privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தனியார் கல்லூரி லாபவெறிக்கு 8 மாணவிகள் பலி!

தனியார் கல்லூரி லாபவெறிக்கு 8 மாணவிகள் பலி!

-

8 அப்பாவி மாணவிகள் பலியானதற்கும், 40 பேர் படுகாயம் அடைந்ததற்கும் முக்கிய காரணம் ஜெயம், வெங்கடேஷ்வரா கல்வி முதலாளிகளின் லாபவெறியே! கண்டன ஆர்ப்பாட்டம்

1.3.2013 அன்று மாலை 6 மணி அளவில் இண்டூர் அருகே ஜெயம் பொறியியல் கல்லூரியின் பேருந்தும், வெங்கடேஷ்வரா கலை அறிவியல் கல்லூரியின் பேருந்தும் நேருக்குநேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 மாணவிகள் இறந்தனர்.

இக்கொடுமையை எதிர்த்து கொதித்தெழுந்த தோழர்கள் பலியான மாணவியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பானுஸ்ரீயின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறி, கல்லூரிகளின் இக்கொடுமைகளுக்கு எதிராக உறுதியாக போராட வேண்டும் என்று முடிவு செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவ மாணவியரை சந்தித்து பேசிய தோழர்கள் இந்த விபத்து தனியார் கல்லூரிகளின் லாபவெறியால் விளைந்தது என்று விளக்கி பேசி இதற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

3-ம் தேதி விவசாயிகள் விடுதலை முன்னணி பென்னாகரம் டெம்போ ஸ்டாண்டில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு கேட்டு கல்லூரி நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி பென்னாகரம் காவல் நிலையத்தில் விண்ணப்பித்தனர். போலீஸ், “நாளைக்குச் சொல்கிறோம்” என்று கூறிவிட்டு ஆர்ப்பாட்டம் நடக்கும் நாளான 5ம் தேதி காலை 11 மணி வரை அனுமதி கொடுக்கவில்லை.

தோழர்களையும் மாணவ-மாணவியரையும் பெண் தோழர்களையும் அணி திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகிக் கொண்டிருக்கும் போது போலீசார் போன் செய்து ‘உங்களுக்கு இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை, 8-ம் தேதி வெள்ளிக்கிழமை நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினர். தோழர்கள், “பிரசுரம் அச்சிட்டு தேதி போட்டு பிரச்சாரம் செய்துள்ளோம். போஸ்டர் அச்சிட்டு மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளோம். பேனர் அச்சிட்டு கொண்டு வந்து விட்டோம். அதனால் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த முடியாது, ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்” என்று தொலைபேசியிலேயே கூறினார்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிந்த காவல்துறை காவல் துறை தோழர்களை அழைத்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தருவதாக கூறியது.

கண்டன ஆர்ப்பாட்டம் 12 மணிக்கு தொடங்கியது. ஜெயம் பொறியியல் கல்லூரி, வெங்கடேஷ்வரா கலைக் கல்லூரி ஆகியவற்றின் முதலாளிகளின் லாபவெறிக்கு எதிரான முழக்கங்கள் விண்ணில் காற்றலைகளாக பொதுமக்களின் காதுகளுக்கு பறந்தன.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தோழர் பிரகாஷ், “பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சரியாக மருத்துவம் கொடுக்காமல் அவர்களை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றத் துடிக்கும் கல்நெஞ்சத்தை” அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்து கண்டன உரையாற்றிய தோழர் வனிதா, “இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரண்டு வந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகம் கைக்கூலி பேராசிரியர்களைக் கொண்டு 3 இடங்களில் தடுத்து நிறுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளது. அயோக்கியத்தனமில்லையா? இப்படிப்பட்ட பேராசிரியர்களின் தங்கையோ மகளோ இறந்திருந்தால் இப்படி செய்வார்களா” என்று வினவியது வேலை கொடுக்கிறான் என்பதற்காக பச்சை படுகொலைக்கு துணைபோகும் கைக்கூலி பேராசிரியர்களின் கொலைபாதகத்தை, இரக்கமற்றத் தன்மையை அம்பலப்படுத்தியது.

அடுத்து பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணியின் தோழர் ஆம்பள்ளி முனிராஜ், “எந்த தனியார் முதலாளியும், மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்ற சேவை நோக்கத்தோடு செயல்படுவதில்லை. பணம் பறிக்க வேண்டும், அதிக கட்டணம் வாங்கி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் கொள்ளை அடிக்க வேண்டும்” என்ற நோக்கத்திலேயே தனியார் பள்ளி-கல்லூரிகளை தொடங்குகின்றனர், நடத்துகின்றனர். மக்களும் பெற்றோர்களும் தனியார் கல்லூரிகளில் பிள்ளைகளை சேர்க்காமல் புறக்கணிக்க வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகர் வட்டாரச் செயலாளர் தோழர் கோபிநாத் உரையாற்றும் போது, “குறைவான பேருந்துகளை வைத்துக் கொண்டு இரண்டு மடங்கு மாணவ-மாணவியரை ஏற்றி அதிகமான வேகத்தில் வண்டியை ஓட்ட நிர்பந்தித்ததே கல்லூரி நிர்வாகம்தான். அதனால்தான் இந்த படுகொலை நடந்துள்ளது. இதுவரைக்கும் 12க்கும் மேற்பட்ட மாணவிகள் இறந்துள்ளதாக மாணவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகம், போலீஸ், கல்லூரி நிர்வாகம், எல்லாம் கூட்டு சேர்ந்து கொண்டு உண்மை விபரத்தை வெளியில் சொல்லாமல் தடுத்து வருகிறனர். அரசும், போலீசும் பலியான-படுகாயமடைந்த மாணவர்கள் பக்கம் நிற்காமல் கல்லூரி முதலாளியின் பக்கம் நின்று கொண்டு சாதகமாக செயல்பட்டு வருவது வேதனையான விஷயமாகும். பலியான மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு பெறும் வரையும், தனியார் பள்ளி-கல்லூரிகளின் படுகொலை கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்று உறுதியளித்தார்.

உயிரிழந்த மாணவிகளில் ஒருவரான பானுஸ்ரீயின் தந்தை குமாரவேல் பேசும் போது, “கல்லூரி நிர்வாகம் பணம் என்று கேட்கும் போதெல்லாம் தவறாமல் கொடுத்ததையும், மகளுக்கு தேவைப்பட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தையும் கூறும் போது துக்கத்தில் தொண்டை அடைத்தது. மகள் இறந்து விட்டாள் என்று கேள்விப்பட்ட போது என்னால் நம்பவே முடியவில்லை. இறந்த உடலைக் கூட பார்க்க தான் அலைக்கழிக்கப்பட்டதையும், இதுவரை கல்லூரி நிர்வாகம் சார்பில் யாரும் ஆறுதல் சொல்லக் கூட வரவில்லை” என்பதையும் உருக்கமாக விளக்கினார்.

இறுதியில் முதலாளிகளின் லாபவெறியின் கோரப்பசிக்கு உயிரிழந்த மாணவிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
: பு.ஜ. செய்தியாளர், பென்னாகரம்