Tuesday, May 6, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅமெரிக்கா: சிகாகோ ஆசிரியர்கள் போராட்டம்!

அமெரிக்கா: சிகாகோ ஆசிரியர்கள் போராட்டம்!

-

மெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் திங்கள் கிழமை முதல் (செப்டம்பர் 10, 2012) பள்ளி ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

  • அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
  • ஆசிரியர் யூனியனை முடக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்
  • தனியார் பள்ளிகளை வளர்த்து விடும் கொள்கைகளை மாற்ற வேண்டும்
  • ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வேண்டும்

போன்ற கோரிக்கைகளுடன் நடத்தப்பட்ட பேரணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

சிகாகோவில் ஆசிரியர், உதவியாளர், நிர்வாகிகள் என்று சுமார் 29 ஆயிரம் பேர் பள்ளிகளில் பணி புரிகின்றனர். பள்ளிகளில் பெரும்பான்மையானவை அரசால் நடத்தப்படுகின்றன. உயர் பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மிகச் சிலவே உள்ளன்.  பள்ளி ஆசிரியர்களின் சங்கம் பள்ளிக் கல்வியின் தரத்தையும் ஆசிரியர்களின் நலன்களையும் பாதுகாக்க போராடும் அமைப்பாக இருக்கிறது.

அமெரிக்காவை பீடித்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பள்ளிக் கூடங்களை நடத்தும் உள்ளூர் அமைப்புகளுக்கு நிதி ஆதாரங்கள் குறைந்தன. அதைச் சரி கட்ட மத்திய அரசிடமிருந்து போதுமான ஆதரவு இல்லாததால் நகர மேயர் ரஹம் இம்மானுவேல் நகராட்சி முழுவதற்குமான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்திருந்தார். அவற்றின்  ஒரு பகுதியாக பள்ளிக் கல்வி நிர்வாகம் கல்விக் கொள்கையில் பல மாற்றங்களை அறிவித்திருந்தது..

  • அரசு பள்ளிகளில் சிலவற்றை மூடி யூனியன்கள் செயல்படாத புதிய பள்ளிகளை திறக்க அனுமதிப்பது
  • ஆசிரியர்களின் பணிச்சுமையை அதிகரிப்பது
  • அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையான புதிய ஆசிரியர்கள் நியமிப்பதை தவிர்ப்பது
  • மாணவர்கள் தேர்வுகளில் பெறும் மதிப்பெண், தகுதி இவற்றின் அடிப்படையில் ஆசிரியர்களை வேலை  நீக்கம் செய்வது.

ஆகியவை அடங்கும்.

சிகாகோ-ஆசிரியர்-போராட்டம்சிகாகோவில் 80 % மாணவர்கள் இலவச உணவு பெறும் நிலையில் இருக்கும் ஏழைகள். அவர்களது ஏழ்மையும் குடும்பச் சூழ்நிலையும்தான் அவர்கள் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெறுவதற்கு முக்கிய காரணங்கள்.   ‘சுமுகமான வீட்டுச் சூழல் இல்லாமல், போதிய உதவிகள் இல்லாமல் படிப்பதற்கே சிரமப்படும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களை நிர்வாகத்தின் விருப்பப்படி வேலை நீக்கம் செய்வதற்கான முயற்சிதான் புதிய விதி முறை’ என்பது ஆசிரியர்களின் வாதம். இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நீக்கி விட்டு குறைந்த அனுபவமுடைய ஆசிரியர்களை குறைந்த சம்பளத்தில் நியமிக்க பார்க்கிறது கல்வித் துறை.

பெரும்பாலான பெற்றோர்கள் ஆசிரியர்களை ஆதரிக்கிறார்கள். பேரணி நடக்கும் இடத்தை காரில் கடந்து செல்லும் மக்கள் கார் ஹாரன்களை ஒலித்து போராட்டத்துக்கு தமது ஆதரவை தெரிவிக்கிறார்கள்.

ஸ்டிவ் பார்ஸன் எனும் ஆசிரியர் ‘பள்ளிக் கல்வியை தனியார்மயப்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள்’ என்று கருத்து தெரிவித்தார். ‘மேயர் ரஹம் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளியில் படித்தவர். அவருக்கு அரசுப் பள்ளிகளில் படிக்கும் சாதாரண மக்கள் பற்றி ஒன்றும் தெரியாது’ என்று மக்கள் ஆத்திரப்படுகிறார்கள்.

இரண்டாவது நாளாக தொடரும் போரட்டத்தை பற்றி அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி கருத்து கூறுகையில், ‘ஒபாமாவும ஆசிரியர்களும் மாணவர்களை பழி வாங்குகிறார்கள். தான் வந்தால் பிரச்சனை தீர்நது விடும்’ என்று அரசு பள்ளிகளையே ஒழித்துக் கட்டும் தனது திட்டத்தை சுட்டிக் காட்டுகிறார். தனது  மாநிலத்தில் நடக்கும் இந்த பிரச்சனையை ஒபாமா கூர்ந்து கவனித்து வருவதாக மட்டும் வெள்ளை மாளிகையில் இருந்து செய்தி வந்துள்ளது. இந்தக் கவனத்தைத் தாண்டி அவரும் ஒன்றும் செய்ய இயலாது.

இதே நேரம் சம்பள உயர்வு, அழுத்தம் தரும் வேலை நேரம் இவற்றை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக இங்கிலாந்தின் நாட்டின் தேசிய ஆசிரியர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.

உலகம் முழுவதும் ஒரு பக்கம் மாணவர்கள் கல்விக் கட்டண உயர்விற்கு எதிராகவும் கல்வி பெறும் உரிமைக்காகவும் போரடிக் கொண்டிருக்க மறுபுறம் ஆசிரியர்கள் சம்பள உயர்விற்காக போராடுகிறார்கள். பள்ளிக் கல்வியை வழங்க வேண்டிய பொறுப்புடைய அரசுகள் தனியார் மய தாராள மய பொருளாதார கொள்கைகளை அமல்படுத்துவதற்கு தோதாக செயல்படுவது அம்பலப்பட்டு நிற்கிறது.

______________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க