Tuesday, March 18, 2025
முகப்புஉலகம்ஈழம்இனப்படுகொலையாளியுடன் கை கோர்க்கும் தரகு முதலாளிகள்!

இனப்படுகொலையாளியுடன் கை கோர்க்கும் தரகு முதலாளிகள்!

-

தரகு முதலாளிகள் சங்கத்தின் எடுபிடியாக ஈழத்தை (கொள்ளையிட) நோட்டமிட இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழுவின் பயணத்தை ரத்து செய் ! புரட்சிகர அமைப்புக்களின் முற்றுகை போராட்டம் – 09.04.13 – 11 A.M

போர் என்பதே முதலாளிகளின் நலனுக்காகத்தான்,  ஷெல் குண்டுகளின் துகள்களும் பிய்ந்து தொங்கும் குழந்தையின் உடலும் சிதைக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிறுகளும் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளும் அழிக்கப்பட்ட உடமைகளும் எல்லாமே முதலாளிகளின் லாபத்துக்காகவே.  முதலாளிகளை விமர்சிக்காமல் இருப்பது  அநீதிக்கு துணை நிற்பதற்கு சமம்.

ஆனால் ஈழப்பிரச்சினையை பொறுத்தவரை, ஏதோ சோனியாவின் தாலியை அறுத்ததால்தான் அவருக்கு கோபம் வந்து பேயாட்டம் போடுவதாக மந்திரங்கள் ஓதப்பட்டு கொண்டிருக்கின்றன. சோனியா மட்டுமல்ல பாஜக, சிபிஐ, சிபிஎம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட தேசிய – ஓட்டுப்பொறுக்கிகள் அனைவருமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இனப்படுகொலைக்கு ஆதரவாக இருப்பவர்களே. முதலாளிகளின் நலனே இந்தக் கட்சிகளுக்கு பெரிது என்பதால் அவர்களுக்கு லட்சக்கணக்கான உயிர்கள் முக்கியமல்ல.

அதனால்தான் போர் முடிந்த சில வாரங்களிலேயே ஏர்டெல் தன் சந்தையை விரிவாக்க ராஜபக்சேவிடம் சென்றது.  டாடா, பிர்லா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் வரிசையாக ஈழத்தமிழரின் ரத்தத்தில் பங்கு போட்டுக் கொண்டார்கள். தமிழ் தேசியம் பேசும் பல அமைப்புக்கள் முதலாளிகளை தொடுவதே இல்லை. இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட இந்தப் போரை முதலாளிகளை தொடாமலேயே விமர்சிப்பது எவ்வளவு அநீதி.

இந்திய அரசு ஈழத்துக்கு உதவி செய்வது போல நடித்து வந்த காலம் தொட்டு , இந்தியா தனது பிராந்திய மேலாதிக்கத்தின் நலனுக்காக  செய்து வரும் நாடகத்தை அத்துமீறலை, போரை அம்பலப்படுத்தி வந்திருக்கின்றன மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புக்கள்.

ஈழத்தமிழருக்கு ஆதரவாக மாணவர் எழுச்சி தமிழகம் முழுவதும் படர்ந்து பற்றி 25 நாட்களாக எரிந்தது. அது முழுதாக அடங்குவதற்கு முன்னர் இந்திய தரகு முதலாளிகள் சங்கம்  தனது பங்கினை வாங்குவதற்காக காங், பிஜேபி, பகுஜன் சமாஜ் போன்ற தனது கைக்கூலி கட்சிகளிலிருந்து எம்பிக்கள் கொண்ட குழுவை நேற்று அனுப்பியுள்ளது.

(FICCI) பிக்கியின் தமிழகப்பிரிவு இந்த நேரத்தில் இந்தப்பயணம் வேண்டாம் என்று கூறியும் கூட ரத்தக்கவுச்சி போவதற்குள்  பிணங்களைத் தின்ன   சென்றிருக்கிறது இக்குழு.

ஈழத்தைக் கொள்ளையிட பிக்கியின் சார்பில் சென்ற எம்பிக்களின் பயணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தரகுமுதலாளிகளின் நலனுக்காகவே இப்போர் நடந்தை அம்பலப்படுத்தியும்  ம க இ க , புமாஇமு,புஜாதொமு, பெவிமு ஆகிய புரட்சிகர அமைப்புக்கள் சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள இந்திய தரகு முதலாளிகள் சங்கத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. புஜதொமுவின் மாநில அமைப்புச்செயலர், தோழர். வெற்றிவேல் செழியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் 25 பெண்களும் அடங்குவர்.

காலை முதல் பிக்கி அமைந்துள்ள ஸ்பார்டாங் சாலையில் போலீஸ் படை  குவிக்கப்பட்டு இருந்தது. வட்டாட்சியர் அலுவலகம் அருகே கூடிய தோழர்கள் அங்கேயே கைது செய்ய பார்த்த போலீசின் முற்றுகையை உடைத்துக்கொண்டு அங்கிருந்து பேரணியாக சென்றனர்.

அந்தச்சாலையில் போக்குவரத்து நின்றது,  இந்திய தரகு முதலாளிகள் லாபவெறிக்காக ராஜபக்சேவுடன் கூடிக்குலாவுவதை நிறுத்தும் வகையிலும் ஈழப்போர் என்பது தரகு முதலாளிகளின் நலனுக்காகவே என்பதை அம்பலப்படுத்தும் வகையிலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர், வெற்றிவேல் செழியன் இதையொட்டி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த போது ‘மாவீரனும்’ சேத்துப்பட்டின் ரவுடியுமான சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் நடராஜ் “பிரஸ் பீப்பிள் எல்லாம் நகருங்க,   நடு ரோட்ல பேட்டி கொடுக்கக் கூடாது. இதை நான் பார்த்துக்கறேன்” என்று கத்திக் கொண்டே வந்தார்.

பத்திரிக்கையாளர்களோ ” ஏன் கத்துறீங்க, பேட்டி எடுத்த பின்னாடி நகர்ந்து போறோம்” என்றனர்,. தொடர்ந்து நடராஜ் கத்த, இன்னொரு பத்திரிக்கையாளர் கூறினார் ” எத்தனை போராட்டத்திற்கு போயிருக்கோம், ரொம்ப ஓவரா பண்ணறீங்க”  என்றதும் “சரி பின்பக்கம் போறேன்” என்றபடி கிளம்பினார். ஏசி, இன்ஸ்பெக்டர்கள், எஸ்,ஐக்கள்,  வந்து கொண்டே இருந்தனர், கடைசியாக வந்த டிசி பவானீஸ்வரி பெண் தோழர்களை மரியாதையின்றி பேச , அவருக்கு மரியாதையை கற்றுக்கொடுத்தார்கள் தோழர்கள்.

தொடர்ந்து முற்றுகையிட சென்றவர்களை மறித்து கைது செய்து பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்து வைத்துள்ளது காவல்துறை. ராணுவ மையத்தைக் கூட முற்றுகையிட அனுமதி தரமுடியும் ஆனால் முதலாளிகள் சங்கத்தின் பக்கமே விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தது போலீசு . அனைவரையும் வண்டியில் ஏற்றியபின்னர்  முதலாளிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று சாலையில் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்களையெல்லாம் கைது செய்ய போலீசு முயல, அதை தோழர்களும் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞரும் போராடி முறியடித்தனர்.

இது தரகுமுதலாளிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட போர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த அரசு நாங்கள் முதலாளிகளுக்காகத்தான் உங்களுக்காக இல்லை என்று அறிவித்து விட்டது. நாம் அடுத்து என்ன செய்யப்போகிறொம்?

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

  1. இனியாவது மாணவர்கள் அரசியலை படிக்கவேண்டும். குறைந்த பட்சம் பொது அறிவையாவது உபயோகிக்க வேண்டும். இராணுவ முகாமை முற்றுகையிட்டால் கூட கைது செய்ய மாட்டோம் ஆனால் எசமானர்களை தொட்டால் உடனே கைது செய்வோம்-இதுக்கு மேலயும் புரியலன்னா-தம்பிகளா எந்த பள்ளிகூடத்தில படிச்சீங்க? வாழ்க டம்ளர்கள்!!!!

  2. //எம்.பிக்கள் குழுவின் பயணத்தை ரத்து செய் ! //

    அடக்கொடுமையே அவனுக காலேலேயே இலங்கை போயாச்சே..

    • கொழுப்புடன் கெக்கலிக்கும் இந்த ப்பையா என்னும் ஜென்மம் என்ன சொல்ல வருகிறது…..ஈழத்திற்காக போராடினால் அதுதான் 2009லேயே முடிஞ்சிருச்சே என்னும் பூணூலின் காரிய திமிர்……இந்த ஜந்துவை —— வேண்டும்…..

    • எங்கே அம்பியை காணவில்லை.ஒரு வேளை அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இடம் பெற்றிருக்கும் பா.ச.க.வினர் பிரகாசு சவதேகர்,அனுராக் தாக்கூர் ஆகியோரை ”கட்சி கொள்கைகளை கடந்து” ஈழத்தமிழர் ஆதரவு நிலை எடுக்க வைக்க ராமர் பாலத்தில் வைத்து வற்புறுத்திக் கொண்டிருக்கிறாரோ.

  3. இந்த சொர்ணாக்கா போலிசு பவானிஸ்வரிதான் கடந்த 2011 சூன் மாத இறுதியில் நடந்த டிபிஐ முற்றுகையின் போதும் கல்வி கசாப்பு கடைகாரர்களுக்காக பெண் தோழர்கள் காட்டுமிராண்டிதனமாக அடித்த போலிசு ரவுடி கூட்டத்தின் தலைவர்…

  4. தரகு முதலாலிகலை விரட்டுவொம், அவர்கலது சொத்துக்ககலை பரிமுதல் செய்வொம் , என்று போர் முழக்கம் செய்வொம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க