முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஸ்டெர்லைட் தீர்ப்பு : நீதி கொன்ற உச்ச நீதிமன்றம் !

ஸ்டெர்லைட் தீர்ப்பு : நீதி கொன்ற உச்ச நீதிமன்றம் !

-

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் தாமிர உருட்டாலையை மூடச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் அளித்த தீர்ப்பை முழுமையாக ரத்து செய்து 02.04.2013 அன்று தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம். தமிழக அரசு கடந்த மாரச் மாதம் 30-ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதையடுத்த இரண்டாவது நாளே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதை முரண்நகை என்றுதான் கூற வேண்டும். எனினும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் “இந்தத் தீர்ப்பு தமிழக அரசின் ஆணையைக் கட்டுப்படுத்தாது” என்று விளக்கமளித்து, தமது முகத்தில் வழிந்த அசடைத் துடைத்துக் கொண்டனர்.

கடந்த மார்ச் 23 அன்று அதிகாலை நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய கந்தக-டை-ஆக்சைடு என்ற நச்சு வாயு, அவ்வாலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் தூர அளவிற்குப் பரவியதையடுத்து, பொதுமக்கள் பலருக்கு மூச்சுத் திணறல், மூக்கரிப்பு, கண் எரிச்சல், தொண்டை வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. அப்பகுதியில் இருந்த பல மரங்கள் கருகிப் போயின. நச்சு வாயுவால் பாதிக்கப்பட்ட பலரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளிக்க வேண்டிய அளவிற்கு நிலைமை விபரீதமாக இருந்தது. அன்று காலை பத்து மணி வரையிலும் தூத்துக்குடி நகரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது.

தூத்துக்குடி விஷவாயு கசிவு
விஷவாயுக் கசிவு ஏற்படுத்திய பீதியோடு இயங்கும் தூத்துக்குடி நகரச் சந்தை.

அவ்வாலையிலிருந்து அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக கந்தக-டை-ஆக்சைடு வெளியேறுவது இது முதல் முறையல்ல என்றும் இதற்கும் முன்னதாக 82 முறை இப்படி விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு இப்பொழுது கூறியிருக்கிறது. அப்பொழுதெல்லாம் வேடிக்கை பார்த்து வந்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், இப்பொழுது ஆலையை மூட உத்தரவிட்டுள்ளதன் பின்னே, ஜெயாவின் ஓட்டுப் பொறுக்கும் தந்திரம் ஒளிந்துகொண்டிருப்பதை மறுத்துவிட முடியாது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக சென்னையிலுள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் தொடுத்திருந்த வழக்கு தற்போது திடீரென, மர்மமான பின்னணியில் டெல்லியிலுள்ள பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த விஷவாயுக் கசிவும், அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கவனத்திற்கு வராமல் போயிருக்காது. இதற்குப் பிறகும் உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்திருப்பது, நீதிபதிகளின் அறிவு நாணயம்தான் கந்தக-டை-ஆக்சைடு என்ற நச்சு வாயுவைவிட அபாயகரமானது என்பதை நமக்குப் புரியவைக்கிறது.

ŽŽŽதூத்துக்குடியை ஒட்டிய கடற்பகுதியில் அமைந்துள்ள மன்னார் வளைகுடாவிலுள்ள 21 தீவுகளைத் தமிழக அரசு 1986-ஆம் ஆண்டில் தேசியக் கடல் பூங்காவாக அறிவித்தது. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விதிகளின்படி தூத்துக்குடி பகுதியில் அமையும் எந்தவொரு ஆலையும் தேசியக் கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீட்டருக்கு அப்பால்தான் அமைய வேண்டும். ஆனால், தூத்துக்குடி சிப்காட் தொழில்பூங்காவில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீட்டர் தொலைவில்தான் கட்டப்பட்டு, இயக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டம், பேரணி
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விஷவாயுக் கசிவு ஏற்பட்டதையடுத்து, அவ்வாலையை மூடக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலர் வை.கோ. தலைமையில் தூத்துக்குடி நகரில் நடந்த ஆர்ப்பாட்ட பேரணி (மேல்படம்); ஆலையை முற்றுகையிடச் சென்ற பொதுமக்களை வழி மறிக்கும் போலீசு.

காற்று மாசுபடுவதைத் தடுப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தினுள் 250 மீட்டர் சுற்றளவு கொண்ட பரப்பில் பசுமை வளையம் அமைக்க வேண்டும் என்ற விதியையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் பின்பற்றவில்லை. 50 கோடிக்கு மேல் மூலதனம் போடப்பட்டு தொடங்கப்படும் எந்தவொரு ஆலைக்கும் அரசு அனுமதி வழங்குவதற்கு முன்பாக, அது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற விதியும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை.

தேசிய சுற்றுப்புறச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் 2005-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குறித்து அளித்த அறிக்கையில், “அக்கழிவுகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் மேலாக தாமிரம், ஆர்சனிக், காட்மியம், ஈயம் ஆகிய கன உலோகங்கள் காணப்படுவதாகவும், இது ஆலையின் சுற்றுப்புறத்திலுள்ள நிலத்தை மாசுபடுத்தியிருப்பதாகவும்” குறிப்பிட்டிருந்தது. சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு தொடர்பான இந்த விதிமுறை மீறல்கள் மற்றும் ஸ்டெர்லைட் வெளியேற்றும் ஆலைக்கழிவுகளால் நிலமும் நிலத்தடி நீரும் மாசடைந்து போயிருப்பது ஆகியவற்றைக் குறிப்பிட்டுத்தான் சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இக்காரணங்களை உச்ச நீதிமன்றத்தால் ஒதுக்கித் தள்ள முடியவில்லை. எனினும், சுற்றுப்புறச்சூழல் சட்டத்தின் சந்துபொந்துகளுக்குள் புகுந்துகொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. “தமிழக அரசு மன்னார் வளைகுடாவைத் தேசியக் கடல் பூங்காவாக அறிவித்திருப்பதை மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் இன்னும் அங்கீகரிக்கவில்லை” என்ற மொன்னையான காரணத்தை முன்வைத்து, ஸ்டெர்லைட் ஆலை அதே இடத்திலேயே தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி அளித்திருக்கிறது. இதன் மூலம் சட்டவிரோதமாக ஸ்டெர்லைட் இயங்கிவருவதைச் சட்டபூர்வமானதாக ஆக்கிவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே அமைந்துள்ள மேலவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய பகுதிகளில் கிடைக்கும் நிலத்தடி நீர், அவ்வாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீராலும் திடக்கழிவுகளாலும் மாசடைந்துவிட்டது; புற்று நோய், சுவாசக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு ஆகிய கொடிய நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதற்கும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளுக்கும் தொடர்பிருப்பதாக அந்நகர மக்கள் கருதுகிறார்கள். இந்தக் காரணங்களை முன்வைத்துதான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தூத்துக்குடி நகர மக்களும் மீனவர்களும் கோரி வருகிறார்கள்.

ஸ்டெர்லைட் மீதான இக்குற்றச்சாட்டுகளையும் உச்ச நீதிமன்றம் மறுக்கவில்லை. அதன் தீர்ப்பில், “ஸ்டெர்லைட் ஆலை 1997-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு முடிய அரசின் முறையான அனுமதியின்றி இயங்கி வந்திருக்கிறது. இந்த ஆண்டுகளில் பல்வேறுவிதமான சுற்றுப்புறச் சூழல் கேடுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவில் பொய்யான தகவல்களை அளித்து, உண்மையை மூடிமறைத்திருக்கிறது” என ஸ்டெர்லைட்டின் குற்றங்களைப் பட்டியலிட்டுள்ள உச்ச நீதிமன்றம், “இதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட முடியாது. அப்படிச் செய்வது பொதுநலனுக்கு உகந்ததாக இருக்காது” எனக் கூறி, ஸ்டெர்லைட்டுக்குப் பொது மன்னிப்பு அளித்துவிட்டது.

தூத்துக்குடியின் சுற்றுப்புறச் சுழல் மற்றும் அந்நகர மக்களின் நலவாழ்வு ஆகியவற்றைவிட வேறென்ன பொது நலன் இருந்துவிட முடியும்? இக்கேள்விக்கு, “ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் இந்தியாவின் தாமிர உற்பத்தி பாதிக்கப்படும்; தமிழக அரசின் வரி வருமானமும் தூத்துக்குடி துறைமுகத்தின் வருமானமும் குறைந்து போகும்” எனப் பூச்சாண்டி காட்டியிருக்கிறார்கள், நீதிபதிகள். சுருக்கமாகச் சோன்னால், கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கச் சொல்கிறது, உச்ச நீதிமன்றம். இதுவொருபுறமிருக்க, “ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட்ட கதையைப் போல, ஸ்டெர்லைட் ஆலையை மூடினால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என முதலைக் கண்ணீர் வடிக்கவும் உச்ச நீதிமன்றம் தயங்கவில்லை.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிடுவது போல ஸ்டெர்லைட் ஒன்றும் யோக்கியமான நிறுவனமல்ல. ஸ்டெர்லைட் அரசுக்குச் செலுத்த வேண்டிய 738 கோடி ரூபாய் பெறுமான சுங்க வரியைக் கட்டாமல் ஏய்த்திருப்பது கடந்த 2010-ஆம் ஆண்டு அம்பலமாகி, அந்நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வரிஏய்ப்பு ஒருபுறமிருக்க, அவ்வாலை ‘அனுமதிக்கப்பட்ட’ அளவிற்கும் மேலாகக் கள்ளத்தனமான முறையில் தாமிரம், கந்தக அமிலம் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருவதும் அம்பலமாகியிருக்கிறது. இந்தக் கள்ள உற்பத்தியின் மூலம் ஸ்டெர்லைட் சுருட்டியிருக்கும் கருப்புப் பணம் எத்தனை ஆயிரம் கோடி இருக்குமோ?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட 1994-ஆம் ஆண்டு தொடங்கி 2004-ஆம் ஆண்டு முடிய அவ்வாலையில் நடந்துள்ள வாயுக்கசிவு உள்ளிட்ட பல்வேறு விதமான விபத்துக்களில் சிக்கி 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். இப்படி உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, ஸ்டெர்லைட் ஆலையின் மொத்த வருமானத்தில் வெறும் 1 சதவீதத்திற்கும் குறைவான தொகைதான் சம்பளமாகவும் கூலியாகவும் தரப்படுகிறது. ஒரு ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தரப்படும் இந்த அற்பமான கூலிக்காக இலட்சக்கணக்கான மக்களின் உடல் நலமும் மீனவர்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியுமா?

07-sterlite-3

2007-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் தாமிர உற்பத்தி 9.97 இலட்சம் டன்னாக அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்தியாவின் மொத்த தேவையோ ஆண்டிற்கு 4 இலட்சம் டன்கள்தான். ஏற்றுமதி நோக்கத்திற்காகவே உள்நாட்டுத் தேவையைவிட அதிகரித்த அளவில் தாமிர உற்பத்தி நடந்து வருகிறது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால் இந்தியாவில் தாமிர தட்டுப்பாடு ஏற்படும் என உச்ச நீதிமன்றம் வாதாடுவதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரித் தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக, காலதாமதமின்றித் தீர்ப்பு வழங்கிவிடவில்லை. ஏறத்தாழ 14 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகுதான் அந்நீதிமன்றம் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பை 2010-ஆம் ஆண்டு அளித்தது. ஆனால், இத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ஸ்டெர்லைட் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த மறுநாளே, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதித்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது, உச்ச நீதிமன்றம்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தேசிய சுற்றுப்புறச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் ஆகியவை ஸ்டெர்லைட் ஏற்படுத்திய சுற்றுப்புறச் சூழல் கேடுகளுக்காக அதனைத் தண்டிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திடம் பரிந்துரைக்கவில்லை. மாறாக, அந்நிறுவனங்கள் சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்க 30 பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தின் மூலம் ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்தன. இதுவொருபுறமிருக்க, ஸ்டெர்லைட் நிர்வாகம், தனது ஆலையில் சட்டவிரோதமான முறையில் கள்ளத்தனமாக நடத்திவந்த உற்பத்தியைச் சட்டபூர்வமாக்குவதற்குத் தேவையான அனுமதிகளையும் ஒவ்வொன்றாக வழக்கு நடந்துவந்த சமயத்திலேயே அரசிடமிருந்து பெற்றுவந்தது. இதற்கு மாசுக் கட்டுப்பாடு துறை மட்டுமின்றி, உச்ச நீதிமன்றமும் எவ்விதமான மறுப்பையும் தெரிவிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தன. மேலும், “இந்த 30 பாதுகாப்பு நடவடிக்கைகளுள் 29 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன” எனத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, ஸ்டெர்லைட்டை ஒரு பொறுப்புள்ள நிறுவனமாகக் காட்டவும் எத்தனித்துள்ளது, உச்ச நீதிமன்றம். ஆனால், இதுவொரு மோசடி என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு ஒரு வாரம் முன்னதாக ஆலையில் நடந்த விஷவாயுக் கசிவு விபத்து அம்பலப்படுத்திவிட்டது.

இவையனைத்தும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு உச்ச நீதிமன்றம் நடந்துகொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகின்றன. அதேசமயம், தனது இந்த உள்நோக்கம் பச்சையாக வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ஸ்டெர்லைட் ஆலை கடந்த 15 ஆண்டுகளில் ஏற்படுத்திய சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளுக்கு 100 கோடி ரூபா அபராதம் விதித்து, தன்னை யோக்கியனாகக் காட்டிக் கொள்ள முயன்றுள்ளது.

இது தீர்ப்பல்ல; கட்டப் பஞ்சாயத்து. குற்றவாளிகளுக்கு அபராதம் விதித்து, அவர்களைத் தப்பவிடும் கிராமப்புற நாட்டாமைகளின் தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எள்ளளவும் வேறுபாடு இல்லை.

“இனி எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் அற்பமான சட்டவிதிமுறைகளைக்கூடப் பின்பற்றாமல் தமது ஆலைகளை நடத்தலாம்; காற்றையும், நிலத்தையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தலாம்; 100 கோடி அல்லது 200 கோடி என ஒரு அற்பமான தொகையை அபராதமாகச் செலுத்திவிட்டு, தமது குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்” என்ற அபாயகரமான எதிர்காலத்தைத்தான் உச்ச நீதிமன்ற நாட்டாமைகள் அளித்துள்ள தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

– செல்வம்.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________