Saturday, April 17, 2021
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் நில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை!

நில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை!

-

மிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 138 கிராமங்களில் நடந்துவந்த எரிவாயுக் குழாய்களைப் பதிக்கும் பணிகள், விவசாயிகளின் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தப்பட்டு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இப்பிரச்சினை தொடர்பாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.  இதனையடுத்து, “கெய்ல் நிறுவனம் எரிவாயுக் குழாய்களை விளைநிலங்களில் பதிப்பதைக் கைவிட்டு, நெடுஞ்சாலை ஓரமாகப் பதிக்க வேண்டும்; இத்திட்டத்தினால் பழவகை மரங்களையும் மற்றும் பிற கட்டுமானங்களையும் இழந்துள்ள விவசாயிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும் உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும்” என முடிவெடுத்துள்ள தமிழக அரசு, இம்முடிவுகளை உயர் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

கெய்ல் கூட்டம்
கெய்ல் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை விளைநிலங்களில் பதிப்பது தொடர்பாக தமிழக அரசு நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட விவசாயிகள்.

கெய்ல் நிறுவனமோ, “குழாய்களை நெடுஞ்சாலையோரமாகப் பதித்தால் கூடுதல் செலவு ஏற்படும்; குழாய்களுக்குப் பாதுகாப்பு இருக்காது; குழாய்களைப் பதிக்கும் வரை போக்குவரத்து இடையூறு ஏற்படும்; நெடுஞ்சாலையில் பதிப்பதற்குத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளிக்காது” என்ற நொண்டிக் காரணங்களைக் கூறி, குழாய்களை விளைநிலங்களில் பதிக்கும் தனது முடிவை நியாயப்படுத்தி வருகிறது.

குழாய்களை நெடுஞ்சாலைகளில் பதிக்கும் வரைதான் போக்குவரத்து இடையூறு ஏற்படும். ஆனால்,  விளைநிலங்களில் பதிப்பதால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த 5,842 விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு நாசமாகிவிடும்.  இந்த எளிமையான உண்மையைக்கூடப் புரிந்துகொள்ள மறுக்கும் அளவிற்கு அதிகாரத் திமிர் கொடிகட்டிப் பறக்கிறது.

திட்டத்தை மாற்றிக் கொண்டு குழாய்களை நெடுஞ்சாலையில் பதிக்கக் கூடுதல் செலவாகும் என்றால், அச்செலவை இந்தத் திட்டம் யாருக்காக போடப்படுகிறதோ, அவர்களிடம் வசூலித்துக் கொள்வதுதான் நியாயமாக இருக்கும்.  மாறாக, திட்டச் செலவைக் குறைக்க, இத்திட்டத்தால் எந்தப் பயனும் அடைய முடியாத விவசாயிகள், தங்களின் விளைநிலங்களை அற்பமான நட்ட ஈட்டிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது அடிப்படையிலேயே அநீதியானது.

மத்தியப் பிரதேசம்
மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் இந்திரா சாகர் அணைக்கட்டின் உயரத்தைக் குறைக்கக் கோரி, ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் நடத்திய “ஜல் சத்யாகிரகப்” போராட்டம் (கோப்புப் படம்)

நெடுஞ்சாலைகளில் குழாய்களைப் பதிப்பதைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறுக்க முடியுமென்றால், தமது விளைநிலங்களில் குழாய்கள் பதிப்பதை விவசாயிகள் மறுக்கக் கூடாதா? ஆனால், இந்த உரிமை விவசாயிகளுக்கு அநியாயமான முறையில் மறுக்கப்படுகிறது.  மாறாக, பொது நோக்கத்திற்காகக் கொண்டு வரப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டுத் தர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மறுத்துப் போராடினால், போலீசு, வழக்கு, சிறை போன்ற அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, விளைநிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்துக் கொள்கிறது அரசு.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது இப்பொழுது சர்வசாதாரணமாகவும் துரிதமாகவும் நடந்துவருகிறது.  விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி, அவற்றின் மேல் கொண்டுவரப்பட்டுள்ள விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், தகவல்-தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சுரங்கங்கள், புதிய வேலியிடப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவற்றால் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை என்பது மட்டுமல்ல, இத்திட்டங்கள் பெரும்பான்மையான மக்களின் நலனில் இருந்தும் போடப்படுவதில்லை.

இந்த எரிவாயுக் குழாய் திட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.  இத்திட்டம் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகிப்பதற்காகப் போடப்படுகிறது.  இந்தத் திட்டத்தால் பலனடையப் போவது பெரும்பாலும் தனியார் முதலாளிகள்தான்.  ஆனால், அது மூடிமறைக்கப்பட்டு, ஏதோ நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், பொது நோக்கத்திற்காகவும்தான் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.  இது போன்ற திட்டங்களை எதிர்ப்பவர்களை, அதற்கு நிலம் தர மறுப்பவர்களை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும், நக்சலைட்டுகள் என்றும் குற்றஞ்சுமத்தி, அவர்களை ஒடுக்குவது நியாயமானதென்றும் கருத்து பரப்பப்படுகிறது.  சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள காட்டு வேட்டை; ஒரிசாவின் கலிங்கா நகர் பழங்குடியின மக்கள் மீதும், உ.பி.யின் நொய்டா விவசாயிகள் மீதும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

உத்தர பிரதேசம்
தமது விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய உ.பி. நொய்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த விவசாயி. (கோப்புப் படம்)

எனினும், இத்தகைய அடக்குமுறைகளையும் மீறி, சிங்குரிலும் நந்திகிராமத்திலும் விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன; ஒரிசாவில் கோண்டு இனப் பழங்குடி மக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து, நியம்கிரி மலைப்பகுதியில் பாக்சைட் சுரங்கம் அமைக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  அம்மாநிலத்தில் கோக்ராஜர் மாவட்ட விவசாயிகளும் மீனவர்களும் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திவரும் போராட்டம் காரணமாக போஸ்கோ நிறுவனத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது முழுமையாக வெற்றியடையவில்லை.  மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கத் திட்டமிட்டிருந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அம்மாவட்ட விவசாயிகள் போராடித் தடுத்து நிறுத்திவிட்டனர்.

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக நடந்துவரும் இத்தகைய போராட்டங்களால் 5 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட திட்டங்கள்  நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் இருப்பதாக ஆளும் கும்பலும் அவர்களது எடுபிடிகளும் புலம்பி வருகின்றனர்.  இந்த தேக்க நிலையை உடைக்க விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் விதத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திருத்தப் போவதாக அறிவித்தது, காங்கிரசு கூட்டணி அரசு.

இது தொடர்பான அறிவிப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு வெளியிட்டவுடனேயே, “தனியார் திட்டங்களுக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கும் புரோக்கரைப் போல அரசு செயல்படக் கூடாது.  அரசு திட்டங்களுக்கு மட்டுமே நிலத்தைக் கையகப்படுத்தலாமென்றாலும், விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தக் கூடாது. நிலத்தைத் தர மறுக்கும் உரிமை விவசாயிகளுக்கு அளிக்கப்பட வேண்டும்.  நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு நில உரிமையாளர்களின் ஒப்புதலை மட்டுமின்றி, அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மற்ற தொழிலாளர்களின் ஒப்புதலையும் பெற வேண்டும்.  முப்போகம் விளையும் நிலங்களை மட்டுமல்ல, ஒருபோகம் விளையும் நிலங்களைகையகப்படுத்தக் கூடாது” என்பது உள்ளிட்டுப் பல்வேறு திருத்தங்களையும் நிபந்தனைகளையும் விவசாய சங்கங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முன்வைத்தன.

ஆனால், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் புதிய நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்குப் பெயர்தான் கவர்ச்சிகரமாகச் சூட்டப்பட்டுள்ளதே தவிர, அதற்கும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 118 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருந்துவரும் பழைய சட்டத்திற்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை.  நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வில் நியாயமான நட்ட ஈடு மற்றும் ஒளிவுமறைவற்ற தன்மையைப் பெறும் உரிமை மசோதா (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Bill) என்ற இப்புதிய மசோதா, நட்ட ஈட்டைக் கொஞ்சம் கூட்டிக் கொடுத்து விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரித்துக் கொள்வதைத்தான் தனது அடிநாதமாகக் கொண்டுள்ளது.

தனியார் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலத்தை அவர்கள்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்; ஆனால், பொதுத்துறை-தனியார்துறை இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொடுக்கும் எனப் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  பொதுத்துறை-தனியார்துறை கூட்டு என்பது சாராம்சத்தில் கேந்திரமான துறைகளையும் அவற்றின் மூலம் கிடைக்கும் அளப்பரிய வருமானத்தையும் சுற்றிவளைத்துத் தனியாருக்குத் தாரை வார்க்கும் சதித்தனமான, மோசடியான கொள்கையாகும்.  அப்படிப்பட்ட திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலங்களை அரசு கையகப்படுத்திக் கொடுக்கும் என்ற திருத்தத்தின் மூலம் தனியாருக்கு அரசு புரோக்கராகச் செயல்படுவது மீண்டும் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகப் பெரும் முதலீட்டில் தொழிற்சாலைகளைத் தொடங்குவதையும் பொது நோக்கம் எனப் புதிய சட்டம் வரையறுத்துள்ளதால், அரசின் திட்டங்களுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்கும் நிலம் தர முடியாது எனக் கூறும் உரிமை விவசாயிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது.  முப்போகம் விளையும் நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கடைசி வாப்பாகத்தான் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையைத் தவிர, விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கு வேறெந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.

நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நில உரிமையாளர்களின் ஒப்புதலைத் தாண்டி, அந்நிலத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை என்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கை மசோதாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நிலத்தின் மதிப்பைத் தீர்மானிப்பது, நட்ட ஈடு மற்றும் புனர் வாழ்வு வழங்குவதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான அம்சங்கள் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. பழங்குடியின மக்களின் நிலங்களையும் காடுகளையும் கையகப்படுத்துவதற்கு கிராம சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்; பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு வேலை கொடுக்க வேண்டும்; அதிக நட்ட ஈடு வழங்க வேண்டும் என்ற பழைய பல்லவிதான் புதிய மசோதாவிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இம்மசோதாவில் தப்பித்தவறிக்கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பாதகமான அம்சங்கள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே, சுற்றுப்புறச் சூழல் அமைச்சராக இருந்தபொழுது பன்னாட்டு விதைக் கழகங்களின் கைத்தடியாக நடந்துகொண்டு பி.டி. கத்திரிக்காய்க்கு ஆதரவாக வாதாடிய ஜெய்ராம் ரமேஷ்; விவசாயிகளைப் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை காட்டாத சரத் பவார் ஆகியோர் இம்மசோதாவை உருவாக்கி முடிவு செய்யும் கமிட்டிகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டனர்.  இவர்களுக்கும் மேலாக, இம்மசோதாவை கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக உருவாக்குவதில் மைய அரசின் வர்ததக அமைச்சகம், நகர மேம்பாட்டு அமைச்சகம், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், மின்சாரத் துறை அமைச்சகம், தொழில்துறை அமைச்சகம் ஆகிய ஐந்து துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் காட்டிய முனைப்பு அளப்பரியதாகும்.

விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை, விவசாயிகளையும், விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் அவர்களின் வாழ்வாதாரத்திலிருந்து அப்புறப்படுத்தும் கொடிய செயலாக ஆளும் கும்பல் கருதுவதில்லை.  மாறாக, இதனை ஒரு வர்த்தக நடவடிக்கையாகவும், இதில் பணத்தைத் தவிர, வேறு உணர்ச்சிகளுக்கு இடமில்லை என்றே கருதுகிறது.  இது மட்டுமின்றி, நட்ட ஈடாகக் கிடைத்த பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, ஒரு நடுத்தர வர்க்க வாழ்க்கையைத் தொடங்குமாறு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கவும் இவர்கள் தயங்குவதில்லை.

நோய்டா
உ.பி. மாநில நொய்டா பகுதியில் விளைநிலங்களை வளைத்து, மேட்டுக்குடி கும்பலின் களிவெறியாட்டத்துக்காக கட்டப்பட்டுள்ள கோல்்ப் மைதானம் (மேல்படம்) மற்றும் 875 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள எப் 1 கார் பந்தய மைதானம்.

குறிப்பாக, பழம்பெரும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளுள் ஒருவரான ஆதி கோத்ரேஜ், “விவசாயிகள் அனைவரும் தமது நிலங்களை விற்றுவிட்டு, கிடைக்கும் பணத்தைப் பங்குச் சந்தையிலும் பரஸ்பர நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யுமாறு” வெளிப்படையாகக் கூறி வருகிறார்.  இந்தியாவிற்கு இனி விவசாயமும் விவசாயிகளும் தேவையில்லை என்பது ஆதி கோத்ரேஜ் என்ற முதலாளியின் கருத்து மட்டுமல்ல, மன்மோகன் சிங் உள்ளிட்டு அனைத்து ஓட்டுக்கட்சிகளின் கருத்தும் ஏறத்தாழ இதுதான்.

சிங்குரிலும், நந்திகிராமிலும் சி.பி.எம். தலைமையில் அமைந்த இடதுசாரிக் கூட்டணி அரசுதான் விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறிப்பதில் மிகவும் மூர்க்கமாக நடந்துகொண்டது.  தலித் சகோதரி மாயாவதி ஆட்சியில்தான் நொடா பகுதி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் நிறுத்தி கெய்ல் நிறுவனத்திற்கு எதிராக முடிவெடுத்துள்ள ஜெயா, 1990-களில் சென்னையையடுத்து ஃபோர்டு கார் கம்பெனியை நிறுவுவதற்காக, 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய-மேய்ச்சல் நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்துக் கொடுத்தவர்தான்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு என்ற தரகு முதலாளிகள் சங்கம் வெளியிட்டுள்ள “2025-இல் தமிழகம்” என்ற அறிக்கையில், “தற்போது 50 சதவீதமாக இருக்கும் தமிழக நகர்ப்புற மக்கள் தொகையை, 2025-இல் 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்; 2025-இல் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் கிராமப்புற மக்கள் தொகையை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.  அப்படிக் குறைப்பதற்கு நகரமயமாவதைத் தற்பொழுதுள்ளதைக் காட்டிலும் 18 மடங்கு வேகத்தில் தீவிரப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

தரகு முதலாளிகள் தமிழகம் குறித்துச் சொல்லியுள்ள இந்த அபாயகரமான ஆலோசனையைத் தற்போதைய நிதி மந்திரியான ப.சிதம்பரம் வழிமொழிந்துள்ளதோடு, இந்தியா முழுவதும் நகர்ப்புற மக்கள் தொகையை 85 சதவீதம் ஆக்குவதுதான் காங்கிரசின் இலட்சியம் எனச் சபதம் போட்டுள்ளார்.  பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏறத்தாழ 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.  அம்மாநிலத்தைத் தொழில்மயப்படுத்துவதற்கு இந்த எண்ணிக்கையை 30 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என அம்மாநில அரசே அறிவித்திருக்கிறது.   கிராமப்புற மக்களை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தாமல் இந்த இலக்குகளை எட்ட முடியாது.  விவசாயிகளைக் கிராமப்புறங்களிலிருந்து வெளியேற்ற வேண்டுமானால், ஒன்று அவர்களது நிலங்களைப் பிடுங்கிக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால், நிலங்களைத் தரிசாகப் போடும் அவல நிலைக்கு அவர்களைத் தள்ள வேண்டும்.

விவசாயிகளைக் கிராமப்புறங்களிலிருந்து அப்புறப்படுத்துவதன் மூலம், கார்ப்பரேட் கும்பலுக்கு அடிமாட்டு விலைக்கு நிலம் கிடைப்பது மட்டும் உறுதி செயப்படவில்லை.  இதன் மூலம் வேலை தேடி நகரங்களுக்கும்; தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற ‘வளர்ந்து’ வரும் மாநிலங்களுக்கும் ஓடிவரும் விவசாயிகளைக் கொண்டு ஒரு பெரும் ரிசர்வ் தொழிலாளர் பட்டாளமும் உருவாக்கப்படுகிறது.  இப்படி ஒரு ரிசர்வ் பட்டாளத்தை உருவாக்குவதன் மூலம், மிகவும் குறைவான கூலிக்குத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் வாய்ப்பு முதலாளிகளுக்கு உருவாக்கித் தரப்படுகிறது.  இத்தகைய நில அபகரிப்பும் உழைப்புச் சுரண்டலும்தான் இந்தியத் தரகு முதலாளிகளை உலகக் கோடீசுவரர்களின் பட்டியலில் கொண்டுபோய் குந்த வைத்திருக்கிறது; பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக இந்தியாவை மாற்றியிருக்கிறது.

நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு உபரி நிலம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்ப நில உச்சவரம்புச் சட்டமும், நிலச் சீர்திருத்த சட்டமும் அமல்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் காங்கிரசு உள்ளிட்டு எந்தவொரு ஓட்டுக்கட்சியும் வாயளவில்கூட இன்று ஏற்றுக் கொள்வதில்லை.  மாறாக, நடுத்தர மற்றும் சிறு விவசாயிகளின் நிலங்களை அபகரிப்பதுதான் இக்கட்சிகளின், இந்திய அரசின் கொள்கையாக உள்ளது. தனியார்மயம்-தாராளமயத்தின் ஆன்மாவாக இருக்கும் இந்த நில அபகரிப்புக்கு எதிராக விவசாயிகள் ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது.  இந்த நெடிய போராட்டத்தில் சிங்குரிலும், நந்திகிராமிலும், நியம்கிரியிலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குக் கிடைத்துள்ள வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை என்றபோதும், அவற்றை தற்காலிகமானதாகக் கருதமுடியுமே தவிர, இறுதி வெற்றியாகக் கொள்ள முடியாது என்பதை விவசாயிகள் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணமிது.

– திப்பு.

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

  1. ட்கேரளாவில் நெடுஜ்சாலை ஒரத்தில் போடும் போது, தமிழகதில் ஏன் போடக்கூடது ? Because Kerala people are more aware of their rights and their media (newspaper / tv ) cannot be manipulated…

  2. இந்த பிரச்சனையை குறித்து பலரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு நன்றி…
    இன்னம் கொஞ்சம் ஆழமாக எழுதி இருக்கலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க