privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவால்மார்ட்டை ஆதரிப்பதில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி பேதமில்லை !

வால்மார்ட்டை ஆதரிப்பதில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி பேதமில்லை !

-

ந்திய நாடாளுமன்றம் என்பது வெற்று அரட்டைமடம்; ஜனநாயகத்துக்கான தேசிய முகமூடி; நாட்டையும் மக்களையும் அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு அடகு வைக்கும் துரோகிகள்தான் ஓட்டுக்கட்சிகள் – என்பதை சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கான வாக்கெடுப்பு விவாதம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பதென்பதுதான் ஓட்டுக் கட்சிகளின் முடிவாக இருந்தது. எனினும், இந்த நாடகத்தை எப்படித் திறமையாக நடத்துவது என்பதில்தான் அவர்களிடையே வேறுபாடு நிலவியது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவகாரத்தில், எந்த ஓட்டுக்கட்சி எந்த நிலையை எடுக்கும் என்பதும், ஓட்டெடுப்பின் முடிவு எப்படி அமையும் என்பதும் கிட்டத்தட்ட எல்லோரும் அறிந்த விசயம்தான். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் என்ற பெயரில் தலா இரண்டு நாட்களுக்கு ஒரு ஜனநாயகக் கேலிக்கூத்து நடந்துள்ளது.

மன்மோகனின் ஷாப்பிங் கார்ட்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கும் தீர்மானம் மக்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, அரசுக்கு எதிராக 218 வாக்குகளும், ஆதரவாக 253 வாக்குகளும் கிடைத்தன. 545 எம்.பி.க்களைக் கொண்ட அவையில் அன்று 471 உறுப்பினர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். முலயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மைய அரசைக் காப்பாற்றவும் தாங்களும் எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளவும் வெளிநடப்பு செய்தன. மாநிலங்களவையில், மைய அரசின் முடிவுக்கு எதிராக 102 வாக்குகளும், ஆதரவாக 123 வாக்குகளும் பதிவாகின. இங்கேயும் சமாஜ்வாதி கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது. பகுஜன் சமாஜ் கட்சியோ ஆட்சியைக் காப்பாற்ற மைய அரசை ஆதரித்து வாக்களித்தது. மக்களவையில் 35 வாக்குகளும், மாநிலங்களவையில்21 வாக்குகளும் கூடுதலாகப் பெற்று இத்தீர்மானம் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டு விட்டது.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், அரசே நிர்வாக ரீதியாக இம்முடிவை எடுத்துச் செயல்படுத்த வேண்டும் என்பதே உலக வங்கியின் – ஏகாதிபத்தியங்களின் கட்டளை. இருப்பினும் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு காட்டி நாடகமாடியதால் இப்படியொரு ஜனநாயக நாடகமாட வேண்டியிருந்தது. இது ஆளும் காங்கிரசு கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன்தான் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்துள்ளோம் என்று நியாயவாதம் பேச கைக்கூலி மன்மோகன் அரசுக்கு வாப்பாகிவிட்டது. இன்று நாடாளுமன்றத்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக நாடகமாடிய கட்சிகள், நாளை ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்றமே இப்படியொரு முடிவை எடுத்துள்ளதால் அதை உடனடியாக மாற்ற முடியாது; நாடாளுமன்றமே மீண்டும் இதை நிராகரித்தால்தான் மாற்ற முடியும் என்று கூறிக் கொண்டு, வேறு வழியின்றி சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைத் தொடர வேண்டியிருக்கிறது என்று நியாயவாதம் பேசுவதற்கும் வாய்ப்பாகிவிட்டது.

அந்நிய முதலீட்டை நான் ஆதரிக்க மாட்டேன், வியாபாரிகளுக்கு எதிரான நிலையை தி.மு.க. எப்போதும் எடுக்காது என்று உறுதியளித்த கருணாநிதி, மதவாத ஆட்சி வரவிடாமல் தடுக்க காங்கிரசை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பல்டி அடித்தார். கருணாநிதி ஒரு வாரத்தில் பல்டி அடித்தார் என்றால், மாயாவதி இரண்டே நாட்களில் பல்டியடித்தார். மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியினர், வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்து மன்மோகன் அரசைக் காப்பாற்றினர். ஆனால், மாநிலங்களவையில் அக்கட்சி வெளிநடப்பு செய்யவில்லை. அப்படிச் செய்தால் அரசுக்கு எதிரான வாக்குகள் அதிகமாகி நெருக்கடி ஏற்படும் என்பதால் அங்கு மைய அரசுக்கு ஆதரவாக அவரது கட்சியினர் வாக்களித்துள்ளனர். “சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து, எங்கள் எதிர்ப்பை அவையில் பதிவு செய்தோம்” என இக்கட்சிகள் கூறுவதெல்லாம் மக்களின் தலையில் மிளகா அரைத்த கதைதான்.

இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டுமென்று, தனது 2004 தேர்தல் அறிக்கையில் பகிரங்கமாக அறிவித்து ஆதரித்த கட்சிதான் பா.ஜ.க. இப்போது எதிர்ப்பதாக நாடகமாடும் பா.ஜ.க., வாக்கெடுப்பை நடத்தச் சொன்னதே தவிர, அந்நிய முதலீட்டைத் தடுக்க எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இந்த விவகாரத்தில் தப்பித்து நழுவிக் கொள்ளும் நோக்கத்துடன் தாழ்த்தப்பட்டோர்- பழங்குடியினரின் உயர்பதவிக்கான மசோதாவை அது முதன்மைப்படுத்தியது. நாடாளுமன்றத்தை முடக்கிக் கூச்சலிட்டதைத் தவிர, எந்த எதிர்க்கட்சியும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய துளியும் முயற்சிக்கவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் ரிலையன்ஸ், மோர், பார்தி முதலான உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் கால்பதிக்கத் தொடங்கின. குறிப்பாக, பார்தியும் வால்மார்ட்டும் கூட்டுச் சேர்ந்து சட்டவிரோதமாக சில்லறை வர்த்தகத்தில் நுழைந்தபோதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடவில்லை.

வானகரத்தில் வால்மார்ட்
வால்மார்ட் நிறுவனம் சென்னை – வானகரத்தில் கட்டி வரும் கட்டிடம்

நாடாளுமன்றத்தில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்துக் கூச்சல்களும் வெளிநடப்புகளும் நடந்து கொண்டிருந்தபோதே, தமிழகத்தில் சென்னை-வானகரம் அருகே கிடுகிடுவென கட்டிடங்களை எழுப்பத் தொடங்கிவிட்டது பார்தி வால்மார்ட் நிறுவனம். அண்ணாநகர் -திருமங்கலத்தில் அலுவலகம் அமைத்து, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ஏறத்தாழ 2,500 சில்லறை வணிகர்களைத் தனது உறுப்பினர்களாக்கியுள்ளது. மற்றவர்களைவிட ஏறத்தாழ 30 சதவீதத்துக்கு விலை குறைவாகத் தருவதாக வணிகர்களிடம் பேரம் பேசி வருகிறது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சவடால் அடித்துக் கொண்டிருக்கும்போதே இத்தனையும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஒரு கார்ப்பரேட் நிறுவனம், அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிநிகளாகிய எம்.பி.க்களையும் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைக்கும் நடவடிக்கைகள் – லாபியிங்” என்றழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் லாபியிங் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படுகிறது. அமெரிக்காவில், இந்த லாபியிங் நடவடிக்கைகளுக்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு நிறுவனமும் அரசுக்குக் காலாண்டுக்கொருமுறை அறிவிக்க வேண்டும். இதன்படி வால்மார்ட் நிறுவனம், கடந்த நான்காண்டுகளில் உலகெங்கும் 125 கோடி ரூபா செலவிட்டுள்ளதாகவும், இதில் இந்தியச் சந்தையில் நுழைவதற்கு லாபியிங் செய்யப்பட்டதை ஒரு அம்சமாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் லாபியிங் நடவடிக்கைகளுக்கு வால்மார்ட் நிறுவனம் எவ்வளவு செலவிட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அரசுக்குத் தெரிவிக்கும் சட்டபூர்வ லாபியிங் செலவுகளைத் தவிர, இதர பல வழிகளிலும் எல்லா ஏகபோக நிறுவனங்களும் செயல்படும் நிலையில், வால்மார்ட் இந்தியாவில் எவ்வளவு செலவிட்டு எத்தனை எம்.பி.க்களை விலைபேசியுள்ளது என்பது கோடி ரூபாய் கேள்வியாகவே நீடிக்கிறது.

பு.ஜ.தொ.மு. திருச்சி ஆர்ப்பாட்டம்
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவதை எதிர்த்து அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் இணைந்து திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

தற்போதைய அரசியலமைப்பு முறையானது, தனியார்மய- தாராளமய கார்ப்பரேட் கொள்ளையைத் தீவிரமாக்கி, நாட்டு மக்களை மரணப் படுகுழியில் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், இந்த அரசியலமைப்புக்குள்ளாகவே தீர்வு கண்டுவிட முடியும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட முடியும் என்று சிறு வணிகர்கள் இன்னமும் நம்புகிறார்கள். ஓட்டுக் கட்சிகள் தொடர்ந்து துரோகமிழைத்த போதிலும், மண்குதிரைகளான அவற்றின் வெற்று வாக்குறுதிகளை நம்பி ஆற்றில் இறங்குகிறார்கள். ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே புதிய போராட்டமுறைகளை மேற்கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. இவையனைத்தும் சேர்ந்து இத்தகைய கேலிக்கூத்தை ஓட்டுக்கட்சிகள் திறமையாக நடத்துவதற்கு வாப்பாக அமைந்து விட்டது.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கான மசோதாவை நிறைவேற்றியுள்ள துணிச்சலில், வங்கித்துறையைச் சீர்குலைக்கும் வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா (2012), பங்கு ஆதாயம் மற்றும் கடன்கள் மீட்புச் சட்டங்கள் திருத்த மசோதா( 2012) ஆகியவற்றை மன்மோகன் அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இதன் விளைவாக, இனி அரசுத்துறை வங்கிகளின் குடுமி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் இரும்புப் பிடியில் இருக்கும். உள்நாட்டு தனியார் வங்கிகள் அனைத்தும் பன்னாட்டு ஏகபோக நிதி நிறுவனங்களின் கைகளில் சிக்கிக் கொள்ளும்.

இவை தவிர, தடா, பொடா சட்டங்களின் புதிய அவதாரமான பயங்கரவாத “ஊபா’’ (UAPA) சட்டத்திலும் புதிய திருத்தங்களை அரசு கொண்டுவந்துள்ளது. எந்தவொரு குடிமகனையும் பயங்கரவாதியுடன் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டிக் கைது செய்ய போலீசுக்கு வரம்பற்ற அதிகாரத்தை அளிக்கும் வகையில், “ஊபா” சட்டத்தில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒருபுறம், அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு தாராள அனுமதி; மறுபுறம், நாட்டு மக்கள் மீது ஏவப்படும் பாசிச கருப்புச் சட்டங்கள். அன்றைய பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கும், இன்றைய நாடாளுமன்ற போலி ஜனநாயக ஆட்சிக்கும் சாராம்சத்தில் வேறுபாடு இல்லாமல் போவிட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மூலமோ, ஓட்டுக்கட்சிகளை நம்பியோ தீவிரமாகிவரும் இத்தகைய பேரழிவுத் தாக்குதல்களை முறியடித்துவிடலாம் என்று சில்லறை வணிகர்களும் உழைக்கும் மக்களும் இனியும் காத்திருக்க முடியாது. கடைந்தெடுத்த துரோகிகளாகிவிட்ட ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, நாடாளுமன்ற – சட்டமன்ற அரசியலுக்கு வெளியே மக்கள்திரள் புரட்சிகர போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம் மட்டும்தான், மூர்க்கமான இத்தகைய மறுகாலனியத் தாக்குதலை முறியடிக்க முடியும்.

________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
________________________________________________________________________________