Monday, September 16, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்உணவுப் பாதுகாப்புச் சட்டம் : உணவைப் பிடுங்கும் பயங்கரவாதத் திட்டம் !

உணவுப் பாதுகாப்புச் சட்டம் : உணவைப் பிடுங்கும் பயங்கரவாதத் திட்டம் !

-

உணவுப் பாதுகாப்புச் சட்டம் : உழைக்கும் மக்களின் உணவைப் பிடுங்கி பன்னாட்டுக் கம்பெனிகளின் கையில் ஒப்படைக்கும் மறுகாலனியாக்க பயங்கரவாத சதித்திட்டம்!

04.07.2013 – பாகலூர்

தோழர் இரவிச்சந்திரன்
தோழர் இரவிச்சந்திரன் தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றவிருக்கும் உணவுப் பாதுகாப்புச்  சட்டம் என்பது மக்கள் விரோத சட்டம் என புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணியினர் மக்களிடையே பிரச்சாரம் செய்துவருகின்றனர். பல கிராமங்களில் நடத்தப்ப்பட்ட தெருமுனைப் பிரச்சாரத்தின் இறுதியாக 04.07.2013 மாலை 6.00 மணியளவில் பாகலூர் சர்க்கிளில் தெருமுனைக்கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இவ்வமைப்பின் பாகலூர் பகுதி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் அவ்வமைப்பைச் சேர்ந்த தோழர் சின்னசாமி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் பேசினார்.

“உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பதே உழைக்கும் மக்களின் உணவைப் பிடுங்கி பன்னாட்டுக் கம்பெனிகளின் கையில் ஒப்படைக்கும் மறுகாலனியாக்க பயங்கரவாத சதித்திட்டம்! பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டுவரும் இந்த சட்டத்தை ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்புச் சட்டமாக ஓட்டுக் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், இது உண்மையல்ல. இது பல கொடிய விசப் பாம்புகளைப் போன்ற ஆபத்துகளை தனது மடியில் மறைத்துவைத்துள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஆபத்து இந்த சட்டத்தின் படி இனி உழைக்கும் மக்கள் அனைவரும் ரேசன் கடைகள்மூலம் உணவு தானியங்களை மானிய விலையில் வாங்க முடியாது. அதாவது சந்தை விலைக்குதான் வாங்க வேண்டும். ரேசனில் ரூ.1 அல்லது இலவசமாக வழங்கி வந்த அரிசி இனி சந்தையில் ரூ.50 கொடுத்துதான் நீங்கள் வாங்க வேண்டும். இதுவும் தனியார் முதலாளிகளின் லாபவெறிக்கு ஏற்ப பின்னர் விலையேற்றப்படும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் விழிப்படைந்துப் போராடி முறியடிக்க முன் வர வேண்டும்” என பேசினர்.

bagalur-3ஏராளமான மக்கள் கடை வியாபாரிகள், பேருந்துப் பயணிகள் கூடி நின்று கவனித்துச் சென்றனர்.

இந்தப் பிரச்சார இயக்கத்தின் போது உணவுப் பாதுக்காப்புச் சட்டத்தின் கொடூரம் உழைக்கும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் விரிவாக உணர்த்தப்பட்டது. விவசாயிகள் மத்தியில் இது இந்தப் பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தெலுங்கு, கன்னட தாய்மொழிப் பின்னணி கொண்ட இக்கிராமங்களில் மக்கள் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் கூட குறைவு. காங்கிரசை விட்டால் பாஜக என்ற இரு கட்சிகளை மட்டும் அதிகம் அறிந்துவைத்துள்ளவர்கள் தான். குறிப்பிட்ட இந்த இரு நாட்கள் பாராளுமன்றத்தில் இது குறித்த செய்திகள் ஊடங்களில் இடம் பெற்று வந்ததால் மக்கள் நமது பிரச்சாரத்தைக் முழுமையாக கேட்டனர். உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்து மக்களிடம் விவாதத்தை இந்தப் பிரச்சாரம் ஏற்படுத்தியுள்ளது. பிரசுரத்தில் உள்ள பல அம்சங்களை விவசாயிகள் எடுத்து வைத்து பேசினர். தொழிலாளர்கள் மத்தியில் இந்தப் பிரச்சனைகள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பாராளுமன்றத்தில் விவாதத்தை நடத்துவது என்ற சடங்கைக் கூட கடைப்பிடிக்காமல் மன்மோகன் அரசு அவசர அவசரமாக இந்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவரும் நிலையில் வி.வி.மு., பு.ஜ.தொ.மு. மேற்கொண்ட இந்த பிரச்சர இயக்கம் மக்கள் மத்தியில் இவர்களது நாடகத்தைத் தோலுரித்துக் காட்டுவதாக இந்த பிரச்சார இயக்கம் அமைந்தது.

அஞ்செட்டி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சார இயக்கம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள அஞ்செட்டி ஒன்றியத்தில் செயல்படும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக “உணவுப் பாதுகாப்புச் சட்டம், தேசிய நதிநீர்க் கொள்கை, புதிய விதைச் சட்டம்: விவசாயிகளை ஒழித்துக் கட்டவரும் மறுகாலனியாக்கச் சதித் திட்டங்களை முறியடிப்போம்!” என்ற தலைப்பில் மக்களிடம் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டனர்.

இப்பிரச்சார இயக்கத்தின் முடிவாக மே 17ம் தேதி அஞ்செட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசு அனுமதி கோரினர். ஆனால், பகுதியில் 32 (போலீசு) சட்டம் நடைமுறையில் இருப்பதாகக் கூறி போலீசு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்துவிட்டது. மீண்டும் ஜூன் மாதம் 22ம் தெதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது மீண்டும் இதே காரணத்தைக் கூறி மறுத்துவிட்டது. இந்த மாதம் முழுவதும் கொடுக்க இயலாது என்றது. அடுத்து ஜூலை 5-ம் தேதி நடத்த அனுமதி கோரிய போது, மீண்டும் இதே காரணத்தைக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்துவிட்டது. மேலும், ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நீங்கள் வேண்டுமெனில் ஓசூர், கிருஷ்ணகிரியில் நடத்திக்கொள்ளுங்கள் என்று திமிரடியாக பதிலளித்துவிட்டது.

துண்டறிக்கை
17.06.2013 அன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கான துண்டறிக்கை.

நாட்டின் மக்களைச் சூறையாட வருகின்ற உணவுப்பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான இப்பிரச்சார இயக்கத்தில் பல கிராமங்களில் தெருமுனைக் கூட்டங்கள் போடப்பட்டன. சில கிராமங்களில் உள்ளூர் அளவிலான விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த விளக்கக் கூட்டங்களின் போதும், தெருமுனைக் கூட்டங்களின் போதும் மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

“உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது மக்களுக்கு நன்மைப் பயக்கும் சட்டம் என்பதாக நினைத்திருந்தோம். ஆனால், ரேசன் கடைகளை இழுத்துமூடுவதற்கான சதித்திட்டம் என்பதை இப்பொழுதுதான் உணர்கிறோம். இனி, மளிகைக் கடைமுதல் பெட்டிக்கடை, சாதாரண டீக்கடை, தள்ளுவண்டி வியாபாரம் வரை எதையும் செய்ய அனுமதிக்கமாட்டார்கள் என்பதை நினைக்கும் போது இந்த அரசியல்வாதிகளுக்கு இதுதான் வேலையா” என்று கோபத்துடன் விவரமறிந்தவர்கள் பேசினர்.

விவரமறியாத சாதாரண மக்கள் வி.வி.மு.வின் இந்த பிரச்சாரம் மூலம் விழிப்படைந்தனர். “இப்படி ஒரு அபாயத்தை உங்களது அமைப்புதான் மக்களிடம் கொண்டு வந்து சொல்கிறது” என்று தெரிவித்தனர். விவசாயிகள் என்ற வகையில் நாம் ஒன்றாக சேரவேண்டும் என்ற வி.வி.மு.வின் அறைகூவலில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்டு பல்வேறு சாதியினர் பேசினர். பிற அரசியல் கட்சிகளில் உள்ள எல்லா உள்ளூர் தலைவர்களும் “எங்க தலைமை இதில் கலந்து கொள்ள வேண்டாம் என்கிறது. இருப்பினும் நீங்கள் செய்வதுதான் சரி” என்று நம்முடைய இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் துண்டறிக்கை
05.07.2013 அன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கான துண்டறிக்கை.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற கொடிய சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, போலீசு ஆட்சியை மக்கள் மீது திணிக்கிறார்கள் என்றால், இது போன்ற மறுகாலனியாக்க சட்டங்கள் நடைமுறையில் வந்தால் ஒட்டுமொத்த கொஞ்சநஞ்ச பேச்சுரிமைகளையும் பறித்துவிடுவார்கள் என்பதை மக்களுக்கு உணர்த்தி வி.வி.மு. தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

துண்டுப் பிரசுரம் :

அன்பார்ந்த விவசாயிகளே! உழைக்கும் மக்களே!

பாராளுமன்றத்தில் தற்போது அவசரமாக விவாதிக்கப்பட்டு வரும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பதாக ஓட்டுக் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், இது உண்மையல்ல. இது பல கொடிய விசப் பாம்புகளைப் போன்ற ஆபத்துகளை தனது மடியில் மறைத்துவைத்துள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஆபத்துக்களை கீழே கொடுத்துள்ளோம்.

இந்த சட்டத்தின் படி இனி ரேசன் கடைகள்மூலம் உணவு தானியங்களை மானிய விலையில் வாங்க முடியாது. அதாவது சந்தை விலைக்குதான் வாங்க வேண்டும். ரேசனில் ரூ.1 வழங்கி வந்த அரிசி இனி சந்தையில் ரூ.50 கொடுத்துதான் நீங்கள் வாங்க வேண்டும்.

அடுத்து, இந்தத் தொகையை உங்களுக்கு என ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கி அந்த வங்கிக் கணக்கில் அரசு செலுத்திவிடுமாம். இதனை எடுத்துக் கொண்டு போய் நீங்கள் அரிசி வாங்கிக் கொள்ளவேண்டுமாம்!

துண்டுப் பிரசுரம்
துண்டுப் பிரசுரம்

மேலும், பொருட்களை வீட்டிற்கு கொண்டுவந்து கொடுக்கும்முறை இதில் கொண்டுவரப்படுகிறது. ஆகையால், நீங்கள் இனி ரேசன் கடைக்குப் போகவேண்டி இருக்காது. இதற்குரிய வகையில் ரேசன் கடைகள் மாற்றியமைக்கப்படும்.

பாம்பு படமெடுத்து காட்டுவது அழகாக இருப்பதால் அதனை பிடித்துக் கொஞ்ச முடியுமா? முடியாது. உணவுப்பாதுகாப்புச் சட்டம் குறித்து ஓட்டுக்கட்சிகள் எல்லோருமே மேற்கண்டவாறு பிரச்சாரம் செய்வதும் அதுபோன்றதுதான்!

நடைமுறையில் சாத்தியமா? சற்றே சிந்தித்துப் பாருங்கள்! ஏற்கனவே, புழுத்த அரிசியை ஒழுங்காகக் கொடுப்பதில்லை. முதலில் வருபவர்கள் மட்டும் வாங்கமுடியும். அதுவும் முழுமையாகக் கிடைக்காது. ரேசனில் காசிருக்கும்போது கோதுமை, அரிசி கொடுக்கமாட்டார்கள். இந்த நிலையில் இனி ரேசன் கடையே இருக்காது என்பதுதான் உண்மை.

செல்ஃபோனில் போட்டக் காசு உடனே கரைந்துவிடுகிறது. ஏன் என்று அந்த நிறுவனத்தை நம்மால் கேட்கமுடிவதில்லை. நம்மில் பலரும் ஏதாவது ஒரு பட்டனை அழுத்தி ஏமாந்துவிடுகிறோம். இந்த நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி அதில் பணம் போட்டால் யார் கணக்குப் பார்ப்பது; விவசாயிகளையும் ஏழைகளையும் கொள்ளையடிப்பதற்கு இது மிகவும் சிறந்த வழி என்பதால் கொண்டுவந்துள்ளார்கள் என்பதே உண்மை!

இது மட்டுமல்ல, எல்லாருக்கும் வங்கிக் கணக்கு வந்த பின்னர், சாதாரண கூலி வாங்குவது, சம்பளம் வாங்குவது, வியாபாரங்கள் என அவசரத்திற்கு கொஞ்சம் கூட கையில் காசு இருக்காது. மேஸ்திரிக்கு வாரத்திற்கு ஒருமுறை செய்யப்படும் சம்பளத்தை கையோடு வாங்கினால்தான் முடியும் என்ற நிலைமை இப்போது இருக்கிறது. நாளை வாங்கிக் கொள்ளலாம் என்று தள்ளிப்போனால், அடுத்த வாரம் வரை முதலாளி இழுத்தடித்து விடுகிறான். இந்நிலையில் இவை வங்கிக்கணக்கின் மூலம் பட்டுவாடா செய்யப்படும் நிலைமை வந்தால் என்ன ஆகும்?!

ரேசன் கடை மூலம் இனி விநியோகம் செய்யமாட்டார்கள். இதன் பொருள் என்னவெனில் ரேசன் கடைகளை இழுத்து மூடுவதுதான். இதற்கு பதிலாக ஊருக்கு ஊர் வால்மார்ட் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் மூலம் கடை நடத்துவார்கள். அதில் அவன் விற்கும் விலைக்கு நாம் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இதுதான் நடக்கப் போகிறது! மேலும், சாதாரண மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள் வரை அனைத்து சிறுவர்த்தகங்களும் ஒழிக்கப்பட்டு விடும்.

இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்து ரூ.1,25,000 கோடி ஒதுக்கியுள்ளது. இதனை பன்னாட்டுக் கம்பெனிகளும் உள்நாட்டு தரகு முதலாளித்துவ கம்பெனிகளும் கொள்ளையடித்து போக இருக்கின்றனர்!

இது மட்டுமல்ல, இந்திய உணவுக் கழகத்திலிருந்து (அரசாங்க உணவு தானியக் கிடங்கு) பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு 1.05 கோடி டன் தானியங்களை கொடுக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த தானியங்களை தனியார் முதலாளிகள் மூலம் கடைகளுக்கு மினுக்கும் பாக்கெட்களில் கொண்டுவந்து விற்பார்கள். இதன் மூலம் தங்கள் விருப்பம் போல விலையேற்றி இந்த தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு வங்கித்துறை சீர்த்திருத்தச் சட்டம், ஆதார் அட்டைத் திட்டம், உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம்; சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு (வால்மார்ட்டை அனுமதிப்பது) போன்ற பல கொடிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இவை ஒவ்வொன்றும் பல கோடி மக்களை கொன்று குவிக்கும் கொடிய சட்டங்கள்!

ஆகையால், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது உழைக்கும் மக்களின் உணவைப் பிடுங்கி பன்னாட்டுக் கம்பெனிகள் கையில் ஒப்படைக்கும் மறுகாலனியாக்க பயங்கரவாத சதித்திட்டம்! இதனை எதிர்த்து முறியடிக்காவிட்டால் அடுத்து வரும் காலங்களில் நாம் உணவுக்கே தத்தளித்து சாகும் நிலைமை ஏற்படும்! அதுமட்டுமல்ல, உரிமைகள் எல்லாம் இழந்து நவீன கொத்தடிமைகளாக அலைய நேரிடும்!

இவ்வளவு கொடிய சட்டத்தை நிறைவேற்ற பி.ஜே.பி,. சி.பி.ஜ., சி.பி.எம். உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும் காங்கிரசுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துவிட்டன. துரோகிகள் எல்லோரும் நம்மீது கொடிய தாக்குதலை தொடுக்க இருக்கிறார்கள். எதிர்த்து முறியடிக்க உழைக்கும் மக்கள் என்ற வகையில் நாம் ஒன்றிணைய வேண்டும்! விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் அதிகாரத்தை வழங்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரளவேண்டும்!

உழைக்கும் மக்களே!

நாட்டின் உணவுத் தற்சார்பை ஒழிக்கவருவதுதான் உணவுப் பாதுகாப்புச் சட்டம்!
உழைக்கும் மக்களின் உணவைப் பிடுங்கி பன்னாட்டுக் கம்பெனிகள் கையில் ஒப்படைக்கும் மறுகாலனியாக்க பயங்கரவாத சதித்திட்டம்!

மறுகாலனியாக்க பயங்கரவாதத்தை முறியடுப்போம்!

விவசாயிகளுக்கு அதிகாரத்தை வழங்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
——————————————————————————————————————————–
தகவல்
: விவசாயிகள் விடுதலை முன்னணி, பாகலூர்

  1. Man Mohan Singh, Sonia, P.Chidambaram, Anthony – they all know Congress will be defeated in 2014 election. Before election, these robbers want to swindle as much as possible and implement all the policies dictated by USA and run away.
    Singh will go back to USA, Sonia to Rome, P.C back to court practices.

  2. உணவுப்பாதுகாப்புச் சட்டம் என்பது நமது உணவைப் பிடுங்கி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு கொடுக்கும் சதித்திட்டம், கல்வி உரிமைச் சட்டம் என்பது பெரும்பாலான உழைக்கும் மக்கள் வீட்டுப் பிள்ளைகளின் கல்விபெறும் உரிமையை பறிக்கும் திட்டம், விதைப் பாதுகாப்புச் சட்டம் என்பது விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடிக்கும் சதித்திட்டம், தேசிய நதிநீர் பாதுகாப்புச் சட்டம் என்பது நமது தண்ணீரை பிடுங்கி பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் திட்டம், வனவுரிமைப் பாதுகாப்பு சட்டம் என்பது பழங்குடி மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பிளாட்போட்டுக் கொடுக்கும் திட்டம், தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் என்பது ஸ்டெர்லைட் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு அனுமதிக்கொடுத்து சுற்றுச் சூழலை கெடுக்கும் திட்டம், தொழிலாளர் நலச்சட்டம் என்பது நிரந்திரத் தொழிலாளர்களை ஒழித்துக்கட்டி பன்னாட்டுப் பன்றிகளை வாழவைக்கும் திட்டம்………..,?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க