Thursday, December 12, 2024
முகப்புஉலகம்இதர நாடுகள்ஏழ்மையா, கால்பந்தா ? பிரேசில் மக்களின் மாபெரும் எழுச்சி !

ஏழ்மையா, கால்பந்தா ? பிரேசில் மக்களின் மாபெரும் எழுச்சி !

-

லகளாவிய நிதி நிறுவனங்களால் பிரிக் (BRIC) என்ற பெயரில் இந்தியா, சீனா, ரஷ்யாவுடன் இணைத்து பேசப்படும் பிரேசில் நாட்டு மக்கள் சென்ற ஜூன் மாதம் பெரும் எண்ணிக்கையில் தெருக்களில் இறங்கி போராடினார்கள். உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி, நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், அழிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரங்கள் இவற்றை எதிர்த்த போராட்டங்களாக அவை மாறின. ஜூன் 20-ம் தேதி மாணவர்கள், நடுத்தர வர்க்க ஊழியர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், குடும்பங்கள் அடங்கிய சுமார் 10 லட்சம் பேர் நாடு முழுவதும் நகரங்களின் தெருக்களில் மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.

சாவ் பாவ்லோ பேரணி
சாவ் பாவ்லோ பேரணி

தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் சுமார் 21 கோடி மக்கள் வசிக்கின்றனர். பிரேசில் என்றால் உலக மக்கள் பலருக்கு கால்பந்து நினைவுக்கு வரும், ஆனால் உலக முதலாளிகளுக்கோ அதன் வளங்கள் நினைவுக்கு வரும். பரந்து விரிந்த நிலமும், இயற்கை வளங்களையும், மக்கள் தொகையையும் கொண்ட நாடு பிரேசில். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் தனியார்மய, தாராள மய பொருளாதாரக் கொள்கைகள் சுமார் 20% (4 கோடி) நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒளியில்லாத மங்கிய தேசமாகவும், பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு (சுமார் 15 கோடி) நரகமாகவும் பிரேசிலை மாற்றியிருக்கின்றன.

பல பத்தாண்டுகள் ராணுவ சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு 1980-களில் முதல் முதலாளித்துவ ஜனநாயக தேர்தல் பிரேசிலில் நடைபெற்றது. மாறி மாறி வந்த வலதுசாரி, இடது சாரி கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைத்தன.

சாவ் பாவ்லோ போராட்டம்
சாவ் பாவ்லோ போராட்டம்

2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூலா டா சில்வா, முந்தைய வலது சாரி கார்டோசாவின் 8 ஆண்டு கால ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் மலிவான விலையில் தனியாருக்கு விற்கப்பட்டதை நியாயப்படுத்தினார். உதாரணமாக, உலகின் மிகச் செறிவான இரும்புத் தாது சுரங்கங்களில் ஒன்றை $1 பில்லியன் டாலருக்கும் குறைவான விலையில் தனியாருக்கு விற்றார் கார்டோசா. அந்த சுரங்கத்தின் இப்போதைய மதிப்பு $20 பில்லியன் டாலர், ஆண்டு லாபம் $3 பில்லியன் டாலர். வலது சாரி எதிர்க் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியின் கொள்கைகள் இதிலிருந்து பெருமளவு வேறுபாடவில்லை என்றாலும், கூடுதலாக அமெரிக்காவின் காலடியில் பிரேசில் அரசியலை அடகு வைக்க வேண்டும் என்ற கொள்கையை உடையது.

2004-2008 கால கட்டத்தில் உலகப் பொருளாதாரம் பண வீக்கத்தில் ஊதிப் பெருக்கப்பட்ட போது பிரேசிலின் பொருளாதாரம் ஆண்டுக்கு 4.5% வீதம் வளர்ச்சியடைந்தது. காபி எஸ்டேட்டுகள், தகவல் தொழில்நுட்பத் துறை, அமேசான் காடுகள் என பிரேசில் நாட்டு மக்களைச் சுரண்ட பல நாடுகளில் இருந்து முதலீடுகள் குவிந்தன. திடீரென நடுத்தர வர்க்கமும், உயர்நடுத்தர வர்க்கமும் சமூகத்தில் தலையெடுக்க ஆரம்பித்தன. ஆனால் கனவு நெடும் நாட்களுக்கு நீடிக்கவில்லை. தனியார் மயத்தின் லாப வேட்டையில் பிரேசிலில் உள்ள அமேசான் காடுகள் ஆண்டுக்கு 20 லட்சம் ஹெக்டேர் என்ற வீதத்தில் அழிக்கப்பட்டு வருகின்றன. ஊழல் மிகுந்த அரசும், சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களும் உலகப் பொருளாதார நெருக்கடியால் மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கத் தொடங்கின.

சாவ் பாவ்லோ நகரில் கொடியேந்தி போராட்டக்காரர்கள்
சாவ் பாவ்லோ நகரில் கொடியேந்திய போராட்டக்காரர்கள்

4 பேர் கொண்ட குடும்பத்துக்கு மாத வருமானம் சுமார் ரூ 12,000-க்கும் குறைவாக சுமார் 10 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கின்றார்கள். நிலமற்ற கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் 4 கோடி பேரில் சுமார் 20 லட்சம் பேர் நகர்ப்புறங்களுக்கு குடியேறி அடிப்படை வசதிகள் இல்லாத சேரிகளில் வசிக்கின்றனர். தென் அமெரிக்க சூழலில் நிலவி வந்த போதை வர்த்தகத்திற்கு இந்த மக்களில் பலர் பலியாகின்றனர்.

மக்களுக்கு குடிநீர் வினியோகமும், பொது வினியோகத் திட்டமும் நிதி இல்லை என்று முடக்கப்படும் போது தனியார் வணிக வசதிக்காக பெரும் செலவில் சாலைகளும், அடுக்கு மாடி கட்டிடங்களும் கட்டப்படுகின்றன. உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டத்தைப் போல வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 1 கோடி ஏழை மக்களுக்கு நேரடி மானியமாக மாதா மாதம் $40 டாலர் (ரூ 2,400) அரசால் அனுப்பி வைக்கப்படுகின்றது. அதைத் தவிர்த்த மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துக்கும் மூடு விழா நடத்தப்பட்டுள்ளது.

பெரு நகரங்களில் கோடிக்கணக்கான மக்கள் சேரிகளிலும், குடிசைகளிலும் வாழும் போது, அரசு உலகக் கோப்பை கால்பந்து போட்டி, ஒலிம்பிக் போட்டி தயாரிப்புகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழிக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால் பந்து போட்டிகளுக்கு $14 பில்லியன் (சுமார் ரூ 84,000 கோடி) அரசு ஒதுக்கியிருக்கிறது. 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் போது கலவரங்கள் நடக்காமல் பாதுகாக்க 50,000 இராணுவ வீரர்களை பாதுகாப்புக்கு அமர்த்தத் திட்டமிட்டிருக்கிறது பிரேசில் அரசு. ஏழைகளின் பசியை மயக்க செய்வதற்கு இத்தகைய நவீன கிளாடியேட்டர் சண்டைகளை கால்பந்து, ஒலிம்பிக் பெயரில் நடத்துகிறது பிரேசில்.

போலீசுடன் மோதும் போராட்டக்காரர்கள்
போலீசுடன் மோதும் போராட்டக்காரர்கள்

இந்நிலையில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் 20 சென்ட் (சுமார் ரூ 12) வரை உயர்த்தப்பட்டப் பேருந்து கட்டணங்கள், பிரேசில் நாட்டு மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராட தொடங்கினார்கள். போராட்டங்கள் பெரிதும் அமைதியாகவே நடந்தன, ஆங்காங்கே சில கடையுடைப்புகள், திருட்டு சம்பவங்கள் நடந்தாலும், பெரும்பான்மை இடங்களில் அமைதியான போராட்டம் தொடர்ந்தது. அரசு இந்த போராட்டங்களை பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, மெல்ல மக்கள் தாமாகவே கலைந்து போய் விடுவார்கள் என எதிர்பார்த்தது.

கடுமையான விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை, மோசமான அரசு நிர்வாகம், கல்வி-சுகாதாரம்-பாதுகாப்புத் துறைகளில் நிர்வாக சீர்கேடு, வேலை வாய்ப்பின்மை, பெருகி வரும் இளம் குற்றவாளிகள் என மோசமாகி வரும் சமூகச் சூழல் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஊரில் எத்தனை சேரிகள் இருந்தாலும், கனவான்கள் தன் நாட்டிற்கு வரும்போது அது சொர்க்கமாக தெரிய வேண்டுமென கட்டப்பட்டு வரும் கால்பந்து மைதானங்கள் மக்களை கோபம் கொள்ள செய்தன.

அமேசான் நதிக் கரையில் உள்ள பேலம் நகரில் மக்களைத் தாக்கும் போலீஸ்
அமேசான் நதிக் கரையில் உள்ள பேலம் நகரில் மக்களைத் தாக்கும் போலீஸ்

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்துத் தொடங்கிய போராட்டம், மெல்ல பிரேசிலில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான போராட்டமாக வெடித்தது. விலைவாசி உயர்வு, லஞ்ச-ஊழல் மலிந்த அரசு, கல்வி-சுகாதாரம்-பாதுகாப்பு போன்றவற்றில் நிலவும் மோசமான சூழல், அதிக பொருட்செலவில் வீண் ஆடம்பரத்துடன் கட்டப்பட்டு வரும் கால்பந்து மைதானங்கள், உலகக் கோப்பை, ஒலிம்பிக் போட்டிகள் போன்ற விழாக்களுக்கு பெரும் பணச் செலவில் தயாரிப்புகள் போன்றவற்றின் மீது மக்களின் கோபம் சரியான வீச்சுடன் அரசை நோக்கி திரும்பியது.

பிரேசில் வீதிகளில் கலகம் வெடித்தது. ஜூன் மாதம், பிரேசிலில் கன்ஃபெடரேஷ்ன் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வந்தன. ஊடகங்கள் மக்கள் பிரச்சினைகளை புறக்கணித்து கால்பந்து போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. இந்தப் போராட்டங்களை ஏதோ திருடர்களின் போராட்டம் என்பது போல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. மீடியா அலுவகங்களை கைப்பற்றும் போராட்டம், ஊடக வாகனங்களை தாக்குவது என போராட்டம் திரும்பியது.

தாக்குதல்கள் பெரிதாகிக் கொண்டிருக்க உலக ஊடகங்களில் பிரேசிலின் போராட்டச் சூழலுடன் ஒப்பிட்டு கால்பந்து போட்டிகளுக்கு ஆபத்து வருமா என கவலை தெரிவித்து கட்டுரைகள், செய்திகள் வெளிவரத் தொடங்கின. அரசு பதட்டமடைந்து போராட்டக்காரர்களை கவனிக்கத் தொடங்கியது. மூன்று வாரங்களுக்கு மேல் பல்வேறு நகரங்களில் போராட்டம் விரிவடைய அரசு ராணுவத்தையும் போலீசையும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் பெரிதும் நம்பியது, போராட்டக்காரர்களை ஒடுக்க தம்மால் முடிந்தவரை அடக்கு முறையை ஏவி விட்டது.

ஜூன் 20-ம் தேதி கால்பந்து மைதானத்தை முற்றுகையிட்ட மக்கள் - சல்வாடோர்.
ஜூன் 20-ம் தேதி கால்பந்து மைதானத்தை முற்றுகையிட்ட மக்கள் – சல்வாடோர்.

“போராட்டக்காரர்கள் செய்யும் வன்முறை சம்பவங்களை அரசு ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்காது” என்றார் அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் டெலிமா ருஸோஃப். ஆனால் ஒரு சில இடங்களை தவிர மக்கள் போரட்டங்கள் அரசுக்கெதிரான முழக்கங்களுடன் தொடர்ந்தன. ஆனால், போராட்டக்காரர்களை இவை எதுவும் தடுக்கவில்லை.

ஜூன் 30-ம் தேதி கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடந்த மைதானத்தை முற்றுகையிட்டனர். பிரேசில் இறுதிப் போட்டியில் வென்ற கொண்டாட்டங்கள் ஒரு பக்கமும், 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மைதானத்தை முற்றுகையிட்ட கூச்சல் மறுபுறம் என அரங்கம் அதிர்ந்தது. அதைவிட இரண்டு மடங்கு கலவர தடுப்பு போலிஸ் பிரிவினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

வேறுவழி இல்லாமல் அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது, பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டன, சில அரசியல் அதிகார மாற்றங்கள் செய்யப்பட்டன, ஆனால் பணத்தை கொட்டிய கால்பந்து அரங்குகள்! அவற்றை என்ன செய்வது?

இந்தப் போராட்டங்களில் உழைக்கும் வர்க்கத்தினர் பங்கெற்றாலும் பெரும்பான்மையினராக உதிரிகளும், மத்திய வர்க்கத்தினரும் பங்கு பெற்றனர். அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளும், ராணுவத்தினரின் அடக்குமுறையும் போராடிய கணிசமானோரை வீட்டில் உட்கார வைத்து விட்டது.

பிரேசில் போரட்டங்களை அரபு நாடுகளின் எழுச்சியை போன்றது என குறிப்பிட்டு எழுதிய ஐரோப்பிய ஊடகங்கள், மற்றொன்றை குறிப்பிடவில்லை. சென்ற ஆண்டு ஆயிரக் கணக்கான எகிப்து மக்கள் அந்நாட்டின் அதிபர் பதவி இறங்க போராடினர். பெரும் எழுச்சிக்கு பின் அதிபர் மாறினார், ஆனால் இன்று மீண்டும் அரசியல் குழப்பம் நிலவுகிறது.

பிரேசில் மக்கள் திட்டமிட்ட கோரிக்கைகளுடன், நீண்ட கால அரசியல் திட்டத்துடனான கட்சியின் தலைமையில் போராடவில்லை. அதனால் அவர்களின் எழுச்சி முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தாமல் முடங்கியிருக்கிறது. மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசை எதிர்த்து பணிய வைப்பது இல்லாமல், அரசை கைப்பற்றுவது தான் ஒரே வழி. ஆனால் அத்தகைய புரட்சிகர கட்சி பிரேசிலில் இல்லை.

கடந்த 20 வருடத்தில் பிரேசிலில் இது போல் போரட்டம் நடைபெறவில்லை என்கிறது வரலாறு, ஆனால் வரலாறு மிக்க இந்த எழுச்சியின் பலன் என்ன?

– ஆதவன்.

படங்கள் (நன்றி : RT.com) [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மேலும் படிக்க

வீடியோ தொகுப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க