Friday, September 20, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மருத்துவ வசதி கேட்டு தடையை மீறி போராட்டம் !

மருத்துவ வசதி கேட்டு தடையை மீறி போராட்டம் !

-

புலிகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரி விவசாயிகள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம் !

தரும்புரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் புலிகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தக் கோரி விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக போலீசு அனுமதி மறுத்ததை அடுத்து தடையை மீறி 25.5.2013 அன்று சனிக்கிழமை காலை 11 மணி அளவில் புலிகரை பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக அரசே!

  • புலிக்கரை அரசு சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்து !
  • புலிக்கரை அரசு மருத்துவ நிலையத்திற்கு மகப்பேறு மருத்துவர் உட்பட நான்கு மருத்துவர்களை நியமி !
  • இரத்தப் பரிசோதகர், மருந்தாளுனரை நியமி! போதிய மருந்து, மாத்திரை, படுக்கைகள் போன்ற மருத்துவ வசதிகளை அதிகமாக்கு !

உழைக்கும் மக்களே !

  • மருத்துவம் நமது பிறப்புரிமை ! மருத்துவம் வழங்குவது அரசின் கடமை ! இதைப் பெற வீதியில் இறங்கி போராடுவோம் !

1970-களில் கொண்டு வரப்பட்ட ‘பசுமைப் புரட்சி’ என்ற திட்டத்தின் மூலம் இந்திய விவசாயிகள் மீது உரம், பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள்,  மருந்துகள் ஆகியவை திணிக்கப்பட்டன. அதன் விளைவாக உணவுப் பொருட்களில் மருந்துகள் கலந்து நோய்கள் அதிகரித்து விட்டன. உரங்கள், ரசாயன மருந்துகள் பயன்படுத்தாமல் விவசாயம் செய்ய முடியாத நிர்ப்பந்தத்திற்கு விவசாயிகளை அரசும், உர முதலாளிகளும் தள்ளியுள்ளனர். அதனால் நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

நோய்களின் எண்ணிக்கை, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்றவாறு அரசு மருத்துமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையும், செவிலியர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்படவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக் குறையால் நாடு முழுக்க உள்ள அரசு மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது ஏதோ தானாக நடப்பதில்லை. இதுதான் அரசு மக்களுக்கு சேவை செய்வதன் யோக்கியதை. அரசு பள்ளிக் கல்லூரிகளில் கட்டிடம் உள்ளது. ஆனால் போதிய ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இல்லை. ரேசன் கடைகள் உள்ளன. ஆனால் அரிசி, சீமெண்ணை, பருப்புகள் கிடையாது என்று ரேசன் கடையை இழுத்து மூடி வருகிறது அரசு. மின்வாரியம் இருக்கிறது. ஆனால் மக்களுக்கு மின்வெட்டு. குடிநீர் வாரியம் உள்ளது. ஆனால், மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு. அனைத்து சேவை துறைகளிலும் இதுதான் நிலைமை.

“காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை, காசு இல்லாதவனுக்கு குடிநீர் இல்லை, காசு இல்லாதவனுக்கு உணவுமில்லை, மருத்துவமும் இல்லை. மக்களுக்கு சேவை செய்வது அரசின் பொறுப்பும் இல்லை” இதுதான் அரசின் புதிய பொருளாராதர் கொள்கை. அதாவது மக்களை கொள்ளையடிக்க அனைத்தும் தனியார் மயம். நூற்றுக்கணக்கான தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் தண்ணீர் நிறுவனங்கள் அனைத்துமே தனியாரிடம் விடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உலகிலேயே வறுமையில் முதலிடத்தில் உள்ள நமது நாட்டில்தான் நடக்கின்றன. இதுதான் சுதந்திரம் பெற்று விட்டதாக மக்களை 66 ஆண்டுகளாக ஏமாற்றி வரும் ஆட்சியாளர்களின் ‘சாதனை’. பன்னாட்டு முதலாளிகள் கூட்டு சேர்ந்து நம்மை கொள்ளையடிக்க செய்த தந்திரம்தான் 1947 ஆகஸ்ட் 15 போலி சுதந்திரம். எனவே சாதி, மதம், மொழி கடந்து ஓட்டுப் பொறுக்கி எட்டப்பர்களை புறக்கணித்து ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே நாம் உயிர் வாழ முடியும். ஒன்றுபட்டு வாழ்வுரிமைக்காக போராட வேண்டும்.

ருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் புலிகரை என்ற கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு தினசரி 300-க்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர். இது மட்டுமல்ல, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே, புலிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் அதிகமான பிரசவங்கள் நடைபெற்று முதலிடத்திள் உள்ளது. இப்படிப்பட்ட மருத்துவமனைக்கு ஒரு மருத்துவர்தான் உள்ளார். அதுவும் பகலில் மட்டும்தான். செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மூன்று மருத்துவர்கள் இருக்க வேண்டும். இச்சுகாதார நிலையத்திற்கு 30 படுக்கைகள் இருக்க வேண்டும். ஆனால், எதுவும் இல்லை. ஒரு மகப்பேறு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு செவிலியர் மட்டுமே உள்ளார். மேலும் மருந்தாளுனர் இல்லை, இரத்தப் பரிசோதகர் இல்லை. ஓபி சீட்டு கொடுக்க ஆளில்லை. விஷக்கடிக்கு மருந்து இல்லை. எதுவும் இல்லை, கட்டிடம் மட்டும் உள்ளது.

இதை கண்டித்து புலிகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தக் கோரி போராட விவசாயிகள் விடுதலை முன்னணி முடிவு செய்தது. தோழர்கள் பிரசுரம் அச்சிட்டு புலிக்கரை கிராம சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். சுவரொட்டிகள் அச்சிட்டு கிராமப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தனர்.

மே 22-ம் தேதி ஆர்ப்பாட்டத்தை நடத்த 18-ம் தேதியே ஒலிபெருக்கி அனுமதிக்க விண்ணப்பித்தனர். 20-ம் தேதி வரை அனுமதி பற்றி எந்த தகவலையும் போலீசு தெரிவிக்கவில்லை. அனுமதி கொடுத்தாலும் திடீரென ஆயிரக்கணக்கில் பணம் திரட்டி நடத்த இயலாது என்பதால் 20-ம் தேதி அன்று போலீசிடம் 24-ம் தேதிக்கு ஆர்ப்பாட்டத்திற்கு ஒலிபெருக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டனர். 23-ம் தேதி மதியம் ‘ஆர்ப்பாட்டத்திற்கு ஒலிபெருக்கி அனுமதி கிடையாது, அரை மணி நேரம்தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தனர். இதற்கு தோழர்கள் உடன்படாததால் டிஎஸ்பியை சந்தித்தனர். டிஎஸ்பி ஒலிபெருக்கி வைத்துக் கொள்ளுங்கள், ஒலி அளவை குறைத்து வைத்து நடத்துங்கள் என்று கூறினார். 24-ம் தேதி போலி கம்யூனிஸ்ட் கட்சியின் நாடு தழுவிய ‘அடையாள’ மறியல் போராட்டம் நடக்கவிருப்பதால் 25-ம் தேதிக்கு அனுமதி தருமாறு கூறினார்.

அதனை போலீசிடன் மீண்டும் கூறிய போது, “40 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள், ஒலிபெருக்கி அனுமதி இல்லை. மீறிவைத்தால் சீல் பண்ணி விடுவோம்” என்று அதிகாரத் திமிரில் பேசினர்.

ஒரு வாரம் இழுத்தடித்து, இழுத்தடித்து அனுமதி தராமல் நிபந்தனைகள் போடுவதைக் கண்டு தோழர்கள் கொதிப்படைந்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் “நல்ல கோரிக்கையை கையில் எடுத்திருக்கீங்க, ஆர்ப்பாட்டம் செய்யுங்க, நாங்களும் வருகின்றோம்” என்று கூறி நிதியும் கொடுத்து உதவி செய்தனர். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆர்ப்பாட்டத்தை எதிர்பார்த்தனர். 25-ம் தேதி திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்த தோழர்களை அணிதிரட்டினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு போலீசு ஒலிபெருக்கி அனுமதிக்காததாலும், 40 நிமிடம்தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தாலும், அதற்கு உடன்பட்டு அனுமதிக்கு சென்ற தோழர் கையெழுத்து போடவில்லை. அதனை காரணம் காட்டி 24-ம் தேதி இரவு 10 மணிக்கு போன் செய்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேன்சல் என்று கூறினர். அனுமதி மறுக்கப்பட்டாலும் ஆர்ப்பாட்டத்த நடத்த வேண்டும் என்று முடிவு செய்து 25-ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபெருக்கி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போலீசு அனுமதி மறுக்கப்பட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் இராமலிங்கம் தலைமை தாங்கினார். விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டக் குழு உறுப்பினர் தோழர் கோபிநாத், வட்டச் செயலாளர் தோழர் சிவா ஆகியோர் உரையாற்றினார்கள். அவர்கள் தங்கள் உரைகளில் கூறியதாவது :

  • கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகளிடம் உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், ரசாயன மருந்துகள் திணிக்கப்பட்டுள்ளன. ஆனால் உணவுப் பொருட்களில் ரசாயன மருந்துகள் கலந்து மக்களுக்கு நோய்கள் அதிகரித்துள்ளன.
  • நோய்கள் அதிகரித்துள்ளதை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் ஏற்றவாறு அரசு மருத்துவமனைகளின் தரம் இல்லை.
  • புலிகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்தான் தருமபுரி மாவட்டத்திலேயே அதிகமான பிரசவங்கள் நடைபெறுகின்றன ஆரம்ப சுகாதார நிலையமாக இருக்கின்றது.
  • அதற்கு தகுந்தாற் போலவும், புற நோயாளிகளின் வருகைக்கு ஏற்ற வகையிலும் புலிக்கரை மருத்துவமனையை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும்.
  • 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகவும், 24 மணி நேரம் மருத்துவர் பணியாற்றுமாறும் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
  • பெண் மகப்பேறு மருத்துவர்களை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றுமாறு நியமிக்க வேண்டும்.
  • கூடுதலான மருத்துவர்கள், செவிலியர்கள்,  சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். 24 மணி நேரமும் இரத்தப் பரிசோதனை, மருந்தாளுனர் பணியாற்றுமாறு நியமனம் செய்ய வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புலிகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தக் கோரியும் கூடுதலான மருத்துவர்கள் – செவிலியர்கள் – சுகாதாரப் பணியாளர்களை நியமிக்கக் கோரியும் முழக்கமிட்டனர்.

விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டக்குழு உறுப்பினர் தோழர் மாரியப்பன் நன்றியுரை கூறினார்.

அனுமதி மறுக்கப்பட்ட பின்பும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று தகவல் கிடைத்தும் ஒரு போலீசு கூட வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. “அனுமதி கொடுக்கா விட்டாலும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள் என்றால் அது பெரிய விஷயம்தான். அதனை நாம் பாராட்ட வேண்டும்” என்று பலர் கூறினர். இந்த ஆர்ப்பாட்டம்  புலிக்கரை பகுதியில் பெரும் வரவேற்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல் :
செய்தியாளர்
புதிய ஜனநாயகம், தருமபுரி

  1. பெருவாரியான உழைக்கும் மக்கள் கிராமப்பகுதியில் அடிமைகள் போலவே வாழ்வேண்டியுள்ளது.இந்த மக்களுக்கு சேவை செய்யவேண்டிய அரசுப்பள்ளிகள், மருத்துவநிலையங்கள், மின்வாரியம், நீர்வழங்குதல், போக்குவரத்து துறை என யாவும் சீரழிந்து கிடப்பதால் மக்களுக்கு இந்த சேவைகள் மறுக்கப்படும் நிலையை நோக்கிச் செல்லுகின்றன.உலக வங்கி இலவச சேவைகளை நிறுத்த இடும் ஆணைகளை இங்குள்ள ஆள்வோர் செய்கின்றார்கள்.யாரை நம்பியும் பலனில்லை. மனுக்கள் கவனிக்கப்படுவதில்லை. நீங்கள் எடுத்துள்ள நேரடி நடவடிக்கை ஊர்தோறும் பரவவேண்டும். எங்கும் இதே கதிதான்.போராட்டத்தை ஒருங்கிணைத்த தோழர்களுக்கு பாராட்டுகள்.

  2. இது ஏதோ தானாக நடப்பதில்லை. இதுதான் அரசு மக்களுக்கு சேவை செய்வதன் யோக்கியதை. அரசு பள்ளிக் கல்லூரிகளில் கட்டிடம் உள்ளது. ஆனால் போதிய ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இல்லை. ரேசன் கடைகள் உள்ளன. ஆனால் அரிசி, சீமெண்ணை, பருப்புகள் கிடையாது என்று ரேசன் கடையை இழுத்து மூடி வருகிறது அரசு. மின்வாரியம் இருக்கிறது. ஆனால் மக்களுக்கு மின்வெட்டு. குடிநீர் வாரியம் உள்ளது. ஆனால், மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு. அனைத்து சேவை துறைகளிலும் இதுதான் நிலைமை. அரசியல் சட்டங்கள் மக்களுக்கு என்று சொல்லப்படுகிறது ஆனால் மக்களுக்கு எதிராக நடத்தபடுகிறது.நாம் தேர்ந்தெடுப்பவர்கள் நமக்காக வெலை செய்யவேண்டும் என்று நினைக்கிரோம் ஆனால் அப்படி நடப்பதில்லை என்ன செய்வது மாத்தனும் மக்கள் மனசயும் இந்த மண்னயும்.இதற்கு கம்யூன் கொள்கையும், கச்சியும் தான் சரியானது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க