Friday, August 19, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் போஸ்கோ எதிர்ப்பு போராளிகள் கொல்லப்பட்டனர்!

போஸ்கோ எதிர்ப்பு போராளிகள் கொல்லப்பட்டனர்!

-

போஸ்கோ எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியில் நின்ற நான்கு பேரை கடந்த சனிக்கிழமை மாலை குண்டுவீசிக் கொன்றிருக்கின்றனர் ஒடிசா போலீசார் அல்லது போஸ்கோ நிறுவனம் இறக்கிய ரவுடிகள். ஜகத்சிங்பூர் மாவட்டம் பாட்னா கிராமத்தில் நடைபெற்ற இத்தாக்குதல் ‘போஸ்கோ எதிர்ப்பு சங்க்ராம் சமிதியின் தலைவர் அபய் சாஹூவுக்கு குறி வைத்து நடத்தப்பட்டதாக’ சமிதியின் செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் பைக்ரே குற்றம்சாட்டுகிறார். கடந்த சில நாட்களாக கொரிய நிறுவனம் சில குண்டர்களை அப்பகுதியில் இறக்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரிய நிறுவனமான போஸ்கோ இம்மாவட்டத்தின் திங்கியா, கோபிந்தபூர் மற்றும் கடாகுஜாங் ஆகிய கிராமங்களில் உள்ள வெற்றிலைத் தோட்டங்களை அழித்து, ரூ.52 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 4000 ஏக்கர் நிலப்பரப்பில் இரும்பு உருக்காலையை நிறுவ இந்திய அரசுடன் 2005-ல் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.

2010-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த நிபுணர் குழு இந்த ஆலை அமைவது சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்ததல்ல எனக் கூறிய பிறகும் அமைச்சகம் தடையில்லாச் சான்றிதழை நிறுவனத்திற்கு வழங்கியது. ‘ஏற்றுமதி செய்யும் அனுமதியை ரத்து செய்து விடலாம்’ என எதிர்பார்ப்பதாக பீலா விட்டார்கள். மாநில தலைமைச் செயலர் பி.கே பட்நாயக்,  ‘மத்திய அரசு இரும்புத்தாது ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை’ என்பதை ஞாபகப்படுத்தினார்.

 போஸ்கோ எதிர்ப்பு போராட்டக்காரர்
புபனேஸ்வரில் போஸ்கோ எதிர்ப்பு போராட்டக்காரரை போலீஸ் இழுத்துச் செல்கிறது. படம் : தி இந்து நாளிதழ்

‘போராட்டக்காரர்கள் போராட்டங்களின் போது சிறுவர்களை பயன்படுத்துகிறார்கள்’ எனக் கூறி திசை திருப்பும் வேலையையும் அரசு கடந்த ஆண்டு செய்தது. 2011ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற போராட்டங்களில் மாவட்ட எல்லைப் பகுதியில் சுமார் 2,000 சிறுவர்கள் சாலையில் படுத்து தர்ணா செய்து முழக்கமிட்டனர். நிலம் கையகப்படுத்துவதை கடுமையாக எதிர்த்தனர். அவர்களை கலைந்து போகச் சொன்ன மாவட்ட எஸ்பி தேவ்தத் சிங் “அரசு அதிகாரிகளது பணியை செய்ய விடாமல் (அதாவது கொரிய நிறுவனத்திற்காக நிலக் கையகப்படுத்துதலை) தடுப்பதால் காவல்துறை மக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.

கடுமையான மக்கள் போராட்டத்தால் கடந்த ஓராண்டாக சட்டவிரோத நில கையகப்படுத்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது தென் கொரிய நிறுவனத்திற்காக பாரதீப் துறைமுகத்திற்கு செல்லும் சாலை ஒன்றை அரசு அமைத்து வருகிறது. ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட 2,000 ஏக்கர் நிலத்தில் முதற்கட்ட பணிகளைத் துவங்க அரசு காவல்துறையை ஏவி விட்டுள்ளது. நிறுவனத்தின் மேலாளர்களுடன் இணைந்து அவர்கள் தம் எஜமானர்களின் கூலிப்படையாக இந்த வேலையை நிறைவேற்றி வருகின்றனர். சுமார் 40 போலீசார் கோவிந்தபூர் பகுதியில் வெற்றிலைத் தோட்டங்களை அழிக்கும் வேலையை மட்டுமே செய்து வருகின்றனர்.

‘விவசாய நிலத்தை இழந்தவர்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்துதல். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை’  போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடிய ஐக்கிய நடவடிக்கைக் குழு போன்ற அமைப்புகளே இன்று திட்டத்தை கைவிடும்படி போராட வேண்டிய அளவுக்கு மக்களது கோபம் அதிகரித்துள்ளது. தற்போது நடைபெறும் போராட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் விபு பிரசாத் தராய் போன்றவர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றனர்.

கடந்த மாதம் அரசு மீண்டும் மக்களது நிலத்தை கையகப்படுத்த முயன்றது. அதனை எதிர்த்த கோபிந்தபூர் கிராம மக்கள் மீது அங்கே குவிக்கப்பட்டிருந்த 400 போலீசார் தடியடி நடத்தியதில் 6 பேர் காயமடைந்தனர். படையினரை அப்பகுதியில் இருந்து வாபஸ் பெறவும், சட்டவிரோத நிலப்பறிப்பை அரசு நிறுத்தக் கோரியும் அபய் சாஹூ உண்ணாவிரதம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து நில கைப்பற்றல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

மனிதச் சங்கிலி, போராட்டம், ஆர்ப்பாட்டம், தடியடி என வளர்ந்த போராட்டம் மக்களை குண்டுவீசிக் கொல்லும் அளவிற்கு போஸ்கோ நிறுவனத்தை வெறியூட்டியுள்ளது.

மக்கள் நல அரசு என்ற பெயரளவுக்கான அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்காக சொந்த நாட்டு மக்களை குண்டுவீசிக் கொல்லவும் தயங்காது என்பதற்கு இந்த நால்வரது படுகொலை ஒரு நிரூபணம்.  மாவட்ட எஸ்பி சத்தியபிரத் போய், ‘சில ஆண்டுகளாகவே இப்பகுதி எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. போராட்டக்காரர்கள் எங்களைத் தாக்க சுதா தாஸ் என்பவரது வீட்டில் வைத்து ஆயுதம் தயாரிக்கையில் விபத்து நிகழ்ந்திருக்கிறது’ என்கிறார். கட்டுப்பாட்டில் இல்லாத இடத்திலிருந்து கிடைத்த தகவல் இதுவாம்.

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப கிராம மக்கள் தொலைபேசியில் அழைத்த போதிலும் கிராமத்திற்கு ஆம்புலன்சு வரவே இல்லை. முதலாளித்துவ சுரண்டலுக்காக இயற்கை வளத்தை சூறையாடும் அரசு மக்களது உயிரை இந்த அளவில்தான் மதிக்கிறது.

எனினும் போஸ்கோ நிறுவனத்தை விரட்டும் போராட்டத்தில் ஒடிசா மக்கள் வெற்றி பெறுவார்கள். இதுவரை உயிரிழந்த விலைமதிக்க முடியாத போராளிகளின் தியாகம் அதையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.

மேலும் படிக்க
Anti POSCO activists killed in bomb blast

  1. போஸ்கோ எதிர்ப்புப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர் இப்போது.இனி கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராளிகள்,மற்றும் நிலவுரிமைப் போராளிகள் கொல்லப்படலாம்.இவற்றைத் தடுத்து நிறுத்திட என்ன செய்ய ? காங்கிரஸ்,பி.ஜே.பி.,தி.மு.க.,அ.தி.மு.க.மற்றும் இவற்றுக்கு வால்பிடிக்கும் கட்சிகள் அனைத்தையும் தேசத்தை விட்டே விரட்டியடித்திட வேண்டும்.உலகமயம்,தனியார்மயம்,தாராளமயம் இவற்றுக்குக் காரணமான உலக வர்த்தகக் கழகத்திலிருந்து இந்தியா வெளியேறிட வேண்டும்.

  2. போஸ்கோ எதிர்ப்புப் போராளிகள் கொல்லப்பட்டது என்பது,இந்த பட்ஜெட்டில் ஒடுக்கும் துணை ராணுவப் படைக்கு 1லட்சத்து 60 ஆயிரம் கோடி ஒதிக்கியப்பின்நடந்த ஒத்திகையே ஆகும்.இது நாளை போராடும் தொழிலாளர்,விவசயிகள்,வணிகர்கள் மீதும் நடத்தப்படும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

  3. போஸ்கோநிருவனததுக்கு விவசாயிகளின் நிலைங்களை பிடீங்கி தரும் அரசு இனி தேவை இல்லை இந்த நாட்டின் ஆக பெரும்பான்மை மக்களின் உழைப்பும்,மண்ணின் கனிவளங்களும்.சுரையாடப்படும் போது இன்நாட்டை காக்க போஸ்கோவிற்க்கு எதிராக போராடும் மக்களோடு கரம் சேர்த்து போராடுவதே இங்க வாழ்வது சாத்தியம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க