privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஐ.டி.சி கிராண்ட் சோழா!

ஐ.டி.சி கிராண்ட் சோழா!

-

 

கிராண்ட்-சோழா-1

செப்டம்பர் 15, 2012 சனிக்கிழமை அன்று கிண்டியில் புதிதாக கட்டப்பட்ட ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

படிக்கவும்

இந்த ஹோட்டல் சோழப் பேரரசின் கட்டிடக் கலை வடிவத்தை அடிப்படையாக வைத்து கட்டப்பட்டிருக்கிறது. ஹோட்டலின் அறைகளுக்கும் கூடங்களுக்கும் சோழப் பேரரசர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்றவர்களை நினைவு கூரும் வண்ணம் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன. தமிழ் நாட்டின் பாரம்பரிய பெருமையையும் தமிழ் தேசியத்தின் புகழையும் அங்கீகரித்து ஐடிசி நிறுவனம் இந்த ஹோட்டலை தமிழ்நாட்டுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறதாம்.

‘ஐடிசி கிராண்ட் சோழா மூலம் உலக மக்களை சென்னை நோக்கி வரும்படி யோசிக்க வைத்திருக்கிறோம். கூடிய விரைவிலேயே சென்னை உலக வரைபடத்தில் இடம் பிடித்து விடும்’ என்கிறார் ஐடிசி குழுமத் தலைவர் ஒய் சி தேவேஸ்வர். தமிழ் தேசியவாதிகளின் நீண்ட கால கனவை சில நூறு கோடி ரூபாய் முதலீட்டில் சாதித்திருக்கிறது ஐடிசி.

15 லட்சம் சதுர அடியிலான இந்த ஹோட்டலில் தங்குவதற்கான 600 சொகுசு அறைகள் இருக்கின்றன. கூப்பிடு தூரத்தில் இருக்கும் அடையாற்று பாலத்திற்கு அருகில் குடிசை கட்டி வாழும் தமிழர்களின் வீடுகளுக்குள் மழைக் காலங்களில் நீர் புகுந்து விட்டால் அவர்களுக்கு மாநகராட்சி பள்ளிகளே கதி. ஒரு வேளை மாநகராட்சி பள்ளிகள் நிறைந்து விட்டால் மாற்று தங்குமிடத்திற்கு இந்த ஓட்டலில் தங்கலாம் என்று யாரும் கனவிலும் நினைக்க முடியாது. இருப்பினும் இந்தக்குடிசையும், அந்த ஓட்டலும் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கின்றன.

‘விருந்துகள் நடத்தவும், மாநாடுகள் நடத்தவும் 1 லட்சம் சதுர அடி வசதிகள் இந்த ஹோட்டலில் உள்ளன. இவற்றின் மூலம் சென்னை இனிமேல் பன்னாட்டு மாநாடுகள் நடத்துவதற்கு சிங்கப்பூருடனும் மலேசியாவுடனும் போட்டி போட முடியும்’ என்கிறார் தேவேஸ்வர்.  வெளிநாடுகளிலிருந்து வரும் வியாபாரிகள் இங்கு தங்கி மல்லையா, மாறன், அப்பல்லோ ரெட்டி, பொள்ளாச்சி மகாலங்கம், எம்.ஏ.எம் ராமசாமி, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், டி.வி.எஸ் வேணு சீனிவாசன் போன்ற உள்ளூர் தரகர்களுடன் தமிழ்நாட்டை விலைக்கு வாங்குவதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தலாம்.

ஹோட்டலை திறந்து வைத்த முதலமைச்சர் ஜெயலலிதா, ‘ஐடிசி நிறுவனத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்’ என்று சொன்னதாக தேவேஸ்வர் தெரிவித்தார்.  அதைத் தொடர்ந்து சிவகாசியில் இருக்கும் தொழிற்சாலையை உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையாக மாற்றவும் சென்னைக்கு அருகில் 30 ஏக்கர் நிலத்தில் ஒரு போக்குவரத்து மையத்தை உருவாக்கவும் ஐடிசி திட்டமிட்டுள்ளது. அதே சிவகாசியில்தான் இன்றுவரை தீக்காய புண்களுக்கான சிறப்பு மருத்துவமனை இன்றுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்பற்றி கவலைப்படாத ஜெயா ஐ.டி.சி முதலாளிகளுக்காக சபதம் ஏற்கிறார்.

கிராண்ட்-சோழா-1

‘ஐடிசியின் எதிர்கால விரிவாக்க பணிகளின் முக்கிய பகுதியாக இதே போன்ற அதிசொகுசு ஹோட்டல் இலங்கையில் உருவாக இருக்கிறது’ என்ற தகவலை ஜெயலலிதாவிடம் தேவேஸ்வர் சொல்லவில்லை போலிருக்கிறது.  சொல்லியிருந்தாலும்,  இலங்கை மாணவர்களின் கால்பந்து அணியை திருப்பி அனுப்பிய ஈழத் தாய், இலங்கையுடன் பொருளாதார தொடர்புகள் வைத்திருக்கும் ஐடிசியை தமிழ்நாட்டிலிருந்தே திருப்பி அனுப்பியிருக்க மாட்டார் என்பதில் சந்தேகமில்லை

ஐடிசி ஹோட்டல் ‘பொறுப்புணர்வுடன் சொகுசு’ என்றும் உலகத்திலேயே ‘பசுமைமிகு சொகுசு ஹோட்டல் குழுமம்’ என்றும் தன்னை பிரகடனப்படுத்திக் கொள்கிறது. ஹோட்டலின் அனைத்து தேவைகளுக்கும் 100% மறு சுழற்சி செய்யப்பட்ட ஆற்றல் பயன்படுத்தப்படுகிறதாம். நட்சத்திர ஓட்டல்களில் மலங்கழுவவும், குளிக்கவும் கூட நன்னீர்தான் பயன்படுத்தப்படுகிறது. எல்லா அறைகளிலும் இருக்கும் பாத்டப்புக்களை குளிப்பதற்கு பயன்படுத்துவதால் ஏராளமான நீர் விரயமாகிறது. இது போக நீச்சல்குளங்கள். இத்தகைய ஆடம்பர வக்கிரத்திற்கு பசுமை பட்டம் என்றால் என்ன செய்யலாம்?

5 நட்சத்திர அந்தஸ்திலான இந்த ஹோட்டலை கட்டுவதற்கு ரூ 1,200 கோடி செலவழித்திருக்கும் ஐடிசி, சிகரெட் விற்பனையில் சென்ற ஆண்டு ரூ 5,500 கோடி சம்பாதித்திருப்பதையும் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ 15,000 கோடி சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்திருக்கிறது. மேட்டுக்குடியினருக்கு நட்சத்திர ஓட்டல் மூலமும் சாதாரண மக்களுக்கு சிசர், கோல் ஃபிளேக் ஃபில்டர் மூலமும் அந்நிறுவனம் ‘சேவை’ செய்வதை புரிந்து கொள்ளலாம்.

தூண்களே இல்லாத 30,000 சதுர அடி நடன அறையும் 10 வெவ்வேறு விதமான உணவு விடுதிகளும் ஹோட்டலில் உள்ளன. நடன அறையின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு நடப்பதற்கு 5 நிமிடங்கள் பிடிக்குமாம். சென்னையில் போலீஸ் ரவுடிகளின் தொந்தரவு இல்லாமல் நள்ளிரவு பார்ட்டிகள் நடத்தவும் வெவ்வேறு வகை உணவுகளை ருசிக்கவும் தமிழர்களுக்கும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கும் வசதி கிடைத்திருக்கிறது. களைப்பாக இருந்தால் 23,000 சதுர அடியிலான ராயல் ஸ்பாவில் உடலை புதுப்பித்துக் கொள்வதன் மூலம் காயகல்பம் சாப்பிட்டது போன்று நீண்ட ஆயுளையும் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை நகருக்குள் குடியிருக்க இடம் கொடுக்க முடியாமல் ‘குடிசை’ மாற்றுத் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் செம்மஞ்சேரிக்கு அனுப்பி வைக்கப்படும் ஏழை மக்களும், வாடகை கொடுக்க கட்டுப்படி ஆகாமல் தாமாகவே புறநகர் பகுதிகளுக்கு குடி பெயர்ந்துள்ள உழைக்கும் மக்களும் வேலைக்குப் போய் வரும் பல மணி நேர தினசரி பயணத்தின் போது ‘பசுமை’யான பரந்து விரிந்த இந்த ஹோட்டலை மனதுக்குள் நினைத்துக் கொண்டு சிரமத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

    • உண்மை இதுவே…ஐ.டி.சிக்காரன் இந்த ஹோட்டலை கட்டியது எந்தப் பணத்தில் எல்லாம் வில்ஸும் பில்ட்டரும் வித்த காசில் தான்….சென்னையில் இது புதிது…மற்ற பெருநகரங்களில் ஐ.டி.சி ஹோட்டல்கள் ஏற்கனவே உண்டு…இந்தியன் டொபாக்கோ கம்பெனி என்ற வெறும் சிகரெட் விற்கும் கம்பெனி இன்று பிஸ்கட்(சன்பீஸ்ட்), பேப்பர், ஹோட்டல்கள் என புகாத துறையே இல்லை…ஆனால் அவனுடைய அடிப்படை
      தொழில் அதன் பெயரிலெயே விளங்கும்…..சிகரெட்..சிகரெட்..சிகரெட்…அதுவும் சிஸர்ஸ், கோல்ட் பிளேக், வில்ஸ் என அந்தந்த விலை, மற்றும் நுகர்வோர் பிரிவு ஒவ்வொன்ரிலும் அவனே டாப்…ஆனால் பாருங்க அவனது கஸ்டமர் அக்மார்க் அடித்தட்டு மக்கள் மற்றும் ஏழைகள்…மட்டுமே…ஏனெனில் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் 555 ஓ, மோர் மெந்த்தால் ஓ இன்ன பிற மேல்த்ட்டு மக்களின் விருப்பமான சிகரெட்டுகள் அனைத்தும் ஐ.டி.சிதயாரிப்புகள் அல்ல…

      ஆகையால் அசகாய வளர்ச்சிக்குக் காரணம் உழைக்கும் மக்களே…

  1. அந்த இடம் இந்த நிறுவனம் வாங்குவதற்கு முன் யாரிடம் இருந்தது? அந்த இடத்தில் 15 ஆண்டுகளுக்கு சினிமா படபிடிப்புகள் நடந்தன… எனக்கு தெரிந்து 19 ஆண்டுகளுக்கு வந்த சின்ன மாப்ளே எனும் பிரபு படம் அந்த இடத்தில் நீண்ட நாட்கள் படபிடிப்பு நடந்து பார்த்துள்ளேன்… இந்த இடத்தை தமிழ் நாடு அரசே.. தாரை வார்த்து கொடுத்ததா என தெரியவில்லை…

  2. ஒரு நாள் வாடகை ரூ.15000 அ ரூ.20000 இருக்கலாம்

    டீ, காபி, தர்பூசணி ஜுஸ் ரூ.250 இருக்கலாம்

    ரூ.1200 கோடி 5 வருடத்தில் திருப்பி எடுத்திடுவான்

    அப்புறம் ஒரு அமெரிக்க கம்பெனிக்கு வித்திடுவான்

  3. நம்ம மக்கள் சிகரெட் என்ன விலை வித்தாலும் வாங்குவாங்க ஐயா…நொடித்துப் போகாத வியாபாரம் அதுதான்.

  4. அன்னாந்து பார்க்கும் மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகென்று பெயரும் வைத்தார்.

    இனி பொன்னான தமிழ்நாடு என்று பெயர் வைத்து பெருமைப்பட்டுக் கொள்வோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க