privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்7 கோடி ரூபாயை மறைக்கும் புதிய தலைமுறை டிவி !

7 கோடி ரூபாயை மறைக்கும் புதிய தலைமுறை டிவி !

-

டந்த 18-ம் தேதி சென்னை, திருச்சி, டெல்லி, காசியாபாத், சோனேபேட் (அரியானா), பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள எஸ்ஆர்எம் குழும அலுவலகங்கள், கல்லூரிகள், ஊடக, திரைப்பட நிறுவனங்கள் மற்றும் பச்சமுத்து குடும்பத்தினரின் வீடுகளில் 250 வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்ற சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பச்சமுத்து
பச்சமுத்து

இந்த நடவடிக்கைகளின்போது, ரூ.6.45 கோடி ரொக்க பணமும் நன்கொடை வாங்கிய ஆவணங்கள், செலவு அதிகரித்து காட்டப்பட்ட பதிவுகள், அறக்கட்டளை பணத்தை வேறு இனங்களுக்கு திருப்பிவிடப்பட்ட ஆவணங்கள் சிக்கின. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் எஸ்ஆர்எம் பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து, ரூ 6.45 கோடி பணம் வேந்தர் மூவீஸ் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டது. அந்த நிறுவனம் அவரது கட்சிக்காரர்களால் அவர் பெயரில் நடத்தப்படுவது, அவருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தன் மகளுக்கு எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்குவதற்கு ரூ 30 லட்சம் நன்கொடை கொடுத்ததாக ஒரு தந்தை கொடுத்த புகார் மீது மத்திய புலனாய்வு ஆணையம் கடந்த மார்ச் மாதம் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து, ‘இப்படி கணக்கில் காட்டாமல் நன்கொடை வாங்கினால் அதற்கு வருமான வரி கட்டியிருக்க மாட்டார்களே’ என்று நான்கு மாதங்கள் கழித்து புரிந்து கொண்ட வருமான வரித் துறை இவ்வளவு ‘வேகமான’ இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

சாதாரண பள்ளி ஆசிரியராக இருந்த பச்சமுத்து தனது குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக கொண்ட அறக்கட்டளை மூலம் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமாக 5 வளாகங்களில் செயல்படும் 21 கல்லூரிகளையும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி பத்திரிகைகளையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும், வேந்தர் மூவீஸ் திரைப்பட நிறுவனத்தையும் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக இதைப் பற்றி விசாரணை நடத்தவோ, தேடுதல் நடவடிக்கை எடுக்கவோ வருமான வரித்துறையின் ஆய்வாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தோன்றவில்லை.

எஸ்ஆர்எம் வடபழனி வளாகம்
எஸ்ஆர்எம் வடபழனி வளாகம்

1969-ம் ஆண்டு சென்னை, மாம்பலத்தில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிரைமரி ஸ்கூல் மூலம் கல்விச் சேவையை ஆரம்பித்தார் பள்ளி ஆசிரியராக இருந்த பச்சமுத்து. இன்றைக்கு காட்டாங்கொளத்தூர் ஏரியை ஆக்கிரமித்து உருவாகிய 300 ஏக்கர் வளாகம், ராமாபுரம் ஏரியை ஆக்கிரமித்து உருவாக்கிய 25 ஏக்கர் வளாகம், வடபழனியின் மையப்பகுதியில் அமைந்துள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வளாகம், 2008-ம் ஆண்டு திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள இருங்களூரில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, டெல்லி-மீரட் நெடுஞ்சாலையில் மோதி நகர் வளாகம் ஆகியவை எஸ்ஆர்எம் கல்விக் குழுமத்துக்கு சொந்தமாக உள்ளன.

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் 80% மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிறது அதன் இணையதளம். நிகர் நிலைப் பல்கலைக் கழகமான எஸ்ஆர்எம் தனது கல்லூரிகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான நுழைவுத் தேர்வை தானே நடத்துகிறது. அதில் அவர்களே ‘உருவாக்கும்’ தர வரிசைப்படி மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

‘தர’ வரிசை எண்ணைப் பொறுத்து நன்கொடை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. கல்விக் கட்டணம், பேருந்து கட்டணம், தங்கும் விடுதி கட்டணம் போன்றவற்றுக்கு கட்டண பட்டியல் இருந்தாலும் எந்த படிப்புக்கு எவ்வளவு நன்கொடை என்று அதிகாரபூர்வ பட்டியல் இல்லை. மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக நன்கொடை வாங்குவது சட்ட விரோதமானது. இருந்தாலும் ஒரு பொறியியல் சீட்டுக்கு ரூ 20 லட்சம் வரை, மெடிக்கல் சீட்டுக்கு ரூ 80 லட்சம் வரை, எம்.பி.ஏ. சீட்டுக்கு ரூ 15 லட்சம் வரை என்று சீட்டுகள் ஏலம் விடப்படுகின்றன. யாரிடம் எவ்வளவு நன்கொடை வாங்குவது என்பதை பச்சமுத்து குடும்பத்தினர் மட்டுமே தீர்மானிக்கின்றனர். எஸ்ஆர்எம்மில் குறைந்த செலவில் இடம் வாங்கித் தருவதாக வாக்களிக்கும் ஏஜென்டுகள் பல வட இந்திய நகரங்களில் முளைத்திருக்கின்றனர்.

நாடெங்கிலும் உள்ள உயர் நடுத்தர, நடுத்தர வர்க்கத்தினர் சொத்துக்களை விற்று, நகையை அடமானம் வைத்து பணத்தை கொண்டு கொடுத்து, பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஒரு துண்டுச் சீட்டை வாங்கிக் கொண்டு தமது குழந்தைகளை படிக்க சேர்க்கிறார்கள். நன்கொடைக்கு மேல் கட்ட வேண்டிய கல்விக் கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும் நான்கு வருடத்திற்கு கல்விக் கட்டணமும் மற்ற செலவுகளும் சேர்த்து ரூ 4 முதல் ரூ 6 லட்சம் முதலீடாக போட வேண்டியிருக்கிறது. மருத்துவக் கல்லூரியிலோ இதனை விடவும் லட்சங்களின் எண்ணிக்கை கூடுகிறது.

புதிய தலைமுறை தொலைக்காட்சிஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,000 மாணவர்களை பல்வேறு படிப்புகளில் சேர்த்துக் கொள்ளும் எஸ்ஆர்எம் குழுமம் சேர்க்கை காலங்களில் மட்டும் சராசரியாக குறைந்தது ரூ 200 கோடி கருப்பு பணத்தை கையாளுகிறது என்று மதிப்பிடலாம். இந்தப் பணத்தை திரட்டிக் கொண்டு வரும் பெற்றோர்களும் சரி, அதை வாங்கி பத்திரிகை, தொலைக்காட்சி, அரசியல் கட்சி, நில ஆக்கிரமிப்பு என்று திருப்பி விடும் பச்சமுத்துவும் சரி வருமான வரிச் சட்டங்களை கழிப்பறை காகிதம் போல வேண்டுமானால் மதித்திருப்பார்கள். அதனால்தான் வருமான வரித் துறை அதிகாரிகளும், பல டஜன் அரசுத் துறை கண்காணிப்பாளர்களும் இது வரை விழித்துக் கொள்ளவில்லை.

இதைத் தவிர ஆண்டு முழுவதும் 33,000 மாணவர்களின் கல்விக் கட்டணம், பேருந்து கட்டணம், தங்குமிட கட்டணம் என்று ரூ 300 கோடிக்கு மேல் புழங்கும் இந்த நிறுவனத்தை தனி ஆளாக கட்டுப்படுத்துகிறார் பாரி வேந்தர் பச்சமுத்து.

கடந்த ஜனவரி மாதம் பல் மருத்துவக் கல்லூரிக்கு இந்திய பல் மருத்துவக் கழகத்திடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்காக முருகேசன் என்பவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது பிடிபட்ட மேல்மருவத்தூர் அம்மா குடும்பம் போன்ற மிடில் லெவல் கிரிமினல்களுக்கும் சரி, இப்போது ரெய்டு நடத்தப்பட்ட பச்சமுத்து குடும்பம் போன்ற பெரிய லெவல் கிரிமினல்களுக்கும் சரி சட்டங்களால் தண்டிக்கப்பட முடியாதவர்கள் என்பது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும் தெரியும், மத்திய புலனாய்வுத் துறைக்கும் தெரியும்.

அதனால்தானோ என்னவோ, உண்மைகளை உடனக்குடன் தரும், முக்கிய நிகழ்வுகளை ஹெலிகாப்டர் அனுப்பி கவர் செய்யும் புதிய தலைமுறை தொலைக்காட்சி தனது தொலைக்காட்சி அலுவலகம் உட்பட குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் கல்வி முறைகேடு தொடர்பாகவும், நன்கொடை என்ற பெயரில் பெற்ற கருப்பு பணம் தொடர்பாகவும், திரைப்படத் தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்ட கருப்புப் பண பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் வருமானவரித்துறையினர் நடத்திய ரெய்டு பற்றிய விபரங்களை தனது கேமராக்களில் பதிவு செய்யவில்லை.

இனி இந்தத் தொழில்முறைத் திருடர்கள் ஆளும் கட்சிக்கான மாமூல்களையும், ஜால்ரா செய்திகளையும் தவறாமல் நிறைவேற்றுவார்கள்!