என் பார்வையில் வினவு – 23 : ஜோதிஜி திருப்பூர்
வினவு தளத்தில் வந்த பாட்டில் தேசம் என்ற கட்டுரையை என் கூகுள் ப்ளஸ் பகிரந்திருந்தேன். அதைப்படித்த ஒருவர் இப்படி எழுதியிருந்தார்.
“சில பதிவுகளை படிக்கும் போது மிகுந்த மனச்சோர்வு வருகிறது. ஆனா படிக்காம இருக்கிறது நல்லதில்லைன்னும் தோனுது, நாம கண்ணை மூடிகிட்டே இருக்கிறது நமக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும்னாலும், இது கொடுக்கிற மன அழுத்தம் ரொம்பவே அதிகமாயிருக்கு :-(((((((((((”
ஒவ்வொரு முறையும் வினவு தளத்தை படித்து முடித்தவுடன் என் மனதில் வந்து போகும் எண்ணங்களை அப்படியே அவர் எழுதியது போலவே இருந்தது.
நாள்தோறும் வினவு தளத்தின் உள்ளே சென்று படித்து முடித்து வெளியே வரும் போது மனம் முழுக்க அங்கலாய்ப்பும், உடம்பு முழுக்க பூச்சிகள் ஊர்வது போலவும் இருக்கும். காத்திரமான கட்டுரைகள் தரும் தாக்கம் அடுத்த இரண்டு நாட்களுக்கு மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும். அடுத்தடுத்து தாக்கும் தினசரி வாழ்க்கை அதையும் மாற்றிவிடும்.
இன்று வரையிலும் இடைவிடாத இந்த போராட்டம் என்னுள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ஆனாலும் வினவு தளத்தை வாசிப்பதை நிறுத்த முடியவில்லை. ஒரு வாரம் முழுக்க வினவு பக்கம் செல்ல வேண்டாம் என்று நினைத்தாலும் அன்றாடம் காணும் காட்சிகள் ஏதோவொரு வகையில் வினவின் உள்ளே இழுத்து வந்து நிறுத்தி விடுகின்றது.
இன்று வரையிலும் வினவு என்பது எனக்கு அமுதசுரபி. இந்த இடத்தில் நிபந்தனைக்கு உட்பட்டது என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பாம்பை கண்டு பயப்படுவதை விட வலையுலகில் வினவு கண்டு பயந்தவர்களை நான் அறிவேன். ஏன் அங்கேயெல்லாம் போய் தொடர்பு வச்சுருக்கீங்க? என்று என்னை பலரும் கேட்டுருக்கின்றார்கள். இன்று வரையிலும் வினவு தளத்தில் என் சொந்த பெயரில் தான் கருத்துக்களை எழுதுகின்றேன்.
எனக்கு வினவு என்ற வார்த்தை மனதில் வரும் பொழுதெல்லாம் கூடவே அதியமான் என்ற வார்த்தையும் சேர்த்து தான் யோசிக்க முடிகின்றது. அவர் வினவு தளத்தில் கம்பு சுற்றும் அழகை ரசிக்க வந்தவன் அப்படியே தளத்திற்கு தீவிர வாசகனாக மாறிப்போனேன். எந்த சமயத்தில் வினவு தளம் எப்போது எனக்கு அறிமுகமானது என்று இப்போதும் கூட என் நினைவில் இல்லை. ஆனால் அறிமுகமானது முதல் தினந்தோறும் ஒரு முறையாவது உள்ளே நுழைந்து எதையோ ஒன்றை தேடி படித்துக் கொண்டே தான் வருகின்றேன்.
வாழ்க்கையில் இரண்டு விசயங்களை முக்கியம் என்கிறார்கள்.
நல்லதே யோசி. நல்லதே நடக்கும். ஆனால் எதார்த்தம் சொல்லும் வாழ்க்கை வேறுவிதமாகவே உள்ளது. இங்கே நல்லது அத்தனையும் நடக்கின்றது. அது பணம், பதவி, அதிகாரம் இருப்பவர்களுக்கும் மட்டுமே நடக்கின்றது. விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கே போராடிக் கொண்டிருப்பவர்களையும் பார்க்கும் பொழுது மனதில் இருந்த அத்தனை நம்பிக்கைகளும் நாள்தோறும் ஒவ்வொன்றாக கழன்று கொண்டேதான் வருகின்றது. வல்லரசாக மாற நினைக்கும் இந்திய ஜனநாயத்தின் அத்தனை இருட்டுப் பக்கத்தையும் வினவு தள எழுத்துக்கள் அடித்து துவைத்து காயப் போட்டு விடுகின்றது. எனக்கும் நிஜவாழ்க்கைக்கும் உண்டான இடைவெளியை இட்டு நிரப்புவதே வினவு தளம் தான்.
நுகர்வு கலாச்சாரத்தில் அத்தனைக்கும் ஆசைப்படு என்ற சராசரி எண்ணம் கொண்ட என்னை ஒவ்வொன்றுக்கும் பின்னால் உள்ள ஓராயிரம் அரசியல் அக்கிரம அராஜக நிகழ்வுகளை எவ்வித சமரசமின்றி எழுத்தாக்கி இது தாண்டா நீ காணும் உலகம் என்பதாக வினவு தளம் காட்டிக் கொண்டேயிருகின்றது.
திரைப்படம் மற்றும் சுயசொரிதல் என்ற இரண்டுக்கும் இடையே இருந்த வலையுலகத்தை மாற்றுப்பாதையில் கொண்டு சென்று வலையுலகத்தை திரும்பி பார்க்க வைத்த வினவு தள தோழர்களுக்கு என் வாழ்த்துகளை இங்கே எழுதி வைக்கின்றேன். வலையுலகத்தின் வீச்சென்பது மிகக் கொஞ்சமே என்று சொல்பவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் வினவு தளத்தை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாசித்துள்ளார்கள் என்பதை வைத்தே வினவின் பெருமையை இனி நான் என்ன எழுதமுடியும்?
வினவு தளத்திற்கு இரண்டு விதமான வாசக வட்டம் உண்டு.
வினவு தளத்தை படிப்பதை யாரிடமும் காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள்.
வினவு தளத்தை மட்டுமே படிப்பவர்கள்.
ஆனால் இன்று வெகுஜன இதழ்களுக்கு சவாலாக இருக்கும் அளவிற்கு வினவு தளத்தின் வீச்சு பிரமிப்பாய் உள்ளது.
இங்கே ஏதாவது மாற்றம் நடந்து விடதா?? என்ற சிறுபான்மை கூட்டத்திற்கும் இனி இங்கு எந்த மாற்றத்திற்கும் வழியில்லை? என்ற பெரும்பான்மையினருக்கும் இடையே உள்ள போராட்டங்கள் அனைத்தையும் வினவு தளம் தான் எனக்கு ஆசானாக கற்பித்துக் கொண்டு வருகின்றது. நான் என்ன செய்ய முடியும்? என்பதை விட வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதுபோன்ற அர்த்தமுள்ள விசயங்களை வினவு தளம் எனக்கு கற்றுத்தந்துள்ளது.
போலி உபதேசிகளை மட்டுமே கொண்டு செயல்படும் வெகுஜன இதழ்களை வாரந்தோறும் நூறு ரூபாய்க்கும் மேலே வாங்கிக் கொண்டு வந்தவனுக்கு இன்று மாதந்தோறும் நூறு ரூபாய்க்கு மட்டுமே வாங்கும் அளவிற்கு இதழ்களின் உபதேச திகட்டல் அலர்ஜியாகி விட அனைத்தும் இங்குண்டு என்று புதிய புதிய வாசிப்பாளர்களை வினவு வரவழைத்துக் கொண்டிருக்கின்றது. பலதரப்பட்ட கட்டுரைகளால் வாசிப்பவர்களை திக்குமுக்காடவும் வைத்துக் கொண்டிருக்கின்றது.
வலையில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் ஒரு புத்தகம் வெளியிட்டவுடன் அவர்களை எழுத்தாளர்கள் என்கிறார்கள். ஆனால் உருப்படியாக 30 ஆண்டுகளுக்கு மேல் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களை எப்படி அழைப்பது? சூப்பர் ஸ்டார் என்பது போல சூப்பர் எழுத்தாளர் என்று அழைப்பதா?
ஆனால் இன்று எனது டாலர் நகரம் என்ற புத்தகத்தின் மூலம் நானும் ஒரு எழுத்தாளர் என்று அறியப்பட்டதற்கு முக்கியமும் முழு முதற் காரணமும் வினவு தளமே. திருப்பூரில் சாயப்பட்டறைகள் குறித்து நான் எழுதிய திருப்பூர் சாயப்பட்டறைகள் வண்ணமா? அவலமா என்ற பெயரில் வெளி வந்த பிறகு தான் திருப்பூர் குறித்து அதிகமாக எழுத வேண்டும் என்று தோன்றியது. அதற்குப் பிறகு எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பே இன்று வெற்றி பெற்றுள்ள டாலர் நகரம் என்ற புத்தகம்.
வினவு தளத்தில் எனது பெயர் போட்டு கட்டுரை வந்த போது நெருங்கிய நண்பர்கள் இவ்வாறு கேட்டார்கள். ஏற்கனவே புனைப்பெயர்களில் எழுதியதும் நீங்க தானா? என்றார்கள். இது எனக்கு பெரிய அங்கீகாரமாகத் தெரிந்தது. இன்று உங்கள் பார்வையில் வினவு என்று எழுதக் கேட்ட பிறகு இனி வேறெந்த அங்கீகாரமும் தேவையில்லை என்றே தோன்றுகின்றது.
காரணம் தொடக்கம் முதல் வினவு என்றால் முகமூடிகளின் உலகம் என்றே பலரும் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். அங்கே மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அவ்வாறு இருப்பவர்கள் உள்ளே செல்ல முடியாது என்பது போன்ற பல கருத்துக்களை கொண்டுள்ளனர். இதற்கு மேலாக பின்னூட்டத்தில் நாம் நினைக்கும் கருத்தை எழுதி வைத்தால் கும்பலாக வந்து தாக்கத் தொடங்கி விடுகின்றார்கள். ஒருவருக்கும் முறைப்படியான முகவரி இருக்காது போன்ற பல குற்றச்சாட்டுகள் இன்று வரைக்கும் உண்டு.
இதன் காரணமாகவே நான் அங்கே செல்வதில்லை என்பது போன்ற பல விமர்சனங்களை நான் கேட்டுள்ளேன்.
கணினியின் முன்னால் அமர்ந்து படிப்பதற்கும் புத்தகம் வழியே ஒரு கட்டுரையை படிப்பதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளது. எனவே சிறிய அளவில் கட்டுரையாக்கம் இருந்தால் மட்டுமே அது பலருக்கும் சென்றடையும் என்கிற பொதுப்புத்தி வலையுலகில் உள்ளது. எனக்குத் தெரிந்து அதை பெரிய அளவில் உடைத்த பெருமை வினவு தளத்திற்கே சேரும்.
குறிப்பாக சங்கரியின் நாப்கின் பதிவை நான் வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்த போது 600 வார்த்தைகளுக்கு மேல் இருந்தாலே அலறும் பலரும் அதை முழுமையாக படித்து முடித்து தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார்கள். வால்மார்ட் பற்றி எழுதிய கட்டுரை நிச்சயம் மராத்தான் ஓட்டப்பந்தயத்திற்கு சமமான ஒன்று. ஆனால் முதல்வரி முதல் கடைசி வரைக்கும் படித்து முடித்துவுடன் தான் நகர எண்ணம் வந்தது.
காரணம் கற்பனைகள் சிறிது நேரம் தான் குதுகலத்தை கொடுக்கும். ஆனால் நிஜவாழ்க்கை தரிசனங்கள் நமது நேரத்தை திருடுவதில்லை. அதற்கு மேலாக படிப்பவனுக்கு சொல்ல வந்த விசயத்தை அக்குபஞ்சர் சிகிச்சை போல குத்துவது தெரியாமலே குத்தல் நிறைந்த வார்த்தைகளால் இட்டு நிரப்பவுது வினவு தளத்திற்கு கைவந்த கலை.
ஆனாலும் வினவு தளத்திடம் நான் கேட்க விரும்பும் கருத்துக்களையும் இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.
1. புரட்சியின் மூலம் மட்டுமே இந்தியாவில் பூபாள ராகம் கேட்கும். மக்கள் ஜனநாயகம் அர்த்தமற்றது என்பதாகத்தான் உங்களின் ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் படிப்பவனுக்கு சொல்கிறீர்கள். எனக்குத் தெரிந்து எண்ணிப்பார்த்தாலும் ஒரு கை விரலுக்குள் கூட அடக்க முடியாத புரட்சியாளர்கள் தான் கடைசி வரைக்கும் மக்களின் சேவைக்கு பாடுபட்டுள்ளார்கள். 90 சதவிகிதம் பழைய குருடி கதவை திறடி கதையாகத்தான் உள்ளது. ஏறக்குறைய பேய்க்கு பயந்து பிசாசுக்கு வாக்கப்பட்ட கதையாக இருக்கும் போது எவ்வித புரட்சியின் மூலம் உண்மையாக மக்கள் நலம் இங்கே பாதுகாக்கப்படும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்??
2. உங்கள் பார்வையில் மன்மோகன் சிங் அமெரிக்காவின் அடிவருடி. மோடி என்றால் மதவாதி. கம்யூனிஸ்ட் என்றால் போலி கம்யூனிஸ்ட்டுகள். மூன்றாம் அணி என்பது ஒவ்வொரு சமயத்தில் மூக்குடைபட்டு சந்தர்ப்பவாதிகளாக மாற தயாராக இருப்பவர்கள். வேறு யார் தான் இங்கே மிச்சம் இருக்கின்றார்கள். உங்களின் மாற்றுத் தீர்வை எழுதி வைக்க வேண்டியது தானே?
3. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதிக்கசாதிகளின் மூலம் உருவாக்கும் அச்சுறுத்தல்களை, கிடைக்கப்படாத நியாயங்களை, அவர்களின் தரப்புகளை மட்டுமே இங்கே எழுதுகின்றீர்களே? மற்ற அத்தனை பேர்களும் இங்கே சர்வ சுகத்துடன் வாழ்வதாக நினைக்கின்றீர்களா?
4. இளவரசன் விசயத்தில் காட்டிய உங்களின் அக்கறையும், காணொளி காட்சியும் வலையுலகில் எவரும் செய்யாத, நினைத்தே பார்க்க முடியாத ஆச்சரியம். ஆனால் நீங்கள் ஒரு பக்க தரப்புகளை வைத்து மட்டுமே இன்று வரையிலும் பேசிக் கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியும். பாதிக்கப்படுகின்றார்கள் என்பது எத்தனை தூரம் உண்மையோ அதற்கான காரணத்தையும் நாம் பேச வேண்டும். தொடக்கத்தில் பார்ப்பனீயம் என்றோம். இன்று பா.ம.க என்கிறோம். நாளை மற்றொரு கட்சியை சொல்லப்போகின்றோம்? அப்படி என்றால் அரை நூற்றாண்டு காலம் கிடைத்த சலுகைகள் யாருக்குச் சென்றது? யார் பலன் பெற்றார்கள்? முழுமையான உரிமைகள் கிடைக்க வில்லை என்றால் அதன் உண்மையான காரணம் என்ன? அதனைப் பற்றி எங்கேயாவது நடுநிலையோடு எழுதியிருக்கீங்களா?
5. நான் இன்று வரையிலும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவன். நீங்கள் தேர்தல் என்பது ஓட்டு பொறுக்கிகளின் கூடாரம் என்கிறீர்கள். எத்தனையோ ஆதாரங்களை வைத்து எழுதும் நீங்கள் தகவல் அறியும் சட்டத்தை வைத்து எதை எதை பெற்றுள்ளீர்கள் என்பதை தெரிவிக்க முடியுமா? குறிப்பாக இட ஒதுக்கீடு மூலம் கிராமப் புறத்து பள்ளி மாணவர்கள் எத்தனை பேர்களுக்கு உயர்படிப்பு, தொழில் நுட்ப படிப்புகள் கிடைத்துள்ளது போன்ற தகவல்களை எழுத முடியுமா?
6. தென்மாவட்டத்தில் உள்ள சாதிக்கலவரங்களுக்கு ஆதிக்கசாதிகள் தான் முக்கிய காரணம் எனில் இதை வைத்தே பிழைப்பு வாதம் நடத்துபவர்களை ஏன் சுட்டிக்காட்ட தயங்குறீர்கள்? அப்படி நடக்கவில்லை என்பதை ஆதாரபூர்வத்தோடு எழுத முடியுமா?
7. நாங்கள் பாதிக்கப்படுகின்றோம் என்பவர்கள் இடையே அவர்களுக்குள்ளும் ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வுகள்? அதைப்பற்றி உங்களால் தைரியமாக எழுத முடியுமா? இந்த மக்களை வைத்து ஓட்டரசியல் பிழைப்பு நடத்தும் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்களால் இந்த மக்களுக்கு இன்று வரையிலும் என்ன தான் லாபம் கிடைத்தது? ஏன் இதைப்பற்றி நீங்க எழுதுவதில்லை.
சாதி, மதம் விசயங்களில் நீங்கள் காட்டும் அக்கறை தமிழ்மொழியின் வீழ்ச்சி, அதற்கு காரணமானவர்களைப் பற்றி கண்டு கொள்வதில்லை என்பதோடு அதைப்பற்றி அக்கறைப்படுவதும் இல்லை. அரசாங்க பள்ளிக்கூடங்கள் பற்றியும் தற்போது செயல் இழந்து போய் நிற்கும் தமிழ்நாட்டின் கல்வித்துறை குறித்தும் காத்திரமான கட்டுரைகள் எதையும் நான் படித்த நியாபகம் இல்லை. கலைஞர் என்றால் கலாய்ப்பதற்குரியவர். ஜெ என்றால் பம்மிக்கொண்டிருக்கும் கூட்டத்தில் நீங்களும் ஒருவரா?
சமூகம், பொருளாதாரம், வளர்ந்த நாடுகள் நம்மை பிச்சைக்காரனாக மாற்றும் உத்திகள், உள்ளூர், இந்திய, உலக அரசியல் என்று கலந்து கட்டி பொளந்து கட்டும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளுடன் என்னையும் அழைத்து எழுத வேண்டும் என்கிற கருத்து சுதந்திரத்தை மதிக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.
உங்கள் தளத்தை, கட்டுரையில் வரும் நடையை விரும்பும் எனக்கு அது தெரிவிக்கும் ஒரு பக்கச் சார்பை வெறுக்கும் என்னால் முழுமையாக புறக்கணிக்க முடியாத அளவிற்கு உங்களின் சேவை உள்ளது.
ஒரு முதிர்ந்த ஜனநாயகத்திற்கு நூறு ஆண்டுகள் தேவை என்கிறார்கள். எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் இந்தியாவில் மாற்றம் வரும் என்றே நம்புகின்றேன். இன்னும் 35 வருடங்களில் நான் இருப்பேனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் என் குழந்தைகளைப் போல பலரும் இந்த மாறுதலுக்கு எவரெல்லாம் உழைத்தார்கள் என்று ஆவணங்களை புரட்டிப் பார்க்கும் போது நிச்சயம் அதில் வினவு தளம் முதன்மையாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.
நட்பும் நன்றியும் சேர்த்து
ஜோதிஜி திருப்பூர்
http://deviyar-illam.blogspot.in/
//1. புரட்சியின் மூலம் மட்டுமே இந்தியாவில் பூபாள ராகம் கேட்கும். மக்கள் ஜனநாயகம் அர்த்தமற்றது என்பதாகத்தான் உங்களின் ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் படிப்பவனுக்கு சொல்கிறீர்கள். எனக்குத் தெரிந்து எண்ணிப்பார்த்தாலும் ஒரு கை விரலுக்குள் கூட அடக்க முடியாத புரட்சியாளர்கள் தான் கடைசி வரைக்கும் மக்களின் சேவைக்கு பாடுபட்டுள்ளார்கள். 90 சதவிகிதம் பழைய குருடி கதவை திறடி கதையாகத்தான் உள்ளது. ஏறக்குறைய பேய்க்கு பயந்து பிசாசுக்கு வாக்கப்பட்ட கதையாக இருக்கும் போது எவ்வித புரட்சியின் மூலம் உண்மையாக மக்கள் நலம் இங்கே பாதுகாக்கப்படும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்??//
தண்ணீர் ஆவியாக வேண்டும் என்றால், 100 டிகிரிக்கு கொதித்துதான் தீர வேண்டும். “ஒரு சித்தாந்தம் பர்ந்துபட்ட மக்களை பிடித்துக் கொள்ளும் போது, அது ஒரு பெளதீக சக்தி ஆகிறது” என்பார் மார்கசிய ஆசான். ஆக, மக்களுக்கான ஜனநாயகம் வளரவேண்டும் என்றால் பரந்துபட்ட மக்களை அடைய வேண்டும். கையளவு புரட்சியாளர்களால், தண்டகாரண்யா மாதிரி சாகச வாதங்களால் ஆயுதபடைகளுடன் மோத முடியும், ஆனால் இறுதி வெற்றிக்கு ஆயிரம் ஆயிரம் தன்நலமற்றவர்களை இழக்க வேண்டும். ஆனால் மக்களை சார்ந்து மக்களை அரசியல் படுத்தினால், மக்கள் விடுதலையை வென்றெடுப்பார்கள். வினவு அதற்குதான் முயல்கிறது என்பது எனது கருத்து.
//2. உங்கள் பார்வையில் மன்மோகன் சிங் அமெரிக்காவின் அடிவருடி. மோடி என்றால் மதவாதி. கம்யூனிஸ்ட் என்றால் போலி கம்யூனிஸ்ட்டுகள். மூன்றாம் அணி என்பது ஒவ்வொரு சமயத்தில் மூக்குடைபட்டு சந்தர்ப்பவாதிகளாக மாற தயாராக இருப்பவர்கள். வேறு யார் தான் இங்கே மிச்சம் இருக்கின்றார்கள். உங்களின் மாற்றுத் தீர்வை எழுதி வைக்க வேண்டியது தானே?//
எந்த பொம்மையும் உடைந்து கொண்டே வந்தால், மண் சரியில்லை என்று பொருள். ஆக இந்த அரசியலமைப்பே ஒரு மோசடி என்பதால்தான், ஆளும் வர்க்கங்கள் மக்களுக்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை முகம் மாற்றி ஏமாற்றுகின்றது. இதனை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், விடுதலைப் போரின் வீர மரபுகள், காந்தியும் தூரோகமும், ஒரு கம்பியூனிஸ துரோகியின் மரண சாசனம் என்ற வெளியிடுகளை படித்துப் பாருங்கள். அப்போது போலிகள், விரோதிகள் பற்றிய ரிஷிமூலம் உங்களுக்கு தெரியும். ஆனால் சமகாலம் பற்றி உங்களுக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை. வாரம் 100 ரூபாய்க்கு புத்தகம் வாங்கும் உங்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கும்.
//
3. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதிக்கசாதிகளின் மூலம் உருவாக்கும் அச்சுறுத்தல்களை, கிடைக்கப்படாத நியாயங்களை, அவர்களின் தரப்புகளை மட்டுமே இங்கே எழுதுகின்றீர்களே? மற்ற அத்தனை பேர்களும் இங்கே சர்வ சுகத்துடன் வாழ்வதாக நினைக்கின்றீர்களா?
//
வினவு எல்லா மக்களையும் – ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள எல்லோரையும் ஒரு வர்க்க கண்ணோட்டத்திலேயே ஒன்றிணைக்க வேண்டும் என்பதாக எனது கருத்து. ஆதிக்க ஜாதி மக்களில் உள்ள உழைக்கும் மக்களை கண் திறந்து பார்க்க வினவு கோருகின்றது. ஏன், ஆதிக்க சாதியை சார்ந்த ஒரு உழைக்கும் பாட்டாளி எழுதிய திருப்பூர் பதிவு இதைதான் சொல்கின்றது. மாறாக மற்றவர்கள் சர்வ சுகத்துடன் வாழ்வதாக எங்கேயும் சொல்லவில்லை.
//…ஒரு முதிர்ந்த ஜனநாயகத்திற்கு நூறு ஆண்டுகள் தேவை என்கிறார்கள். எனக்கு நம்பிக்கை உள்ளது. ..///
இன்னமா ஊரு நம்ம நம்புது ???? அண்ணே அது அவங்க தல எழுத்தண்ணே….
ஜனநாயகம் பிராண்டு ஒயின், பிராந்தி தயாரிக்க வேண்டுமானால் 100 ஆண்டு ஊற வைத்து புளிக்கவைத்து தயாரித்தால் பழமையான சிறப்பான சரக்காக இருக்கலாம்…
அண்ணே இது பிராந்தி இல்லை ஜன நாயகம், அதாவது மக்கள் ஆட்சி..
இல்ல இல்ல சிரஞ்சீவி ரோஜா நடிச்ச அந்த படம் இல்லானே..
நிஜமான மக்கள் ஆட்சி,
ஜன நாயகத்தில் தனி மனிதர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் தரப்படும், பல தனிமனிதர்களின் கருத்து , அதாவது பெரும்பான்மை கருத்து ஏற்றுக்கொள்ளப்படும். சிறுபான்மை கருத்தையும் மதித்து அவர்களுக்கு தீங்கு வராமல் தீர்வுகள் தந்தால் பிரச்சனை , பிரிவினைகள் இல்லாமல் ஆட்சி இருக்கும்.
சரி… இதில் அடிப்படையே தனி மனிதன் தான்.
ஒரு மனிதனின் சராசரி வயதே 60 – 70 தான். இதில் அரசியல் ரீதியாக பக்குவபட 20 வயது ஆகலாம். அப்படி பார்த்தால் 40 வருடம் மட்டுமே எந்த விஷயத்திலும் அதிகபட்சம் ஈடுபட முடியும்.
100 வருடம் ஆனால் தான் ஜனநாயகம் என்றால் , 100 வருடங்களூக்கு முன் எடுத்த முடிவுகள், அதின் விளைவுகள் பற்றிய தெளிவு ஒவ்வொறு மனிதனுக்கும், வேண்டும்,
அப்படி பார்த்தால் சற்றேறக்குறைய 3 தலைமுறைகளின் அனுபவம் அடுத்து வரும் ஒவ்வொறு தலைமுறையிலும் இருக்கவேண்டும். இது சாத்தியமா ?
அதாவது உங்களின், உங்களின் அப்பா, உங்கள் பெண்களின் அனுபவம் அனைத்தும், உங்கள் பேர குழந்தகளுக்கு கிடைக்கவேண்டும், அப்போது தான் அவர்கள் 100 ஆண்டு அனுபவம் கிடைக்கும்.
கவனிக்க.. கிடைக்கவேண்டியது தகவல் இல்லை அனுபவம். நீங்கள் அலுவலகம் போய், இங்குள்ள ஆதிக்க வர்க்கத்தினரின் அலுவலகம் என்பது ஒரு திறந்த வெளி சிறை என்று புரிந்துகொண்டு அதை உங்கள் பெண்களிடம் கூறினால்… அவர்களுக்கு கிடைப்பது அனுபவம் இல்லை ..தகவல் மட்டுமே, இதை அனுபவித்து உணர்ந்த என்னிடம் கூறினால் கிடைப்பது அனுபவம்.
தகவல் போதுமானது என்றால் உலகின் பழய ஜன நாயக நாடான கிரேக்கத்தில் இருந்து , பாரளுமன்ற ஜன் நாயகத்துக்கு புகழ் பெற்ற பிரிட்டன் வரை, அனைத்து தகவல்களும் லைப்ரரிகளில் உள்ளது, புதிதாக ஒரு நாட்டை துவக்கி அதில் இந்த லைப்ரரியை ஒரு ஜெராக்ஸ் எடுத்து வைத்தால் அது உலகின் மிக சிறந்த ஜன நாயக நாடாக ஆக வேண்டுமே… நடக்குமா ?
இதில் குறிப்பிடப்படும் 100 ஆணடு மட்டுமல்ல குறைந்தது 100 ஆண்டு .. அப்படியானல் 5ம் தலைமுறைக்கு முந்தய அனைத்து தலைமுறைக்களின் அனுபவமும் கிடைக்கவேண்டும். இது சாத்தியமா?
டால்பின்கள் மட்டுமே தான் பெற்ற அறிவை தன் சந்திதிக்கு கடத்தும் வல்லமை பெற்றவை. அப்படியானல் அந்த 100 வருட ஜன நாயகம் டால்பின்களுக்கானதாக இருக்க வேண்டும் .. இல்லையானால் கண்டிப்பாக ஜனநாயகம் பிராண்டு ஒயின் தான்.
மக்களுக்கான ஜன நாயகம் என்பது நேரடி ஜன நாயகமாக இருதால் 100 சதம் சாத்தியம்.
இதை பற்றிய எனது பழய பதிவு … தேர்தல் முறை பற்றிய பதிவுக்கு பதில் பதிவாக எழுதியது..
நீங்களும் பதில் கொடூத்திருந்தித பதிவு தான்.
http://vinothpakkangal.blogspot.in/2011/04/vs.html
===================================================
கந்தன் சார் தேர்தல்கள் vs இடுப்பழகி யார் அனுஷ்காவா திரிஷாவா ?
என்னை பொறுத்தவரை தேர்தல் அவுட் ஆப் டேட் மாடல்.
நேற்று வாசிங்டன், ஏமன் பல உலக நாடு ரோட்டரி சங்க பிரதிநிதிகளீன் சந்திப்பு நடந்தது.என்ன செலவு ஆகியிருக்கும்னு நினைக்கிறீங்க? இந்த சந்திப்புக்கக 10 பைசா கூட செலவு இல்லை. ஏன்னா அவங்கவங்க அங்கங்கயெ இருக்க ஆன்லைனில் நடந்த சந்திப்பு.
இதேபோல் பாரளுமன்றாத்தில் மக்கள் கருத்தை ஆன்லைனில் கேட்டு மக்கள் ஓட்டளிப்பு நடத்தி சட்டங்களை போட்ட எப்படி இருக்கும் ? இதோ நாம் எழுதற இந்த பிளாகுக்கு பதில் நாம் நேரா சட்டமன்றம் நாடாளூமன்றத்தில் நம் கருத்தை பதிவு செய்யலாம். இங்க இடுப்பழகி அனுஷ்காவா vs திரிஷாவா ங்கிறதுக்கு வாக்களிக்கறதுக்கு பதில் நேர சட்ட மசோதாவுக்கு வாக்களிக்கலாம்.
அதேபோல் நம் கருத்தையும் , அதுக்கு எதிர் கருத்தையும் ஆதரவையும் எதிர்ப்பையும் கண்கூடா பார்க்கலாம். இந்த மாதிரி மக்கள் நேரடியா பங்கேற்க முடியும்ன மக்கள் பிரதிநிதிகளை எதுக்கு? கந்தன் சார் பதிவுக்கு எதிர் பதிவு மாதிரி… நம் கருத்தை நாடாளூமன்றாத்தில் பதிவு செய்யலாம்.
இதெல்லாம் தேறாது சர்வர் எப்பவும் டவுன் தானு நம்ம முருகேசன் அண்ணன் சொல்லலாம்.
இதுக்கும் பதில் இருக்கு.. சர்வர் வேலை செய்யலைன்ன சர்வருக்கு பொறுப்பான அமைச்சகம் மற்றும் அதிகாரிகளூக்கு தூக்கு தண்டனைனு அறிவிச்சுட்டா ? இதை செய்யணும்னாலும் .. இல்லை தேர்தல் தான் வேணும்னாலும் 100% கட்டாய வாக்களிப்பை கொண்டு வரணும். அதுதான் முதலில் முக்கியம்.
அதைவிட முக்கியம் சரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்யபடணும்.
இப்போ தேர்தல் ஆணயம் மத்திய அமைப்பு, தேர்தலின் போது மத்திய மானில அரசுகளின் உட்கட்டமைப்பை( அதிகாரிகள், வாகனங்கள்) பயன் படுத்துது.
http://vinothpakkangal.blogspot.in/2011/04/vs.html
வாழ்த்துகள் ஜோதிஜி…
ஆனால் உங்கள் கேள்விகளை வைத்துப் பார்த்தால் நிறைய கட்டுரைகளை நீங்கள் படிக்காமல் விட்டிருப்பீர்கள் போலத் தோன்றுகிறது…
//3. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதிக்கசாதிகளின் மூலம் உருவாக்கும் அச்சுறுத்தல்களை, கிடைக்கப்படாத நியாயங்களை, அவர்களின் தரப்புகளை மட்டுமே இங்கே எழுதுகின்றீர்களே? மற்ற அத்தனை பேர்களும் இங்கே சர்வ சுகத்துடன் வாழ்வதாக நினைக்கின்றீர்களா?//
வாயில் மலம் திணிக்கப்படுவது, உரிமையைக் கேட்டால் கூண்டோடு கொழுத்துவது, போலீசுக்குப் போனால் மொத்த ஊரும் ஒன்று சேர்ந்து தாயையும் மகளையும் வன்புணர்ந்து பிறப்புறுப்பில் கம்பிகளைச் சொருகுவது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய ஊராட்சிபதவிகளை ஏற்றுக்கொண்டதற்காக கொலை செய்யப்படுவது, சிறுவனென்றும் இறக்கம் கொள்ளாமல் செருப்பைத் தலையில் சுமக்கச் சொல்வது, – இப்படிப்பட்ட கஷ்டங்கள் மற்றவர்களுக்கு உண்டா?
நாம் அன்றாடம் அனுபவிக்கிற கஷ்டங்களும் இவைகளும் ஒன்றா?
கட்டாய வாக்கேடுப்பு?
1) முதல் ஆசாமி திருடன்
2) ரெண்டாம் ஆசாமி கூத்திக்கள்ளன்
3) மூனாம் ஆசாமி (னம்ம சிஙுகு,கருனா,பட்சை புடவை…
இப்ப சொல்லுஙக…கட்டாயமா ஓட்டு போடனும்னா யாருக்கு போடணும்?
இப்பத்தான் பார்த்தேன். உங்கள் கேள்விகளுக்கு (குறிப்பாக 6,7,8) பதிலளிக்கிற கட்டுரைகள் கீழே ‘தொடர்புடைய சுட்டிகளாக’ இணைக்கப்பட்டுள்ளன.
வினவு தோழர்ஸ், எப்பிடி இப்பிடி?? 🙂
நண்பர் ஜோதிஜிஅவர்களே, நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் பற்றி பலசந்தர்ப்பங்களில் வினவு, பு.ஜ, பு.க ஆகியவற்றில் கட்டுரைகள் வந்திருக்கின்றன.
கீழ்க்காணும் வரிகள் நீங்கள் வினவையும்,பு.ஜ, பு.க வையும் தொடர்ந்து படிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.
// கலைஞர் என்றால் கலாய்ப்பதற்குரியவர். ஜெ என்றால் பம்மிக்கொண்டிருக்கும் கூட்டத்தில் நீங்களும் ஒருவரா? //
எதை வைத்து நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கின்றீர்கள்?
இம்மாத பு.ஜ வின் அட்டைப்படத்தைப் பார்த்தீர்களா? இல்லையா? ” போலி கம்யூனிஸ்டுகள்- பார்ப்பன பாசிசத்தின் பல்லக்குத் தூக்கிகள் ” . ஜெயலலிதாவை “பார்ப்பன பாசிஸ்டு” என்று வினவைத் தவிர யாராவது சொல்லக் கேட்டிருக்கிறீர்களா?
அமெரிக்கத் தீர்மானத்தை ஒட்டிய ஈழத்துக்கான மாணவர் போராட்டத்தின் போது ஜெயலலிதாவின் தீர்மானங்களைப் பார்த்து தமிழினவாதிகளெல்லாம் உருகிக்கொண்டிருந்த வேளையில் அதை அம்பலப்படுத்தி கட்டுரை வெளியிட்டனர் வினவுத் தோழர்கள்.
நீங்கள் இங்கே இளவரசன் குறித்து பேசியதால் உங்களிடம் ஒரு கேள்வி…
சில நாட்களுக்கு முன்னால் தருமபுரி குடிசை எரிப்புக்கு பின் சாதிவெறியர்களால் ஒரு தளம் பல இடங்களில் பகிரப் பட்டது. http://vanjikkapadupavaninkuralgal.blogspot.com/
அதில் ஒரு பகுதியில் இளவரசன் திவ்யா குறித்து இப்படி எழுதுகிறார்கள். “இதற்கிடையில் பெண்ணையும் பையனையும் தருமபுரியிலிருந்துசேலம் செல்லும் வழியில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில்உள்ள மலையப்பனூர் மலையடிவாரத்தில் தான் ஒளித்துவைத்திருக்கின்றனர். தன்னை வைத்து இளவரசன் பணம் கேட்பதைஅறிந்து கொண்ட திவ்யா தன் பெற்றோரிடம் வருவதற்கு சம்மதித்துவிட்டார். இந்த பேச்சு வார்த்தைக்கு திவ்யாவின் பெரியம்மா, அம்மாஉள்ளிட்ட பெண்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளார்கள். செல்போன்உள்ளிட்ட பொருட்கள் எதுவும் எடுத்து வரக்கூடாது என்றுநிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.”
இந்த பதிவில் நீங்கள் கூட மறுமொழியிட்டிருந்தீர்கள். இதை கூகிள் ப்லஸில் முகநூலில் பகிரப்போவதாக. அதற்குப் பின்னர் திவ்யா கோர்ட்டுக்கு வந்தது, தன்னைக் கடத்தவில்லை என்று சொன்னது, இளவரசனுடன் வாழ்விரும்பியதாகக் கூறியது எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். இன்னமும் நீங்கள் அந்தப் புரட்டல் பதிவின் தாக்கத்தில் இருக்கிறீர்களா?
\\ஆனால் உங்கள் கேள்விகளை வைத்துப் பார்த்தால் நிறைய கட்டுரைகளை நீங்கள் படிக்காமல் விட்டிருப்பீர்கள் போலத் தோன்றுகிறது…\\
இதே கருத்து தான் எனக்கும் ஜோதிஜியிடம் உள்ளது.
வர்க்க அரசு, போலி ஜனநாயகம், ஓட்டுக்கட்சி அரசியல்,ஆதிக்க சாதிகள் என பலவற்றை குறித்து நிறைய கட்டுரைகள் வெளிவந்து உள்ள நிலையில் இதனை மீண்டும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எழவில்லை என்றே தோன்றுகிறது.
இளவரசன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு தோழர் ராஜீ அவர்கள் ஆற்றிய 6 நிமிட உரையே இந்த அரசு குறித்து, ஆதிக்க சாதிகள் குறித்தும் நாம் அறிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்.
இது போல குறிப்பான கட்டுரைகள் வினவில் தேடி அதனை படித்து விவாதிப்பது மூலம் தெளிவு பெற முடியும்
Jothiji,
//மற்ற அத்தனை பேர்களும் இங்கே சர்வ சுகத்துடன் வாழ்வதாக நினைக்கின்றீர்களா?//
பரமேசு has answered to this.
//பாதிக்கப்படுகின்றார்கள் என்பது எத்தனை தூரம் உண்மையோ அதற்கான காரணத்தையும் நாம் பேச வேண்டும். தொடக்கத்தில் பார்ப்பனீயம் என்றோம். இன்று பா.ம.க என்கிறோம். நாளை மற்றொரு கட்சியை சொல்லப்போகின்றோம்? அப்படி என்றால் அரை நூற்றாண்டு காலம் கிடைத்த சலுகைகள் யாருக்குச் சென்றது? யார் பலன் பெற்றார்கள்? முழுமையான உரிமைகள் கிடைக்க வில்லை என்றால் அதன் உண்மையான காரணம் என்ன?//
The Ilavaran-Dhivya issue is not related to SHARE in educational institutions or in Govt jobs but FREEDOM of youth against all unnatural barriers to love and pair. I hope you see the difference now.
//இந்த மக்களை வைத்து ஓட்டரசியல் பிழைப்பு நடத்தும் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்களால் இந்த மக்களுக்கு இன்று வரையிலும் என்ன தான் லாபம் கிடைத்தது?//
This statement-question looks very condescending. Anyway, you have to ask Dalits about this, not Vinavu.
கடந்த 5 ஆண்டுகளில் வினவு தளத்தை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாசித்துள்ளார்கள் என்பது வினவின் உழைப்பும் பேராட்டமும் கலந்து இருக்கிறது.
ஜோதிஜி சாதிய ஆதரவுவாளர் என்பது ஓராண்டுக்கு முன்பு ஒரு பின்னூட்ட போரில் தெரிந்து கொண்டேன். (அம்பேத்கர் குறித்த பதிவு என்று நினைக்கிறேன்….வினவில் அல்ல வேறு ஒரு பதிவில்)
தமிழ் கூறும் வலையுலகத்திற்கு அவசியம் அந்த பதிவு அல்லது இணைப்பை வழங்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். மேலே ஒரு தோழர் இந்த புரட்டல் பதிவை நீங்கள் கூகுள் ப்ளஸ் ல் பகிர்வதாக எழுதியிருந்தீர்கள். இன்னும் அதைவிட்டு வெளியே வரலையா? என்று கேட்டு அந்த பதிவையும் குறிப்பிட்டு இருந்தார். அது தான் சரியான விவாதம். அதே போல நீங்களும் செய்யலாம். நானும் தெரிந்து கொள்ள உதவுமே?
கண்டிப்பாக தேடித் தருகிறேன்….
இதில் இவருக்கு எழுதிய பதிலை காணவில்லையே?
மக்கான் அப்படி நான் எழுதியுள்ள பதிவை இணைப்பு தர வேண்டுகின்றேன்.
புரட்சி, மற்றபிற வாக்குச்சீட்டு கட்சிகள் பற்றிய வினவின் மதிப்பீடு, ஆதிக்கச் சாதிகளில் இருக்கும் கீழ்தட்டு மக்களின் நிலை, இளவரசன் விவகாரம், ஜனநாயகம், சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் ‘கீழ்சாதி’யினர் மற்றும் அவர்களுக்கள்ளே நிலவும் பாகுபாடுகள், தமிழ் மொழி – கல்வி என பல்வேறு ஐயங்களை நீண்ட காலமாக வினவு படித்து வரும் ஜோதிஜி அவர்கள் எழுப்பியுள்ளது ஒரு பக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் அவசியமானவை என்றே கருதுகிறேன்.
ஒரு பிரச்சனையின் மீதான புரிதலை வெறும் விவரங்கள் மட்டுமே கொடுத்து விடுவதில்லை. இவை புரிதலை ஏற்படுத்துவதற்கான முதற்படி மட்டுமே. கிடைத்த விவரங்களை தொகுத்துப் பரிசீலிக்கும் போது மேலும் சில புரிதலை நாம் பெறுகின்ற அதே வேளையில் அதன் மீதான சில முடிவுகளையும் நாம் எடுக்கின்றோம். இது புரிதலுக்கான அடுத்த கட்டம். இந்த முடிவுகளை நாம் நடைமுறைப்படுத்தும் போது மட்டுமே நமது முடிவு சரிதானா என்பதையும் நாம் முழு உண்மையையும் கண்டறிந்து விட்டோமா என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியும். நடைமுறைப்படுத்திய பிறகும் கூட மேலும் சில ஐயங்கள் எழும். மேலும் தெளிவு பெற மீண்டும் விவரங்கள் – பகுத்தறிதல் – நடைமுறை என முயல வேண்டி இருக்கிறது. உண்மையை கண்டறிவது ஒரு சுழல் ஏணியில் ஏறுவதைப் போன்றது. வினவின் நடைமுறையும் இதுதான்.
“நமது நாடு ஜனநாயக நாடு! நமக்கு இருக்கின்ற சுதந்திரத்தைப் போல வேறு எந்த நாட்டிலும் கிடையாது!” என்பதுதான் நாம் கொண்டிருக்கின்ற புரிதல் அல்லது நம்பிக்கை அல்லது தெரிந்து வைத்திருக்கின்ற உண்மை. இது உண்மைதானா என்பதை நடைமுறையில் இறங்கும் போதுதான் நாம் உணர முடியும். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காவோ அல்லது ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகவோ களத்தில் இறங்கி போராடும்போது நமது நாட்டு ஜனநாயகத்தைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். மற்றபடி ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஒரு பிம்பத்தை மட்டுமே நாம் கொண்டிருக்கிறோம்.
எனவே வினவில் சொல்லப்பட்டு வரும் கருத்துக்களும் முடிவுகளும் களத்தில் சோதித்தறியப்பட்டே சொல்லப்படுகின்றன. ஜோதிஜி அவர்கள் எழுப்பியுள்ள பல்வேறு ஐயங்களை போக்குகின்ற வகையில் கட்டுரைகள் வினவில் வெளி வந்துள்ளன. ஒரு சில விசயங்கள் குறித்து போதுமான அளவில் வினவில் வரவில்லை என்றாலும் அதன் தோழமை அமைப்புகளின் வெளியீடுகளில் சொல்லப்பட்டுள்ன. இவைகள் எல்லாவற்றையும் படித்தாலும் மேலே எழுப்பப்பட்டுள்ள ஐயங்களின் மீதான புரிதலை முழுமையாகப் பெற்றுவிட முடியாது. உண்மையை கண்டறிவதும் உணர்வதும் நடைமுறையோடு தொடர்புடையது.
வாசிப்பு மட்டுமல்ல மறுவாசிப்பும் (revisit) வளர்ச்சிக்கு மிக மிக அவசியமானது.
வாழ்த்துகள்!