privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்அசாம் கலவரம்: ஆர்.எஸ்.எஸ் சொல்லும் வங்கதேச ஊடுருவல் உண்மையா?

அசாம் கலவரம்: ஆர்.எஸ்.எஸ் சொல்லும் வங்கதேச ஊடுருவல் உண்மையா?

-

சாமியர்களைக் காப்பாற்று.பாரதக் குடிமக்களாகிய போடோக்களைக் காப்பாற்று. வங்கதேச ஊடுருவல்காரர்களை வெளியேற்று. அசாமியர்களின் நிலங்களையும் தொழில்களையும் ஆக்கிரமித்துவருகின்ற வங்கதேச முஸ்லீம்களை வெளியேற்று”

மேற்கண்ட முழக்கங்களோடு ஆர்பாட்டம் ஒன்றை ஆகஸ்ட் 21ம் தேதியன்று விஷ்வ ஹிந்து பரிசத் என்கிற சங்கப்பரிவார அமைப்பு நடத்தியுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு ‘தேசபக்தர்களை’ அணிதிரளக் கோரி ஒரு துண்டறிக்கையையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். மேற்படி துண்டறிக்கையில், “பங்களா தேசத்தவர்கள் முறையான அனுமதிப் பத்திரம் இன்றி பாகிஸ்தானுக்குள் நுழைய முடியுமா?” என்றும், “பாகிஸ்தானியர்கள் முறையான அனுமதிப் பத்திரம் இன்றி சௌதி அரேபியாவுக்குள் நுழைய முடியுமா?” என்றும் கேள்வி  எழுப்பப்பட்டுள்ளது. மேலும், நமது நாட்டில் 3 கோடி வங்க தேசத்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளாதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் டவுசர்கள் அடித்துள்ள நோட்டீஸின் சாராம்சம் இது தான் – வங்கதேசத்திலிருந்து முசுலீம்கள் கள்ளத்தனமாக ‘பாரத’ தேசத்திற்குள் நுழைகிறார்கள்; இது சட்டவிரோதமானது. மேலும், இந்த வந்தேறிகளின் மூலம் வடகிழக்கு மாநிலங்களை முசுலீம்கள் ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள் என்பதும் ஆகும். இவை எப்பேர்பட்ட பொய்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில வரலாற்று பின்னணிகளையும் புள்ளிவிவரங்களையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

 

Table 1

Percentage Decadal Variation in Population since 1951 in India and Assam

1951-61

1961-71

1971-81

1971-91

1991-01

01-2011

India

21.64

24.80

24.66

54.41

21.54

17.64

Assam

34.98

34.95

53.26

18.92

16.93

Dhubri

43.74

43.26

45.65

22.97

24.40

Dhemaji

75.21

103.42

107.50

19.45

20.30

Karbi Anglong

79.21

68.28

74.72

22.72

18.69

 

மேலே உள்ள புள்ளிவிவரத்தை கவனமாகப் பரிசீலித்தால் நமக்கு சில விஷயங்கள் தெளிவடையும். இந்தப்  பட்டியலில், ஒவ்வொரு பத்தாண்டுகளில் அனைத்திந்திய அளவில் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம், அசாமின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் அதன் சில மாவட்டங்களில் வளர்ச்சி விகிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கலவரம் நடந்து வரும் கோக்ரஜ்ஹர் மாவட்டத்தை ஒட்டி அமைந்திருக்கும் துப்ரி மாவட்டம் தான் பங்களாதேசத்தின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் தான் வங்க மொழி பேசும் முசுலீம்களின் மக்கள் தொகை அதிகளவில் உள்ளது.

பட்டியலின் படி பார்த்தால், 1971-ம் ஆண்டுக்குப் பிறகு துப்ரி மாவட்டத்தின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் விழுந்துள்ளது ( அதாவது, முசுலீம்களின் வளர்ச்சி விகிதம்) அதற்கு முன்பும், துப்ரி மாவட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக இருந்த காலத்திலேயே அசாமின் பிற மாவட்டங்களில் ‘இந்துக்களின்’ மக்கள் தொகை மிக அதிகளவிலான வளர்ச்சி நிலையில் இருந்துள்ளது. குறிப்பாக தெமாஜி மற்றும் கார்பி மாவட்டங்களின் வளர்ச்சியை துப்ரி மாவட்டத்தோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடியும்.

அதே போல், இப்போது கலவரம் நடக்கும் கோக்ரஜ்ஹர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 2001 – 2011 காலகட்டத்தில் அதன் மக்கள் தொகை வளர்ச்சியே 5.19 சதவீதத்திற்கு வீழ்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தியும் மிகக் குறைவான அளவான 280 பேராக (சதுர கிலோமீட்டருக்கு) உள்ளது. மேலும் மக்கள் இம்மாவட்ட மக்கள் தொகையில் 20% அளவுக்கே முசுலீம்கள் உள்ளனர். இந்த விவரங்களில் இருந்தே முசுலீம்களால் பிரதேச அளவில் பெரியளவில் நெருக்கடி ஏதுமில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஆக, வங்கமொழி பேசும் முசுலீம்கள் பங்களாதேசத்திலிருந்து ஊடுருவி அசாமிய நிலங்களை அக்கிரமிக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் சொல்வது பச்சைப் பொய். ஆனால், அசாம் மாநிலத்தில் – குறிப்பாக துப்ரி மாவட்டத்தில் – வங்க மொழி பேசும் முசுலீம்கள் மக்கள் தொகை சதவீதத்தில் அதிகளவில் இருப்பதற்குக் காரணம் என்ன?

1826-ம் ஆண்டுக்கு முன்பு அசாம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இல்லை. அது அப்போது மூன்றாம் பர்மிய சாம்ராச்சியத்தின் மேற்குப் பகுதி எல்லைப்புற பிரதேசமாக இருந்தது. 1800களின் துவக்கத்தில் நடந்த ஆங்கிலோ – பர்மிய யுத்தத்தில் தோல்வியுறும் பர்மாவின் ஏவா அரசு ஆங்கிலேயருடன் ஒரு ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுகிறது – அது யெந்தபோ ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. அதன் படி, பர்மா காலனிய இந்தியாவிடம் விட்டுக் கொடுத்த நிலப்பகுதி தான் அசாம். அதாகப்பட்டது, பாரதமாதாவின் பீச்சாங்கையாக விளங்கும் நிலப்பகுதியே வேறு ஒரு நாட்டிடம் இருந்து அடித்துப் பறித்து ஒட்டவைக்கப்பட்டது தான்.

அதே காலகட்டத்தில் வெள்ளையர்கள் வங்காளப் பகுதியில் அமுல்படுத்திய விவசாயக் கொள்கைகளும், பொருளாதாரக் கொள்கைகளும் விவசாயிகளையும் கைவினைஞர்களையும் ஓட்டாண்டிகளாக்குகிறது. பெருந்திரளான மக்கள் வெள்ளை அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஜமீந்தாரி முறையின் கீழ் அல்லலுற்று வந்தனர். அதே நேரம் வெள்ளையர்கள் புதிதாக ஆக்கிரமித்துக் கொண்ட பகுதியில் நிறைய நிலங்கள் இருந்தன – ஆனால், அவற்றின் மூலம் நிலவருவாய் ஏதும் கிடைக்காத நிலையில் அவர்களே வங்கத்தின் கிழக்குப் பகுதி மக்களை புதிய நிலப்பகுதியில் குடியேற ஊக்குவித்துள்ளனர். அப்படிக் குடியேறியவர்கள் அசாமியப்பகுதியில் நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்யத் துவங்குகிறார்கள்.

இப்படி புதிதாக குடியேறும் வங்காளிகளின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில் அதிகரித்துச் சென்ற நிலையில், 1920-ம் ஆண்டு வாக்கில் வங்க விவசாயிகளின் இடப்பெயர்ச்சிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். ஆனால், அதற்குள் கோல்பாரா, நாகாவ்ன், காமரூப் போன்ற மாவட்டங்களின் முசுலீம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு அரசின் அலட்சியமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் இடம்பெயர்ந்தவர்களைத் தான் இன்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘சட்டவிரோதமாக’ குடியேறியவர்கள் என்று தூற்றுகிறது.

இத்தனைக்கும் இவர்கள் தேசப் பிரிவினையின் போது தாங்கள் குடியேறிய மண்ணுக்கு விசுவாசமாக இந்த நாட்டையே நம்பி இதன் இறையாண்மையையே ஏற்றுக் கொண்டு இங்கே தங்கி விட்டவர்கள். அவர்கள் அசாமின் மொழி கலாச்சாரத்தை தமக்குள் வரித்தும் கொண்டனர். உதாரணமாக, துப்ரி மாவட்டத்தில் முசுலீம்களின் மக்கள் தொகை சதவீதம் 74.29% அங்கே அசாம் மொழி பேசுபவர்கள் 70.09%. முசுலீம்கள் என்றாலே அவர்கள் நமது நாட்டின் மீது விசுவாசம் அற்றவர்களென்றும் அவர்கள் பிற மொழிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்களென்றும் ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் வழக்கமாக அவிழ்த்து விடும் பொய்களின் மேல் வங்காளதேச முசுலீம்கள் காறித் துப்பியிருக்கிறார்கள். பிறகு ஏன் இந்தக் கலவரங்கள்?

அசாம்-கலவரம்-1இன்றைக்கு அசாமில் நடந்து வரும் கலவரங்களுக்கு சிக்கலான வரலாற்றுப் பின்னணி உள்ளது. இன்றைக்கு போடோக்களின் தரப்பாகவும் பார்ப்பன இந்து தேசியத்தின் தரப்பாகவும் முன்வைக்கப்படும் ‘வங்காளதேச முசுலீம் ஊடுருவல்காரர்களின்’ ஆக்கிரமிப்புகள்  உண்டாக்கும் சமூக பொருளாதார நெருக்கடி என்பது முதன் முதலில் ‘அந்நியர்களுக்கு’ எதிரானதாகத் தான் துவங்கியது. அசாமியர்களோடு முதலில் முரண்பட்டது வங்கதேச முசுலீம்கள் அல்ல வங்காள மொழி பேசும் இந்துக்கள் தாம்.

போலி சுந்தந்திரத்திற்குப் பின் அசாமின் உள்ளூர் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது அசாமியர்கள் தான். அதே போல, ‘சுதந்திரத்தின்’ மூலம் கிடைத்து வந்த பலன்களை பெருமளவில் அனுபவித்து வந்ததும் நடுத்தர வர்க்க அசாமியர்கள் தான். அரசு வேலைகளிலும் மற்ற பிற சலுகைகளிலும் அசாமிய நடுத்தர வர்க்கத்துக்குப் போட்டியாக வங்க மொழி பேசும் இந்துக்கள் எழுகிறார்கள். அசாமியர்களும் வங்காளிகளுக்கும் இடையிலான முதல் கலவரம் 1960-ல் நடக்கிறது – அது இரண்டு மொழி பேசும் ‘இந்துக்களுக்கு’ இடையில் நடந்த கலவரம்.

அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் (All Assam Students Union/ AASU) ஆரம்பத்தில் நடத்திய ‘அசாம் இயக்கம்’ அதன் துவக்கத்தில் வங்காளதேச முசுலீம் ‘ஊடுருவல்காரர்களுக்கு’ எதிராக நடத்தப்பட்டதல்ல – அது அந்நியர்களுக்கு எதிரான இயக்கம் என்றே சொல்லப்பட்டது. அதற்கு, உள்ளூர் அளவிலான அதிராக வர்க்கத்தின் ஆதரவும் இருந்தது.

இதற்கிடையே எழுபதுகளில் இடதுசாரிகள் அசாமில் ஓரளவுக்கு செல்வாக்குப் பெறுகிறார்கள். 1974-ல் நடந்த கவுஹாத்தி முனிசிபல் தேர்தலில் முதன்முதலாக இடதுசாரிகள் வெற்றி பெருகிறார்கள். வங்கதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த முசுலீம்கள் மட்டுமின்றி வங்கமொழி பேசும் இந்துக்கள் மற்றும் பல்வேறு பழங்குடியினரின் ஆதரவையும் இடதுசாரிகள் பெற்றிருந்தனர். அந்த சமயத்தில் எழுந்து வந்த இனவாதிகளுக்கு இப்போது ஒரு நெருக்கடி உண்டாகிறது; அதாவது, உள்ளூர் பழங்குடியினரையோ அல்லது மாநிலத்துக்கு வெளியே – குறிப்பாக தில்லியில் – அரசியல் செல்வாக்குடன் திகழும் பிரிவினரையோ தமது வெறுப்புப் பிரச்சாரத்தின் இலக்காக வைத்திருப்பது ஆபத்துக்குரியதானது.

இந்த கட்டத்தில் தான் ‘அந்நியர்களுக்கு எதிராக’ என்பது ‘வங்கதேச முசுலீம் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக’ என்று மாறுகிறது. இதன் தொடர்ச்சியாகத் நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முசுலீம்கள் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள். பிரிக்கப்படாத நாகோன் மாவட்டத்தில் 1983 பிப்ரவரி 13ம் தேதி நிகழ்ந்த நெல்லீய் படுகொலையில் மட்டும்  சுமார் 2,000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பெருமளவு குழந்தைகளும் பெண்களுமே இருந்தனர்.

1979 துவங்கி 1985 வரை அசாமிய இனவாதிகள் நடத்திய படுகொலைகள் இன்றும் ஆறாத ரணமாய் இருக்கிறது. வடகிழக்கில் உள்ளூர் அளவில் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களிடம் ஒரு ஐக்கியம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் இந்திய ஆளும் வர்க்கம் மிகத் தெளிவாகவே இருந்துள்ளது. போடோ, குக்கி, மிசோ நாகா என்று வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே தீராத இனக்கலவரங்களை மூட்டி விட்டது இந்திய ஆளும் வர்க்கம் தான்.

போடோக்கள் மற்றும் அசாமியர்களின் தொடர்தாக்குதலுக்குள்ளான முசுலீம்கள், தம்மைக் காப்பாற்றிக் கொள்ள இரண்டாயிரங்களில் பத்ருதீன் அஜ்மால் என்பவரால் துவங்கப்பட்ட அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கீழ் அணிதிரளத் துவங்குகிறார்கள். வாசனைத் திரவியங்கள் தயாரித்து விற்கும் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பெருமுதலாளியான பத்ருத்தீன் அஜ்மால் தியோபந்த் எனும் அடிப்படைவாத இசுலாமியப் பிரிவைச் சேர்ந்தவர்.

இரண்டாயிரங்களின் மத்தியில் அவ்வளவாகச் செல்லாக்கு இல்லாமலிருந்த இவரது கட்சி தற்போது 18 எம்.எல்.ஏக்களுடன் முக்கியமான எதிர்கட்சி எனும் அந்தஸ்திற்கு வளர்ந்துள்ளது. காங்கிரசு மற்றும் பாரதியஜனதாவின் இந்துத்துவ வெறிக்கு பதிலடியாகத் துவங்கப்பட்ட இந்த அமைப்பும் இசுலாமியர்களை ஒரு முக்கியமான ஓட்டுவங்கியாக அணிதிரட்டியுள்ளது. தற்போது நடந்து வரும் கலவரங்கள் இந்த அணிசேர்க்கையை மேலும் உறுதிப்படுத்துவதோடு மக்களைக் கூர்மையாகப் பிளந்து எதிரெதிர் முகாம்களாக நிறுத்தியுள்ளது.

சுமார் நூறைம்பது ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர் காலத்தில் அசாமில் குடியேறிய வங்காளிகளின் நிலைமை என்பது இலங்கையின் மலையகத் தமிழர்கள் மற்றும் மலேசியத் தமிழர்களின் நிலைமையை ஒட்டியது தான். சிங்கள இனவாத பாசிஸ்டுகள் மலையகத் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வதும் ஆர்.எஸ்.எஸ் காட்டுமிராண்டிகள் வங்காளி முசுலீம்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வது ஏறக்குறைய ஒன்று தான்.

மட்டுமல்லாமல் அசாமிய தேசிய இனத்தைக் காக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸின் நோக்கமன்று – இந்த பிரச்சினையை வைத்துக் கொண்டு அகில இந்திய அளவில் இந்துக்களிடையே பதற்றத்தை உண்டாக்கி முசுலீம்களை அந்நியப்படுத்துவதும், வடகிழக்கில் ஓட்டுக்களை அள்ளுவதும் தான் உண்மையான நோக்கம். அகில இந்திய அளவில் இந்துக்களை பாசிச செயல்திட்டத்தின் கீழ் அணிதிரட்ட இவர்கள் பிரதேச அளவிலான உத்திகளைக் கையாள்கிறார்கள். உதாரணமாக, கருநாடகத்தில் கன்னடப் பெருமிதம், குஜராத்தி அஸ்மிதா, மராத்தி மானூஸ் போல அந்தந்த பிரதேசங்களில் உள்ள பிற்போக்கு நிலபிரபுத்துவ ஆதிக்கக் கருத்தியலை தங்கள் முகமூடியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இவ்வாறு தயார்படுத்தப்படும் இந்துத்துவ இயக்கங்களின் தொண்டர்களோ மூளையற்ற வெற்று மண்டையோடுகளோடு தான் அலைகிறார்கள் என்பது சமீபத்தில் நிரூபணமானது. கடந்த 30ம் தேதி பெங்களூருவில் இருந்து மங்களூருக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்த வட இந்தியத் தொழிலாளர்களை மாண்டியாவில் தடுத்து நிறுத்திய ஏ.பி.வி.பி எனும் சங்கப்பரிவார அமைப்பின் குண்டர்கள், அதில் 89 தொழிலாளர்களை வெளியே இழுத்துப் போட்டு ‘வங்கதேசத்திலிருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் இவர்கள்’ என்று கூச்சலிட்டபடியே அடித்துள்ளனர். இந்தத் தொழிலாளர்களில் பலர் ராஜஸ்தான், உ.பி, பீகார், ஒரிசா மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தாம் – அதிலும் பலர் ‘இந்துக்கள்’.

இந்து பாசிசம் பொய்களையும் வதந்திகளையும் செயல்தந்திரமாகக் கொண்டு வளர்ந்து வருகிறது. இது இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல – அனைத்து உழைக்கும் மக்களுக்குமே எதிரானது என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் போது தான் அவர்களைக் களத்தில் வீழ்த்த முடியும்.

தகவல் மூலங்கள் – கஃபிலா, அவுட்லுக் மற்றும் ஹிந்து நாளிதழ்

_________________________________________________

– தமிழரசன்.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: