Thursday, April 15, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க தமிழகத்தின் நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது!

தமிழகத்தின் நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது!

-

காவிரியில் நீரின்றி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் கருகிவிட்டன. நிலங்கள் நீரின்றி வெடித்துக் கிடக்கின்றன. கடன் பட்டு சாகுபடி செய்த விவசாயிகள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். டெல்டா பிராந்தியமானது, இன்னுமொரு விதர்பா பிராந்தியமாக மாறிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டில் ஜூன் 12 அன்று திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை மூன்று மாதங்கள் கழித்து செப்டம்பர் 17 அன்றுதான் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். அடுத்த போகமான சம்பாவுக்கும் தண்ணீர் இல்லை. இதனால் நடப்பாண்டில் ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர் குறுவைச் சாகுபடியும், ஏறத்தாழ 15 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியும் அழிந்துள்ளன. கடன் வாங்கிப் பயிரிட்ட விவசாயிகள் ஓட்டாண்டிகளாக்கப்பட்டுள்ளனர். சாகுபடி செய்திருந்த பயிர்கள் தண்ணீரில்லாமல் காய்ந்து, கடனாக வாங்கிப் போட்டுள்ள பணம் தம் கண்ணெதிரே கருகிப் போவதைக் கண்டு மனம் வெதும்பி, கடந்த நவம்பர் – டிசம்பர் மாதங்களில் ஒன்பது விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளனர்.

இரு மாநில முதல்வர்கள் 26 முறை பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லாததால்தான் 1990-இல் காவிரி நீர்த்தகராறு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இருப்பினும், மீண்டும் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுமாறு கடந்த நவம்பர் இறுதியில் கூறி காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து நழுவி கொண்டது.

தற்கொலை செய்த விவசாயிகள்
பயிர் கருகிப் போனதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் (கடிகாரச் சுற்றுப்படி) ஆண்டாங்கரை அப்துல் ரஹீம், கூரத்தாங்குடி ராஜாங்கம், திருத்துறைப்பூண்டி கோபால கிருஷ்ணன், கரகத்திக் கோட்டை ரங்கசாமி

“காவிரி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்ய கர்நாடகத்துக்கு நடுவர் மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பரப்பளவு 8.47லட்சம் ஏக்கர் மட்டும்தான்; ஆனால் கர்நாடகம் அதற்கு எதிராக விளைநிலப்பரப்பை அதிகரித்து 9 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் சாகுபடிக்காக காவிரி நீரைப் பயன்படுத்தி வருகிறது. பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கான குடிநீர் தேவைக்கு 23 டிஎம்சி காவிரி நீர் தேவை என்று கர்நாடகா சோல்வது மிகையானது” – என்று புள்ளிவிவர ஆதாரங்கள் அனைத்தையும் தமிழகம் கொடுத்தும்கூட, கர்நாடகத்தின் அடாவடிகளையும் அண்டப் புளுகைப் பற்றியும் உச்ச நீதிமன்றம் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. காவிரியில் நீரின்றி டெல்டா மாவட்டங்களின் விவசாயமும் விவசாயிகளும் தமிழகத்தின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை முக்கிய பிரச்சினையாக உச்ச நீதிமன்றம் கருதவுமில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காததோடு, காவிரி ஆணையத்திலிருந்தும் வெளியேறி இந்திய இறையாண்மைக்கு எதிராக கர்நாடக முதல்வர் செயல்பட்ட போதிலும், அவர் மீது மைய அரசோ, உச்ச நீதிமன்றமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரிப் பிரச்சினையை மீண்டும் தள்ளிப் போடுவது, பேச்சுவார்த்தை நடத்தச் சொல்வது, வாதா போடுவது என்ற நரித்தனத்தோடுதான் உச்ச நீதிமன்றமும் அணுகுகிறது.

நடப்பு சாகுபடி பருவத்தில் கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை 40 சதவீத அளவுக்குக் குறைந்ததாக கர்நாடகம் கூறியதை ஏற்று, அந்த 40சதவீதத்தைக் கழித்துக் கொண்டு 2012 அக்டோபர் வரை தரவேண்டிய பாக்கி 52.8 டிஎம்சி தண்ணீரைத் தருமாறு தமிழகம் கேட்ட போதிலும், இடைக்காலத் தீர்ப்பின்படி தண்ணீரைக் கொடுக்க மறுத்தது கர்நாடகம். கர்நாடக அணைகளில் அப்போது 80 டிஎம்சி அளவுக்குத் தண்ணீர் இருந்தபோதிலும், காவிரி கண்காணிப்புக்குழுவோ, “கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு விவரம் எங்களிடம் இல்லை; தமிழகத்தில் சாகுபடி பருவக்காலம் எது என்பது தங்களுக்குத் தெரியாது” என்றெல்லாம் கர்நாடகத்துக்குச் சாதமாக அப்பட்டமாகப் புளுகியது.

டெல்லியில் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதியன்று நடந்த காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில், டிசம்பர் மாத இறுதிக்குள் நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அரசிதழில் வெளியிடுவதென்பது சட்ட ரீதியான ஒரு நடவடிக்கைதானே தவிர, அதை கர்நாடக அரசு செயல்படுத்துமா, செயல்படுத்தாவிட்டால் மைய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பற்றி எந்த முடிவும் இல்லை. மறுபுறம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதால், இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டியுள்ளதால், தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாகக் கூறி மீண்டும் மைய அரசு இழுத்தடிக்க முயற்சிக்கிறது. நதிநீர் பிரச்சனைகளைத் விசாரித்து தீர்வு காண்பதற்கு, ஏற்கெனவே சிறப்பு நீதி மன்றத்துக்கு இணையான தகுதியுடைய தீர்ப்பாயங்கள் உள்ள நிலையில், புதிதாக நிரந்தரத் தீர்ப்பாயம் அமைக்கச் சொல்லி காவிரி விவகாரத்தை மீண்டும் இழுத்தடிக்கத் துடிக்கிறது.

பணியில் இறந்த போலீசார் குடும்பங்களுக்கு உடனடியாக இரண்டிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை நிவாரணமாகத் தரும் ஜெயா அரசு, காவிரியில் நீரின்றி சாகுபடி செய்ய முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்குக் கருணை அடிப்படையில்கூட நிவாரணம் அளிக்கவில்லை. கடந்த டிசம்பர் 21 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய அ.திமு.க. எம்.பி.க்கள் தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் எதுவுமில்லை என்று அயோக்கியத்தனமாகக் கூறியுள்ளனர். காவிரியில் நீரின்றி பயிர்கள் கருகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பார்வையிட்டு நிவாரணம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கின்றனர், டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள். ஆனால் ஜெயலலிதாவோ, குஜராத் தேர்தலில் வெற்றி பெற்ற பயங்கரவாத மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்க ஓடுகிறார்.

தஞ்சாவூரில் விவசாயிகள் போராட்டம்
தஞ்சை பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் காவிரி மீட்புக்குழுவைச் சேர்ந்த விவசாயிகள்

பிப்ரவரி இறுதிவரை தண்ணீர் தேவையாக உள்ள நிலையில் கடந்த டிசம்பர் 22 அன்று மேட்டூர் அணை மூடப்பட்டதால், பயிர்களை எப்படிக் காப்பாற்றுவதென்று தெரியாமல் விவசாயிகள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் எவ்வித சிறப்புத் திட்டமும் ஜெயா அரசிடம் இல்லை. தற்போதைய நெருக்கடியான தருணத்தில், பயிர்கள் கருகிப் போனதால் ஏற்பட்டுள்ள நட்டத்துக்கும் இழப்புக்கும் மைய அரசுதான் பொறுப்பு என்று இடித்துரைத்து, மைய அரசிடமிருந்து இழப்பீடும் நிவாரணமும் பெற்றுத்தரவும், மைய அரசை முடுக்கி அதனை நிர்ப்பந்திக்கவும் முன்வராமல் கடிதம் எழுதியதையும், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் வெளிநடப்பு செய்ததையும் காட்டி, தன்னை தமிழினத்துக்காகப் பாடுபடும் போராளியாக ஒளிவட்டம் போட்டுக் கொண்டு மலிவான அரசியல் நாடகத்தை நடத்துகிறார் ஜெயா.

கருணாநிதியோ, தனது கட்சியின் சார்பில் தனிப்பட்ட முறையில் மாண்டவர்களுக்கு நிவாரணம் அளித்து, தனக்கு டெல்டா விவசாயிகளின் மீது அக்கறை உள்ளதாகக் காட்டிக் கொள்கிறார். காவிரி விவகாரத்தில் மைய அரசை மிரட்டவும், கூட்டணியை முறித்துக் கொள்வோம் என்று காங்கிரசை நிர்ப்பந்திக்கவும் வாய்ப்புள்ள போதிலும் அடக்கி வாசிக்கிறார். காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் நியாயவுரிமைக்கான கோரிக்கைகளுக்காகக் கூட, தமிழக அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் அணிதிரண்டு போராடாமல், அடையாள எதிர்ப்பும், பிழைப்புவாத வாய்ச்சவடால் அடித்து சமரசமாகிப் போவதுமே வாடிக்கையாகிவிட்டன.

மறுக்கப்படும் காவிரி! வஞ்சிக்கப்படும் தமிழகம்!!

காவிரி பிரச்சினையை நியாயமான முறையில் தீர்த்து வைக்க மைய அரசு, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அதிகார அமைப்புகள் மறுத்து வருவதால், அப்பிரச்சினை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக செக்குமாட்டைப் போல ஒரே பாதையில் சுற்றிச்சுற்றி வருகிறது.

கர்நாடகத்தின் அடாவடித்தனம் மற்றும் மைய அரசின் ஓரவஞ்சனையான அணுகுமுறைகளால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி கைவிடப்பட்டது; 14 இலட்சம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் கருகிவிட்டன. காவிரி டெல்டாவில் நடந்துள்ள விவசாயிகளின் தற்கொலைகள் நிலைமை எவ்வளவு மோசமடைந்துவிட்டது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

இந்நிலையில், “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உடனே அரசிதழில் வெளியிடு; தீர்ப்பின் படியும், தீர்ப்பின் இடர்ப்பாடுகால பங்கீட்டு முறையின் படியும் தமிழகத்திற்கு உரிய நீரை உடனே திறந்துவிட நடவடிக்கை எடு; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000/- நட்ட ஈடு வழங்கு; விவசாயத்தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15,000/- உதவித்தொகை வழங்கு” என்ற கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை, திருவாரூர், பட்டுக்கோட்டை வட்டாரங்களில் செயல்படும் ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து கடந்த 17.12.2012 அன்று தஞ்சையில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ம.க.இ.க. மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன், பேராசிரியர் அரங்க.சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.

உழைக்கும் மக்கள் அனைவரும் குறிப்பாக விவசாயிகள், தொழிலாளிகள் ஒன்றுபட்டு இந்தப் போலி ஜனநாயக சட்ட வரம்புகளை உடைத்து வெளியே நின்று போராடுவதன் மூலம் மட்டுமே நமது உரிமைகளைப் பெறமுடியும் என்பதையும், இதற்கு மார்க்சிய-லெனினியப் புரட்சிப்பாதையில் அணிதிரள்வது ஒன்றுதான் ஒரே வழி என்பதை உணர்த்தும் வகையிலும் அமைந்திருந்தது ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் ஆர்ப்பாட்டம்எல்லாவற்றுக்கும் மேலாக, ஓட்டுக்குத்தான் விவசாயிகள் தேவையாக உள்ளனரே தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயமும் விவசாயிகளும் தேவையில்லை என்பதுதான் ஆளும் கும்பலின் கொள்கையாக உள்ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் இறால் பண்ணைகளை உருவாக்கி விவசாயத்தை நாசமாக்கிய ஆட்சியாளர்கள், இப்போது மாற்றுப்பயிர்களுக்கு விவசாயிகள் மாற வேண்டும் என்று உபதேசிக்கின்றனர். விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழித்து ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றுவதும், கிழக்குக் கடற்கரைப் பகுதி முழுவதும் கார்ப்பரேட் கொள்ளைக்கான அனல் மின்நிலையங்களையும் அணு மின்நிலையங்களையும் அமைப்பதுதான் ஆட்சியாளர்களின் திட்டமாக உள்ளது.

உலக வங்கி- உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி, தண்ணீரை வர்த்தகப் பொருளாகக் கருதி அதற்கு விலை நிர்ணயிக்க வேண்டுமென்பதுதான் மைய அரசின் கொள்கை. அதை எதிரொலிக்கும் வகையில், நீர் பயன்பாட்டு முறையை வலுப்படுத்த தண்ணீருக்குக் குறைந்த பட்சம் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் ஷெட்டர் கோருகிறார். தேசிய நீர்க் கொள்கையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. மொத்தத்தில் காவிரி நீரானது தமிழகத்துக்கும் இல்லை, கர்நாடகத்துக்கும் இல்லை என்று விவசாயத்தை நாசமாக்குவதும், விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டுவதும், தண்ணீரை வியாபாரப் பொருளாக்கி விவசாயமே செய்ய முடியாத நிலையை உருவாக்குவதுமான மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் மூர்க்கமாக திணிக்கப்படுகின்றன.

தீவிரமாகிவரும் இம்மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராகவும், காவிரியில் தமிழகத்தின் நியாயவுரிமையை தொடர்ந்து மறுக்கும் மையஅரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் எதிராகவும் தமிழக மக்கள் போர்க்குணமிக்க போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமது அதிகாரத்தைப் பயன்படுத்த மறுத்து நழுவிக் கொள்ளும் உச்ச நீதிமன்றமும் மைய அரசும் , தமிழகத்தில் எந்தவொரு அதிகாரத்தையும் செலுத்த விடாமல் தடுத்து, அவற்றின் அதிகார அமைப்புகளும் அலுவலகங்களும் செயல்படா வண்ணம் தொடர் முற்றுகைப் போராட்டங்களை நடத்தி நிர்ப்பந்திக்க வேண்டும். மைய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்க மறுத்தும், மைய அரசுக்கு வரி கொடுக்க மறுத்தும் பெருந்திரளான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும். அத்தகைய விடாப்பிடியான தொடர் போராட்டங்கள்தான் வஞ்சிக்கப்படும் தமிழகத்துக்கு நியாயவுரிமையைப் பெற்றுத்தரும்.

_________________________________________________

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013

__________________________________________________

 1. எவனோ ஒரு பொறம்போக்கு மோகன் பவக்தின் ஆர்.எஸ்.எஸ். காக்கி டவுசரை கிழித்தவுடன் ஓடி வரும் சீனு போன்ற ஆர்.எஸ்.எஸ். அம்பிகளுக்கு தஞ்சாவூர் டெல்டா விவசாசிகள் இந்துக்களாக தெரியமாட்டார்கள், இந்த பதிவு பக்கம் எல்லாம் தவறி கூட வர மாட்டார்களே…

  • தமிழ் சார் இந்த பதிவுக்கும் மததிர்கும் என்ன சம்பந்தம்? மதம் மறந்து மனிதம் வளர்போம்

   • Kelvi,

    மதவெறி பிடித்து திரிபவை எல்லாம் மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதில்லை, இந்த மக்கள் பிரச்சனைகளை திசை திருப்பவே, அரசும், ஆதிக்க சக்திகளும் மதவெறியை பயன்படுத்துகின்றன. இந்திய அரசும், கர்நாடக அரசும், ஜெயலலிதாவும் சேர்ந்துதான் தமிழக மக்களுக்கு காவிரி நீர் கிடைக்காமல் சதி செய்து கொண்டுள்ளனர். இதனை பற்றி அக்கறை கொள்ளாதவர்கள், ஆர்.எஸ்.எஸ். காக்கி அரை டவுசர் கிழிந்தவுடன் மோகன் பகவதின் கிழிந்த டவுசரை கையால் மறைக்க கிளம்பும் ஆர்.எஸ்.எஸ். இந்து மூடர்களிடம் கேளுங்கள் மனிதம் பற்றி, காரணம் ஆர்.எஸ்.எஸ். விஷ ஜந்துக்கள்தான் மனித குலத்திற்கு எதிரானவர்கள்.

    ஆதிக்க சக்திகள் அதிகாரத்தில் இருக்கும் வரை காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்காது என்பது மக்களுக்கு 30 வருடங்களாக நடப்பவையே சாட்சி…

 2. இதை போன்ற கட்டுரை களுக்கு மிக குறைந்த பின்னுட்டங்கள் தான் வரும் என்பது இந்த மண்ணின் சாபம்.

  நாம் அனைவரும் உண்டு வாழ தனது வாழ்க்கையை தியாகம் செய்யும் விவசாயிகளின் பிரச்சனை நமது அரசாங்கம் தொடங்கி கடைசி மனிதன் வரை புரியவில்லை என்பது வெட்கப்பட வேண்டியது.

 3. சில வருடங்களுக்கு முன் தெருவில் கேட்டது. ஒரு குடிமகன் நல்ல போதையில் மிகத் தெளிவாகச் சொல்லிச் சென்றது: “சாவதெற்கென்றே பிறந்த மனிதன் ஏன் இப்படி ஒவ்வொன்றுக்கும் அடித்துக் கொள்கின்றான்.”

  மானம் மரியாதையோடு வாழ வேண்டும் என்று நினைத்து உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, தன் பொருளோடு கடனையும் சேர்த்து வாங்கி நிலத்தில் விதைத்த விவசாயிக்கு விளைச்சல் கருகிப்போனால் ……

  என்ன ஆனாலும் சரி, நாம் கஷ்டப்பட்டு (?) தேடியது போகக் கூடாது, மானம் மரியாதையெல்லாம் போனாலும் சரி என்று பதில் சொல்லிக்கொண்டிருக்கும் ஜெ, சசி, வகையறா……..

  தேடியதை யார் பத்திரமாக வழி நடத்திச் செல்வது என்று வாரிசு குழப்பத்தில் இருக்கும் மு.க. குடும்பக் குழப்பத்தில்…..

  காவி (லி) அரசியல் செய்யும் பி.ஜெ.பி……
  சாதி அரசியல் செய்யும் எண்ணிலடங்கா அரசியல் வியாதிகள்……

  வரிசையிட்டுச் சென்றால் நீண்டு செல்லும் என்பதால்…
  பிறரின் வயிரை நிறைக்க பாடுபடும் ஏமாந்த, ஏமாறிக்கொண்டிருக்கும் தோழனே, நாய்களெல்லாம் நக்கிக் கொண்டு திரிந்து கொண்டிருக்கும் போது, சாவை நீ ஏன் தேடிப்போகிறாய்?

  “மானம் மரியாதையுள்ளவன் என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறாயா?” உன் மரணத்தின் மூலம்.

 4. வி.வி.மு தோழர்கள் 10.01.2013 -இல் திருவாரூர்,வேதாரணியம்,பட்டுக்கோட்டை,தஞ்சை ஆகிய பகுதிகளிலிருந்து கிராமப்புற பிரச்சார இயக்கம் மேற்கொண்டனர்.11.01.2013 அன்று திருத்துறைப்பூண்டியில் பிரச்சார இயக்கம் நிறைவடைந்து மாலை 6.00 மணிக்கு வறண்ட காவிரி-தற்கொலையில் விவசாயிகள்
  கொட்டமடிக்கும் மன்மோகன் கும்பல்!விடிவுக்கான வழி என்ன? என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலர் தோழர்.காவிரி தனபாலன் கண்டன உரை நிகழ்த்தினார்.ம.க.இ.க.மாநில இணைச்செயலர் தோழர்.காளியப்பன் சிறப்புரை நிகழ்த்தினார்.காவிரியில் நீரின்றி சாகுபடி செய்ய முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் உருவப் படங்களை தோழர்.காவிரி தனபாலன் கேட்டுக்கொண்டதற்கிணங்க தோழர்.காளியப்பன் திறந்து வைத்தார்.விவசாயிகளினிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

 5. //மறுக்கப்படும் காவிரி! வஞ்சிக்கப்படும் தமிழகம்!!//

  இதே தமிழ்த்தேச வாதிகள் சொன்னால் இனவாதம் , மகஇக சொன்னால் விவசாயிகள் மீதான அக்கறை …

  களமிறங்கி போராடிய தோழர்களுக்கு நன்றி….

 6. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி என பல்வேறு தமிழின உணர்வாளர் அமைப்புகளும், உழவர் அமைப்புகளும் இணைந்த அமைப்பு தான் காவிரி உரிமை மீட்புக் குழு. அதன் ஒருங்கிணைப்பாளராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் செயல்படுகிறார். இவ்வமைப்பின் சார்பில், இதுவரை தொடர்வண்டி மறியல், பேரணி, பொதுக்கூட்டம் என பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அவையெல்லாம், “வினவு” கண்களுக்குத் தெரியாதது ஏன்? காவிரி டெல்டா பகுதியில் நீங்கள் மட்டும் தான் போராடியது போல எதற்கு படங்காட்டுகிறீர்கள்?

  • சுய விளம்பரம் தேடும் இவர்களை போன்ற அமைப்புகளால் ஆனது ஒன்றுமில்லை. இதில் உங்களுக்குள் சண்டை வேறு. ஆதிக்க சக்தியை எதிர்த்து போராடிய போர்குணம் மிக்க தமிழ் இனம் உங்களை கண்டு வெக்கி தலை குனிகிரது.

 7. //தஞ்சை பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் காவிரி மீட்புக்குழுவைச் சேர்ந்த விவசாயிகள்//
  என புகைப்படத்துடன் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதே திரு பரத்.

 8. இளையோன்..

  கீழ்க்கண்ட வரிகள் இதே கட்டுரையில் தான் உள்ளன..

  //காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் நியாயவுரிமைக்கான கோரிக்கைகளுக்காகக் கூட, தமிழக அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் அணிதிரண்டு போராடாமல், அடையாள எதிர்ப்பும், பிழைப்புவாத வாய்ச்சவடால் அடித்து சமரசமாகிப் போவதுமே வாடிக்கையாகிவிட்டன.//

  நன்றாகப் பார்க்கவும்..

  • பார்த்தேன் திரு பரத்,தொகுத்து இப்படி சுருக்கி உண்மையை எழுதியுள்ளதாக நான் புரிந்து கொள்கிறேன்.

 9. எங்கள் கிராமத்தில் அவ்வாரான போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. வேறு தொழில் செய்யலாம் என்ற விழிப்புணர்வு இல்லமல்தான் இந்த தற்கொலைகள் நடக்கின்றன. எதிர்பார்பில்லாத இயக்கம் எதுவும் இருப்பின் எங்கள் கிராமத்திற்கு வந்து விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க