privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைசிறுகதை : "நார்மல்"

சிறுகதை : “நார்மல்”

-

வேப்பிலையை ஒரு மாதிரி குலுக்கி, குலுக்கி தலையிலிருந்து கால் கட்டை விரல் வரை தடவிய சாமியார், திடீரென குரலெடுத்து “எங்கடா? எங்க?“என்று கத்தியபடி, வேப்பிலைக் கொத்தால் கதிரேசன் தலையில் ஓங்கி, ஓங்கி அடிக்க, பக்கத்திலிருந்த அமிர்தவள்ளிக்கு கணவனைப் பார்க்க பார்க்க பாவமாய் இருந்தது.normal-story

“தே! சாமி கேக்குறார்ல சொல்லேன். இந்த அடி வாங்கிட்டு நீ பேசாம முழிக்கறத பாக்கவா நான் உசுரோட இருக்கணும்!” அடங்க மாட்டாத கண்ணீரை முந்தானை தலைப்பால் துடைத்துக் கொண்டாள். “ஊம்! குறுக்க நீ பேசாத, எங்கடா? எங்கேந்து வர்ற?” இமைக்காமல் சாமியாரையே வெறித்துப் பார்த்து, பற்களை நறநறவென கடித்த கதிரேசன் “வயக்காடுறா, வயக்காடு… வரப்புல மிதிச்சு வாய்க்கால்ல நனச்சு… ஏய்! வயக்காடுறா!” தோளைக் குலுக்கி, தொடையைத் தட்டிக்கொண்டே வேகமாகக் கத்தியபடியே “ஊம்… ஊம்” என்று உறுமினார்.

“எந்த இடம் சொல்லி விடு! வந்த இடம் போயி விடு! வெந்தகறி வச்சிடுறேன்! விழுங்கி விட்டு ஓடி விடு! சந்தன பத்தி ஒரு கட்டு சாராயம் ஒரு லிட்ரு…

டூன்… டூன் டூன் டூம்…”

உடுக்கை நாலு தட்டு தட்டி விட்டு, “ஏய்!… ஓடுறியா? ஓடுறியா?” துள்ளிக்கொண்டு கதிரேசனை வேப்பிலையால் சாத்தினார் சாமியார். வேப்பந்தழை பிய்ந்து உதிர்வதையே கடுகடுப்பாகப் பார்த்த கதிரேசன் “டேய்! ஏன்டா! நாத்த புடுங்குன… நாயே! ஏன்டா நாத்த புடுங்குன…?” என்று கத்திக்கொண்டே சாமியாரின் கையிலுள்ள வேப்பிலைக் கொத்தை பிடுங்கப் பாய்ந்தார்… அமிர்தவள்ளியால் அடக்கிப் பிடிக்க முடியவில்லை.

சாமியாரின் மைக்கூடிலுள்ள சின்ன சூலத்தையும் எடுத்தபடியே “ஏன்டா! கதிரருவாள கால்லயா போட்டு மிதிக்குற!… வக்காளி… வச்சுட்டு தேட மாட்டேன்டா . டேய்…டேய்!” என்று சாமியார் மேல் பாய… ஒரு வழியாக துணை ஆட்கள் மூன்று பேர் மடக்கிப் பிடித்து அடிக்க… கை நிறைய சாம்பலை பளிச்சென கதிரேசன் முகத்தில் அடித்து கண்ணை மறைத்தார் சாமியார். “டேய்! அவன தள்ளிட்டு போயி, பிடிங்கடா…” என்றவர், “தோ பாரும்மா! உச்சு உருமத்துல வரப்பு முனி அடிச்சிருக்கு… உடனே எறங்காது. வர்ற அம்மாவாச அன்னிக்கி சாமத்துல வச்சு ஆணி அடிச்சாதான் கட்டுப்படும். சேவல், எலுமிச்சம்பழம்…சாராயம்… சகலமும் வச்சு பூசயும், காவும் தரணும். மேல வேலைகளும் இருக்கு. ஆயிரம் ஆவும்…”

“பணம் ஒரு பக்கம் ஆவட்டும் சாமி. ஆறு மாசமா குணம்கெட்ட தனமா பேசறாரு.. சாமத்துல எழுந்திரிச்சு ஓடுறாரு… உங்களத்தான் ஊர் சனமே நம்புது. அதான் வந்தே.. பாத்து வுடுங்க.. பணம் ஏற்பாடு பண்ணிட்டு வாரேன்…”

“தா! அது வரைக்கும் இந்த தாயத்த அவன் தூங்குறப்ப கட்டி வுட்ரு… ரா சேட்ட அதிகமாக இருக்கும். பயப்படாத… ரொம்ப படுத்துனா… இந்த துன்னுற மூஞ்சில அடி! மந்திரிச்ச துன்னூறு.. பாத்து வேற யாரும் கை படாம பாத்துக்க! தொடர்ச்சியாகப் பேசியவர் சற்று தடித்த குரலில், “கைல வாங்க மாட்டேன். தோ உண்டியல்ல நோட்ட போடு!” என்று உண்டியலைக் காண்பித்தார்.

ஆடி அடங்கியவர் போல லேசாகத் துவண்டிருந்த கதிரேசனை “தே! வா…” என்று தலையில் குப்பையாய் கிடந்த வேப்பிலையை தட்டிவிட்டு, கலைந்த முடியைக் கையால் கோதி விட்டு “மகமாயி… கண்ணு தெறக்க மாட்டியா..” என்று கன்னத்தில் போட்டபடி, கணவனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு நகர்ந்தாள்.

000

“இப்பெல்லாம் ஒரு ஏக்கர் நெலம் வச்சிருந்தா கூட மிராசுன்னு பத்திரிகைல போட்டுக்கிறானுவ. அப்புடி இல்லடா, இவன் உள்ளபடியே மிராசு. சோழபுரத்துலேந்து, திருப்பனந்தா வரைக்கும் பேர்பாதி நிலம் வச்சிருக்கான். புள்ளங்கல்லாம் பெரிய படிப்பு படிச்சு, பெரிய எடத்துல இருக்கானுவ. இந்த மனுசன் ஊர் கவுரவத்த விடாம இங்க கெடக்குறாரு!”

மணியும், பாண்டியனும் மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி, கைப்பக்கம் கத்தி முனை மாதிரி கஞ்சி விறைப்போடு அயர்ன் பண்ணிய வெள்ளை சட்டையோடு, பேசிக்கொண்டே கல்யாண வீட்டுப் பக்கம் நெருங்கினர்.

“வௌங்குன மாதிரி தான்! குடிக்கறது எலி மூத்திரம், கடிக்கறதுக்கு பச்சடி கேட்டானாம்… போங்கடா வௌங்குன மாதிரிதான்!”கதிரேசன் தன்பாட்டுக்கு பேசுவது போல, போய் வரும் வெள்ளை சட்டைக்காரர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

“வயசுல பெரியவரா இருக்காறேன்னு பாக்குறேன். இல்லேன்னா ஒரு எத்து, எத்துனேன்னு வச்சுக்க.. தட்டுகெட்டு போயிடும்.” “விடுறா! அந்தாளு மெண்டல்டா! மெட்ராஸ்ல இருக்கான்ல சுப்பிரமணி, அவன் அப்பாரு. வாழ்ந்து கெட்ட ஆளு! முன்ன பரவாயில்ல. இப்ப ரொம்ப மெண்டலாயிட்டாரு போல. போற வர்றவங்ககிட்ட வம்பு பண்ண ஆரம்பிச்சுட்டாரு!” கண்டு கொள்ளாமல் இருவரும் ஒதுங்கிக் கொண்டனர்.

“அண்ட வெட்டவே, ஊர்ல வேல கிடையாதாம். கண்ட பயலுக்கும் கேக்குதாம் வெள்ள வேட்டியும், சிலுக்கு ஜிப்பாவும்… ஒரு பய உருப்படப் போறதில்ல. ஊரு சரியில்ல. போயி சோறதான் திம்பானுகளா… இல்ல வேற எதனாச்சுமா? ஹே… ஹே…” போகிறவர்களைப் பார்த்து பேசப் பேச, சிலருக்கு கோபம் வந்து “இவன் மெண்டலா?! இல்ல திமிரா பேசிகிட்டு திரியறானா…? போய்யா அந்தப் பக்கம்.. உத வாங்குவ. ஆமாம்..” என்று துரத்தி விட்டனர்.

அந்த நேரத்துக்கு வாயை மூடிய கதிரேசன், மெல்ல நெருங்கி கல்யாண மண்டப வாசல் வாழை மரம் பக்கம் வந்து நின்று கொண்டு, அணைந்து அணைந்து எரியும் சீரியல் பல்பை பார்த்து அடிக்கொருதரம் “ஹேய்.. ஹேய்” என்று சிரித்துக் கொண்டார். “அட பார்றா! வாழ மரத்துல லைட்டு எரியுது! வாழத்தண்டு லைட்டும் எரியுது… அட ஜிங்கானாம்! எல்லாம் ரைட்டு! எதுக்கு எழவெடுத்த பயலுவ! பாட்ட போட்டு கூட்டம் சேக்குறானுவ! ”

“யோவ்! போய்யா… மெண்டல் பய… போய்யா.. அந்தப் பக்கம்..” தோளில் கிடந்த துண்டை உதறிக்காட்டி துரத்தினார்கள் வாசல் பக்கம். கொஞ்சம் அடியைப் பின்னுக்கு இழுத்தாலும் கதிரேசன் வாயை மூடவில்லை,

“ஊரக் கூட்டுங்க. இலையப் போடுங்க… போங்கடா.. கடைசில ரெண்டாவது நாள்ல தாலிய அறுத்துட்டு வந்து நிக்கப் போவுது! இதுக்கு இந்தக் கூத்து! பட்டுப் போன மரத்துல பவளமல்லி பூக்குமா? காஞ்ச வாய்க்கால்ல கப்பல் வுடுறானுவளாம்! அவன் மட்டும் என்ன! கார்ல போயி முட்டிக்க போறான்… ஹே… ஹே..”

“நாயே! நாயே! கல்யாண வீட்டுல வந்து அபசகுனமா பேசுறான் பாரு! போடுறா ரெண்டு!” இரண்டு பேர் ஓடி வந்து முதுகில் தட்டுத் தட்டி விரட்ட “ஹே..ஹே.. “ என்று சிரித்தபடியே மரக்கட்டையென விறைத்து நின்ற கதிரேசனை அமிர்தவள்ளி ஓடி வந்து, பிடித்து இழுத்தாள். “கோவிச்சுக்காதீங்க! கொஞ்சம் கொணம் சரியில்லாதவரு. இழுத்துட்டு போயிடுறேங்க! அடிக்காதீங்க! கொஞ்ச நேரம் ரேசனுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள என்னா அமளி துமளி பண்ணிட்ட?! இப்படி ஊர்ல அடி வாங்கவா உன்ன நான் பாக்கணும்!” அழுது புலம்பியபடியே இழுத்துக்கொண்டு நடந்தாள்.

“ஏன் அமிர்தவள்ளி, ரொம்ப முத்திடுச்சு! இது மந்திரத்தால சரி வராது. மெட்ராஸ்லதான் உன் புள்ள இருக்கான்ல. பேசாம அங்க அழைச்சிட்டு போயிடு! பெரிய பெரிய பைத்தியக்கார ஆசுபத்திரியெல்லாம் அங்க இருக்கும். இப்பவே காட்டுனா சரியாயிடும்! இப்புடியே இருந்தின்னா ஊரு சனமே சண்டை வளத்திடும்! கேளு அமிர்தவள்ளி! ஒரு நட உன் புள்ள வீட்டுக்கு போயி காமி! ரோசத்த பாக்காத! அங்க போனாதான் கொணமாகும்! கேளு!” சின்னப்பொண்ணு பலவாறாக வலியுறுத்தியது, இரவு முழுக்க தலையில் எதிரொலிக்க.. பணம் ஏற்பாடு செய்து கொண்டு சென்னைக்கு காலை ரயிலை பிடித்தாள் அமிர்தவள்ளி. பல நேரங்களில் கதிரேசனின் பேச்சு எரிச்சலாக இருந்தாலும், வழிநெடுக ஜன்னல் வழியே தென்படும் வயல், வரப்புகளை வெறித்தபடியே ஏதும் பேசாமலே வந்த கணவனின் மௌனமும் அவளுக்கு பெரிய வேதனையாகப் பட்டது.

000

உடல் நலம் தொடர்பான சோதனை, கேள்விகளை முடித்துக்கொண்டு பக்கத்தில் உட்கார வைத்துப் பேச ஆரம்பித்தார் மருத்துவர்.

“அய்யா என்ன வேல பாத்தாரு? எப்பயிலேந்து இப்புடி இருக்கு? கொஞ்சம் டீடெய்லா சொல்ல முடியுமா?”

“நெல்லறுத்து, கட்டுக்கட்டி, பையன படிக்க வச்சி, கல்யாணமெல்லாம் பண்ணி வச்சு நல்லா குடும்பம் பண்ண மனுசன் சார்! எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் ரோட்டு மேல இருந்துச்சு..” அமிர்தவள்ளி வரிசையாகச் சொல்ல வர, வேகமாக இடைமறித்த சுப்பிரமணி “இரும்மா! நான் சொல்றேன்” என்று முந்திக் கொண்டான். “நல்ல ஆரோக்கியமா இருந்தவர்தான். வேலைக்கு போக வேணாம்னாலும் கேக்காம, ஆறுமாசமா வேலைக்குப் போக ஆரம்பிச்சாரு! அதுக்கப்புறம் ஏதோ ஷாக் ஆனவரு மாதிரி ஒரு நாள் பேசாமல் இருந்துருக்காரு. கிராமத்துல ஒழுங்கா டாக்டரை பாக்காம, பேயோட்டு அது இதுன்னு முத்த வுட்டுட்டாங்க சார்!” என்று சுருக்கமாக முடித்தான்.

“அய்யா யாரு இது? தெரியுதா?” என்று மகனைக் காண்பித்து கதிரேசனிடம் கேட்டார் டாக்டர். உதட்டைப் பிதுக்கி, பின் மெல்ல நாக்கை நீட்டியவர் “ஊம்” என்று சுற்றும் முற்றும் பார்த்து அமைதியானார். “அய்யா! இவுரு உங்க பையன் தெரியுதா?” என்று திரும்பவும் கேட்டார், “ஊம்.. தெண்டம், தெண்டம். யாரு கண்டா, எந்த புத்துல எந்த பாம்பு?” என்று டாக்டரிடம் கையை விரித்து காண்பித்தவர், பலமாக சிரித்துக் கொண்டார்.

“இப்புடிதான் சார்! சம்பந்தா சம்பந்தமில்லாம பேசுறாரு. நானாவது மகன் பொறுத்துக்கலாம்.. என் வீட்ல கண்டபடி பேசுறாரு! பக்கத்துலயும் பிரச்சனை ஆயிடும் போல இருக்கு!” சுப்பிரமணி பயந்து போய் பேசினான்.

“நோ சார்! சம்பந்தப்படுத்திதான் பேசுறார்! இது ஒரு வகை மனச்சிதைவு நோய். தொடர்ச்சியான ட்ரீட்மெண்ட் எடுத்தா சரிப்படுத்தலாம். இப்போதைக்கு நைட்ல அவர கண்ட்ரோல் பண்ண, தூங்க வைக்க இன்ஜக்சன் எடுத்துக்கலாம். பிறகு மாத்திரை போதும். பயப்படாதீங்க..” என்றவர், “கொஞ்சம் டீடெய்ல் ஹிஸ்ட்ரி தெரிஞ்சிக்கிட்டாதான் நல்லது. நீங்க சொல்லுங்கம்மா! ஏன் இப்படி பேச ஆரம்பிச்சாருன்னு கவனிச்ச வரைக்கும் சொல்லுங்கம்மா!”

“அதான் சார்! எங்களுக்கு கோவிலாச்சேரி ஊரு, சோழபுரம் பக்கம். ரோட்டு மேலேயே நாலு ஏக்கர் நிலம் இருந்துச்சுங்க. நாளடைவிலே தண்ணி இல்லே, மழை இல்ல. புள்ளைகிட்ட போரு போடச் சொன்னாரு. அவனும் இனி வயசாகுது, விவசாயம் வேணாம், கண்டு முதலும் இல்ல, இலாபமும் இல்லன்னு, மாடு கண்ணெல்லாம் வித்துட சொல்லிட்டான். காசு அனுப்புறேன்னு சொன்னான். நம்ப கட்ட இருக்குற வரைக்கும் உழைக்கணும்னு பக்கத்து போர்லேந்து மொற வச்ச தண்ணியில முடிஞ்ச வரைக்கும் கடன வாங்கி பயிர் பண்ணிப் பாத்தாருங்க. ரெண்டு வருசமா அதுலயும் நட்டமாயிடுச்சுங்க. புள்ளயும் கடனு எதுக்குன்னு, ஒரு வருசத்துக்கு முன்னாடி ரோட்டோரம் நல்ல வெல வருதுன்னு புடிச்சு வித்துட்டானுங்க. அதுலேர்ந்து புள்ளையோட பேசாம, கொஞ்சம் வருத்தமா இருந்தாரு. புள்ள காசு அனுப்புனா திருப்பி அனுப்பிடுவாரு. திரும்ப வித்த வயல்லயே வாங்குனவங்க ஒரு ஸ்கூலு கட்டுனாங்க. அதுல வாட்சுமேனா வேலைக்கு போனாருங்க.. நல்லாதான் ஒரு மாசம் போயிட்டு வந்தாரு.. திடீர்னு ஒரு நாள் அங்க வெறி கொண்ட மாதிரி கத்திக்கிட்டு, அங்கயும் இங்கயும் ஓடுனாறாம். சனங்களால புடிக்கவே முடியலயாம். பிறகு சேதி வந்து, தெரு சனத்தோட போயி ஒரு மாதிரி கூட்டியாந்தேன்.

அப்பப்ப நல்லா இருப்பாரு.. திடீர்னு பேச ஆரம்பிச்சிருவாரு. யாரப் பாத்தாலும் திட்டித் தீக்கறதுதான் பெரிய பிரச்சனையாயிருக்கு. அங்க ஊர்ல அப்பப்ப ஒரு டாக்டரு மரத்துப் போற ஊசி போட்டாரு. அது போட்டா கொஞ்சம் பேசாம உக்காருவாரு. லேசா கண்ணு செருகுன மாதிரி இருக்கும். இப்ப ஊசியும் போடாம, அதிகமா பேச ஆரம்பிச்சுட்டாரு. நீங்க தான் சார் எங்களுக்கு வழிய காட்டணும். அங்கயாவது கிராமம், இங்க குடிக்குள்ள குடி. இவர வச்சிகிட்டு இருக்க முடியல.. மரத்துப் போற ஊசியாவது போட்டு வுடுங்க.”

“பயப்படாதீங்கம்மா.. மரத்துப் போற ஊசியா இருக்காது. வேற ஏதாவது போட்டுருப்பாங்க. இது பொறுமையாதாம்மா சரியாகும். பக்கத்துல இருந்து, நாம ஒத்துழைப்பா இருந்தோம்னா சீக்கிரம் குணப்படுத்தலாம்.”

“சார்! இன் பேஷண்ட்டா சேத்தாலும் பரவாயில்ல. இங்க குடியிருக்குற எடத்துல மெயின்டெய்ன் பண்றது கஷ்டமாக இருக்கு..” சுப்பிரமணி டாக்டரை பதமாக நச்சரித்தான்.

“புரிஞ்சுக்கோங்க சார்! இன் பேஷண்ட் அளவுக்கு இவருக்கு எதுவும் ஆகல. ட்ரீட்மெண்ட் இல்லாம இருந்ததாலயே ப்ராப்ளம் கூடியிருக்கு. ஏன் சார் டி.வி.ல ஏதேதோ டயலாக் எல்லாம் வருது. பிடிக்குதோ பிடிக்கலயோ எல்லோரும் கேட்டு அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறாங்க. அதே போல இவரு மனசுல பட்டத பேசுறாரு.. நாம அட்ஜஸ்ட் பண்ணிட்டு போவமே. ஒரு மாசம் மருந்து தர்றேன். மன்த்லி ஒரு தடவ அழைச்சிட்டு வந்து காமிங்க. இப்ப ரெண்டு நாள் மருந்து எடுத்துகிட்டு வந்து காட்டிட்டு போங்க. என்ன?” என்றார் மருத்துவர்.

“சரி சார்! வணக்கங்க. அமிர்தவள்ளியும் சுப்பிரமணியனும் மருத்துவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட, அவர்களை உற்றுப்பார்த்த கதிரேசனும் மருத்துவரைப் பார்த்து கும்பிட்டார்.

வீட்டுக்கு வந்ததிலிருந்து, சுவரோரம் போய் பேசாமல் மூலையைப் பார்த்தபடி உட்கார்ந்து கொண்டார் கதிரேசன். “அத்தை! எனக்கு மாமா முன்னாடி வர தயக்கமா இருக்கு. எதித்தாப்ல வந்தாலே திட்றாரு.. அதான் உக்காந்து பேச மாட்டேங்குறேன். தப்பா எடுத்துக்காதீங்க!” என்று காப்பியைத் தந்துவிட்டு அடுப்படிப் பக்க வேலைகளில் மூழ்கினாள் மருமகள். அங்கிருந்தபடியே “கவலைப்படாதீங்க! தொடர்ந்து பாத்தோம்னா சரியாயிடும். நல்ல டாக்டர் அவரு” என்று ஆறுதல் கூறினாள். “வந்தவளுக்கு உள்ள அக்கறை வளத்தவனுக்கு இல்லியே! அவுரு பரவாயில்ல போல இருக்கு. தாம் பாட்டுக்கும் பேசிக்கிறாரு. இவனும் அப்பனப் போல கிறுக்குப் புடிச்சவன் மாதிரி சதா உன் மேல எரிஞ்சு எரிஞ்சு விழறானே. நீயாவது பொறுத்துப் போம்மா… என்னத்தப் பண்றது?”

எதற்காக மகன் எரிந்து விழுகிறான் என்ற சூட்சுமம் தெரிந்தும் மருமகளிடம் நாகரிகமாக உரையாடிக் கொண்டாள். மேற்கொண்டு “அது சரி! அவன் கவுரவமா மெட்ராஸ்ல இருக்குற இருப்புக்கு, இவுரு அக்கம்பக்கத்துல பேசி ஏதாவது வம்பிழுத்தா அவனுந்தான் என்ன பண்ணுவான் பாவம்! அப்பா பைத்தியக்காரன்னு அக்கம்பக்கத்துல தெரிஞ்சா அவன் கௌரவம் என்னாவறது… இந்தக் காலத்துல நல்லாருக்குற வரைக்குந்தான் எல்லாம். நீ கோவிச்சுக்காதம்மா! விடுவிடுன்னு சமையலப் பாரும்மா! புள்ளைங்களுக்கு லேட்டாயிடும்” அப்படியே அமிர்தவள்ளி கணவனின் முகத்தைப் பார்த்தாள். “மூட்ட நெல்ல தலைல தூக்கி வரப்புல ஒடியாரும் உனக்கா இந்த கதி.. மகமாயி என்ன பாவம் பண்ணமோ?!” என்று தனக்குள் முனகிக் கொண்டாள்.

தாடையை வேகவேகமாக சொறிந்து கொண்டபடி, “தே! மாட்டப் புடிச்சு கட்டு. மசமசன்னு உக்காந்திருக்கியே! அமிர்தம் உன்னதான்.. கன்னுக்குட்டி வேற கத்துது. அதுக்கு தண்ணி வெக்க காணோம். தே! எழுந்திரி..” சற்று கண்ணயர்ந்த அமிர்தவள்ளியைக் கதிரேசன் விடாமல் தட்டி எழுப்பினார். பழகிப்போனவள் போல பதட்டமில்லாமல் மெல்லத் தலையைத் தூக்கி, “என்ன இப்ப!… செத்த படுத்துத் தூங்கே..!” என்றாள்.

“தே! எரும! எரும மாடு கத்துது. பேசாம படுத்துக் கெடக்கியே. போயி கொல்லப் பக்கம் பாரு. மாட்டுக்கெல்லாம் தண்ணி வச்சாச்சு. அதுங்க தூங்குது. நீயும் பேசாம படு!” பதில் சொல்லி அடக்கினாள் அமிர்தவள்ளி.

“தே! ஒரே சத்தமா கேக்குது. இரு பாக்குறேன்” என்று எழுந்தவரை மிரட்டி உட்கார வைத்தாள். சிறிது நேரம் தான் ஆகியிருக்கும். வெடுக்கென தெருப்பக்கம் ஓடியவர், “பாவிகளா! அடப் பாவிகளா! வயலப் போட்டு இப்படி புல்டோசர வுட்டு அடிச்சா என்னத்துக்கு ஆகும். என்ன மயித்துக்குடா தண்ணி வக்காம மாட்ட கத்த வுடறீங்க..? கதுரு மேலயா நடக்குறீங்க.. நவுருங்கடா எருமைங்களா…!” வேகமாக கத்தியபடியே ஓடிய கதிரேசன், பக்கத்து இடத்தில் வேலை நடக்கும் கூட்டத்தில் புகுந்து ஆட்களைத் தள்ள ஆரம்பித்தார்.

“யேய்! யார்ரா இது?! பைத்திக்காரா.. ச்சே.. போ! அந்தப் பக்கம் போ!” எல்லோரும் சேர்ந்து அவரை விரட்டினர். “விடுங்க சார். கோவிச்சுக்காதீங்க! என் வீட்டுக்காரர்தான். கொஞ்சம் புத்தி சரியா இல்லாதவருங்க. மன்னிச்சிடுங்க!” என்று கையெடுத்துக் கும்பிட்ட அமிர்தவள்ளி, “தே! வா இங்கே! உன்ன வேற இழுக்க முடியுதா என்னால. வா இப்பிடி!”

“இல்ல! அவன் ஆட்ட ஓட்டிட்டுப் போயிட்டான்… தோ பாரு! கருப்பு ஆடு!”

“அது நம்ம ஆடு இல்ல. அவங்களது. நம்ம ஆடு வீட்டுல கட்டிக் கெடக்கு. வா!” பதமாக பேசிக் கொண்டே, ஒரு வழியாக அவரை வீட்டுக்குள்ளே தள்ளினாள் அமிர்தவள்ளி.

“ஏ அப்பா! இன்னமும் இங்க இருந்தா ஊரு சிரிப்பா சிரிச்சுரும். அவனே கழுத்தப் புடிச்சு தள்ளறதுக்குள்ள ஊருக்குப் போயிடறதுதான் மரியாதை” என்று மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தாள். மகனிடம் பேச அவனும் “சரிதாம்மா! நமக்குத் தெரியும் அவுரு குணம். இங்க அக்கம்பக்கத்துல டிஸ்டர்ப் பண்ணா வீட்ட காலி பண்ண வச்சிடுவாங்க. வேற பெரிய வீடா பாத்துக்கிட்டு கூட்டிக்கலாம்னுதான் நானும் ஐடியா பண்றேன். அது வரைக்கும் ஊர்ல இருந்து வந்து போய் பாத்துக்கிறதுதாம்மா எனக்கும் நல்லதுன்னு படுது. இல்ல, உன்னால இங்கயே இவர சமாளிக்க முடியும்னா சொல்லு. என்னப் பத்தி தப்பா நெனக்காதே!” அவனது பேச்சுக்கு எதுவும் பதில் பேசவில்லை அமிர்த வள்ளி. பிறந்த போது அவனுக்கு சரியாக பேச்சு வராத போது, கோவிலாச்சேரி மாரியம்மனுக்கு வேண்டிக் கொண்டு உப்பு மிளகு போட்டதும், கூழாங்கற்களை வாயில் போட்டு மெள்ளச் சொல்லி, அவனை மெல்ல பேச வைத்ததும் இதற்குத்தானா என்பது போல் அவனை ஆழ்ந்து உற்றுப்பார்த்துக் கொண்டாள்.

மருத்துவரிடம் காண்பித்து விட்டு, அப்படியே இரவு ரயிலுக்கு புறப்படும் எண்ணத்துடன் மருமகளிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். “மாமா! பாத்துப் போங்க. உங்களுக்கு ஒண்ணும் இல்ல. எல்லா சரியாப் போயிடும்” என்று நெருங்கி வந்து நிதானமாகச் சொன்ன மருமகளிடம் கதிரேசன், “புள்ளைங்கள பாத்துக்க! டி.வி. பொட்டிப் பக்கம் உடாத! விழுந்து செத்துப் போயிடும்! ஆமா ஜாக்கிரத!” என்று முழியைப் பெரிதாக்கி, கைகளை ஆட்டி ஆட்டிப் பேசினார். மங்கலாக அர்த்தம் விளங்குவது போல மருமகள் யோசித்து விழித்தாள். “அம்மா! நீயும் பைத்தியம் தாத்தா மாதிரியே முழிக்கிற!” என்று பிள்ளைகள் சிரித்துக் குதிக்க, “ஏ! அப்படி சொல்லக் கூடாது” என்று அதட்டினாள். “வர்றேம்மா.. புள்ளங்கள பாத்துக்க!” விழியோரங்கள் சிறிது கசிய, அமிர்தவள்ளி பிள்ளைகளின் முகத்தை விரல்களால் வட்டமிட்டு திருஷ்டி முறித்தாள்.

மருத்துவரைப் பார்த்தது தான் தாமதம், கொஞ்சம் தழுதழுத்த குரலில் “முன்னக்கி கொஞ்சம் தூங்குனாருங்க. ஆனா பழைய மாதிரியே அக்கம்பக்கத்துல பேசி பிரச்சன பண்ணிட்டாரு சார்! ஒரு மரத்துப் போற ஊசி வேணும்னா போட்டு வுடுங்க. ஊரு வரைக்கும் தாங்கட்டும். பேயோட்டறதுலந்து எல்லா வைத்தியமும் மாத்திப் பாத்தாச்சு. இன்னும் எதனால இவருக்கு வியாதிய தீக்க முடியும்னு தெரியல. பழய மனுசனா எப்ப மாறுவாரோ? அந்த மகமாயியா பாத்து உங்க கிட்ட அனுப்பி வச்சிருக்கா…! நல்ல மாதிரி ஆக்கி உட்டுருங்க சார்..”

“பயப்படாதீங்கம்மா! ஊசி இப்ப வேணாம். சீட்ல எழுதித் தர்றேன். நாலு நாள் தள்ளி போடுங்க. முன்னக்கி இப்ப அய்யா முகம் தெளிவா இருக்கு! நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நாள் ஆகும்… சரி பண்ணனும்னா தொடர்ச்சியா வந்து பாக்கணும். வேற மருந்து எழுதித் தர்றேன். இத சாப்பிடக் குடுங்க!” என்று கதிரேசனைப் பார்த்தபடியே பேசினார் மருத்துவர்.

மருத்துவர் சொன்ன பிறகும், நீண்ட நேரம் நாக்கை நீட்டியபடி ஜாடை காண்பித்த கதிரேசன் “மருந்த மாத்துறீங்களா! மாத்துங்க..மாத்துங்க.. மருந்து கொடுத்தா தாளடிதான்” “ஏய், பொன்னி மேல பன்னி மேயுது. எவங் கேக்குறான்… இல்ல எவங் கேக்குறாங்கறேன்?” என ஆரம்பிக்கவே “போற வரைக்கும் இன்னும் என்னன்ன கூத்துக் கட்டி அடிக்கப்போறாரோ..?! “ அமிர்தவள்ளி தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“அம்மா.. நீங்க கவலைப்படாதீங்க! அய்யா.. இங்க பாருங்க, ஒடம்பு நல்லாயிடும். வேலைக்குப் போகலாம்.. நல்லா சாப்பிட்டு, மருந்து சாப்பிடணும். என்ன!” சொன்ன மருத்துவரின் கையைக் கெட்டியாகப் பிடித்த கதிரேசன் “மருந்து சாப்பிட்டா உடம்பு நல்லாகுமா? ஹா..ஹா.. என் பிரச்சினைய நீ முடிச்சு வுடு! நான் உன்னப் படிக்க வக்கிறேன்.. பாத்துக்குறேன். நீயாவது செத்துப் போவாம பாத்துக்க ஆமா” அடுக்கடுக்காக பேசித் தள்ளினார். கவலையாகப் பார்த்த அமிர்தவள்ளியிடமும், மகனிடமும் “கவலைப்படாதீங்க சார்! மெல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். அடுத்த செக்அப் அழைச்சிட்டு வந்திருங்க!” என்று நம்பிக்கையூட்டி அனுப்பினார் மருத்துவர்.

இரயில்வே ஸ்டேசன் வந்து ஒரு வழியாக இடம் பிடித்து, இருவரையும் உட்கார வைத்து விட்டு வெளியே சன்னலோரம் வந்து நின்று கொண்டான் சுப்பிரமணி. உள்ளே இரயிலில் அமர்ந்திருப்பவர்களை துருவித் துருவிப் பார்த்தபடி புன்னகைத்துக் கொண்டார் கதிரேசன். பக்கத்தில் ஒருவர் செல்போன் பேசிக் கொண்டிருக்க, மெல்லிய குரலில் அவரைப் பார்த்தபடி, “பேசு..பேசு! நீ பண்ண வேலைக்கு பேசிதான் தீக்கணும். ஆறு வேலி நிலமும், ஐவேசு பண்டார வடையுமாவா இருக்க! இருக்குறத வுட்டுப் புட்ட. இப்ப பேசிதான ஆகணும். ஹி..ஹி..ஹி..” தொடையைத் தட்டிச் சிரித்துக் கொண்டார்.

“பாத்தும்மா! பக்கத்துல ஏதாவது பிரச்சினை பண்ணப் போறாரு! ஏதாவது அவசரம்னா அக்கம்பக்கத்துல உள்ளவங்கள வுட்டு ஃபோன் பண்ணு. ஊர்ல வேலுப்பய கிட்ட சொல்லிருக்கேன். வந்து பாத்துப்பான். மறக்காம ஊசிய வாங்கிப் போட்ரு. அடுத்த மாசம் டாக்டர பாக்கலாம்” என்று சுப்பிரமணி பேசிக்கொண்டே போக, கதிரேசன் திடீரென அவனிடம் சத்தமாக “பாக்குறாணுவளாம்.. பாக்குறாணுவளாம். பேசாம நீயும் ஒரு ஊசி போட்டுக்க! உம் பொண்டாட்டிக்கும் ஒரு ஊசி போட்டுக்க! இதோ இவங்களுக்கெல்லாம் ஒரு ஊசியப் போடு! யாரு வேணான்னா… ஊசியப் போட்டுக்கிட்டு பேசாம கெடங்கடா! உனக்கெதுக்கு ஊசி? நீ போடாமயே கெடப்ப.. ஹா…ஹா…ஹா! ” என்று சப்தமாக சிரித்தவரை நெளிவு சுளிவாகப் பேசி அடக்கினாள் அமிர்தவள்ளி. சுற்றிலும் உள்ளவர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்க, “கொஞ்சம் நார்மலா இல்லாதவர் சார்! அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க!” என்று சுப்பிரமணி விளக்கினான். புரிந்து கொண்டவர்கள் போல அவர்கள் கதிரேசனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தனர். கதிரேசனும் பதிலுக்கு அவர்களை ஏற இறங்க பார்த்துக் கொண்டிருந்தார்.

– துரை. சண்முகம்

____________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013

____________________________________________________________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க