Thursday, February 2, 2023
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஜேப்பியாருக்கு ஆப்பு!

ஜேப்பியாருக்கு ஆப்பு!

-

மிழகம் அறிந்த சாராய வியாபாரியாக இருந்த ஜேப்பியார் இன்று தமிழகத்தின் முன்னணி கல்வி தந்தையாக இருக்கிறார். ஜே.பி.ஆருக்கு மொத்தம் ஏழு பொறியியல் கல்லூரிகளும், ஒரு தொழில்நுட்பக் கல்லூரியும், ஒரு பல் மருத்துவக்கல்லூரியும், ஒரு பல்கலைக்கழகமும் உள்ளது. தனது  கல்வி வியாபாரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தி வரும் ஜேப்பியார் சென்ற ஆண்டு தன்னுடைய பெயரில் ஒரு புதிய கல்லூரியை திறந்துள்ளார்.

சுங்குவார்சத்திரத்திற்கு அருகில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப்போட்டு அங்கே தான் இந்த புதிய கல்லூரியை துவங்கியுள்ளார். அருகிலேயே ஒரு ஸ்டீல் பிளான்டையும், வாட்டர் பிளான்டையும் நிறுவியுள்ளார். அத்துடன் தீம் பார்க் ஒன்றையும் கட்டி வருகிறார். இது தவிர சொந்த ஊரான முட்டத்தில் ஒரு சிறிய துறைமுகத்தையும் கட்டி வருகிறார்.

மேற்கூறிய புதிய கல்லூரியில்தான் பணிரெண்டு தொழிலாளர்கள் இறந்து போயுள்ளனர். கல்லூரியின் உள்அரங்கை கட்டிக்கொண்டிருக்கும் போது கட்டிடம் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் விபத்தில் இறந்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அது விபத்து அல்ல. கொலை. கல்விக் வியாபாரியான ஜேப்பியாரின் லாபவெறிக்காக அந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கல்லூரியின் உள் அரங்கிற்கான கட்டுமான வேலைகளை செய்தது வெளி நிறுவனங்கள் அல்ல. ஜேப்பியாருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் தான் அந்த வேலைகளை செய்தது. வேகமாக கட்டினால் கூட மூன்று மாதங்கள் பிடிக்கக்கூடிய இந்த வேலையை மூன்றே வாரங்களில் கட்டி முடிக்க வேண்டும் என்று ஜேப்பியார் கொடுத்த டார்ச்சரால் வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்தன. கட்டிடங்கள் இடிந்துவிழ காரணம் இது தான். ஈரத்துடன் கொட்டப்பட்ட சிமெண்ட் கலவை இறுகி காய்ந்து உறுதியடையும் முன்பே அதன் மீது அடுத்தக்கட்ட வேலைகளை துவங்கியதால் காய்ந்தும் காயாமலும் இருந்த கட்டிடச் சுவர்களும், தூண்களும் சரிந்து விழுந்தன. பன்னிரெண்டு தொழிலாளர்கள் இறந்து போனார்கள். இது விபத்தா கொலையா?

கல்வி சாம்ராஜ்யத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இத்தகைய ரவுடி ஜேப்பியாருக்கு எதிரான போராட்டத்தில் தான் பு.ஜ.தொ.மு வெற்றி பெற்றிருக்கிறது. சட்டப் போராட்டத்தில் பு.ஜ.தொ.மு வின் இரண்டாவது கதை இது.

சத்யபாமா பண்ணையார்க் கழகம் !

’புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’யின் தற்போதைய மாநில அமைப்புச் செயலாளரும்,  சத்யபாமா கல்லூரி பு.ஜ.தொ.மு ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிசியன்கள் சங்கத்தின் செயலாளருமான தோழர் வெற்றிவேல் செழியன் 2005-ம் ஆண்டு சத்யபாமா பல்கலைக் கழகத்தில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்தார்.

சத்யபாமாவில் பணிபுரியும் துப்புறவுத் தொழிலாளி முதல் லேப் டெக்னீசியன்கள் வரை அனைவரும் ஜேப்பியார் அய்யாவை பார்த்தால் வணக்கம் வைக்க வேண்டும். யார் மீதாவது அய்யாவுக்கு கோபம் வந்துவிட்டால் கையை நீட்டி கன்னத்தில் நாலு அறைவிடுவார், அதையும் வாங்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் கேவலமான கெட்ட வார்த்தைகளையும் கொட்டுவார், அதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். பண்ணையார் வீசியெறியும் காலனா அரையனா பிச்சைக் காசை போல அய்யா போடுவது தான் சம்பள உயர்வு.

கேன்டீனில் மதிய உணவு உண்டு. ஆனால் தொழிலாளர்களுக்கு என்று தனியாக இல்லை. மற்றவர்கள் உண்பது போக என்ன மிச்சமோ அவை தான் தொழிலாளர்களுக்கான மதிய உணவு. நிர்வாகத்தை எதிர்த்துப் பேசுபவர்களை அல்ல முணுமுணுப்பவர்களை கூட இருட்டறையில் வைத்து குமுற சிறப்பான முறையில் ஊட்டி வளர்க்கப்பட்ட தொழில்முறை குண்டர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பண்னையார் கம்பெனி தான் நாகரீகமான முறையில் பல்கலைக்கழகம் என்றழைக்கப்படுகிறது.

இத்தகைய மோசமான வேலை நிலைமையின் கீழ் அடிமைகளாக வேலை செய்த தொழிலாளர்கள் இவற்றுக்கெதிராக குமுறிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தான் வெற்றிவேல்செழியனுக்கு பு.ஜ.தொ.மு சங்கம் அறிமுகமாகிறது. அவர் தனது சக தொழிலாளிகளுக்கு சங்கத்தை அறிமுகம் செய்கிறார்.

அதிரடியான வேலை நீக்கம் !

2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எந்தவித முன்னறிவிப்புமின்றி வெற்றிவேல்செழியன் வேலையிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். வேலை நீக்கத்திற்கு நிர்வாகம் கூறிய காரணம் ஒழுங்கீனமாக இருக்கிறார் என்பது. ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. ஓட்டுனர்களிடையே சங்கம் துவங்க முயற்சித்தார் என்பது தான் உண்மையான காரணம். ஒரு தொழிலாளியை இவ்வாறு முன்னறிவிப்பின்றி வேலைநீக்கம் செய்தால் தொழிற்தகராறு சட்டம் 1947 பிரிவு 2 ஏ வின் கீழ் தொ.உ.ஆணையரிடம் (ACL) முறையிடலாம்.

அதன்படி தொ.உ.ஆணையரிடம் தொழிற்தாவா எழுப்பப்பட்டது. பு.ஜ.தொ.மு தனது வாதத்தில் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் இவைதான்.

வெற்றிவேல் செழியன் எந்த முன் அறிவிப்புமின்றி அதிரடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், ஒரு தொழிலாளி எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும் அவரிடம் முறையாக விளக்கம் கேட்டிருக்க வேண்டும், குற்றத்தை நிரூபிக்க உள்விசாரணை நடத்தியிருக்க வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை பாதுகாத்துக்கொள்ள அனைத்து வாய்ப்புகளையும் தந்திருக்க வேண்டும்;

இவ்வாறெல்லாம் நடந்து கொண்ட பிறகு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதை தொழிலாளியிடமும் முறையாக அறிவித்து அதன் பிறகு தான் வேலை நீக்கம் செய்ய வேண்டும். இது தான் சட்டப்படியான நடைமுறை. ஆனால் சத்யபாமா நிர்வாகம் இவ்வாறெல்லாம் நடந்து கொள்ளவில்லை மாறாக வெறும் வாய்மொழி உத்தரவின் மூலம் அதிரடியாக வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது. இது சட்டவிரோதமான நடவடிக்கை. எனவே இந்த வேலைநீக்க நடவடிக்கையை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தொழிலாளர் உதவி ஆணையரின் நடுநிலைமை !

வழக்கு விசாரணை 2006-ம் ஆண்டு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. பு.ஜ.தொ.மு வின் வாதத்திற்கு பதிலளிக்கிறேன் என்று நிர்வாகம் அடிமுட்டாள்த்தனமான ஒரு வேலையை செய்தது. தொ.உ.ஆணையரை அணுகி ஒரு கடிதத்தை கொடுத்தது. அக்கடிதத்தில் வெற்றிவேல் செழியன் சங்கம் ஆரம்பிக்க முயற்சி செய்தார் எனவே தான் வேலையிலிருந்து நீக்கினோம் என்கிற உண்மையான காரணத்தை கூறியிருந்தனர். உடனே பதறிப்போன தொ.உ.ஆணையர் இப்படி எல்லாம் கடிதம் கொடுத்தீர்கள் என்றால் நீங்கள் தான் மாட்டிக்கொள்வீர்கள் என்று கூறி அந்த கடிதத்தை பத்திரமாக நிர்வாகத்தின் கைகளிலேயே திணித்தார்.

பு.ஜ.தொ.மு மனுதாரர். நிர்வாகம் எதிர்மனுதாரர். எதிர்மனுதாரர் ஒரு கடிதத்தை கொடுத்தால் அதை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். அதே போல மனுதாரர் அளிக்கும் அனைத்து கடிதங்களையும் எதிர் மனுதாரருக்கு வழங்க வேண்டும். இது தொ.உ.ஆணையரின் வேலை. ஆனால் தொ.உ.ஆணையர் அந்த கடிதத்தை பு.ஜ.தொ.மு விற்கு கொடுக்காமல் மறைத்து விட்டார். கேட்டதற்கு அவ்வாறு எந்த கடிதமும் கொடுக்கவே இல்லை என்று மறுத்து விட்டார். அந்த கடிதம் மட்டும் அன்றே கிடைத்திருந்தால் ஜேப்பியாரை அன்றைக்கே மண்ணைக் கவ்வவைத்திருக்கும் பு.ஜ.தொ.மு. முதலாளிகள் தொழிலாளிகளோடு மோதும் போதெல்லாம் முட்டாள்தனங்களையே அதிகமாக செய்கிறார்கள் என்பதால் இது போன்ற முட்டாள்தனங்களுக்கு பஞ்சமிருக்காது.

இவ்வாறு கடிதம் கொடுத்தால் பிரச்சினை என்றதும் சில நாட்களில் வேறு ஒரு கடிதத்தை கொடுத்தனர். அதில் ஒரு புதிய காரணத்தை கூறினார்கள். அதாவது வெற்றிவேல்செழியனை நாங்களாக வேலை நீக்கம் செய்யவில்லை அவராகவே தான் சொல்லாமல் கொள்ளாமல் வேலையைவிட்டு நின்று விட்டார் என்றார்கள். தன்னிச்சையாக வேலையிலிருந்து நின்றால் நாங்கள் ஏன் இங்கே வருகிறோம், வழக்கு போடுகிறோம் ? மேலும் நீங்கள் முதலில் கூறிய காரணம் (ஒழுங்கின்மை) வேறு, இப்போது கூறுகின்ற காரணம் வேறு. இதில் எது உண்மை ? எதுவும் உண்மை அல்ல. நிர்வாகம் சொல்வது பொய். தொழிலாளியை நிர்வாகம் தான் வேலை நீக்கம் செய்திருக்கிறது அவராக வேலையிலிருந்து நிற்கவில்லை என்றது பு.ஜ.தொ.மு.

தொ.உ.ஆணையரிடம் நடந்த சமரச பேச்சுவார்த்தையிலேயே ஓராண்டு ஓடிவிட்டது. ஆனால் சமரசம் ஏற்படவில்லை. எனவே தொ.உ.ஆணையர் சமரச முறிவு அறிக்கை தயாரித்து இருவருக்கும் நகல் வழங்கி வழக்கை தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட்டார்.

தொழிலாளர் நீதிமன்றத்தில்.

தொ.நீதிமன்றத்தில் வழக்கு 2007-ம் ஆண்டு துவக்கத்தில் விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு வந்த நாளிலிருந்து சரியாக ஓர் ஆண்டு வரை நிர்வாகம் நேரில் வரவே இல்லை. எதிர் மனுதாரர் என்கிற வகையில் பதில் மனுவை போடுவதற்காக கூட வரவில்லை. இழுத்தடிக்கும் நோக்கத்துடன் காலம் கடத்தினார்கள். இவ்வாறு இழுத்தடிப்பது மட்டும் தான் முதலாளிகளுக்கு தெரிந்த ஒரே ராஜதந்திரம். அனைத்து முதலாளிகளும் இவ்வாறு தான் செய்கிறார்கள். விசாரணைக்கு வராமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பதன் மூலம் தொழிலாளியை வறுமையில் உழல விட்டு வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டு ஓட வைப்பதற்கான வேலை தான் இது.

ஓராண்டாக வராத ஜேப்பியார் கம்பெனி 2008 ஜூன் மாதத்தில் தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அப்போதும் மனு போட்டதோடு சரி அடுத்தக்கட்ட விசாரணைக்கெல்லாம் வரவே இல்லை. அதன் பிறகு 2010-ம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளாக விசாரணைக்கு வரவில்லை. அப்போது வழக்கு விசாரணைக்கு வந்து ஐந்து ஆண்டுகளாகியிருந்தது !

ஜேப்பியார் எவ்வளவு பெரிய ஆள். ஐந்து ஆண்டுகளாக இப்படியே ஓடிப்பிடித்து ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு பெரிய பிஸ்தா !

சில மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய முயற்சி செய்தார்கள். நாங்கள் ஏற்கெனவே ஒரு மனு அளித்திருக்கிறோம் அதில் சில விசயங்களை கூறாமல் விட்டுவிட்டோம், அவற்றையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் எனவே ஒரு கூடுதல் மனுவை போடுகிறோம் என்று கூடுதல் மனு போட்டார்கள்.

எங்களுடைய முந்தைய மனுவில் அவர் வேலையிலிருந்து தானாகவே நின்றுவிட்டதாக கூறியிருந்தோம் இப்போது கூடுதலாக இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறோம். அவருடைய வேலையில் எங்களுக்கு திருப்தி இல்லை. பேருந்தை ஓட்டும் போது விபத்தை ஏற்படுத்தும் வேகத்தில் (rash driving)  ஓட்டுகிறார், வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போதே (அதாவது மாணவர்களையும் ஆசிரியர்களையும் அழைத்து வரும் போது மற்றும் அழைத்து போகும் போது) சாலை ஓரங்களில் வண்டியை நிறுத்திவிட்டு போண்டா, பஜ்ஜி சாப்பிடுகிறார்.

இவ்வாறெல்லாம் நடந்துகொண்டதால் எங்களுக்கு அவருடைய வேலையில் திருப்தி இல்லை. மேலும் பல்கலைக்கழக கேன்டீனுக்காக நாங்கள் நடத்திய காய்கறி குடோனிலிருந்து காய்கறிகளையும் திருடியிருக்கிறார். எனவே இந்த அனைத்து காரணங்களாலும் இவரை வேலையிலிருந்து நீக்கினோம் என்று கூடுதல் மனுவில் கூறினார்கள்.

முட்டாள் முதலாளிகள் !

பு.ஜ.தொ.மு தனது வாதத்தில் நிர்வாகத்தின் வாதத்தை பொய் என்று மறுத்து வாதிட்டது. தொ.உ.ஆணையரிடம் கூறிய பதிலுறையில் இங்கே கூறிய காரணத்தை கூறவில்லை. அதன் பிறகு தொ.நீதிமன்றத்திலும் கூறவில்லை. அத்துடன் இரண்டாண்டுகளாக வழக்கு விசாரணைக்கே ஆஜராகாமல் இழுத்தடித்துவிட்டு திடீரென்று ஒரு கூடுதல் மனுவை தாக்கல் செய்து இவை தான் வேலை நீக்கத்திற்கு உண்மையான காரணங்கள் என்று கூறுவது பொய் என்று கூறியது.

இதை மறுத்த நிர்வாகம், இல்லை இதற்கு முன்பே இந்த காரணங்களை கூறியிருக்கிறோம் அதை தொ.உ.ஆணையரும் பதிவு செய்திருக்கிறார் என்று வாதிட்டது. 2006-ல் தொ.உ.ஆணையரிடம் நடந்த சமரச பேச்சு வார்த்தையின் போது இந்த குற்றச்சாட்டுகளை கூறியதாகவும். அந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த போது சமரச அதிகாரி கொடுத்த சமரச முறிவு அறிக்கையில் இந்த காரணங்களை பதிவு செய்துள்ளார் என்றும் கூறி அதற்கு சான்றாக ஓரு கடிதத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அந்த கடிதத்தில் வெற்றிவேல் காய்கறி திருடியது உட்பட நிர்வாகம் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டு தொ.உ.ஆணையரின் கையெழுத்திடப்பட்டிருந்தது.

ஆனால் தொ.உ.ஆணையர் பு.ஜ.தொ.மு வுக்கும் ஒரு பிரதியை கொடுத்திருப்பார் என்பதை இந்த முட்டாள்கள் மறந்துவிட்டார்கள். பு.ஜ.தொ.மு விடம் கொடுக்கப்பட்ட மற்றொரு பிரதியில் அவ்வாறு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆக என்ன நடந்திருக்கிறது ? ஒன்பது கல்லூரிகளை நடத்தும் இந்த முட்டாள்கள் தொ.உ.ஆணையரின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து அதில் தமக்கு விருப்பமான குற்றச்சாட்டுகளை எல்லாம் ஏற்றியிருக்கிறார்கள் !

மனுதாரர், எதிர் மனுதாரர் ஆகியோரின் மனுக்கள், கடிதங்கள், ஆணையரின் உத்தரவுகள் அனைத்தும் இரண்டு தரப்புக்கும் வழங்கப்படும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் போலி ஆவணம் தயாரித்து வசமாக மாட்டிக் கொண்டார்கள். ஏற்கெனவே ஒரு முறை இதே போன்ற ஒரு முட்டாள்தனத்தை செய்யவிருந்து தொழிலாளர்களுக்கு ’உதவி’ செய்ய வேண்டிய ஆணையர் முதலாளிக்கு உதவியதால் அந்த கடிதம் பு.ஜ.தொ.மு வின் கைகளுக்கு கிடைக்காமல் போனது. அப்படியிருந்தும்  கூட இவர்களுக்கு அறிவு வரவில்லை. மீண்டும் அதே தவறை செய்து மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த கடிதம் போர்ஜரி என்பதை அம்பலமாக்க பு.ஜ.தொ.மு மேலும் சில வாதங்களை வைத்தது. இந்த கடிதம் உண்மையானது என்றால் ஏன் முதல் மனுவிலேயே குறிப்பிடவில்லை ? மேலும், தொ.உ.ஆணையர் சமரச முறிவு அறிக்கை கொடுத்தது 2007-ல் இப்போது 2011 கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த கடிதத்தை தாக்கல் செய்யாமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? இதற்கு நிர்வாகத்தால் பதில் கூற முடியவில்லை. கடிதம் போலி என்பது அம்பலமானதால் அந்த முயற்சியை விட்டுவிட்டு அடுத்ததற்கு தாவினர்.

பொய் மேல் பொய்! புகார் மேல் புகார் !!

பழைய குற்றச்சாட்டுகளை எல்லாம் விட்டுவிட்டு இப்போது வேறு ஒரு புதிய குற்றச்சாட்டை தூக்கிக்கொண்டு வந்தது நிர்வாகம். இவருடைய கட்டுப்பாடில்லாத ட்ரைவிங்கால் ஒரு பெண் பேராசிரியையின் கருவே கலைந்துவிட்டது. மாணவர்களும் அந்த பெண் பேராசிரியையும் இவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள் என்றது. அந்த மாணவர்கள் மற்றும் பெண் பேராசிரியையின் பெயரோடு அவர்களிடமிருந்து புகார் கடிதம் வாங்க வாருங்கள் என்று கூறியது பு.ஜ.தொ.மு. வாங்கித் தருகிறோம் என்று கூறியவர்களிடமிருந்து அதற்கு பிறகு எந்த பதிலும் இல்லை.

பு.ஜ.தொ.மு வின் வாதங்கள் அசைக்க முடியாத உறுதியுடன் இருந்ததால் அதற்குமேல் நிர்வாகத் தரப்பை அனுமதிக்காமல் நீதிமன்றம் குறுக்கிட்டு தொழிலாளியை விசாரணையின்றி ஏன் வேலையிலிருந்து நீக்கினீர்கள் என்று கேட்டது. அதற்கு இல்லை இல்லை அவருக்கு முறையாக விசாரணைக்கான கடிதம் அனுப்பப்பட்டது அவர் தான் வரவில்லை என்றனர். எப்படி அனுப்பினீர்கள் என்று கேட்டால். விரைவு தபால் மூலம் என்றார்கள். சரி அவ்வாறு அனுப்பியதற்கான இரசீதை ஒப்படையுங்கள் என்றால் இல்லை என்கிறார்கள். பொய் பொய் பொய் அனைத்திலும் பொய்.

முதலில் அவரே வேலையைவிட்டு நின்றுவிட்டதாக கூறினார்கள், பிறகு வேலையில் திருப்தி இல்லாததால் நாங்கள் தான் நீக்கினோம் என்றார்கள். பிறகு ரேஸ் டிரைவிங், போன்டா பஜ்ஜி தின்றார், காய்கறி திருடினார் என்றார்கள். அதற்கு போர்ஜரி வேலை செய்து ஒரு கடிதம் தயாரித்து மாட்டிக் கொண்டார்கள். அதன் பிறகு, விசாரணைக்கு அழைத்தோம் அவர் தான் வரவில்லை அதற்கான கடிதத்தை விரைவு தபாலில் அனுப்பி வைத்தோம் என்றார்கள். இப்போது பேராசிரியையும், மாணவர்களும் புகார் கொடுத்ததாக கூறுகிறார்கள். நீதிமன்றத்தில் ஜேப்பியார் தரப்பு இவ்வாறு மாறி மாறி பேசிக்கொண்டிருந்தது எல்லாம் பச்சைப்புளுகுகள் என்பது அனைவருக்குமே அப்பட்டமாகத் தெரிந்தது.

2011-ம் ஆண்டுடன் இரு தரப்பு வாதங்களும் மேற்கண்ட புளுகுகளுடன் முற்று பெற்றது. இனிமேல் நீதிமன்றம் தான் தீர்ப்பளிக்க வேண்டும். இந்நிலையில் நீதிபதி மாற்றலாகி போய்விட்டார். இதன் காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. மீண்டும் 2012-ம் ஆண்டில் புதிய நீதிபதி வருகிறார். அவர் விசாரணையை மீண்டும் முதலிலிருந்து துவங்கி விரிவாக விசாரிக்கிறார். இவருடைய தலைமையின் கீழ் நான்கு மாதங்களாக நடந்த விசாரணையில் பு.ஜ.தொ.மு மீண்டும் முதலிலிருந்து தனது வாதங்களை வைத்தது அதில் வெற்றிவேல் தரப்பின் நியாயங்களை ஆணித்தரமாக நிரூபித்தது. ஜேப்பியார் தரப்பும் தனது பழைய பொய்ளை ஆரம்பம் முதல் அப்படியே வாசித்தது.

தீர்ப்பு – ஜேப்பியாருக்கு ஆப்பு !

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி கீழ்கண்டவாறு தீர்ப்பளித்தார். வெற்றிவேல்செழியனை நிர்வாகம் வேலைநீக்கம் செய்தது சட்டவிரோதமானது. விளக்கம் விசாரணை என்று எதுவும் இல்லாமல் வேலையிலிருந்து நீக்கியிருப்பது செல்லத்தக்கதல்ல. எனவே வேலையிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அவருக்கு முழுமையான பின் சம்பளத்தை வழங்க வேண்டும். சம்பளம் மட்டுமின்றி போனஸ் சீருடை உள்ளிட்டு என்னென்ன சலுகைகள் உள்ளதோ அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். அத்துடன் வேலையிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தீர்ப்புகெதிராக மேல்முறையீடு செய்வதாக இருந்தாலும் இவற்றை வழங்கியாக வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

சில எலும்புத்துண்டுகளும் ஒரு சவாலும் !

தோழர் வெற்றிவேல்செழியனை போல டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள் பலர். முதலில் அவர்களுக்காகவும் தான் வழக்கு நடந்தது. ஆனால் ஏழு ஆண்டுகள் நடந்த இந்த சட்டப் போராட்டத்தில் அனைவருமே நிர்வாகத்திடம் விலை போய்விட்டனர். ஜேப்பியார் விட்டெறிந்த சில ஆயிரங்களுக்காகவும், லட்சங்களுக்காகவும் துரோகமிழைத்து சரணடைந்துவிட்டனர். ஆனால் வெற்றிவேல் செழியன் எதற்கும் மசியவில்லை. அவரிடமும் தான் பேரம் பேசினார்கள். சொல்லுங்க வெற்றி உங்களுக்கு என்ன வேணும் ? என்ன வேணுமோ அதை வாங்கிக்கிட்டு கேசை வாபஸ் வாங்கிக்கங்க. ஒரு லட்சமா இரண்டு லட்சமா எவ்வளவு வேண்டும் என்று கேட்டது நிர்வாகம். பேரம் பேசியிருந்தால் நான்கு ஐந்து லட்சங்களை கூட வாங்கியிருக்க முடியும்.

ஆனால் அவர் நிர்வாகத்திடம் சவால் விட்டார். யாருக்கு வேணும் உன்னுடைய எச்சில் காசு ? என்னை வேலையிலிருந்து நீக்கிய போது என்ன காரணம் என்று கேட்ட போது என்ன சொன்னீங்க ? அதையெல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை, எங்களுக்கு தேவை இல்லைங்கிறதால நீக்கிவிட்டோம்னு சொன்னீங்க. இல்ல சார் என்ன காரணம்னு சொன்னீங்கன்னா வசதியா இருக்கும் என்ற போது ? என்ன கேசு போடப்போறீய உன்னால் என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்க போ என்று சவால் விட்டீர்கள் இல்லையா நான் இப்ப உங்களுக்கு சவால் விடுகிறேன் நான் என்ன புடுங்குறேங்கிறத கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க, சத்யபாமா பஸ்சை மறுபடியும் நான் ஓட்டுவேன். இதே பல்கலைக்கழகத்தில் மறுபடியும் ஒரு நாளாவது நான் வேலை செய்வேன் என்று நிர்வாகத்திடம் சவால் விட்டு காறித் துப்பிவிட்டு வந்தார்.

தற்போது அந்த சவாலில் வென்றிருக்கிறார் வெற்றிவேல் செழியன். கூடவே இருந்த பல தொழிலாளிகளும் சோரம் போய்விட்ட நிலையில், லட்சங்களில் தருகிறேன் என்று ஆசை காட்டிய போதும், ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்த போதும் வெற்றிவேல் மனம் தளரவில்லை. உறுதி குலைந்து போய்விடவில்லை. மாறாக மேலும் மேலும் உறுதியடைந்தார். தற்போது அவருக்கு முழுமையான சம்பளமும், வேலையும் வழங்கப்பட்டிருக்கிறது ஆனால் அவரோ இந்த இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் ஒரு பாட்டாளி வர்க்க போராளியாக வளர்ந்து ’புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ யின் முன்னணி ஊழியராகிவிட்டார்.

சத்யபாமா உள்ளிட்ட ஜேப்பியார் குழுமங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் இந்த போராட்டச் செய்தி மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பு.ஜ.தொ.மு மீதான மதிப்பும் நம்பிக்கையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. எத்தகைய கோட்டையையும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் அசைத்துக்காட்டுவார்கள். மீண்டும் பல வெற்றிவேல் செழியன்கள் ஜேப்பியாரின் கல்லூரிகளிலிருந்து உருவாகி வருவார்கள் அவர்களும் அங்கே சங்கம் கட்டுவார்கள். அது தொழிலாளர்களின் சங்கமாக மட்டுமல்ல மாணவர்களின் சங்கமாகவும் இருக்கும் அப்போது அனைத்து கிளைகளிலும் செங்கொடிகள் பறக்கும். அப்போது கல்லூரி ஜேப்பியாரின் கைகளில் இருக்காது தொழிலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

_____________________________________

– வினவு செய்தியாளர்.

_____________________________________

  1. பொறியியல் கல்லூரிகளின் வேலைசெய்யும் பேராசிரியர் அடிமைகளை பற்றி கொஞ்சம் விரவாக அலசுங்களேன் … தமிழக பொறியயல் கல்லூரிகளை பணிபுரியும் அனைவரும் கொத்தடிமைகள் போல் தான் நடத்தப்படுகின்றனர். அவர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கபடுகின்றன ..

  2. Well done..Continue your good work..Lets hope you will win again,if they go for appeal..Congrats..
    Spl mention for Vetri Vel…we appreciate his faith and patience..

  3. புரட்சிகர தொழிற்சங்கத்தின் தலைவர்களின் குணத்திற்கு தோழர் வெற்றிவேல்செழியன் ஒரு முன்னுதாரணம். அவரிடம் தொழிலாலர் நீதிமன்ரம் அளித்த “பின்சம்பளத்துடன் (பணிநீக்கம் சட்டவிரோதமானதென்பதால் பணிநீக்கம் செய்த நாள் முதல் சம்பளம் தரவேண்டும்)வேலை வழங்க வேண்டுமென்ற தீர்ப்பைப்பற்றி” கேட்டபோது அவர் கூறியது..”தோழரே பின் சம்பளமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், தொழிலாளிகளை நாயைப்போல விரட்ட என்னும் அவந்து கல்லூரியில் மீண்டும் ஒரே ஒரு நாளாவது வேலையில் சேர வேண்டும். நமக்கு பணத்தை விட தன்மானம்தான் பெரிது, தொழிலாளிகள் ஒன்றும் கிள்ளுக்கீரைகளல்ல என்பதை அவனுக்கு உண்ர்த்த வேண்டும் என்றார்…. பாட்டாளி வர்க்கம் தனக்கு தகுதியான தலைவர்களை தம்மிடையே உருவாக்குகிரது என்பதற்கு தோழர் வெற்றிவேல்செழியன் ஓர் உதாரணம்….வாழ்த்துக்கள் தோழரே…

    • தமக்கு வழங்கப்பட்ட இட்லியின் தரம் பற்றி கேட்ட குற்றத்திற்காக “ஜனநாயகமான” முறையில் இந்துஸ்தான் யூனி லிவர் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டு, அதனை எதிர்த்த வழக்கினில் வென்றுள்ள தோழர்களைப்பற்றியும் எழுதுங்கள்…..பு.ஜ.தொ.மு. ஒன்றும் மற்ற தொழிற்சங்கங்களைப்போன்று சொம்பு தூக்கும் வேலை செய்யவில்லை. சமரசமற்றமுறையில் போராடும் காரணத்திற்காக அதன் தொழிலாள தோழர்கள் நிர்வாகத்தினால் எப்படியெல்லாம் பழிவாங்கப்படுகின்றனர் என்பதை விளக்குங்கள்……

  4. Dear Sir,

    My best wishes & Congrats for Mr.Vetrivel for his effort & stand to stay against Corporate. Everybody know about JPR. But fighting against & winning against with determination is much appreciated. Again my best wishes to him & to Vinavu.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க