முகப்புகட்சிகள்காங்கிரஸ்போஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு !

போஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு !

-

01-posco-2டந்த பிப்ரவரி மாதம் முதலாக ஒடிசா மாநிலம், ஜெகத்சிங்பூர் மாவட்டத்தின் தின்கியா பஞ்சாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள், தென்கொரியாவின் ஏகபோக எஃகு நிறுவனமான போஸ்கோவின் நில ஆக்கிரமிப்புக்கும் போலீசின் அடக்குமுறைக்கும் எதிராக “எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்காதே!” எனும் முழக்கத்தோடு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஒடிசாவின் ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் தென் கொரிய எஃகு நிறுவனமான போஸ்கோவின் ஒருங்கிணைந்த எஃகு ஆலையை நிறுவுவதற்காக கடந்த 2005-ஆம் ஆண்டில் ஒடிசா அரசுக்கும் போஸ்கோ நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி போஸ்கோ நிறுவனம், சுமார் 52,000 கோடி ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு 12 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யும் ஆலையையும், அதற்கென ஒரு தனிப்பட்ட மின் உற்பத்தி நிலையம் மற்றும் தனிப்பட்ட துறைமுகம் ஒன்றையும் அமைத்துக் கொள்ளும். இந்த திட்டத்திற்காக ஒடிசா அரசு, 2010-ஆம் ஆண்டுக்குள் தின்கியா, கடகுஜங்கா, நுவாகோன் ஆகிய கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட 4000 ஏக்கர் விளைநிலத்தை போஸ்கோ நிறுவனத்திற்கு அபகரித்துக் கொடுக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. போஸ்கோ திட்டத்தால் தங்களது எதிர்கால வாழ்வு நாசமாக்கப்படுவதை எதிர்த்து இப்பகுதிவாழ் விவசாயிகள் கடந்த எட்டாண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

01-posco-3கடந்த ஜனவரி 31, 2011 அன்று போஸ்கோ திட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அளித்துள்ள ஒப்புதல் செல்லாது என்று 2012 மார்ச் 30 அன்று அதை ரத்து செய்துள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். மேலும், விதிப்படி உள்ளூர் பஞ்சாயத்தின் ஒப்புதலும் இத்திட்டத்துக்கு அளிக்கப்படவில்லை. கடந்த 2005-ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2010-இல் காலாவதியாகி விட்டது. இது தவிர போஸ்கோவிற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இருப்பினும், மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டம் என்று கூறி பிரதமர் அலுவலகமே நேரடியாகத் தலையிட்டுச் செயல்படுத்துவதால், இரட்டிப்பு வெறியோடு நில அபகரிப்பையும் அடக்குமுறைகளையும் கேள்வி முறையின்றி ஏவி வருகிறது, ஒடிசா மாநில அரசு.

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும் பழங்குடியின மக்களும் போராடிய நிலையில், குறிப்பாக சிங்கூர் – நந்திகிராமத்தில் விவசாயிகளின் எழுச்சி பரவிய நிலையில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்து புதிய சட்டத் திருத்த மசோதாவையும், மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கான புதிய சட்ட மசோதாவையும் மைய அரசு கொண்டு வந்தது. இவை நாடாளுமன்றத்தில் நிறைவேறும் முன்னரே ஒடிசாவின் தின்கியா பஞ்சாயத்திலுள்ள கிராமங்களில் பழைய சட்டத்தின் வழியிலேயே – அதே சிங்கூர் பாணி ஆக்கிரமிப்பை கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதியிலிருந்து போலீசையும் புல்டோசர்களையும் கொண்டு நடத்தி வருகிறது ஒடிசா அரசு. போராடும் இம்மக்களின் வாழ்வாதாரமான வெற்றிலைக் கொடிக்கால்களை வேரோடு பிடுங்கி எறிந்து வெறியாட்டம் போட்டுள்ள போலீசு, இக்கிராமங்களின் மக்களை நடமாடக்கூட விடாமல் முடக்கி வைத்துள்ளதோடு, இம்மக்கள் மீது நூற்றுக்கணக்கான பொய்வழக்குகளைப் போட்டு வதைத்து வருகிறது.

01-posco-4இத்தனையும் போதாதென்று, அமைதிவழியில் போராடிவரும் இம்மக்களை வன்முறையாளர்களாகவும், தீவிரவாதிகளாகவும் காட்டி அடக்குமுறையை நியாயப்படுத்தும் நோக்கில் அரசும் போலீசும் ஒரு சதியை அரங்கேற்றின. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி அன்று மாலையில், நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்ற நரகரிசாகு, தருண்மண்டல், மனஸ்ஜெனா மற்றும் லக்ஷ்மன் ப்ரமரிக் ஆகிய செயல்வீரர்கள், அடுத்தகட்டப் பணிகள் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கையில் போஸ்கோ நிறுவனத்தின் கூலிப்படையினர் வெடிகுண்டுகளை அவர்கள் மீது வீசினர். இச்சம்பவத்தில் லக்ஷ்மன் ப்ரமரிக் மட்டும் படுகாயங்களோடு உயிர் தப்பினார். மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே கோரமாகக் கொல்லப்பட்டனர்.

இக்கொடுஞ்செயலை எதிர்த்து இப்பகுதிவாழ் மக்கள் குமுறிக் கொண்டிருந்த நிலையில், “வெடிகுண்டு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில்தான் அவர்கள் 3 பேரும் இறந்தனர்” என்று எழுதப்பட்ட ஒரு வாக்குமூலக் கடிதத்தில் கையெழுத்திட்டுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நள்ளிரவில் வந்து மிரட்டியுள்ளது போலீசு. உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து கையெழுத்திட மறுத்திருக்கின்றனர். மறுநாள் – மார்ச் 3 அன்று இக்கொலைவெறியாட்டத்தைப் பற்றி புகார் கொடுக்கச் சென்ற நரகரி சாகுவின் உறவினரிடமிருந்து புகாரை வாங்க மறுத்து திருப்பி அனுப்பியிருக்கிறது போலீசு. போஸ்கோவின் கைக்கூலி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மார்ச் 4-ஆம் தேதியன்றுதான் முதல் தகவல் அறிக்கையையே போலீசு பதிவு செய்துள்ளது. ஆட்சியாளர்களோ, போலீசு உருவாக்கிய கதையின்படி, போராட்டக் குழுவினர் வெடிகுண்டு தயாரித்த போது நடந்த விபத்தில்தான் மூவரும் இறந்தனர் என்று கூசாமல் புளுகினர். தொடர் போராட்டங்களின் மூலம் இப்பகுதிவாழ் மக்கள் இந்த அபாண்டமான பொய்யை அம்பலப்படுத்தியுள்ளதோடு, பல்வேறு மனித உரிமை-ஜனநாயக அமைப்புகளும் அரசின் அண்டப்புளுகையும் அடக்குமுறைகளையும், போஸ்கோவும் அரசும் கூட்டுச் சேர்ந்து நடத்தியுள்ள சதிகளையும் அம்பலப்படுத்தியுள்ளன.

01-posco-5தொடரும் போலீசின் தாக்குதல்களை எதிர்த்து வெகுண்டெழுந்த இக்கிராமங்களின் பெண்கள், தின்கியா பஞ்சாயத்திலுள்ள கோவிந்தபூர் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசு மற்றும் துணைராணுவப் படைகளை வெளியேற்றக் கோரியும், வெடிகுண்டுகளை வீசி போராளிகளைக் கொன்றொழித்த போஸ்கோவின் அடியாட்களைக் கைது செய்து தண்டிக்கக் கோரியும் மார்ச் 7-ஆம் நாளன்று எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தைக் கொடூரமாக ஒடுக்கிய போலீசு, பெண்களின் ஆடைகளைக் கிழித்து அரை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியது. ஆனாலும், தங்களது போராட்டத்தில் உறுதியாக நிற்கும் பெண்கள், போலீசும் அதன் அடியாட்களும் ஆடைகளைக் கிழித்து பெண்களை அவமானப்படுத்துவதால், இனி முழு நிர்வாணப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அறிவித்தனர். போலீசோ, ஆபாசத் தடைச் சட்டத்தின் கீழ் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியதாகப் பொய்க்குற்றம் சாட்டி போராடும் பெண்களைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது. குண்டுத் தயாரிப்பில் ஈடுபட்டார் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு போஸ்கோ எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைவரான அப சாகு, கடந்த மே 11 அன்று புவனேஸ்வர் விமான நிலையத்தில் கைது செயப்பட்டுள்ளார்.

கிரிமினல் குற்றவாளியாகச் சித்தரிக்கப்படும் அவருக்கு ஒடிசா உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.

இந்திய அரசு மக்களுக்கான அரசோ, ஜனநாயக அரசோ அல்ல; அது பன்னாட்டு மூலதனத்தைக் காப்பதற்காக சொந்த நாட்டு மக்களையே பலியிடும் கார்ப்பரேட் நலன்களுக்கான அரசுதான் என்பதையே ஒடிசாவில் தொடரும் மக்கள் போராட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது. நடந்து கொண்டிருப்பது தனியார்மய-தாராளமயத் தாக்குதல் எனும் மறுகாலனியாதிக்கப் போர். இக்கொடிய போரில் எதிரியை வீழ்த்துவது ஒன்றுதான் நாட்டு மக்களின் முன்னுள்ள ஒரே வழி. தனியார்மய- தாராளமயத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் அரசுக்கு எதிரான போராட்ட ஒற்றுமையைக் கட்டியமைப்பதுதான் இன்றைய அவசர அவசியத் தேவை.
_______________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
_______________________________________________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க