Saturday, April 17, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா அமெரிக்காவில் சோக கிறிஸ்மஸ் !

அமெரிக்காவில் சோக கிறிஸ்மஸ் !

-

சோக கிறிஸ்துமஸ்டி துறையில் வேலை பார்க்கும் என் நண்பன் ஒருவன், தங்கள் நிறுவனத்திற்கு புதிதாக வரும் புராஜக்ட் வேலைக்காக அமெரிக்கா சென்று மூன்று மாதங்களுக்கு பின் திரும்பியிருந்தான். கிறிஸ்துமஸ் அன்று அவனை சந்திக்க சென்றிருந்தேன்.

இனிமேல் இந்தியாவில் இவன் பொறுப்பில் அந்த புராஜக்ட் வருவதால் இத்தனை நாள் வரை அமெரிக்காவில் (இதற்கு முந்தைய நிறுவனத்தில்) அதை பரமரித்துக் கொண்டிருந்தவரிடமிருந்து, தொழில் நுட்ப நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவும், இனி அவன் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு தொடர்பான தகவல்களையும் பெறுவதற்குத்தான் அவன் அமெரிக்கா சென்றிருந்தான்.

மூன்று மாதங்கள் அவனை பெரிதாக மாற்றி விடவில்லை என்றாலும், திடீரென தயிரை ஆங்கிலத்தில் யோகர்ட் என்றான் (அமெரிக்க ரிட்டர்ன்). ஆங்கில எழுத்து Z ஐ இசட் என்று சொல்லாமல் ஜீ என்றான். மற்றபடி இன்னும் திராவிட நிறம் தான்.

பேச்சு வழக்கமாக அமெரிக்கா சென்று திரும்பும் கனவான்கள் சொல்லும் கிளிப்பேச்சில் ஆரம்பித்து ‘அமெரிக்காவில் ரோடெல்லாம் படு சுத்தம், எல்லோரிடமும் கார் இருக்கிறது, உயரமான அடுக்கு மாடி கட்டிடங்கள், நியூயார்க் போனேன், சுதந்திர தேவி சிலை பார்த்தேன், அங்கேயும் பிட்சா பர்கர் தான் உணவு” என்று போனது.

மெல்ல ‘எல்லாம் ஓகேதான்டா, ஆனா எனக்கு சொல்லி கொடுக்க வேண்டிய அமெரிக்காவைச் சேர்ந்த பழைய நிறுவன ஊழியர்கள் தான் படுத்தி எடுத்துவிட்டார்கள்‘ என்றான்.

வார இறுதி நாட்களில் சொர்க்கமாகத் தெரிந்த அமெரிக்கா வார நாட்களில் அலுவலகத்தில் நரகமாகக் கழிந்திருக்கிறது. இவனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய பழைய ஊழியர்கள் இவனிடம் முகம் கொடுத்து பேசவில்லை, எப்பொழுதும் கடுமையாக இருந்திருக்கிறார்கள். மேலாளரின் வற்புறுத்தலின் பேரில் சில பயிற்சி அமர்வுகள் நடந்துள்ளன. அவர்கள் வேலை இழப்பதற்கு காரணம் இவன்தான் என்பதால் இவனை ஒரு ஜென்மவிரோதி போல நடத்தியுள்ளனர். (வெளிப்படையாக இல்லை).

ஆனால் அவ்வளவு சொல்லிக் கொண்டிருந்த நண்பன் அவர்களைப் பற்றி கோபம் ஏதுமில்லாமல் ஒரு வித இரக்கத்துடனேயே பேசிக் கொண்டிருந்தான்.

அவர்கள் மிகவும் சோர்ந்து போயும், மனவுளைச்சலோடும் இருந்திருக்கிறார்கள். நண்பன் அவர்களை புரிந்துகொண்டு, ‘தான் அவர்கள் வேலையைத் திருட வரவில்லை தானும் பிழைக்க வந்தவன் தான்’ என்பதை உணர்த்தியுள்ளான். மேலும் ’இப்பொழுது அவர்களுக்கு நடப்பது போல் இனி வரும் ஆண்டுகளில் தனக்கும் நடக்கும்’ என்றும் ’அப்போது அவன் வேலை சீனாக்காரனுக்கோ, பிலிப்பைன்ஸ்காரனுக்கோ செல்லும், அதற்குள் தான் சேமித்து வைத்துக் கொள்ள் வேண்டும்’ என்றும் மனம் விட்டு பேசியுள்ளான். அதன் பிறகு அவர்கள் இவனுடன் இணக்கமாக ஆரம்பித்திருக்கின்றனர். கடைசி சில நாட்கள் நன்றாகவே பேசியுள்ளனர்.

அவர்களது முதல் கவலை தாங்கள் கொண்டாடும் வருடத்தின் மிக முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் வேலை இழக்கிறார்கள் என்பதுதான். அவர்களுக்கு வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை.

இத்தனை நாள் ஒரு பெரு நிறுவனத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளில் மென்பொருள் நிபுணராக வேலை பார்த்தவர், இனி பிழைப்பிற்காக டாக்ஸி ஓட்டப் போவதாகவும், இன்னொருவர் லேப் டெக்னிஷ்யன் பயிற்சி பெறுவதாகவும் சொல்லியுள்ளனர்.

’35 வயதான ஒருவர் தனது கல்லூரிக் கல்விக்கான கடனை இன்னும் அடைக்கவில்லை’ என்றும் ’குழந்தைகளின் படிப்புச் செலவை வரும் காலங்களில் எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை’ என்றும் புலம்பியுள்ளார்.

இதையெல்லாம் கேட்டு என் நண்பன் மிகவும் உருகி விட்டிருக்கிறான், . அவனுக்கு பயமும் மனதில் பரவியிருக்கிறது. அமெரிக்க அனுபவம் அந்த அளவு அவன் மீது தாக்கம் செலுத்தும் என்று நான் நினைத்திருக்கவில்லை.

அமெரிக்க சொர்க்கத்தில் தொழிலாளர்கள் போரட்டம் எதுவும் நடத்தி விடக் கூடாது என்ற முதலாளிகளால் வழங்கப்பட்ட சகல சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு வலம் வந்தனர், ஆனால் முதலாளித்துவத்தின் உலகளாவிய லாப வேட்டைப் பாய்ச்சல் சகல சலுகைகளுக்கும் மூடு விழா நடத்தி வேலை வாய்ப்புகளையே பறித்து அவர்களை தெருவில் விட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட கிரீஸ், ஜெர்மனி, இத்தாலி நாட்டுத் தலைவர்கள் ’இந்த கிறிஸ்துமஸ் சோக கிறிஸ்துமஸ்’ என்று சிறுவர்களாக மாறி சாண்டாவுக்கு எழுதிய கடித்ங்கள் இணையத்தை நிரப்புகின்றது. முதலாளித்துவம் ஒழிக என்று தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த கிறிஸ்மஸ் மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை. ஆயினும் அவர்களும் அதற்காக போராடாமல் சோர்ந்து போவதில்லை.

– ஆதவன்
________________________________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
________________________________________________________________________________________________________

  1. நானும் பலர்கிட்ட அமெரிக்காவுக்கு போகாதீங்க, சீனாக்கு போங்க. கிஸ்மஸ் இன்பமா இருக்கும்னு சொன்னா எவன் கேட்கிறான். அகதியா போறவனும் அமெரிக்காங்கிறான். ஆபிஸ் வேலையா போறவனும் அமெரிக்காங்கிறான். இந்த ரஷ்யா, சீனா எல்லாம் மனுஷன் வாழ தகுதியில்லாத நாடா.

  2. Yeah..It true..I too have seen some people who are driving Cabs/Maxi since they last their high profile job..Eng. Graguate who worked for 10 years, is driving a Car for his living..It is better to save for futre, instead of Spending much..

  3. அமெரிக்காவில் டாக்சி ஓட்டுபவரையும் டீசன்டாக நடத்துவார்கள்! அவர்களும் நம்ம ஆட்டோ டிரைவர் மாதிரி இல்லாமல் டீசன்டாகநடந்து கொள்வார்கள்! கிடைக்கும் வேலையில் சேரலாம்! சம்பளமும் அதிக வித்தியாசமில்லை! நம்ம ஊரில் அப்படியா? வேலை போனால் பெண்டாட்டி கூட மதிக்க மாட்டாள்! பலர் இங்கு தற்கொலையே செய்துகொள்கிரார்கள்! இக்கரைக்கு அக்கரை பச்சைதான்!

  4. அம்மையாரின் அதிரடி பேருந்து கட்டண உயர்வாலும், ஆட்டோ கட்டணம் எட்டாக்கிளைக்கு சென்றதாலும்,நடுத்தர மக்கள் கால் டாக்சிகளை பயன்படுத்த விரும்புகின்றனர்! படித்த இலைங்கர்கள் சொந்தமாகவே டாக்சி வாஙகி ஓட்ட முடியும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க