Wednesday, October 9, 2024
முகப்புஉலகம்அமெரிக்கா1.57 லட்சம் கோடி ரூபாயை அமுக்கியது யார்?

1.57 லட்சம் கோடி ரூபாயை அமுக்கியது யார்?

-

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்

சென்ற வியாழக்கிழமை (20.6.2013) அன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 526 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,719 என்ற அளவில் நிலைத்தது. 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-இல் ஏற்பட்ட 704 புள்ளி வீழ்ச்சிக்குப் பிறகு இந்த வீழ்ச்சியே மிகப் பெரிது என்றும் 1,650 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் விற்பனை ஆகின என்றும் முதலீட்டாளர்களுக்கு ரூ. 1.57 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ரூ 1.57 லட்சம் கோடி யாருக்கு இழப்பு?

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் என்பது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 நிறுவனங்களின் பங்கு விலைகளை குறித்த வீதத்தில் சேர்த்து கணக்கிடப்படும் எண். அந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தால் குறியீட்டு எண் உயரும், குறைந்தால் குறியீட்டு எண்ணும் வீழ்ச்சியடையும். குறியீட்டு எண் 526 புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததோடு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு ரூ 1.5 லட்சம் கோடி குறைந்திருக்கிறது.

இந்த வீழ்ச்சிக்கு காரணம் வாஷிங்டனில் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கியின் சேர்மன் பென் பெர்னான்கே, அமெரிக்க பொருளாதாரம் வளர ஆரம்பித்துள்ளதாக கருதுவதாகவும், அதனால் சந்தையில் வெளியிடும் டாலர்களின் அளவு 2014 முதல் குறைக்கப்படலாம் என்றும் தெரிவித்ததுதான் என்று முதலாளித்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். அதைத் தொடர்ந்து அமெரிக்கச் சந்தையில் டாலரின் மதிப்பு அதிகமாகப் போவதால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய சந்தையில் தாம் வாங்கியிருந்த பங்குகளை பெருமளவில் விற்று டாலராக மாற்றிக் கொண்டன என்றும் அதனால் பங்குகளின் விலையும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

அன்னிய நிதி நிறுவனங்கள் எப்போது இந்த பங்குகளை வாங்கின?

2008-ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அமெரிக்காவை மீட்பதற்காக ஒவ்வொரு மாதமும் நிதிச் சந்தையில் $85 பில்லியன் (இன்றைய மதிப்பில் சுமார் ரூ 5 லட்சம் கோடி) மதிப்பிலான கடன் பத்திரங்களை வாங்கிக் கொண்டு டாலர்களை வெளியிட்டது அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி. இதனால் நிதி நிறுவனங்களுக்கு கிட்டத்த 0 முதல் 0.25 சதவீத வட்டியில் கடன் வாங்கும் வசதி கிடைத்தது. அதன் விளைவாக ‘அமெரிக்க நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் பெருமளவு டாலர்கள் கிடைக்கும்; அவற்றை வைத்து தொழில்களில் முதலீடு செய்து அமெரிக்க பொருளாதாரத்துக்கு அவர்கள் புத்துயிர் கொடுப்பார்கள்;’ என்பது ரிசர்வ் வங்கி நிர்வாகிகளின் திட்டம்.

பென் பெர்னான்கே
அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி சேர்மன் பென் பெர்னான்கே.

ஆனால், இலவசமாகக் கிடைக்கும் டாலர்களை தொழில்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதை விட பங்குச் சந்தைகளில் போடுவது லாபகரமானது என்று அமெரிக்க நிதி நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் டாலர்களை கொண்டு வந்து கொட்டின. அதாவது, நம் நாட்டுக்கு எந்தப் பொருட்களையும், சேவைகளையும் கொண்டு வராமலேயே அமெரிக்க அரசு செயற்கையாக உருவாக்கிய டாலர்களை கொண்டு வந்து பங்குகளை வாங்குகின்றன. பொருத்தமான நேரத்தில் பங்குகளை விற்று லாபத்தை திரும்ப எடுத்துச் செல்கின்றன. இது 2009-ம் ஆண்டு முதல் நடந்தது. இந்த கால கட்டத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 9,700 அளவிலிருந்து 20,000 வரை ஊசலாடியது டாலர்களின் பாய்ச்சலுக்கு ஏற்றபடி நடந்தது என்று சொல்லலாம்.

இப்போது, அமெரிக்காவில் கிடைக்கவிருக்கும் மலிவான டாலரின் அளவு குறையப் போவதால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குகளை விற்று டாலராக மாற்றிக் கொள்கின்றன. இது நாள் வரை இந்திய ரூபாயில் இந்திய நிறுவனங்களின் பங்குகளாக இருந்த அன்னிய நிறுவனங்களின் மூலதனம் டாலராக மாற்றப்பட்டுள்ளது.

அதிகமான ரூபாய்கள் சந்தையில் டாலராக மாற்றப்பட்டதால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் விலை அதிகமாகும். உதாரணமாக, இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகும். சமையல் எண்ணெய், செல்போன்கள், தொலைக்காட்சி பெட்டிகள், கணினிகள் போன்றவற்றின் விலையும் உயரும்.

இதனால் இறக்குமதிகளின் மதிப்பு உயர்ந்து அதற்கு ஈடாக ஏற்றுமதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை வெளிநாடுகளில் மலிவான விலையில் விற்பது சாத்தியமாகும். அதனால் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களும் கனிம வளங்களும் , மதிப்பு குறைந்த இந்திய ரூபாயில் சம்பளம் வாங்கிக் கொண்டு இந்தியர்கள் தயாரிக்கும் பொருட்களும் வெளிநாடுகளுக்கு பெருமளவு இந்திய முதலாளிகளால் ஏற்றுமதி செயயப்பட்டு அவர்கள் லாபம் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்படும்.

இந்திய ரூபாய்
அடித்துச் செல்லப்படும் இந்திய ரூபாய்

இந்திய நிறுவனங்களின் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்ததால், தமக்குத் தேவையான மூலதனத்துக்காக இந்திய முதலாளிகள் நிதிச் சந்தையில் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டி வரலாம். அதனால் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களின் விலைகளை உயர்த்தி அந்த செலவை சரிக்கட்டிக் கொள்வார்கள். மக்களுக்கு விலைவாசி அதிகமாகும்.

இந்த பங்குச் சந்தை வீழ்ச்சியின் மூலம் ஆதாயம் ஈட்டியது வெற்று டாலர்களை போட்டு சூதாட்டம் நடத்திய அன்னிய நிதி நிறுவனங்கள். இந்த இழப்பை மறைமுகமாக ஏற்கப்போவது இந்திய மக்கள்தான். பணத்தின் மதிப்பு குறைவால் தேசிய முதலாளிகள் நட்டம் அடைவார்கள். தரகு முதலாளிகளோ விலை உயர்வு, ஏற்றுமதி-இறக்குமதியை மாற்றிப் போட்டு இலாபத்தை தொடருவார்கள்.

1990-களில் ‘இந்தியாவிலிருந்து ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருக்கிறது; அதனால் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை உள்ளது; இதை சரிக்கட்ட, வெளிநாட்டு முதலீட்டாளர்களை நமது பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும்;’ என்று மும்பை பங்குச் சந்தையை அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ய திறந்து விட்டார் அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங்.

“அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் டாலர்களை ரூபாயாக மாற்றி பங்குகளை வாங்குவதால், இந்தியாவில் டாலர்கள் கிடைப்பது அதிகமாகும். இந்திய முதலாளிகள் நேரடியாக அமெரிக்க சந்தைகளில் தமது பங்குகளையும் கடன் பத்திரங்களையும் விற்று டாலர் நிதி திரட்டுவதற்கும் வழி ஏற்படும்.” என்பதுதான் மன்மோகன் சிங் தலைமையிலானவர்களின் பொருளாதாரக் கொள்கை.

ஆனால், இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்ட மூலதனம் தரகு முதலாளிகளை மட்டுமே வளப்படுத்தியிருக்கின்றன. அம்பானி ஆண்டிலியா மாளிகை கட்டியிருக்கிறார், விஜய் மல்லையா கிங் ஃபிஷர் காலண்டர் படப்பிடிப்பு நடத்துகிறார், சீனிவாசன் ஐபிஎல் போட்டிகளில் சூதாடுகிறார்.

இந்திய ரூபாயின் மதிப்பு மூன்றரை மடங்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது (1 டாலர் வாங்க ரூ 17 கொடுத்த நிலை மாறி 1 டாலருக்கு ரூ 60 கொடுக்க வேண்டியிருக்கிறது). 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நிதி அமைச்சராக இருக்கும் ப சிதம்பரம் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் இருப்பதால் அன்னிய முதலீட்டை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று 1990-களில் மன்மோகன் பாடிய அதே பல்லவியை பாடுகிறார் என்பதுதான் இந்த கொள்கைகளின் மோசடித்தனத்தை நிரூபிக்கிறது.

மேலும் படிக்க

  1. கடன் வாங்கியாவது தங்கம் வாங்கச்சொல்லும் அட்சய திருதியை புரட்டுகளும், அதில் ஏமாறும் மத்திய தர மதனம்பிக்கையாளர்களும் இருக்கும் வரை நாடு உருப்படாது! பங்குசந்தையில் பணம் காய்க்கிறது என்று அஙகு பணாத்தைக்கொட்டி ஏமாந்த பின் தஙகத்துக்கு திருப்பபடுகிரார்கள்! இதில் தஙக விற்பனக்கு வரி போட்டால் கிடு கிடு போராட்டம் வேறு! அவாள் போர்ராடினால் அரசு தாஙகுமா? அன்றுநிதி அமைச்சர் பிரணாப் பின் வாங்கியதன் விளைவுதான் இன்றைய பற்றாக்குறை!

  2. ஆடம்பர பெட்ரொலிய பொருள் இறக்குமதிக்கும், தஙகம் இறக்குமதிக்கும் வரம்பு கட்டியிருந்தால், கைவசமிருக்கும் டால்ர் சேமிப்பால், இந்திய ரூபாயின் மதிப்பு நிலைபாட்டிலிருக்கும்! சீனா அதிக அளவில் டாலர் வைத்திருப்பதால், இப்பொது குறைந்துவரும் விலையிலேயே தஙகம் வாஙகி குவிக்கிறது!

  3. Indias’ current account deficit (difference between imports and exports) is financed by foreign direct investment. If its stops then rupee may even go to 80. India imports oil and gold, there is no way india can reduce the oil import but can control gold. But if india tries to control Gold import by 100% duty then it will increase smuggling (like before 1991). Either way india is in a bad situation!

  4. //அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய சந்தையில் தாம் வாங்கியிருந்த பங்குகளை பெருமளவில் விற்று டாலராக மாற்றிக் கொண்டன என்றும் அதனால் பங்குகளின் விலையும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.//

    அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய சந்தையில் பங்குகள் வாங்கியபோது,நமது பங்கு சந்தை, விண்ணுக்கு பறந்ததே! அந்த முதலீடுகள் எப்படி பயன்படுத்தபட்டன்? ஊதாரித்தனமாக வரைமுறையின்றி இறக்குமதி அனுமதிக்கப்பட்டதா?

    டாடா, மிட்டால் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில், நமது தேசபக்த சிகாமனிகளால் முதலீடு என்ற பெயரில் கடத்தப்பட்ட செலாவணி எவ்வளவு? அம்பானி என்ரானுக்காக ஒபாமா வந்தபோது முன்பணம் பலகோடி கொடுத்தாரே! அது முறைப்படுத்தபட்டதா?

    விவரம் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க