Thursday, September 29, 2022
முகப்பு வாழ்க்கை அனுபவம் மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு? மெடிகல் ரெப் விளக்குகிறார்....

மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு? மெடிகல் ரெப் விளக்குகிறார்….

-

மருந்து-கம்பெனி

“டாக்டர் ஆகனும் நாட்டுக்காக சேவை செய்யனும் அதுதான் என் லட்சியம்” பத்தாம் வகுப்பு வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளிவந்ததும் தமிழக பத்திரிகைகளில் மாணவர்களின் புகைப்படங்களுடன் இது போன்ற செய்திகள் வரும். அடுத்த வருடம் அதே செய்தி வேறு மாணவர்களின் புகைப்படத்துடன் வரும். இவர்கள் அனைவருமே மருத்துவர்களாகிவிடுகிறார்களா ?

எனது நண்பனும் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியானதும் இப்படித்தான் சொன்னான். பிறகு பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைந்ததால் சீட் கிடைக்கவில்லை. வழியின்றி எம்.எஸ்.சி. மைக்ரோபையாலஜி படித்தான். வேலை தேடி அலைந்தபோது, சரியான வேலை கிடைக்காததால் மருந்து விற்பனைப் பிரதிநிதி (மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ்) ஆனான். அது சென்னை நிறுவனம். மாதம் பத்தாயிரம் சம்பளம், பெட்ரோல் அலவன்ஸ், செல்போன் பில், இன்சென்டிவ் என சுகமான வாழ்க்கை அவன் விரும்பிய மருத்துவ துறையிலேயே கிடைத்தது.

ஓரிரு ஆண்டுகளில் பதவி உயர்வுடன் ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு சென்றுவிட்டான். மாதச்சம்பளம் பதினெட்டாயிரம், புது வண்டி, புளூ பேன்ட், புளூ ஷர்ட், புளூ டை, ஷூ என்று அவன் வீட்டிலிருந்து வெளியே வரும் ஒவ்வொரு நாளும் எனக்கு பொறாமையாக இருக்கும்.   விரைவில் தனது கல்விக்கான கடனைக்கூட அடைத்துவிட்டான். இப்போது வீடு கட்டிக்கொண்டிருக்கிறான். நான் இன்னும் அதே ஓட்டை வண்டியில் தான் சுற்றிக்கொண்டிருக்கிறேன். எங்கள் தெருவில் அனைவருமே அவனை பாராட்டுவார்கள்.

அவன் பணிபுரியும் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட, அந்த மருந்து கம்பெனியில் மொத்தம் ஐம்பது வகையான மருந்துகளை விற்கிறார்கள். இவனுடைய பிரிவின் கீழ் மட்டும் பதினெட்டு வகை மருந்துகள். காலையிலும் மாலையிலும் வெவ்வேறு பகுதி மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து, தனது கம்பெனி மருந்துகளை அறிமுகப்படுத்தி அவை என்னென்ன நோய்களை எல்லாம் குணப்படுத்தும் என்பதை மருத்துவர்களுக்கு கூறுவான். அதன் பிறகு சில சந்திப்புகளில் மருத்துவருடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டதும் சில இலவச மருந்துகளை கொடுத்து டிரை பன்னி பாருங்க சார் ரிசல்ட் நல்லா இருக்கும் என்று சில மருந்துகளை இலவசமாக கொடுப்பான்.

மருத்துவர்களும் அவற்றை சிலருக்கு இலவசமாக வழங்குவார்கள். அந்த மருந்து அட்டைகளில் விலை அச்சிடப்பட்டிருக்காது. இலவச மருந்துகள் வேலை செய்கிறதா ? என்பதை அறிந்துகொண்ட பிறகு, மருத்துவர் அதை பரிந்துரைப்பார். அத்துடன் தனது மருத்துவகத்திற்கு அருகில் உள்ள மருந்துக் கடைகளில் அந்த குறிப்பிட்ட மருந்துகளை வாங்கி வைக்கச் சொல்லிவிடுவார். உடனே இவன் அந்த கடையை அணுகி டாக்டர் இந்த மருந்துகளை பரிந்துரைக்கத் துவங்கிவிட்டார். அவை எங்களுடைய கம்பெனி மருந்துகள் தான் உங்களுக்கு இந்த மருந்தில் இத்தனை சதம் கமிஷன், எவ்வளவு வேண்டும் என்று ஆர்டர் எடுத்துக்கொள்வான். அத்துடன் நமது நண்பன் கம்பெனி கொடுக்கும் சிறு சிறு அன்பளிப்புகளை உடனுக்குடன் டாக்டரிடம் வழங்கி தனது நிறுவன மருந்துகளையும் நினைவில் நிறுத்துவான்.

மருந்து-கம்பெனி-3நீங்கள் செல்லும் மருத்துவமனைகளில் பார்க்கலாம். பேப்பர் வெயிட் இருக்கும். உள்ளே ஒரு மாத்திரையின் பெயர் இருக்கும். உடற்கூறு படம், டார்ச் லைட், எடைபோடும் இயந்திரம், முட்டியைத் தட்டிப் பார்க்கும் கருவி, பிரசர் செக் கருவி என அனைத்தும் இருக்கும். அனைத்திலும் பலவகையான விளம்பரங்கள் பதிக்கப்பட்டிருக்கும். இவை அனைத்தையும் மருத்துவர்களுக்கு மருந்து கம்பெனிகள் தான் வழங்குகின்றன.

இப்படி எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் இவன் அறிமுகம் செய்த மருந்துகளை பரிந்துரைத்த மருத்துவர் திடீரென்று அவற்றை குறைத்துக் கொண்டாலோ, அல்லது வேண்டுமென்றே வேறு மருந்துகளை பரிந்துரைத்தாலோ நண்பன் உடனே தனது மேனேஜரை அழைத்துக்கொண்டு மருத்துவரை சந்திப்பான்.

சில புதிய ஆஃபர்கள் வந்திருப்பது போல பேசி மீண்டும் தனது மருந்துகளையே பரிந்துரைக்க வைப்பான். அதற்காக தான் மேனேஜரை உடன் அழைத்துச் செல்கிறான். அவர் இப்போது தூண்டிலில் சில பெரிய புழுக்களை போடுவார். மருத்துவரை மொத்தமாக அமுக்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்களையும், FAMILY TOUR கூப்பன்களையும் வழங்குவார். அவை உள்நாடு வெளிநாடு என்று பேரத்தை பொருத்து அமையும். மருத்துவர் அதற்கும் அடங்கவில்லை என்றால் நேரடியாக பணம் வெட்டப்படும் !

சூளைமேட்டில் ஒரு மருத்துவர், மனைவி நகைகளை எல்லாம் விற்று கடன்பட்டு புதிதாக ஒரு மருத்துவமனை கட்டியிருக்கிறார். இவரைப் போன்ற சிலர் கடனைக் கட்ட வேண்டும் என்ன செய்வது ? என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இலவச மருந்துகள் வேண்டாம், பொருட்களும் வேண்டாம் நேரடியாகவே விசயத்திற்கு வருகிறோம் என்று ஒவ்வொரு கம்பெனியுடனும் ஒரு உடன்பாட்டிற்கு வருகிறார்கள். அவை அனைத்தும் மிகப்பெரிய மருந்து கம்பெனிகள்.

டயாபடீஸ் ஸ்பெசலிஸ்டா ?

வருசத்துக்கு பத்து லட்சத்துக்கு பரிந்துரைத்தால் எனக்கு எத்தனை சதவீதம் ?

என துறை வாரியாக சதவீத கணக்கில் பேரம் பேசி பரிந்துரை செய்கிறார்கள்.

எனக்கு தெரிந்து தி.நகரில் உள்ள அகார்டு ஓட்டலில் மாதம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை துவங்கி நள்ளிரவு வரை கீழ்தளத்தில் விருந்துகள் நடைபெறும். DOCTOR’S CONFERENCE என்கிற பெயரில் நடத்தப்படும் சோரம் போகும் இந்த விழாவில் பேருக்கு சில மருத்துவர்களை பேச சொல்வார்கள். பிறகு தான் உண்மையான டாக்டர்ஸ் கான்பரன்ஸ் துவங்கும் ! அந்த மருந்து கம்பெனியின் மூத்த அதிகாரிகள் பேசுவார்கள். பிறகு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வண்ண வண்ண மது வகைகள் விருந்தளிக்கப்படும். அதன் பிறகு உணவு வகைகள் பரிமாறப்படும். இந்த கூட்டங்களுக்கு பெண் மருத்துவர்களும் வருவதுண்டு. ஒவ்வொரு கூட்டங்களிலும் மருத்துவர்கள் போதை அதிகமாகி சரிந்து விழுவது நடக்கும்.

கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விசயம் இங்கு வரும் மருத்துவர்கள் யாரும் சொந்த வாகனங்களில் வருவது இல்லை.இவர்களை அழைத்து வருவதற்காக விலையுயர்ந்த தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றன. மாலை கூட்டம் துவங்கியது முதல் நள்ளிரவு வீட்டில் கொண்டு சேர்ப்பது வரை அனைத்தையும் மெடிக்கல் ரெப்புகள் செய்வார்கள். கவனிப்புகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் இது போன்ற சிறப்பு கவனிப்புகள் குறிப்பிட்டவகை ஸ்பெஷலிஸ்டுகளுக்கு மட்டும் தான்.

கம்பெனிகளுக்கு மிகவும் அதிக வருமானம் ஈட்டித் தரும் மருத்துவர்களையும், பிரபல மருத்துவர்களையும் கவனிக்கும் விதமே வேறு. இவர்களுக்கான டாக்டர்ஸ் கான்பரன்ஸ் அயல்நாடுகளில்தான் நடக்கும். அதிலும் மது, மாது, உணவு என சகல சௌபாக்கியங்களும் உண்டு. அதே நேரத்தில் அனைத்து மருத்துவர்களும் இவ்வாறு இல்லை. எனினும் ஏதோ ஒரு வகையில் அனைத்து மருத்துவர்களும் மருந்து கம்பெனிகளிடமிருந்து எதையாவது பெறுகிறார்கள். ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் மிகப்பெரும்பான்மையினர் இப்படி தான் உள்ளனர்.

அடுத்து ஒரு குறிப்பிட்ட மருந்தின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று நிறுவனம் முடிவு செய்துவிட்டால், அதற்கு தேவை இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை, அதை விற்றாக வேண்டும். மருந்துகளை மொத்தமாக விற்கும் விற்பனையாளர்களையும், மருந்து கடைக்காரர்களையும் அணுகி வழக்கமா கொடுக்கிற கமிஷனை விட அதிகமா தர்றோம், கூடவே இலவச மருந்துகளையும் தருகிறோம் என்று பேசி அந்த குறிப்பிட்ட வகை மருந்துகளை தள்ளிவிடுகின்றனர்.

மருந்து-கம்பெனிஇன்னொரு முக்கியமான விசயம். மருத்துவர்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்படும் இலவச மருந்துகளை குறிப்பிட்ட அளவுதான் கொடுக்க முடியும். மீதம் உள்ளதை என்ன செய்கிறார்கள் ? இங்கே தான் ராதாகிருஷ்ணன் வருகிறான். ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் ராதாகிருஷ்ணன் விலை அச்சிடப்படாத இந்த இலவச மருந்துகளை மொத்தமாக அள்ளிச் செல்கிறான் !

பத்து ரூபாய் மருந்துக்கு இரண்டு ரூபாய் ஐம்பது பைசா தருகிறான். இந்த கழிவு விலையில் மெடிக்கல் ரெப்புகள் தமது அறைகளில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து மருந்துகளையும் ராதாகிருஷ்ணன் வரும் ஒரு நல்ல நாளில் விற்றுவிடுவார்கள். அவற்றை ஆந்திராவுக்கு எடுத்துச்செல்வது தான் ராதாகிருஷ்ணனின் வேலை. அதன் பிறகு அவை எந்த மாநிலத்து ஏழை மக்களுக்கு வழங்கப்படுகின்றன என்பது தெரியவில்லை !

அரசு நிறுவனங்களால் ஐம்பது பைசா, ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அதே மாத்திரைகள் இப்போது பன்னாட்டு நிறுவனங்களால் ஏழு ரூபாய்க்கும், எட்டு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு உள்நாட்டில் அதிகபட்சமாக 8,800 ரூபாய்க்கு தயாரிப்பட்ட மருந்துகள், பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மருந்து சந்தைக்குள் நுழைந்த பிறகு ஒரு லட்சம் வரை விற்கப்படுகிறது.

♦♦♦♦

நானும் உழைச்சு தான் சாப்பிடுகிறேன் என்கிறார்கள் மெடிக்கல் ரெப்புகள் ! மருத்துவர்களுக்கு நடப்பதை போலவே இவர்களுக்கும் மாதா மாதம் மீட்டிங் நடைபெறுகிறது. அதில் மருத்துவர்களை எப்படி அணுக வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி வீழத்த வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சி உரைகளுக்கு பிறகு இவர்களை உற்சாகப்படுத்த உற்சாக பானங்களும், உணவும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

பன்னாட்டு நிறுவனங்களுக்காக மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் இப்படித்தான் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்களும் மருந்துச் சீட்டு எழுதும் போது நோயாளியின் நோயைப் பற்றி மட்டும் நினைத்துக் கொள்வதற்குப் பதில் தனக்கு கிடைக்கும் பரிசு, சலுகைகளை நினைத்தவாறு எழுதுகிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மருத்துவத் துறை இப்படித்தான் இயங்குகிறது. முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் தொழில் அறம் என்பது இதுதானே?

மேலும் படிக்க


______________________________

– மல்லன்.
___________________________

 1. 36.50 என அச்சிடப்பட்டிருக்கும், ஒரு செட்ரிசின் மருந்து அட்டை கடைக்கு 3.50 காசுக்கு வழங்கப்படுகிறது. இது தான் கொள்ளை…!

 2. ஒரு மருத்துவனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஒருவர் டாக்டரால் பரிந்துரை செய்யப்படும் மருந்து மாத்திரைகளுக்காக செலவிடப்படுகிற தொகை 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை என்பது மருத்துவதுறையின் ஆய்வு அறிக்கைகள்.

  சற்றுத் தெளிவாக குறிப்பிட வேண்டுமேன்றால் மருத்துவத்திற்காக இந்தியா செலவிடும் தொகை மொத்த வருவாயில் 4.2% ஆக இருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி தனிநபர் சராசரி மருத்துவச் செலவு இந்திய அளவில் ரூ.1,201 ம், தமிழக அளவில் ரூ.1,256 ஆகவும் இருக்கிறது.

  மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் விற்பனை பிரதிநிதிகளை மருத்துவர்களை சந்திக்கவைத்து அவர்களால் தரப்படும் வாக்குறுதிகளாகிய “எங்கள் புராடக்ட்’களை நுகர்வோருக்கு பரிந்துரை செய்தால் நாங்கள் உங்களுக்கு அது வழங்குவோம்…இது வழங்குவோம்” என இதுபோன்ற ஆசை வார்த்தைகளைச் சொல்லி மயக்கி விடுகின்றனர். இதனால் ஒரே மருந்து, அதைத் தயாரிக்கும் நிறுவனங்களைப் பொருத்து பெரும் லாபம் வைத்து பல விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  இந்தியாவில் திட்டக் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 2011 -12 நிதியாண்டில் இந்திய வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மருந்து மாத்திரைகளின் அளவு ரூ.56,000 கோடி. இந்த மருந்துகள் அரசு மருத்துவமனையால் கொள்முதல் செய்யப்படும் விலைக்கும், வெளிச்சந்தையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம் 100% முதல் 500% வரை !

  டாக்டரால் பரிந்துரை செய்யும் மெடிக்களுக்கு சென்று மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளும் நாம் அதற்குரிய தொகையை ஒரு நயா பைசா பாக்கியில்லாமல் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள M.R.P விலைகளின்படி செலுத்த வேண்டும். இதற்காக எவ்வித தள்ளுபடியோ, கழிவுத்தொகையோ நுகர்வோருக்கு தரப்படுவதில்லை.

  ‘மருத்துவம்’ என்பது சமுதாயத்தின் உயிர்நாடியாக இருப்பதனால் இத்துறையில் நிகழும் லஞ்சமும், தவறுகளும் ஒழிக்கப்பட வேண்டும் இதற்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மருந்தின் உற்பத்தி செலவினங்களை அறிந்து விற்பனை விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசின் நேரடி கண்காணிப்பில் இருப்பது அவசியமான ஓன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  நுகர்வோர் அடையும் ஆறுதலான விசயம் என்னவெனில் குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிளோ, 10 முதல் 20 சதவீதம் வரை M.R.P விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவையான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு.

  குறிப்பாக அரசால் வாடிக்கையாளர்களின் நலன்கருதி கூட்டுறவு மருந்து கடை மூலம் விற்பனை செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 12 சதவீதம் வரை விற்பனை விலையில் நுகர்வோர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அலோபதி மருந்துகளோடு சித்த, ஆயுர்வேத, யுனானி ஆகிய இந்திய மருந்துகளும் இவற்றில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நுகர்வோர் இவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

 3. Dear Vinavu,

  This article is 99% true and there may be 1% of doctors who do not indulge in this.

  The saline drops(saline water!!!) is manufactred at a cost of less than Rs.5.00 sold at a cost of nearly 20-25 Rs. When it is administred to a patient even in a low level hospital they charge Rs.300. It is better to drink TWO full glass of boiled water than taking a saline trips.

  All medical cos work on a profit of nearly 400 to 500 % profit margin and they indulge in an all types of malpractices to achieve their sales.

  Third world countries like India/pakistan/ etc are test fields for new drugs and human trials.!!!

  Nice work and keep publishing such articles in future too,..

 4. ஒரே நோய்க்கு 60 பைசாவிலும், 6 ரூபாயிலும் மாத்திரை கிடைக்கிறது. டாக்டர்கள் பரிந்துறைப்பது 6 ரூபாய் மாத்திரை. அப்புறம் ஏழைகள் என்ன தான் செய்வார்கள்?

  Mango peoples in Banana Republic…

 5. இது எல்லாம் காலம் காலமாகநடந்து வரும் விஷயம். வினவு அதை கோடிட்டு காட்டியிருக்கிறது.
  இப்போது எல்லாம் டாக்டர் எல்லொரும் மருந்து கடையும் கிளினிக் உடன் வைத்து விட்டார்கள்.
  மெடிக்கல் ரெப் நிறய பேர் மருந்து கடை முதலாளி ஆகி விட்டார்கள். நாம் செலவு செய்யும் (மருந்து)
  காசில் மருந்துக்கு கூட உற்பத்தி செலவு ஆவதில்லை. எல்லாம் விளம்பர செலவும் (ரெப்) இதர செலவும் தான் அதிகம்.

  இது பற்றி மேலும் பதிவுகளை எதிர் பார்த்து….

 6. மருத்துவர்கள் ஒரு MRI ஸ்கேன் சென்டருக்கு ஒரு நோயாளியை அனுப்பினால் 2000 ரூபாய் வரையிலும் கமிஷன் கிடைக்கும். அதற்காகவே சிறு நோய்க்கும் கட்டாயம் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று நம்மை மிரட்டுவார்கள்.

  • சென்னை வடபழனியில் இருக்கும் புகழ்பெற்ற விஜயா மருத்துவமனைக்குநண்பன் சும்மா தலைவலி என்று பார்க்க போனான் !
   அவனை புடிச்சி முதல்ல ஒரு ப்ரொபிலெ கிரியேட் பண்ண 250.00 அதுக்கு பிறகு ஒரு 5 டெஸ்ட் எடுக்க்ன்னு 600 ! அதுக்கு பிறகு டாக்டர் பார்த்து ஒரு சின்ன இஞ்செக்சன் ! மருந்து எழுதி குடுத்தாங்க ! மொத்ததுல 1050 ரூவாக்கு மேல ஆயிடுச்சு !

   நேரா ரூமுக்கு வந்தவன் மெடிக்கல் போய் 5 ரூவாக்கு ரெண்டு டாப்லெட் போட்டுட்டு படுத்தான் எல்லான் சரியா போச்சு !

   அதுல இருந்து அந்த பக்கமே எட்டி பார்க்குறதில்ல! என்னமா கொள்ளையடிக்குறானுங்க !

 7. மருந்து துறையில் நடக்கும் ஊழல்களை அருகில் உட்கார்ந்து கொண்டு பேசுவது போல தெளிவாக விளக்கியுள்ளீர்கள். உலகளாவிய மருந்து துறை மக்களின் உடல் நலத்தையும் பணத்தையும் கொள்ளை அடிக்கும் மாபியாவாக செயல்படுவதைக் காட்டும் பனிப்பாறை விளிம்புதான் இது.

 8. காவல் நிலையமும் – நீதிமன்றமும் இல்லாத ஊர் எப்படி குற்றங்கள் நிகழாத ஊரோ (கதவுகளே இல்லாத ஊர் ஒன்று பஞசாபில் இருப்பதாகக் கேள்வி)அது போல மருத்துவமனைகளும் – மருத்துவர்களும் – மருந்து கம்பெனிகளும் – மருந்து விற்பனையாளர்களும் – செவிலியர்களும் – மருத்துவ பரிசோதனை நியைங்களும் அதிகமாக இல்லாத சமூகம் எதுவோ அதுவே ஆரோக்கியமான சமூகமாகும். அத்தகைய சமூகம் அமையப்பாடுபடுவதே இன்றைய தேவை. அதுவரை இத்தகைய மோசடிகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும்.

  மனித உயிர் உலோகத்தைவிட மலிவானதா?
  http://www.hooraan.blogspot.in/2012/09/blog-post.html

 9. அட போங்க பாஸ் நானும் பய புள்ளைக நாய் கணக்கா டாக்டரை பார்க்க ஒவ்வொரு கிளினிக் வாசல்லயும் காத்துக் கெடக்குறானுங்களேன்னு பார்த்தா இப்படி இருக்கே அவங்க லட்சணம்!
  என்ன பண்றது ! அவனும் படிச்சிட்டு வேலை பார்த்தாகணும் ! நாய் வேஷம் போட்டுட்டு குரைக்க முடியாதுன்னா சொல்ல முடியும்!
  என்ன எந்த மருந்த குடுத்து எவன் செத்தான்னு நேர்ல தெரியாது!

 10. //தனது கம்பெனி மருந்துகளை அறிமுகப்படுத்தி அவை என்னென்ன நோய்களை எல்லாம் குணப்படுத்தும் என்பதை மருத்துவர்களுக்கு கூறுவான். அதன் பிறகு சில சந்திப்புகளில் மருத்துவருடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டதும் சில இலவச மருந்துகளை கொடுத்து டிரை பன்னி பாருங்க சார் ரிசல்ட் நல்லா இருக்கும் என்று சில மருந்துகளை இலவசமாக கொடுப்பான்.//

  கடவுளுக்கு அடுத்ததாக உயிரை காபற்றுவர்கள் என மக்கள் நினைப்பது டாக்டர்களை தான். ஆனால் அவர்களே மக்களை மருந்து சோதனை கருவியாக பயன்படுத்துகிறார்கள் ரெப்புகளின் மூலமாக…. இவர்களால் மருத்துவமனை செல்ல கூட பயமாக தான் இருக்கிறது…..

  //இலவச மருந்துகள் வேண்டாம், பொருட்களும் வேண்டாம் நேரடியாகவே விசயத்திற்கு வருகிறோம் என்று ஒவ்வொரு கம்பெனியுடனும் ஒரு உடன்பாட்டிற்கு வருகிறார்கள்.//

  கௌரவ பிச்சை ……

  //அரசு நிறுவனங்களால் ஐம்பது பைசா, ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அதே மாத்திரைகள் இப்போது பன்னாட்டு நிறுவனங்களால் ஏழு ரூபாய்க்கும், எட்டு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு உள்நாட்டில் அதிகபட்சமாக 8,800 ரூபாய்க்கு தயாரிப்பட்ட மருந்துகள், பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மருந்து சந்தைக்குள் நுழைந்த பிறகு ஒரு லட்சம் வரை விற்கப்படுகிறது.//

  இவ்ளோ விஷயங்கள் இருக்கா ???

  //நானும் உழைச்சு தான் சாப்பிடுகிறேன் என்கிறார்கள் மெடிக்கல் ரெப்புகள் ! மருத்துவர்களுக்கு நடப்பதை போலவே இவர்களுக்கும் மாதா மாதம் மீட்டிங் நடைபெறுகிறது. அதில் மருத்துவர்களை எப்படி அணுக வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி வீழத்த வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சி உரைகளுக்கு பிறகு இவர்களை உற்சாகப்படுத்த உற்சாக பானங்களும், உணவும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன.//

  மெடிக்கல் ரெப் பொழப்பு நாய் பொழப்புன்னு பாத்தா மானம் கெட்ட பொழப்பால இருக்கு…… இப்படி ஒரு பொழப்பு தேவையா…???

  அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி…..
  நைஸ் ஆர்டிகிள்……….
  நன்றி வினவு….!!!!!!!!

 11. விகடன் பப்ளிகேஷன்னில் வந்த டாக்டர் சேதுராமன் அவர்களால் எழுதப்பட்ட போஸ்ட் மார்ட்டம் புத்தகம் மிக விரிவாக இதை விவரிக்கிறது.நெடுநாள் குற்றங்கள் இது.

 12. வடபழனி விஜயா மருத்துவமனையில் நடக்கும் கொள்ளைகள்:
  1) நோயாளிகளை நோய் குணமானலும், அடுத்த நோயாளி படுக்கைக்கு வரும்வரை வெளியேற விடுவதில்லை. அதாவது படுக்கைகளில் எப்போதும் காலியாக நோயாளி இல்லாமல் இருப்பதில்லை. இது ஐ.சி.யூ-வாக இருந்தாலும் சரி.
  2) இருதய அறுவை சிகிச்சை பலடுக்கு தேவையே இல்லை. கட்டாயப்படுத்தி படுக்கப்போட்டு அறுத்து விடுகிறார்கள்.
  3) கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால், ரேட் காண்டிராக்ட் பேசி அட்மிட் ஆகிக் கொள்கிறார்கள், இல்லாவிட்டால் அப்சர்வேசன், டாக்டர் இன்றைக்கு பிசி போன்ற காரணங்கள் சொல்லி எக்கச்சக்க அறைவாடகை வசூல் செய்து கொண்டிருப்பார்கள். நீங்கள் அடுத்த மருத்துவனை செல்கிறெனென்றால் உடனடியாக ஆபரேசன் நடக்கும்.
  4) இன்று டிஸ்சார்ஜ் என்றால், சாயங்காலம் தான் உங்களுக்கு பில் கொடுப்பார்கள். பணம் கட்ட நீங்கள் கவுன்டரை (மூடுவதற்குள்) நோக்கி ஓட வேண்டும். எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தை தாமதப்படுத்தி, கடைசி நேர நெருக்கடியில் பில் தொகை குறித்து நாம் எதுவும் பேச முடியாத சூழலை உருவாக்கி பணம் பறிக்கிறார்கள்.
  5) சம்பந்தமே இல்லாவிட்டாலும் (உ-ம்: தோல் வியாதிக்கு பல் டாக்டர் வருவார்; ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் வருவார்) வேலை இல்லாமல் இருக்கும் மருத்துவர்கள் (மருந்துக்களும் தான்) சோதனை என்பதன் பேரில் பணம் பறித்துக் கொண்டிருப்பார்கள்.
  6)லேப் சோதனைகள் வெளியில் வசூலிப்பதை விட பல மடங்கு அதிகம்.
  7) இவ்வளவும் டிரஸ்ட் பெயரில் நடக்கும், மக்களை ஏமாற்றும் ஒரு கொள்ளை கூடாரம்.

 13. அட போங்க பாஸ்..இப்போ நல்ல லாபம் வரும் ஒரு ஏரியா மெடிக்கல்தான் .. அதிலும் பிரசவ நேரத்தில் நடக்கும் கூத்துகள்…எல்லா டாக்டர்களும் சிசேரியன்தான் செய்கிறார்கள்., நார்மல் வாய்ப்பு இருந்தாலும்…ஏழை என்றால் தன் சொத்தை விற்றுதான் வைத்தியம் பார்க்க வேண்டும்…
  எனக்கு தெரிந்து ஒரு திருநெல்வேலி பெருமாள்புரத்தில் ஒரு டாக்டர் நார்மல்லுக்கு பெமுஸ் என்று, இப்போ ஒரே சிசேரியன்தான்.. அதுவும் கொறைஞ்சது நாப்பது ஆயிரம்…அது இல்லாதவன் அரசு ஆஸ்பத்திரி

Leave a Reply to dinosour பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க