privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைகாலிக்குடங்களில் நிரம்பி வழிகின்றன பழங்கதைகள் !

காலிக்குடங்களில் நிரம்பி வழிகின்றன பழங்கதைகள் !

-

08-lossகாலிக்குடங்களில்
நிரம்பி வழிகின்றன
பழங்கதைகள்…

சிறுமீன் உலவும்
ஆற்றின் கரையோரம்
செவுள்கள் உமிழும்
குமிழிகள் விலக்கி,
சில்லிடும் காற்றில்
மேல்நீர் துலக்கி
ஒரு கை அள்ளிப் பருகி,
குடத்தின் வாயில்
ஆற்றை அடக்கித் தூக்கிடும்
பெண் இழுத்திடும் மூச்சில்
நெத்திலி சிதறி ஓடும்.

கருவறையிலும்
தெரு வரையிலும்
நீர்க்குடம் சுமப்பது
நீங்காத பெண்கள்,
காலந்தோறும்
தண்ணீர்க்குடம் சுமந்தே
காய்த்தனர் இடுப்பெலும்பு.

நல்ல தண்ணீருக்காக
பெண்கள் பட்ட பாட்டை
நன்றியுடன் நினைப்பது போல்
தானூறும் நீர்நிலைகள்.
ஆறு கரையொதுக்கும்
நினைவலைகள்.

வண்ணார் அடித்துத் துவைக்கும்
ஆற்றுக்கல்லில் எழும் ஓசை
அக்கரையில் எதிரொலித்து
மேகம் வெளுக்கும்.
அழுக்குத் துணிகளின் அலறல்களில்
ஊரின் சாயம் போகும்.

குடிக்கும் நீரை
முத்தமிட்டுக் கொஞ்சுதல் போல்
பசுவின் வாய்
தண்ணீர் தழுவும்.

ஓடும் நீர் மடியுரச
பாலொடு சேர்த்து
பல்லுணர்ச்சி சுரக்கும்.
நீர்த் திவலைகள் மேல்
மென்கால் உரசி நின்று
நாரைகள் முகம் நனைக்கும்.

கரையோரம் காதலாய்க்
கவிழ்ந்த புன்னை
தன் நிழலாலும்
நீர் பருகும்.

அடிசுடும் நாளிலும்
கோடெனத் திரியும்
ஆற்றின் தெளிநீரில்
களைத்த சூரியன் இளைப்பாறும்.

முழுமுகம் பார்க்க
முயற்சித்து முயற்சித்து,
பொடிமணல் அகழ்ந்து
பெண்கள் தோண்டிய ஊற்றில்
நிலவு ஊறித் திளைக்கும்.

தண்ணீரைத் தாராளமாய்ப்
பங்கிட்டுக் கொண்ட
இயற்கையின் மெய்ப்பொருள் தொலைந்து
தலைமுறைத் தாகம் தீர்த்த
எங்கள் ஆறு
இப்போது வேலிக்கருவை முள்ளில்
செத்துக் கிடக்குது.

காரணமறியா அதன் தலை மேல்
நாடு வல்லரசாகும் திட்டத்தின் கீழ்
வனப்போடு போடப்பட்ட பாலத்தில்
அதோ… கேன்…. கேனாய்…
பெப்சி, அஃவாபினா வண்டி ஓடுது!

– துரை. சண்முகம்.
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________