயங்கரவாதத்தை ஏவி ஒடுக்க இந்துவெறியர்களும் காங்கிரசும் போட்டி போடுவதையே இந்நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
_______________________________________________
– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.
_____________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
