சேத்தியாத்தோப்பு மறியல்
காடுவெட்டி குரு - ராமதாஸ் உள்ளிட்டு, கோபாலகிருஷ்ணனின் கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சேத்தியாத்தோப்பு - சிறீமுஷ்ணம் பகுதியில் நடந்த போராட்டம் (உள்படம்) கோபாலகிருஷ்ணன்

ருமபுரி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்கொடுமைத் தாக்குதலைத் தொடுத்த கையோடு, ராமதாசு தலைமையிலான ஆதிக்க சாதிவெறிக் கும்பல் கக்கிவரும் சாதிவெறித் தீ ஆங்காங்கே அப்பாவி தாழ்த்தப்பட்ட மக்களைக் காவு வாங்கி வருகிறது.

கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு, சென்னிநத்தம் கிராமம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான கோபாலகிருஷ்ணனும், பரதூர் கிராமம் வன்னிய சாதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி துர்காவும் ஒருவரையொருவர் காதலித்துவந்தனர். கடந்த 12.12.12 அன்று துர்கா அழைத்ததன் பேரில் அவரைச் சந்திக்க சேத்தியாதோப்பு சந்தைக்குச் சென்ற கோபாலகிருஷ்ணன், அதன்பின் வீடு திரும்பவே இல்லை.

சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர், 19-12-12 அன்று பரதூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள வெள்ளியக்குடி ஓடையில் கழுத்தறுக்கப்பட்டு, நாணல் கொண்டு சகதிக்குள் திணித்து வைக்கப்பட்ட நிலையில் கோபாலகிருஷ்ணனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

“கோபாலகிருஷ்ணனின் கொலைக்குக் காரணமான, ராமதாஸ், காடுவெட்டி குரு மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். கொலைக் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படவேண்டும். அதுவரை கோபாலகிருஷ்ணனின் சடலத்தை வாங்க மாட்டோம்” என்ற கோரிக்கைகளை முன்வைத்து சென்னிநத்தம் கிராம மக்களை அணிதிரட்டியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இப்போராட்டத்திற்கு மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துப் பங்கெடுத்துக் கொண்டன.

சேத்தியாத்தோப்பு மறியல்
காடுவெட்டி குரு – ராமதாஸ் உள்ளிட்டு, கோபாலகிருஷ்ணனின் கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சேத்தியாத்தோப்பு – சிறீமுஷ்ணம் பகுதியில் நடந்த போராட்டம் (உள்படம்) கோபாலகிருஷ்ணன்

இதன்பின், கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்யப் போவதாகப் போக்குக் காட்டிய போலீசு, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யாமல், துர்காவின் 75 வயதான பாட்டி கனகவல்லியைக் கொலைவழக்கில் கைது செய்து ஏய்க்க நினைத்தது. போலீசின் தகிடுதத்தத்தைப் புரிந்துகொண்ட சென்னிநத்தம் கிராம மக்கள், “உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை சடலத்தை அடக்கம் செய்யமாட்டோம்” என மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.

‘‘இப்படுகொலையை இரு குடும்பத்தின் பிரச்சினையாகச் சுருக்கி வழக்கை முடிக்க நினைக்கிறது, போலீசு. வன்னிய ஆதிக்க சாதிவெறி தூண்டிவிடப்பட்டதன் விளைவாக நிகழ்ந்துள்ள படுகொலைதான் கோபாலகிருஷ்ணன் மரணம்” என்பதை அம்மக்களிடையே வலியுறுத்திப் பேசினார், ம.உ.பா.மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், வழக்குரைஞர் ராஜு.

சென்னிநத்தம் கிராம மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக, கொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணனின் தந்தையின் புகார் மனுவை வாக்குமூலமாகப் பதிவு செய்து கொண்டது போலீசு. இதனையடுத்து 21-12-12 அன்று சென்னிநத்தம் கிராமத்தில் கோபாலகிருஷ்ணனின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் சிந்தனைச்செல்வன், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆர்ம்ஸ்ட்ராங், பெண்ணாடம் திருவள்ளுவன், மனித உரிமைக் கட்சி விஸ்வநாதன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் அமைப்பாளர் அரங்க. குணசேகரன் உள்ளிட்டோர் நீதி கேட்டு சென்னிநத்தம் கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் இறுதிவரையிலும் உடனிருந்ததோடு, கோபாலகிருஷ்ணனின் இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றனர்.

கோபாலகிருஷ்ணனின் படுகொலை மட்டுமல்ல; குறிஞ்சிப்பாடி அருகில் பாச்சாரபாளையத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் வன்னியப் பெண்ணைப் பார்த்து முடி ஒரிஜனலா, டூப்ளிகேட்டா எனக் கேலி செய்ததாகக் கூறி, 10-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரின் வீடுகளை கொளுத்தினர், வன்னிய சாதிவெறியர்கள். பண்ருட்டியில் மாணவி பிரியா என்ற தாழ்த்தப்பட்ட பெண், தனது தோழியின் காதல் திருமணத்திற்கு உதவினார் என்பதனால், அவ்விளம்பெண் ஆதிக்க சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு குளத்தில் சடலமாக வீசியெறியப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள குன்னத்தூரைச் சேர்ந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கண்ணன், வன்னியப் பெண் காயத்ரியைக் காதலித்த விவகாரத்தில், போலீசும் வன்னிய சாதிவெறியர்களும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு காதலர்களை மிரட்டிப் பிரித்தனர். “நீ தற்கொலை செய்து கொள்; இல்லையேல் உன் காலனியைக் கொளுத்திவிடுவோம்” என கண்ணன் மிரட்டப்பட்டதால், அவர் 29.12.2012 அன்று தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்.

சாதி – தீண்டாமை வன்கொடுமைகளுக்கெதிராக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய இத்தருணத்தில், அதற்கு எதிராகவும் சாதி ஆதிக்கத்தைப் புதுப்பிக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார், குச்சு கொளுத்தி ராமதாசு. அவரது தலைமையில் அணிதிரண்டுள்ள அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை என்ற சாதிவெறி பிடித்த கிரிமினல் கும்பலை மோதி வீழ்த்தாவிட்டால், இருண்ட காலத்திற்குள் தமிழகம் தள்ளப்படும்

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,

விருத்தாசலம்.

________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
________________________________________________________________________________