privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்தேசிய முதலீட்டு வாரியம்: கார்ப்பரேட் நிறுவனங்களின் கைத்தடி!

தேசிய முதலீட்டு வாரியம்: கார்ப்பரேட் நிறுவனங்களின் கைத்தடி!

-

ப.சிதம்பரம்யிரம் கோடி ரூபாக்கு மேல் முதலீடு செயும் அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கும் விரைவாக உரிமம் வழங்குவதற்காக தேசிய முதலீட்டு வாரியம் என்ற புதிய அமைப்பை முன்மொழிந்துள்ளார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். ஒரு பெரிய தொழில் நிறுவனம் ஒவ்வொரு துறையாக விண்ணப்பித்து அனுமதி பெறுவதில் உள்ள தாமதங்களைத் தவிர்த்து, அவர்களுக்கு அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் வழங்கும் மையமாக தேசிய முதலீட்டு வாரியம் செயல்படும் என்றும், இதற்கு பிரதமர் தலைவராகவும் நிதியமைச்சரும் சட்ட அமைச்சரும் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள் என்றும் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கை நிறைவேற்ற இத்தகைய அமைப்பு உருவாக்கப்படுவது அவசியமாகியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

இந்த வாரியம் நடைமுறைக்கு வந்தால், இனி தனித்தனியாக ஒவ்வொரு துறையிடமும் தொழில் தொடங்குவதற்கு முன்னதாக ஒப்புதல் பெறத் தேவையில்லை; எவ்விதத் தாமதமோ, தடங்கலோ இன்றி அனைத்தும் இந்த வாரியத்தில் விரைவாக நிறைவேற்றித் தரப்படும்; இதனால் தொழில் வளர்ச்சி விரைவாக சாத்தியப்படும் என்கிறார் ப.சிதம்பரம். வெறுமனே உரிமங்கள் வழங்குவது, ஒப்புதல் அளிப்பது என்பதாக மட்டுமின்றி, தேர்தல் ஆணையம், மையப் புலனாவுத்துறை போன்று சட்டரீதியாக அதிகாரம் கொண்ட அமைப்பாக இந்த வாரியம் இருக்கும்; ஒரு புதிய தொழில் நிறுவனத்துக்கு இந்த வாரியம் ஒப்புதல் அளித்துவிட்டால், அதன் பிறகு வேறு எந்தத் துறையும் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்க முடியாது; தொடங்கப்படும் தொழில் நிறுவனத்தால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதைப் பற்றி மனித உரிமை அமைப்புகளோ, சுற்றுச்சூழல் இயக்கத்தினரோ, எதிர்க்கட்சிகளோ கேள்விகள் எழுப்பினால் இதற்கு தேசிய முதலீட்டு வாரியம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை; அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதுமில்லை; அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் நாட்டின் தொழில் வளர்ச்சியை விரைவாகச் சாத்தியமாக்கவும் இத்தகைய சட்ட ரீதியான அதிகார அமைப்பு அவசியமாகியுள்ளது என்று அவர் விளக்குகிறார்.

‘ஒரு தொழில் முனைவர், தொழில் தொடங்குவதற்கு முன்பாக பல துறைகளிடமிருந்தும் அனுமதி பெறுவதற்கு பல ஆண்டுகளாகிவிடுகின்றன; இதனால் இலக்கு நிறைவேறாமல் நட்டம் ஏற்படுகிறது; சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தால், வனத்துறை அமைச்சகம் இழுத்தடிக்கிறது; இதனால் பல மின்திட்டங்கள் இன்னமும் ஒப்புதல் கிடைக்காமல் உள்ளன. நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பிறகு ஒப்புதல்கள் கிடைத்தாலும், அதன் பிறகு மைய அரசானது, நிலம் கையகப்படுத்துவது, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் மறுவாழ்வும் அளிப்பது முதலான பிரச்சினைகளை வைத்து இழுத்தடிக்கிறது. அதிகார வர்க்கத்தின் சிவப்புநாடாத்தனம், ஊழல், மெத்தனம், அலட்சியம் தொடர்வதால், இதைக் களைந்தெறிய ஒரு அறுவை சிகிச்சை அவசியமாகிவிட்டது’ – என்று இந்த அமைப்பை சி.ஐ.ஐ; அசோசெம், ஃபிக்கி முதலான தரகுப் பெருமுதலாளிகளின் சங்கங்கள் வரவேற்று ஆதரிக்கின்றன.

நம்நாட்டிலுள்ள அரசியலமைப்பு முறைகளின்படி, ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சகத்திடமும் ஒப்புதல் பெற்றுதான் தொழில் திட்டங்களை நிறைவேற்ற முடியும். அத்தகைய சில்லறைத் தடைகள் கூட இருக்கக்கூடாது என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனத்தின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் சேவகர்களாக பிரதமரும் நிதியமைச்சரும் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்தியாவில் ஏற்கெனவே நிலவிவரும் பெயரளவிலான ஜனநாயக ஆட்சியமைப்பு வடிவங்கள் இனி இருக்க வேண்டியதில்லை என்பதே இதன் பொருள்.

இயற்கை வளத்தையும் சுற்றுச்சூழலையும் ஒரு பெருந்தொழில் திட்டம் பாதிக்கும் என்றால், அதைத் தடுக்கின்ற பொறுப்பும் கடமையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உள்ளது. அதன்படி ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பாக இந்த அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்றாக வேண்டும். தற்போதைய தேசிய முதலீட்டு வாரியம் நடைமுறைக்கு வந்துவிட்டால், இனி சுற்றுச்சூழல், பழங்குடியின நலத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, கல்வி-சுகாதாரத்துறை அமைச்சகங்களின் ஒப்புதல் இல்லாமலேயே ஒரு பெருந்தொழில் திட்டத்தைத் தொடங்க முடியும். இப்படி எல்லா துறைகளுக்கான கடமைகளையும் உரிமைகளையும் அதிகாரத்தையும் ஒரு அமைப்பே கையில் எடுத்துக் கொண்டால், மற்ற துறைகளும் அமைச்சர்களும் எதற்காக?

ஒரு திட்டம் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது என்றால், ஒரு திட்டம் சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது என்றால், இது பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அமைச்சர்கள்தான் பதிலளிக்க வேண்டியுள்ளது. ஒரு பெருந்தொழில் திட்டத்தால் உழைக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு போராட்டங்கள் நடந்தால், அவர்களுக்குப் பதிலளிக்க வேண்டியது அத்துறை சார்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும்தான்.

ஆனால் தேசிய முதலீட்டு வாரியம் என்ற அமைப்பு இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை என்பதால், இந்த அமைப்பு பிற அமைச்சர்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ஜெயந்தி நடராசன் பிரதமருக்குக் கடிதம் எழுதி இந்த வாரியம் அமைக்கப்படுவதை எதிர்க்கிறார். பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் கே.சி.தேவும் இதே காரணங்களைக்கூறி எதிர்க்கிறார். சுற்றுச்சூழல், மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உருவாக்கப்படும் இந்த வாரியம், ஜனநாய அரசமைப்பு முறையின் அடித்தளத்தையே சிதைக்கிறது என்கிறது, இந்து நாளேடு. இந்த வாரியம் நடைமுறைக்கு வந்தால், அமைச்சர்களின், அமைச்சகங்களின் அதிகாரம் பறிக்கப்படுவது மட்டுமல்ல; நிலத்தை இழந்த விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து போராடினாலும் துறைசார்ந்த அமைச்சர்களோ, அதிகாரிகளோ பொறுப்பாக பதிலளிக்க முடியாது. போராட்டத்தை ஒடுக்க போலீசின் தடிகளும் துப்பாக்கிகளும்தான் பேசும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின், அமைச்சகங்களின் அதிகாரங்களைப் பறித்து இந்த வாரியத்திடம் இப்படி அதிகாரத்தைக் குவிப்பதன் காரணம் என்ன? ஏற்கெனவே நீடித்துவரும் பெயரளவிலான ஜனநாயக அரசமைப்பு முறைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம்தான் என்ன? தற்போதைய அரசும் ஆளும் வர்க்கங்களும் செயல்படுத்தி வரும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் புதிய பொருளாதாரக் கொள்கையை மேலும் தீவிரமாகச் செயல்படுத்துவதற்கு ஏற்றதாக, நம்நாட்டில் ஏற்கெனவே உள்ள அரசியலமைப்புச் சட்டம் பொருத்தமானதாக இல்லை. தீவிரமாக்கப்படும் தனியார்மய-தாராளமய-உலகமயப் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பொருத்தமாக அரசியலமைப்புச் சட்டத்தையே மறுவார்ப்பு செவது அவர்களுக்கு அவசியமாகியுள்ளது.

எவ்வாறு சோசலிச சீனத்தில் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றிய முதலாளித்துவப் பாதையாளர்கள் முந்தைய அரசியலமைப்புச் சட்டங்களைப் படிப்படியாக மாற்றியமைத்து முதலாளித்துவ உற்பத்திமுறைக்கேற்ற முறையில் மறுவார்ப்பு செது முதலாளித்துவத்தை நிலைநாட்டினார்களோ, அதைப்போலவே நம் நாட்டில் ஏற்கெனவே நிலவிவரும் பெயரளவிலான ஜனநாயக அரசியலமைப்பு முறையை மாற்றியமைத்து தனியார்மய- தாராளமய- உலகமயமாக்கலுக்கு ஏற்ப இன்றைய ஆட்சியாளர்கள் மறுவார்ப்பு செது மறுகாலனியாதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர். ஏகாதிபத்திய உலகமயமாக்கம், அதன் இயல்பிலேய ஜனநாயகத்தைச் சிதைக்கும் தன்மை கொண்டது. உலக அளவில் எல்லா வளங்களையும் கொள்ளையிடுவதற்குக் கட்டற்ற சுதந்திரத்தைக் கோருவதுதான் உலகமயம். மறுகாலனியாக்கமானது பாசிச சர்வாதிகார அரசுகளையே, அப்படிப்பட்ட உள்கட்டமைப்பு கொண்ட அரசு வடிவங்களையே உலகு தழுவிய அளவில் கோருகின்றது. இதற்கேற்ப சட்டங்களையும் அமைப்புகளையும் நிறுவனங்களையும் மறுகட்டமைப்பு செது புதிய வகைப்பட்ட அரசுகளை உருவாக்குவதே உலகமயமாக்கத்தின் நோக்கமாக உள்ளது.

இப்படித்தான் தனியார்மய-தாராளமயமாக்கலைத் தொடர்ந்து இந்தியாவின் தொலைத்தொடர்புத்துறை, மின்துறை உட்பட பல துறைகளிலும் சுயேட்சையானதும் அதிகாரம் கொண்டதுமான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கேற்ப நில உச்சவரம்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இந்தியாவில் முதலீடு செதுள்ள பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீடு துறைகளில் நுழைந்துள்ள அந்நிய நிதி நிறுவனங்களின் மீதான வழக்குகள்- தாவாக்களை நீதிமன்றத்துக்கு வெளியே கட்டப் பஞ்சாயத்து முறையில் தீர்த்துக் கொள்ளவதற்கு ஏற்ற வகையில் உரிமையியல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, வழக்குரைஞர்களின் போராட்டத்தால் அதை நடைமுறைப்படுத்துவதை மைய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

மொரிஷியஸ், சுவிட்சர்லாந்து போன்ற வரியில்லா சொர்க்கங்களின் வழியாக இந்தியாவில்முதலீடு செய்து வரி ஏப்பு செய்வதைத் தடுக்க, வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கான பொது உத்தரவு என்ற புதிய வரிவிதிப்பு முறையை இந்திய அரசு முன்மொழிந்தது. இவ்வாண்டின் தொடக்கத்தில் பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது, பட்ஜெட்டுக்குப் பின்னர் இந்த வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வரப்போவதாக அறிந்ததும் பலதரப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், பார்த்தசாரதி ஷோமே என்பவர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை பிரதமர் அமைத்தார். அது ஏகபோக முதலாளிகளின் விருப்பத்துக்கேற்ப தனது வழிகாட்டுதலையும் பரிந்துரைகளையும் அளித்துள்ளது. அதன்படியே வருமாண்டு ஏப்ரல் முதலாக நேரடி வரி விதிப்பு மூலம் இது நடைமுறைக்கு வரப் போகிறது.

மரபணு மாற்றுப் பயிர்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது; இதற்கான கள ஆவுகள் செவதையும் நிறுத்த வேண்டும் – என்று வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரையாக மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி.களையும் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள இப்பரிந்துரையின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் வந்தால், எந்தக் கட்சியுமே இதை எதிர்த்துப் பேச வழியில்லை என்பதால், மரபணு மாற்றுப் பயிர்களுக்கு – அதாவது, மாண்சாண்டோ போன்ற ஏகபோக வேளாண் நிறுவனங்களின் பி.டி. பருத்தி விதைகளுக்கும், பி.டி. கத்தரிக்காக்கும் – எதிராகத்தான் நாடாளுமன்றம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்படி நடந்தால் இனி மாண்சான்டோ இந்தியாவில் காலூன்றவே முடியாமல் போவிடும் என்று ஆடிப்போன மன்மோகன்சிங், பேராசிரியர் ராவ் தலைமையில் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு என்கிற நிபுணர் குழுவை அமைத்தார். அக்குழு, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை வரிக்குவரி மறுத்து, மரபணு மாற்றுப் பயிர்கள் சிறப்பான நல்ல விளைவுகளைத் தருகின்றன, இதை எதிர்ப்பவர்கள் விவரம் புரியாதவர்கள்” என்று தனது பரிந்துரையாக அளித்துள்ளது. மீண்டும் கொல்லைப்புறமாக மாண்சான்டோவின் பி.டி.பருத்தி மற்றும் கத்திரிக்காயைத் திணிக்க இந்தக்குழுவின் பரிந்துரைப்படி செயல்பட முயற்சித்து வருகிறது, கைக்கூலி மன்மோகன் அரசு.

ஷோமே, ராவ் போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிகளுக்கும் மேலானவர்களாக, ஆலோசகர்களாக, நிபுணர் குழுக்களாக மேலிருந்து திணிக்கப்பட்டு அவர்களிடம் அதிகாரம் குவிக்கப்பட்டு வருகின்றது.

ஏகாதிபத்தி உலகமயக் கட்டத்தில், இப்படி மேலிருந்து மட்டுமின்றி, கீழிருந்தும் அரசு அதிகாரம் பிடுங்கப்பட்டு வருகின்றது. சிவில் சமூக அமைப்புகள் எனப்படும் தன்னார்வக் குழுக்களும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தைக் கீழிருந்து செயல்படுத்தும் அமைப்புகளாக இயக்கப்படுகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைச் செல்லாக்காசாக்கிவிட்டு , ஏகபோக முதலாளிகளின் கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் ஏற்ற வகையில் அரசியலமைப்புமுறை வேகமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. பெயரளவிலான ஜனநாயகம் கூட இல்லாமல், யாருக்கும் பதில்சோல்லப் பொறுப்பில்லாத ஒரு அப்பட்டமான பாசிச ஆட்சி வேகமாகத் திணிக்கப்பட்டு வருகிறது. தலைப்பாகைக்கு ஆபத்து வந்துள்ளதாக சில அமைச்சர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் தலைக்கே ஆபத்து வந்துள்ளது என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு இன்னுமொரு சான்றுதான் தேசிய முதலீட்டு வாரியம்.

__________________________________________________________

-புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
__________________________________________________________________