Tuesday, October 15, 2024
முகப்புஉலகம்அமெரிக்காகம்போடியா : மேற்குலகிற்கு நாங்கள் என்ன செருப்பா ?

கம்போடியா : மேற்குலகிற்கு நாங்கள் என்ன செருப்பா ?

-

ம்போடியாவில் ஆயிரத்திற்கும் அதிகமான ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் மோசமான பணிச் சூழலை எதிர்த்து போர்க்குணத்துடன் போராடி வருகிறார்கள், அவர்கள் எதிர்த்து போராடும் நிறுவனமான சபரினாவும் அவர்களின் முக்கிய வாடிக்கையாளாரான நைக் நிறுவனமும் கள்ள மவுனம் சாதிக்கின்றன.

கம்போடியா தொழிலாளர்கள்
சபரினா தொழிற்சாலை முன்பு போலீஸ் சூழ அமர்ந்திருக்கும் தொழிலாளர்கள்

ஜூன் மூன்றாம் தேதி கம்போடியாவில் உள்ள தைவான் நாட்டை தலைமையகமாகக் கொண்ட சபரினா எனும் ஆயுத்த ஆடை நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போரட்டத்தை தொடங்கினார்கள். மாதம் 74 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ 4,000) வரை சம்பளமாக பெறும் அவர்கள், நாட்டில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் போக்குவரத்து செலவுகளை கணக்கில் கொண்டு தங்கள் நிறுவனத்திடம் இருந்து மாத சம்பளத்தில் 5 டாலர் முதல் 14 டாலர் வரை உயர்வு கோரினார்கள்.

பேச்சுவார்த்தைகள் எதற்கும் நிறுவனம் முன் வராத நிலையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போரட்டத்தை அறிவித்து சபரினா நிறுவனத்தின் முன் அமைதியாக முழக்கங்கள் இட்டபடி போராடி வந்தனர். இவர்களில் பெரும்பாலனோர் பெண்கள். கம்போடிய அரசு வேலை நிறுத்தம் செய்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க முனைந்தது. போலீசாரின் தடியடியும் கண்ணீர் புகை வீச்சும் தொழிலாளர்களை கோபம் கொள்ளச் செய்தது, போலீசுக்கும் சபரினா தொழிலாளர்களுக்கும் சண்டை மூண்டது.

அரசு நேரடியாக முதலாளிகளுக்கு ஆதரவு தர முக்கியக் காரணம் இருக்கிறது. கம்போடியா விவசாயத்தை மையமாக கொண்ட ஏழை நாடு. ஆனால், விவசாயம் அரசால் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது. பெரும்பாலான விவசாய நிலங்கள் மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு வெளிநாட்டினருக்கு தாரை வார்க்கப்பட்டன. அதனால் மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாய், உதிரிகளாய் திரிந்தனர்.

இதனால் குறைந்த கூலிக்கு வேலைக்கு வரத் தயாராக இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான உழைப்பாளர் பட்டாளம் உருவானது. ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் இதை பயன்படுத்திக் கொண்டன. வால்மார்ட் முதல் லெவிஸ் வரை பல நிறுவனங்கள் தமது ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து வாங்கிச் செல்வதற்கு கம்போடியாவிற்கு படை எடுத்தன. இப்போது 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் வேலை செய்கின்றனர்.

கம்போடிய தொழிலாளர்கள்
மேற்கத்திய நிறுவனங்களுக்கு அடிமை உழைப்பாளிகளாக கம்போடிய தொழிலாளர்கள்.

கம்போடியாவின் பொருளாதாரம் ஆடை ஏற்றுமதியை (மொத்த ஏற்றுமதியில் 75 சதவீதம்) சார்ந்ததாக மாறியது. ஆனால் குறைந்த கூலி, முறையான தொழிலாளர் நல சட்டங்கள் இல்லாமை, மோசமான பணிச் சூழல் என்பதே தொழிலாளர்களின் அவல நிலையாகிவிட்டது. அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த கூலியில் வேலை செய்து கொடுப்பதன் அடிப்படையிலான பொருளாதாரத்தை சார்ந்திருக்கிறது. அதனால் சபரினா நிறுவனத்திற்கு ஆதரவாக உடனே போலீசாரை அனுப்பி தொழிலாளர்கள் மேல் தடியடி நடத்தச் சொன்னது.

கடந்த இரண்டு வருடங்களாக கம்போடியாவில் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. 2012-ம் ஆண்டில் ஆடை உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களால் சுமார் 138 வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இப்பொழுது கம்போடியாவில் சபரினா தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் இந்த ஆண்டில் 48-வது போராட்டம், இது 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் நடந்த மொத்த போராட்டங்களின் எண்ணிக்கையை விட அதிகம்..

வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு எதிர்வினையாக சபரினா 300-க்கும் அதிகமான தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது, அரசு 8 தொழிலாளர்களையும், தொழிற்சங்க ஊழியர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

சபரினா நிறுவனம் அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனங்களான நைக், கேப் (GAP), லெவிஸ் போன்றவற்றை தன் வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது. சம்பள உயர்வு கொடுப்பதற்கு நைக் நிறுவனத்தை கை காட்டுகிறது சபரினா. சபரினா போன்று நூற்றுக் கணக்கான நிறுவனங்களை உலகின் பல நாடுகளில் கையாண்டு வரும் நைக் நிறுவனமோ இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் நடந்து கொள்கிறது. அமெரிக்காவில் உயர் ஊதியம் கொடுப்பதை தவிர்ப்பதற்கு கம்போடியா வந்துள்ள நைக் நிறுவனம், கம்போடிய தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டால் இன்னொரு ஏழை நாட்டை தேடுவதுதான் அவர்களது வணிக அறம்.

கம்போடியா இன்னொரு பங்களேதேஷ் என்பது நிரூபணமாகி வருகிறது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தொழிலாள்ர்கள் போராட்டங்களின் மூலம் கவுரவமான ஊதியத்தையும், தரமான பணிச் சூழலையும் பெற்றிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் குறைந்த கூலி உற்பத்திக்காக பங்களதேஷ், கம்போடியா, இந்தியா போன்ற நாடுகளை நோக்கி ஓடின. இந்த ஏழை நாடுகளில் நிலவும் வளைந்து கொடுக்கும் தொழிலாளர் சட்ட நடைமுறைகளும், குறைந்த கூலிக்கு கிடைக்கும் பெரும் எண்ணிக்கையிலான ஏழைத் தொழிலாளர் பட்டாளமும்தான் அவர்களது இலக்கு.

தொழிலாளர் போராட்டங்களின் மூலம் சட்டங்கள் கடுமையாகி, ஊதியம் உயர்த்தப்பட்டால் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர் விரோத சட்டங்களும் குறைந்த கூலிக்கு உழைக்கத் தயாராக இருக்கும் ஏழை மக்களும் உள்ள இன்னொரு நாட்டுக்கு நகர்ந்து விடுவார்கள்.

இதுதான் உலக மயமாக்கம் கொண்டு வந்துள்ள ‘வளர்ச்சி’!

மேலும் படிக்க

பார்க்க

  1. அமைதியாக முழக்கங்கள்

    இப்படியே போற பக்கம் எல்லாம் கொடி நட்டுன நாடு வெளங்கிடும்

    • I know capitalism can make miracles in people life and its changed my life. But funny comrades always blame the successful people for their poverty and in efficiency. Even in china no more communism.

  2. சொந்தமாக பொருள் உற்பத்தி செய்ய தெரியாத , வியாபராம் செய்ய தெரியாத நாடுகளின் கதி இது தான். இந்தியாவின் மென்பொருள் துறையும் இது போன்றதொரு பரிதாபகரமான நிலையை அடையும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க