Saturday, April 17, 2021
முகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம் கூடங்குளம்: சி.பி.எம்மின் புரட்சி! அறிஞர் அ.மார்க்ஸின் மகிழ்ச்சி!!

கூடங்குளம்: சி.பி.எம்மின் புரட்சி! அறிஞர் அ.மார்க்ஸின் மகிழ்ச்சி!!

-

பிரகாஷ்-காரத்
பிரகாஷ் காரத்

சி.பி.எம்-மின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் “இறக்குமதி அணு உலைகள் ஆகாது பாதுகாப்பில் சமரசம் கூடாது” என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். முதலில் இந்தக்கட்டுரையை அவர் ஏன் எழுதினார்? கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிக்கும் சி.பி.எம் கட்சி மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூர் திட்டத்தை மட்டும்  ஏன் எதிர்க்கிறது என்ற கேள்விக்குத்தான் இந்த பதில். அதாவது சி.பி.எம்மின் இரட்டை வேடத்தை அல்லது டபுள் ஆக்டிங் சரிதான் என்பதே காரத்தின் பதில்.

காரத் எழுதிய இந்த வழா வழா கொழா கொழா கட்டுரையின் சாரம் என்ன? அல்லது ஏற்கனவே சி.பி.எம் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை இந்தக் கட்டுரை மறுக்கின்றதா அல்லது ஆதரிக்கின்றதா? நிச்சயமாக ஆதரிக்கவே செய்கிறது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த்திற்கு முன்பேயே ரசியாவிடமிருந்து இரண்டு அணு உலைகள் வாங்கப்பட்டு 15,000 கோடி ரூபாய் செலவில் கூடங்குளத்தில் கட்டப்பட்டு விட்டதால் அதை மூடுவது சாத்தியமானது அல்ல என்பதோடு நாட்டு நலனிற்கும் உகந்தது இல்லையாம்.

இதைத் தவிர்த்த மற்ற அணு உலைகள் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு பிறகு வந்தவையாம். இந்திய சுதேசி அணு உலைகளை விட இவை மிகுந்த செலவு பிடிப்பவையாம். அதனால் அமெரிக்க, ஐரோப்பாவிலிருந்து இறக்குமடி செய்யப்பட்ட அணு உலைகளை சி.பி.எம் கட்சி எதிர்க்கிறதாம். சரி, இதன்படி இந்த ஐரோப்பாவின் மேப்பில் ரசியா வராது போலும். மேலும் இத்தகைய அணு உலைகளின் பாதுகாப்பும் பிரச்சினையாம். அதாவது ஒரு இடத்தில் இரண்டு உலைகள் இருந்தால் பிரச்சினை அல்ல, நான்கு, ஆறு என்று இருந்தால் பிரச்சினை என்பதை காரத் சுற்றி வளைத்து கூறுகிறார். இதற்கு ஆதாரமாய் புகுஷிமா வில் ஆறு உலைகள் இருந்ததை காரத் கண்டுபிடித்துக் கூறுகிறார்.

புகுஷிமா விபத்திற்குப் பிறகு அணு உலைகள் குறித்த மக்களின் அச்சம் அதிகரித்திருக்கிறதாம். இதை நிவர்த்தி செய்யுமாறு சுயேச்சையான நிபுணர்கள் அடங்கிய கமிட்டி ஆய்வு செய்து அறிக்கையை மக்கள் முன் வைக்க வேண்டுமாம். பாதுகாப்பு தொடர்பான அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தில் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை அரசு தெளிவு படுத்தி அதையும் மக்கள் முன் வைக்க வேண்டுமாம்.

அணுமின் நிலையங்களை ஆதரிக்கும் அப்துல் கலாம் உள்ளிட்டு பலரும் காரத் பேசுவதைப் போலத்தான் பேசுகின்றனர். மக்களின் அச்சத்தை போக்குவது என்ற போர்வையில்தான் கூடங்குளம் அணுமின்நிலைய அனுமதியும், துவக்கமும் தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. இதையெல்லாம் செய்து விட்டால் அணுமின்நிலையங்களை சேமமாக நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் காரத் மற்றும் அவரது கட்சியின் நிலைப்பாடு.

தந்திரமான மொழியிலும், விவாதத்திலும் மறைந்து கொண்டாலும் காரத்தின் சந்தர்ப்பவாதம் இங்கே பட்டவர்த்தனமாக காட்டிக் கொள்ளவே செய்கிறது. இந்தியாவின் தரகு முதலாளிகள் மற்றும் அவர்களது பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காகவே இங்கு அணுமின்நிலையங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அமெரிக்கா முதல் ஆதாயம் அடைகிறது என்றால் பிரான்ஸ், ரசியா அடுத்தடுத்து ஆதாயம் அடைகின்றன. இதில் ஒன்றை எதிர்த்து விட்டு பிறிதொன்றை ஆதரிப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

மேலும் ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் என்று என்.ஜி.ஓ மொழியில் விளக்கமளிப்பது சி.பி.எம்மின் மறைமுக ஆளும் வர்க்க சேவையையே குறிக்கிறது. ஒரு வேளை போராடும் மக்கள் அப்படித்தான் அதை புரிந்து கொண்டு எதிர்த்தாலும் அதை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்துக் கொண்டு செல்வது நமது  கடமை. மேலும் கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பது என்பது இந்திய அரசையே எதிர்ப்பதாக கருதப்பட்டு அங்கு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதை ஒரு பகுதியின் பொருளாதார பிரச்சினையாக சுருக்கி பார்ப்பதன் மூலம் சி.பி.எம் கட்சி தனது மறைமுக இந்திய முதலாளிகளது சேவையை தொடர்கிறது.

அடுத்து கூடங்குளம் திட்டம் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு முன்பேயே வந்தாலும் அது முற்றிலும் தற்போதைய அமெரிக்க ஒப்பந்த்தத்தின் ஷரத்துக்களின் படியே அமல்படுத்தப்படுகிறது. அதில் முக்கியமானது விபத்து ஏற்பட்டால் அணுஉலைகளை அளித்த நாடுகள் நிவாரணம் வழங்கத் தேவையில்லை என்பது. இதை காரத் குறிப்பிட்டாலும் பெரிய மனதுடன் இரண்டு உலைகளை அங்கே செயல்படலாம் என்று அனுமதிக்கிறார். அங்கு கூடுதலாக வரும் இரண்டு உலைகளை மட்டும் அவரது கட்சி எதிர்க்குமாம்.

கூடங்குளம் மக்கள் போராட்டம் வெற்றி பெற்றால் அது இதர அணு உலை எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்குமென்பதால்தான் இந்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அதை அடக்க முனைகிறது. இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட காரத்திற்கு அறிவு இல்லை என்பதல்ல, அவரது சந்தர்ப்பவாதம் இங்கே உண்மைகளை கொன்று விடுகிறது.

இதற்கு மேல் நிறைய செலவு செய்து விட்டார்கள் என்று கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிப்பதை இப்படியும் சொல்லலாம். அதாவது முதலாளித்துவம் இதுவரை செலவழித்து உருவாக்கியிருக்கும் பல கோடி பில்லியன் டாலர் பொருளாதாரத்தை கைப்பற்றி சோசலிச சமூகத்தை படைக்கும் புரட்சி கூட நாட்டு நலனுக்கு உகந்தது அல்லதான். அதனால்தான் சி.பி.எம் கட்சி புரட்சியிலிருந்து விலகி மனமகிழ் மன்றமாக மாறிவிட்டது போலும்.

அ-மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

அதே நேரம் காரத்தின் இந்தக் கட்டுரை அறிஞர் அ.மார்க்சை குஷிப்படுத்தியிருக்கிறது. முகநூலில் இது குறித்து விரிவாக எழுதியிருக்கும் அ.மா அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

” மக்கள் திரளைச் சார்ந்து இயங்கும் ஒரு கட்சி இப்படியான ஒரு கருத்தியல் மாற்றத்தையும், அதனடிப்படையில் ஒரு நிலைபாட்டு மாற்றத்தையும் மேற்கொள்வது கேலிக்குரியதோ, இழிவானதோ அல்ல. மக்களைத் திரட்டுவது குறித்துக் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்களுக்கு வேண்டுமானால் தாங்கள் கொள்கை மாற்றம் இல்லாமல் என்றோ உருவாக்கப்பட்ட பழைய திட்டத்தின் அடிப்படையில்  கறாராகச் செயல்படுவது பெருமையாக இருக்கலாம். இந்த அடிப்படையில் காரட்டின் கட்டுரையினூடாக வெளிப்படும் அணுகல் முறை மாற்றம் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, தனி மனித ஆர்வங்கள், சுற்றுச் சூழல் இயக்கங்கள், சிறு கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் துணையுடனேயே இதுவரை நடைபெற்று வந்த அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் இந்தியாவின் முக்கிய இடதுசாரி அமைப்பான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு ஒரு பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பலாம்.”

இந்தக்கட்டுரை சி.பி.எம்மிடம் எந்த நிலைப்பாட்டு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதே காரத்தே ஒத்துக் கொண்டாலும் அறிஞர் அ.மா மறுப்பார் போலும். நிலவுகின்ற சமூக அமைப்பை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொண்டு சீர்திருத்தம் கோரும் ஒரு நிலையை மாபெரும் புரட்சி என்று சித்தரிக்கும் அளவு அறிஞரின் காமன்சென்ஸ் குறுகிவிட்டது. அணு மின்சாரம் தவிர்த்த மாற்று எரி சக்தி திட்டங்களை மையமாகக் கொள்ள வேண்டும் என்று காரத் கூறயிருப்பதெல்லாம் அ.மாவுக்கு மாபெரும் கலக குரலாக தென்படுகிறது. இதைத்தான் டிராபிக் ராமசாமி முதல் சூரிய விளக்கிற்காக என்.டி.டி.வியுடன் கூட்டணி அமைத்து செயல்படும் பிரியங்கா சோப்ரா, ஷாருக்கான் வரை பலரும் சலிப்பூட்டும் விதத்தில் சொல்கிறார்கள். அதன்படி அவர்களையும் புரட்சிக்காரர்களாக அ.மா ஏற்றுக்கொள்வார் என்று நம்புவோம்.

மக்களை அணிதிரட்டும் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்கள் மட்டும் இது போல ஏதாதாவது கூவிக் கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறார் அ.மா. இதைத்தான் கருணாநிதி பலமுறை ஈழம் குறித்து சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும், ஆட்சியில் இருக்கும் போது எச்சரிக்கையாகத்தான் செயல்பட முடியும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட முடியாது…. இதெல்லாம் கூட அ.மாவின் இந்த இரும்பு இலக்கணத்தில் கண்டிப்பாக வரும். ஒரு பிரச்சினைக்கு இறுதித் தீர்வு என்ன என்பதும் அதை நோக்கியே தற்கால போராட்டங்கள் இருக்க வேண்டும் என்பதும் புரட்சி குறித்து ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சி அறிய வேண்டிய அடிப்படைப் பாடம். அதாவது புரட்சிக்காகத்தான் மக்களை திரட்டுகிறோமே அன்றி மக்கள் எதற்காகவாவது திரண்டு விட்டால் அது புரட்சி அல்ல. ஆனால் அ.மா இரண்டாவதைத்தான் புரட்சி என்று நம்புவதால் அதை அதற்கு உரிய சி.பி.எம்மிற்கும் விருதாக அளித்து மகிழ்கிறார்.

அணுமின்நிலையத்தை சுற்றுசூழல் பிரச்சினையாக மட்டும் பார்ப்பது என்பது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உத்தி. சி.பி.எம் அதையும் பேசிக் கொண்டு அமெரிக்க எதிர்ப்பு என்பதாகவும் நாடகம் ஆடுகிறது. உள்நாட்டு உலை பாதுகாப்பானது, வெளிநாட்டு உலை ஆபத்தானது என்ற காரத்தின் அபத்தத்தை சுட்டிக்காட்டும் அ.மா அதன் அரசியல் சந்தர்ப்பவாதத்தை புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் எப்படியும் புரட்சி வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் போது ஒரு அறிவாளியின் நடவடிக்கையில் சந்தர்ப்பவாதம் மட்டும்தானே மையமாக இருக்க முடியும்? ஆனாலும் இது ஒரு நாசுக்கான, நாகரீகமான முறையில் வெளிப்படும் என்று அறிஞர் அ.மார்க்ஸ் நம்பிக் கொண்டிருந்தால் அவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

__________________________________________________

இதையும் படிக்கலாம்:

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. /// ஏனெனில் எப்படியும் புரட்சி வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் போது ///

  என்னது புரட்சி வரப்போகுதா? காந்திய சுட்டதுக்கு அப்புறமா, அதுக்கு முன்னாலேயா?

 2. கூடங்குளம் அணு மின் நிலையம் கட்டுவதற்கு இவ்வளவு செலவு பண்ணிட்டோம்…. இப்போ எல்லாம் ரெடி ஆனா பிறகு அதை நிறுத்த சொன்ன எப்படி என்று கருணாநிதி ஸ்டைலில் கேள்வி கேட்பவர்களிடம் ஒரு கேள்வி…..

  உங்க மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்து எல்லா செலவும் பண்ணி நாளைக் காலை கல்யாணம்…. பையனுக்கு எய்ட்ஸ் இருக்குதுன்னு முந்தின ராத்திரி தெரிய வந்தா, அடுத்த நாள் காலையில கல்யாணம் செய்வீங்களா? இத்தனை செலவு பண்ணிட்டோம், கல்யாணம் நடக்கட்டும்னு விடுவீங்களா?

 3. செத்தாலும் பரவாயில்லை கல்யாணம் நடந்தே தீர வேண்டும் என்றுதான் அணுஉலை ஆதரவாளர்கள் சொல்லுவது ஏனென்றால் பொன்னு முணடச்சியா போயிறக்கூடாதன்னு என்ற பரந்த மனப்பான்மையாம் .மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அருக்கனும்
  என்று சொல்லும் மாமியார்கள் போல………….

 4. Metaphor mokkai thaanga mudiyala.

  Payyanukku Aidsunnu vathanthi kelapuuradhu yaarunnu therinjum,modhalla ponnu kalyanam,aduthu vathanthi kelappura naayngalukku ellam karumaadhi.

  • இந்த வதந்தியை நம்பித்தான் ஜப்பான், ஜெர்மனி, சுவிஸ் எல்லாம் அனுவுலைகளை மூட முடிவு பண்ணிட்டாங்க போல… இவ்வளவுக்கும் அந்த நாடுகள்
   தங்களது நாட்டின் மின் உற்பத்திக்கு 20 முதல் 30 சதவிகிதம் அனுவுலைகளை நம்பி இருப்பவர்கள்.

   உங்களுக்கு மதவெறி, சாதிக்காழ்ப்பு, மற்றும் எளியோரை இளக்காரமாகப் பார்க்கும் மட்டமான புத்தி. வேறென்ன??

   எங்க மக்களின் பாசையில சொல்லனும்னா “ஏம்லே உன் புத்தி இப்பிடி பீ திங்க போவுது??”

 5. ‘சந்தர்ப்பவாதம்’ ‘சமரசவாதம்’ என்கிற சொற்களுக்கு பொருள் தெரியவில்லையா? கூடங்குளம் விவகாரத்தில் மார்க்சிஸ்டுகளின் நிலைப்பாட்டுக்கு பெயர்தான் ‘சந்தர்ப்பவாதம்’ ‘சமரசவாதம்’.

 6. கூடங்குளம், முல்லை பெரியாறு விசயத்தில் சிபிஎம் தலைகள் என்ன சொல்கிறார்கள் என்பதை அவர்கள் அணிகள் புரிந்துகொண்டார்களா என்பதே பெரிய கேள்வி.

 7. வினவு அவர்களே,
  இங்லாண்டில் விசைத்தறிகளை மக்களும் தொழிலாளர்களும் உடைத்த போது, மார்க்ஸ் என்ன சொன்னார் என்பதை தயவு செய்து படிக்கவும். அதுவே கூடங்குளத்திற்கும் பொருத்தமாகும்.

  • கும்மாங்கோ குமரன் அவர்களே ! … ரொம்ப வேணாம் … சிம்பிளா ஒரே கேள்வி ?.. அமெரிக்க அணு உலைகளை நீங்கள் (வேறு வழியின்றி) எதிர்க்கும் போது மார்க்ஸ் என்ன சொன்னார்னு படிச்சுப் பாருங்கோ! ..

   மின் தேவைக்கு வேறு பல அளவில்லா வழிகள் இருக்க, மனித இனத்தை அழிக்கும் அணு உலைகள் தான் அதற்கு ஒரே தீர்வு என்றும் சொந்த தேசத்து மக்களாக இருந்தாலும் அவர்களை ஒழித்தேனும் அணு உலையைக் கொண்டு வருவதை விஞ்ஞான வளர்ச்சி என்றும் உங்கள் சாதி சங்கத் தலைவர் காரத் கூறுவது எந்த அடிப்படையில் சரியானதாகும்?

 8. Whether it is conservative opinon, or social safety issues, or regional ramblings, it is all useless rhetoric that excites the flesh and feeds the self righteous nature of fallen men. And most damaging of all, it has infiltrated the church and made the spiritual life of the church as hollow as the political issues that make carnal men and women rich simply by talking about them!

 9. அ.மா. ஒரு என்.ஜி.ஓ.தானே.சி.பி.எம்.,என்.ஜி.ஓ.க்களின் நம்பகமான கூட்டாளி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க