Wednesday, February 21, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கல்வி: கருத்துக் கேட்பு கூட்டம் என்று ஏய்க்காதே !

கல்வி: கருத்துக் கேட்பு கூட்டம் என்று ஏய்க்காதே !

-

தனியார் பள்ளிகளின் இட நிர்ணய கருத்துக் கேட்பு கூட்டம்

கல்வி அதிகாரிகளும் தனியார் பள்ளி முதலாளிகளும் கூட்டுச்சதி !

னியார் பள்ளிகளின் இடவசதி நிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் திருச்சியில் 14.6.2013 காலை நடைபெறும் என்றும் இதில் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள், தாளாளர்கள், பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் பள்ளிக் கல்வித் துறை சார்பாக தினசரி நாளிதழில் 12.6.2013 அன்று செய்தி வெளியானது.

அதனடிப்படையில் 14.6.2013 அன்று திருச்சி தெப்பக்குளம் பிசப் மேல்நிலைப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கான குறைந்த பட்ச இட நிர்ணய வல்லுநர் குழு கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க மேற்படி நிகழ்ச்சி காலை 10 மணிக்கெல்லாம் சென்றோம். கூட்டம் காலை சுமார் 11 மணியளவில் தொடங்கியது.

கூட்டத்தை துவங்கி வைத்து பள்ளி கல்வி இயக்குனர் தேவராஜன் பேசும் போது “2004-ல் அரசு விதித்த கல்விச் சட்டம் 48-ன் படி நிபந்தனைகளை அமுல் படுத்துவதில் உள்ள சிக்கல் பற்றி மட்டுமே பேச வேண்டும். வேறு எதைப் பற்றியும் பேசி நேரத்தை வீணாக்கக் கூடாது” என அறிவுறுத்தி, தனியார் பள்ளி நிர்வாகிகளையும், தன்னார்வலர்களையும் வரவேற்று அமர்ந்தார். பெற்றோர்களையும், மாணவர்களையும் பெயரளவில் கூட வரவேற்று பேசவில்லை. கூட்டத்தில் தாளாளர், பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோரில் தெரிவு செய்யப்பட்ட 5 பேரை மட்டும் பேச அனுமதித்தனர்.

இதில் பள்ளி தாளாளர் ஒருவர் பேசும் போது “எங்கள் குறைகளை தேவனாகிய ராஜனிடம்(கடவுள்) தெரிவிப்போம் அதனாலோ என்னவோ தேவராஜனே எங்களது குறைகளை கேட்க வந்துள்ளார்” என ஆரம்பித்தார். “நாங்கள் சேவை செய்யவே கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தோம். ஆனால் இடவசதி சம்பந்தமான பிரச்சனையால் எங்களின் இந்த சேவையை வழங்க முடியாமல் போய் விடுமோ என பயமாக உள்ளது. இந்த சேவையை வழங்காமல் போனால் நாங்கள் உயிர் வாழவே தகுதியில்லாதவர்களாகி விடுவோம்” எனக் கூறி இட வசதி தொடர்பான ஆணையை தளர்த்திக் கொள்ள மன்றாடினார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக அவர்களே தெரிவு செய்த ஒருவர் பேசினார். ‘கம்பர் மரத்தடில தான் படிச்சாரு, அர்ஜூனன் மரத்தடியில் தான் வில்வித்தை கத்துகிட்டாரு, அண்ணா திண்ணையில் தான் உக்காந்து படிச்சாரு அதனால் படிப்பவர்களுக்கு இடம் ஒரு பிரச்சனையில்லை. எனவே இந்த விசயத்தில் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்” என தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக ஜால்ரா அடித்தார். மற்றொரு பள்ளி தாளாளர் ‘ஐயா, நாங்கள் புலி வாலை புடிச்ச மாரி இருக்கோம் அதனால இந்த ஆணையை தளர்த்தி எங்களை காப்பாத்தணும்” என சாமியே சரணம் என்று காலில் விழுந்தார்.

இதைத்தொடர்ந்து பெற்றோர் தரப்பில் பேசுவதற்கு பெயர் கொடுத்தவர்கள் யாரையும் பேச அனுமதிக்காமல் நன்றியுரையை ஆரம்பித்தனர். உடனே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தை சேர்ந்த தோழர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். “வரவேற்புரையிலும் சரி, கருத்துக் கேட்பதிலும் சரி பெற்றோர்களையும், மாணவர்களையும் உங்க நிகழ்சி நிரல்ல சேக்கவே இல்ல. இது தனியார் பள்ளி நிர்வாகிகளும் அரசும் சேர்ந்து நடத்தும் சதித் திட்டம்” என தோழர்கள் வந்திருந்த அனைவரின் முன்பும் அம்பலப்படுத்தி பேசினர்.

உடனே தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி பொதுச் செயலாளர் நந்தகுமார் அடாவடியாக மேடைக்கு வந்து தோழர்களை பார்த்து “இப்ப நீங்க பேசணும் அவ்வளவுதானே” என்று கூறி ஒருவரை மட்டும் பேச அனுமதித்தனர்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் காவிரி நாடன் பேசினார். “அதிகாரிகளுக்கு இந்த அறையில் ஏ.சி இல்லாத குறையை தனியார் பள்ளி நிர்வாகிகள் பேசியே தீர்த்து வைத்தனர். இந்த கூட்டம் குறித்து எந்த வித விளம்பரமும் முன்கூட்டியே செய்யாமல் இருப்பதையும், பெற்றோர்களுக்கு பேச அனுமதி அளிக்காதது பற்றியும் கண்டித்து கேள்வி எழுப்பினார். உடனே தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி செயலாளர் நந்தகுமார் “இந்த கூட்டம் எங்களுக்கானது நீங்க கருத்து சொல்லணும்னு அவசியமே இல்ல” எனக் கூறி அடாவடித்தனமாக ஒருமையில் பேசினார். அதற்கு இடம் கொடுக்காமல் தோழர் பேசினார்.

“இந்த கூட்டத்தை நடத்துவது பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள். எங்களை பேசக்கூடாது என மேடை ஏறி மிரட்டுவதற்கு தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி செயலாளர் நந்தகுமாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது” என கேள்வி எழுப்பினார். “இந்தக் கூட்டத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவர்கள் பொது நல அமைப்புகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம் என பத்திரிக்கைகளில் அறிவித்திருந்தும் எங்களை பேச அனுமதி மறுத்தது ஏன்?” என்று பேசும் போது கூட்டத்தில் சலசலப்பும் பதட்டமும் நிலவியது.

[சில பத்திரிகை செய்திகள். படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

அதிகாரிகளுக்கு சாதகமாகவே அனைவரும் பேசும் போது, அமைதியாக இருந்து விட்டு உண்மை நிலையை எடுத்துரைத்த போது அவற்றை ஜீரணிக்க முடியாத அதிகாரிகளும், தனியார் பள்ளி முதலாளிகளும், நிர்வாகிகளும் தோழர்களை மிரட்ட ஆரம்பித்தனர். “நீங்க சத்தமா பேசுனா, நாங்க சத்தமா பேச வேண்டிவரும்” என நந்தகுமார் மிரட்ட, “ஒரு கட்டத்தில் பேசாதே, வெளியே போ, கீழே இறங்கு” என தனியார் பள்ளி நிர்வாகிகள் விரட்ட ஆரம்பித்தனர். மறுபுறம் அதிகாரிகள் பேச விடாமல் ஒலிபெருக்கியை நிறுத்தி விட்டு “நீங்கள் பேசுவதை கேட்க முடியாது, இது இடவசதி சம்பந்தமான கூட்டம் தான். நீங்கள் அவுட் ஆஃப் த சப்ஜக்டில் பேசுவதை அனுமதிக்க முடியாது” என்று கூறினர்.

பிறகு தோழர்கள் “கருத்துக் கேட்பு கூட்டம் என்று ஏய்க்காதே! நாடகமாடாதே!” என்று கோஷமிட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினார்கள். பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் ஓடி விட்டனர். இது தனியார் பள்ளி முதலாளிகளும், அதிகாரிகளும் சேர்ந்து நடத்திய சதித்திட்டம், நாடகம் என்பதை அம்பலப்படுத்தி முற்றுகையிடச் சென்றோம். வழக்கம் போலவே காவல்துறை பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். நம்மிடம் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டு ஒளிந்துகொண்ட தேவராஜனையும், அதிகாரிகளையும் பார்க்கச் சென்றனர். ஆனால் யாரையும் பார்க்க முடியாது என அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

2004 கல்விச்சட்டம் 48-ன் கீழ் தமிழக அரசு விதித்த நிபந்தனைகளை 10 ஆண்டுகளாகியும் அமுல் படுத்த மறுக்கின்றன தனியார் பள்ளிகள். தொடர்ந்து கருத்துக் கேட்பு என்ற பெயரில் அரசும், கல்வி அதிகாரிகளும், தனியார் பள்ளிகளும் சேர்ந்து சதி செய்கின்றன. இதன் விளைவாக அடிப்படை வசதிகள் ஏதுமற்ற தனியார் பள்ளிகள் பெட்டிக்கடைகள் போல் பெருகி விட்டன. இதுதான் கும்பகோணம் சம்பவத்திற்கு அடிப்படை. அரசு விதிகளை தனியார் பள்ளிகள் ஏற்க மறுக்கின்றன. அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வக்கில்லாத அரசு கருத்துக் கேட்பு கூட்டம் என்ற பெயரில் மக்களை ஏய்க்கிறது.

7 மாவட்டங்களில் நடத்த வேண்டிய கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒரு மண்டலமாக்கி அவசர கதியில் அறிவித்து தனியார் பள்ளி முதலாளிகளின் இலாபவெறிக்கு பள்ளி மாணவர்களை கொலை செய்யும் கூடாரமாக அங்கீகரித்து செயல்பட கல்வி இயக்குனரகம் இந்த சதித் திட்டத்தை அரங்கேற்றியுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனராக மட்டுமின்றி இந்த கபட நாடகத்திற்கும் இயக்குனராகவும் செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. அந்த வகையில் விதிமுறைகளை மீறிய 800-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பொதுமக்களை திரட்டி போராடுவதே தீர்வாக முடியும் என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்தது.

[புகைப்படங்கள் : படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி (தொடர்புக்கு: 9943176246)
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
(தொடர்புக்கு: 9360107317)
திருச்சி

  1. தமிசகத்தில் அரசு பள்ளிகளை முடக்க ஒரு கூட்டமே உருவாகி உள்ளது. அதற்கு துணை போகும் கல்வி அதிகாரிகள் அரிசி மூட்டைக்குள் புகுந்த எலிகளாக செயல்படுகிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை.எந்த நாயும் மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற சேவை மனப்பான்மைய்டன் கல்வி நிறுவனங்களை உருவாக்கவில்லை.அறிவற்ற மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி போவதற்கு இந்த சி.இ.ஓக்களும், ஓய்வு பெற்ற ஆசிரியரகளும் என்னமாய் உழைக்கிறார்கள்.பல எட்டப்ப ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் கல்வித்துறையை குட்டிச்சுவராக்க தங்கள் சம்பாதித்த பணத்தை தனியார் பள்ளிகளில் முதலீடு செய்து நல்ல பணம் பார்த்து வருகிறார்கள்.கல்வி விபச்சாரம் செய்யும் இவர்களுக்கு மற்ற விபச்சாரம் தெரியவில்லை போலும். நன்றி கேட்ட ___________ என்றைக்கு திருந்தி மாணவர்கள் படிக்க வழிவிடுவார்களோ!அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க