privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்ஓசூர் : அசோக் லேலாண்ட் தொழிலாளர் மீது தாக்குதல் !

ஓசூர் : அசோக் லேலாண்ட் தொழிலாளர் மீது தாக்குதல் !

-

  • ஓசூர் அசோக்லேலாண்டு யூனிட் 1-ல் ஊதிய உயர்வு என்ற பெயரில் 562 நிரந்தரத் தொழிலாளர்கள் ஆட்குறைப்பு!
  • இது தொழிலாளர் வர்க்கத்தின் மீதான மறுகாலனியாக்கத் தாக்குதல்!

லேலாண்ட் தொழிலாளர்கள்15.07.2013 அன்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சங்கத் தலைமை அறிவித்த துரோக ஒப்பந்தத்தை ஆட்சேபித்து முழக்கமிடும் லேலாண்டு யூனிட்-1 தொழிலாளர்கள்

அன்பார்ந்த தொழிலாளர்களே !

கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த ஊதிய உயர்வுக் கோரிய பேச்சு வார்த்தையானது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஜூலை 15 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் நேரடி மற்றும் மறைமுக ஊதிய உயர்வாக சராசரி 8,500 ரூபாயும், இந்த ஊதிய உயர்வு வேண்டுமெனில் 562 தொழிலாளர்கள் யூனிட் -2 கிளைக்கு டிரான்ஸ்பர் என்ற அடிப்படையில் வெளியேற வேண்டும் என்றும், மிக மோசமான பொருளாதார மந்தமான ஒரு சூழலில்தான் இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தை 15 மாதங்களாக இழுத்தடித்தடிக்கப்பட்டதாகவும் தொழிற்சங்க தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உடனே இது அமுலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளனர். அவ்வாறு ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் உடனடியாக அமுலுக்கு வரும் என்றும் ரகசிய வாக்கெடுப்பு தோற்கும் பட்சத்தில் மீண்டும் தேர்தல் வைத்து அடுத்துவரும் புதிய சங்கத்தலைமை மீண்டும் ஊதிய உயர்வுப் பேச்சு வார்த்தையை நடத்தும் என்றும் அறிவித்துள்ளனர்.

15 மாதங்களாக பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டு மீண்டும் தேர்தல், மீண்டும் பேச்சுவார்த்தை என்ற நிலைக்குப் போவதா? அல்லது 562 தொழிலாளர்கள் ட்ரான்ஸ்பரை ஏற்றுக் கொண்டு வெளியேறுவதா? என்ற இரண்டு கத்திகளை வைத்துவிட்டு அதற்கு நடுவில் தொழிலாளியை நிறுத்தி நீ எந்த கத்தியைக் கொண்டு குத்திக் கொள்ளப் போகிறாய்? இரண்டு அபாயங்களில் எந்த அபாயத்தை தேர்ந்தெடுக்கப் போகிறாய்? என்ற கொடூரமான நிலைக்கு தொழிலாளர்களை லேலாண்டு நிர்வாகம் தள்ளியுள்ளது. நிர்வாகத்தின் இந்த திட்டமிட்ட சதித்தனமான தாக்குதலை தொழிலாளர்கள் மீது திணித்தே தீரவேண்டும் என்றுதான் நிர்வாகம் செயல்படுகிறது.

ஒன்று மீண்டும் தேர்தல், மீண்டும் பேச்சுவார்த்தை என்ற நிலைக்கோ அல்லது 562 தொழிலாளர்கள் ட்ரான்ஸ்பரை ஏற்றுக்கொண்டு வெளியேறுவது என்பது 15 மாதங்களாக பேச்சுவார்த்தை என்ற பேரில் இழுத்தடிக்கப்பட்டு மன உளச்சலுக்குள்ளாக்கப்பட வைக்கின்ற இந்த வக்கிரத்தைதான் நாங்கள் தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ பயங்கரவாத தாக்குதல் என்கிறோம்.

இது போன்ற தொழிலாளர்கள் மீதான லேலாண்டின் முதலாளித்துவ பயங்கரவாத தாக்குதல்களை நாங்கள் பல நேரங்களில் அம்பலப்படுத்தியிருக்கிறோம். அசோக் லேலாண்டில் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை இழுத்தடிக்கப்பட்டு வந்த சூழலில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையின் நியாயத்தை விளக்கி ”லேலாண்டில் முதலாளித்துவப் பயங்கரவாதம்!” என்ற தலைப்பில் 2,000 வெளியீடுகளை கொடுத்துப் பிரச்சாரம் செய்தோம். பிறகு சட்டவிரோத லேஆப்பை கண்டித்து பிற ஆலைத் தொழிலாளர்களையும் அணிதிரட்டி ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.

ஆனால் லேலாண்டு தொழிலாளர்களோ இப்பிரச்சினைகளை தங்கள் ஆலையின் தனிப்பட்டப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறார்கள். நிர்வாகத்துடன் பேசியே தீர்த்துக்கொள்ள முடியும் என்று கருதுகிறார்கள். இந்த கண்ணோட்டம்தான் தொழிலாளர்களை “இரண்டு அபாயத்தில் எந்த அபாயத்தை நீ தேர்ந்தெடுக்கிறாய்?” என்ற அவல நிலைக்கு தள்ளியுள்ளது. இனியும் இதுபோன்ற தாக்குதலைத்தான் லேலாண்டு நிர்வாகம் தொடரப்போகிறது. இதற்கு இன்னுமொரு சாட்சியாக அடிப்படை ஊதியம், அகவிலைப்படி தந்து மூத்த தொழிலாளர்களை வெளியேற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் யூனிட் – 1 ஐ இழுத்துமூடுவது அல்லது ஒரு பன்னாட்டுக் கம்பெனிக்கு விற்றுவிடுவது என்ற நிலை எடுத்து பிளான்ட் 2- வில் அசெம்பிளி பிரிவை மட்டும் வைத்துக்கொண்டு கொடூரமான உற்பத்திமுறையில் தொழிலாளர்களை சுரண்டுவது என்ற தொலைநோக்கு திட்டத்தில் உள்ளது. ஆட்குறைப்பு, அவுட்சோர்ஸ், ஆகியவற்றை எதிர்ப்பதாக சொல்பவர்கள்கூட மவுனம் சாதிக்கிறார்கள். அதற்கு எதிராக களமிறங்கி போராடவோ தயாரில்லாமல் நிர்வாகத்திற்கு துணைபோகிறார்கள். சட்டவிரோத லேஆப் என உச்சரிக்ககூட அஞ்சுகிறார்கள். எதற்கும் முன்கை எடுக்காத இவர்கள் லேலாண்டின் சட்டவிரோத லேஆப்பை கண்டித்து போராடும் பு.ஜ.தொ.மு வைப்பற்றி அவதூறுப் பேசுகிறார்கள்.

இந்நிலையில் தானுண்டு தன்குடும்பம் உண்டு என ஒதுங்கியிருந்தால் ஓசூரில் இனி லேலாண்டுத் தொழிலாளி என்ற அடையாளமே காணமுடியாது. பாரிய தாக்குதல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் லேலாண்டுத் தொழிலாளர்கள் இனியும் விழிப்படையாமல் காலம் தாழ்த்தினால் பறிபோகும் உரிமைகளை தடுக்கமுடியாது. முதலாளித்துவத்தின் இந்த மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராக போராடினால்தான் உரிமைகளைப் பெறமுடியும். போராடத் தவறினால் இருக்கும் உரிமைகளையும் இழக்க நேரிடும். கொத்தடிமை நிலைக்குதான் தள்ளப்படும் என்பதற்கு லேலாண்டுத் தொழிலாளர்களின் இன்றைய நிலையே கண்முன் சாட்சியாக உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துகிறோம். ஆகவே, தொழிலாளர் வர்க்கத்தின் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்.

ஒசூர் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையின் வாயிலாகத்தான் லேலாண்டு உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற முடியும் என்பதை லேலாண்டுத் தொழிலாளர்கள் உணரவேண்டும். அந்தவகையில் தொடர்ந்துப் போராடிவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டு போராடவாருங்கள்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு; 9788011784.
————————————–