முகப்புமறுகாலனியாக்கம்கல்விதிருவெண்ணைநல்லூர் : மாணவர்களும் தோழர்களும் உறுதியான போராட்டம் !

திருவெண்ணைநல்லூர் : மாணவர்களும் தோழர்களும் உறுதியான போராட்டம் !

-

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரி திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை.தேதி : 22-07-2013

ல்வி முதல் தண்ணீர் வரை தனியார் மயம் ஆவதை அம்பலப்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டாரத்தில் செயல்பட்டு வருகின்ற விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பின் சார்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

அரசுப் பள்ளி முற்றுகை
ஜூன் மாதம் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள்.

இதில் சென்றமாதம் பதினைந்துக்கும் மேற்பட்ட கிராம பள்ளிகளை ஆய்வுசெய்து அதில் முன்னோட்டமாக பொய்கை அரசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததை கண்டித்து பள்ளிகளின் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் அன்றே ஆசிரியர்களை உள்ளே நுழைய விடாமல் தடுப்பது என்ற கண்ணோட்டத்தில் அந்த கிராம மக்களிடம் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் பகுதி மக்கள் மாணவர்கள் தோழர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் தனியார்மயத்தை அம்பலப்படுத்தியும், பள்ளியின் சீர்கேட்டை அம்பலப்படுத்தியும் முழக்கமிட்டுக்கொண்டு ஊர்வலமாக  சென்று பள்ளியின் முன்பு ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்துக்கொண்டு ஆசிரியர்களை பள்ளியை திறக்க விடாமல் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன் செய்தியை தெரிந்து கொண்ட காவல்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் என அனைவரும் ஓடிவந்து போராட்டத்தை கைவிடுங்கள் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்துவோம் என சொன்னதின் பேரில் ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்கு பிறகு ஆசிரியர்களை பள்ளிக்குள் நுழைவதற்கு தோழர்கள் அனுமதித்தனர்.

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் (மக்கள், தோழர்கள், அதிகாரிகள்) கழிப்பிட வசதி, குடிதண்ணீர்  அன்றே செய்து தருவதாகவும் சுற்றுச்சுவர் மட்டும் ஒரு மாதம் கழித்து தொடங்குவதாகவும், இரண்டு மாதத்திற்குள் முடித்து தருவதாக எழுத்து பூர்வமாக ஏற்றுக்கொண்டதின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

ஆனால் கழிப்பறை, குடிதண்ணீர் பிரச்சனையை சரிசெய்துவிட்டு சுற்றுசுவர் என்பது நாற்பது நாட்களுக்கு மேலாகியும் அந்த வேலை தொடங்குவதற்கான அறிகுறியே இல்லாமல் இருப்பதை கண்டு மக்கள் தோழர்களிடம் கேள்வி எழுப்ப தொடங்கினர். இன்னொரு புறம் கிராம முக்கியஸ்தர் ஒருவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தமிழ்ச்செல்வம் என்ற அதிகாரியிடம் சுற்று மதில் கட்டித்தருவதாக சொன்னீர்கள் அது என்னாச்சு என்று கேட்டுள்ளார். அந்த அதிகாரியோ அது அந்த நேரத்தில் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்துவதற்காக நாங்கள் செய்த யுக்தி என திமிராக பதில் சொல்லியுள்ளார்.

அதிகாரிகள் என்பவர்கள் மக்களுக்கானவர்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டாலும் மக்களுக்கு திரும்பவும் புரிய வைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் பேச்சுவார்த்தையில் சொன்னது போல நடந்துகொள்ளாத அதிகாரிகளை கண்டிக்கின்ற வகையிலும் BDO அலுவலகத்தை முற்றுகையிடுவதென அமைப்பு முடிவெடுக்கப்பட்டது.

இதோடு இணைந்து

  • காரப்பட்டு, இருவேல்பட்டு, நடுநிலைப் பள்ளியில் சுற்றுமதில் இல்லாமல் ஆடு, மாடுகள் நடமாடுவதை தடுக்கும் வகையில்  சுற்றுசுவர் அமைத்துக் கொடு எனவும்,
  • ஆனத்தூர் ஆரம்ப பள்ளியில்  மழைக்காலங்களில் பள்ளியின் எதிரில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்கும் வகையில் சிமெண்ட் தளம் அமைத்துக்கொடு எனவும்,
  • குமாரமங்கலம் ஆரம்ப பள்ளியில் பள்ளிக்கு, அருகாமையில் பானை சுடும் தொழில் நடப்பதால் அதன் புகை வெளியேற்றும் மாணவர்களுக்கு சுகாதார கேட்டை விளைவிக்கும் ஆகையால்  அதை உடனே தடுத்து நிறுத்தி பள்ளிக்குட்பட்ட இடங்களை சர்வே செய்து உடனடியாக சுற்றுச்சுவர் அமைத்துக் கொடு

என்ற கோரிக்கைகளையும் இணைத்து முற்றுகை போராட்டத்தின் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. போராட்டத்திற்கு ஒரு வார காலம் முன்னதாகவே கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டி 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள், ஒரு நகரம் முழுக்க ஒட்டப்பட்டது. மேலும் மேற்கண்ட விசயங்கள், கோரிக்கைகள் அடிப்படையில் துண்டு பிரசுரம் தயார் செய்து போராட்டம் நடக்கும் பேரூராட்சி முழுக்கவும் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசுரம் விநியோகம் செய்து போராட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. குறிப்பாக பொய்கை அரசூர் பகதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் செய்து போராட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் திருவெண்ணைநல்லூர் உதவி ஆய்வாளர் போராட்டத்தின் தலைமை தோழர் அம்பேத்கரை தொடர்புகொண்டு, “பேச்சு வார்த்தையில் எழுதிக் கொடுத்த தேதி முடிவுக்கு வருவதற்குள்ளாகவே இப்படி போராட்டம் அறிவித்திருப்பது என்பது உங்க அமைப்பு ஆளுமைக்கு உகந்தது அல்ல” என சொன்னதை சொன்னபடியே செய்து முடிப்பதில் அதிகாரிகள் நேர்மையானவர்கள் என்ற தோரணையில் தோழரை மடக்க முயற்சி செய்து உள்ளார்.

ஆனால் தோழரோ, “ஒரு கட்டுமான வேலை என்பது சொன்ன தேதியில் அப்படியே  ரெடிமேடாக கொண்டுவந்து வைப்பது அல்ல. அதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே அதற்கான அறிகுறிகள் தெரியவேண்டும். அதோடு மட்டுமல்ல எங்களுக்கு அந்த ஊர் பிரச்சனை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வது என்பது நோக்கமல்ல இன்னும் பல கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் நாறிக்கிடப்பதை அதிகாரிகளுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த போராட்டம் தேவையாக உள்ளது” என பேசியதும், அடுத்தபடியாக அந்த விசயத்தை விட்டு விட்டு மிரட்டும் பாணியில் பேச ஆரம்பித்தார்.

குறிப்பாக, “மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இருப்பது உங்களுக்கு தெரியாதா?” என  கேட்டதும் “144 தடை உத்தரவு இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டுதான் நாங்கள் போராட்டத்தை அறிவித்தோம்” என்றதும், “நீங்கள் அப்படி போராட்டம் செய்தீர்களானால் உங்களை கைது செய்வது மட்டுமல்ல, கடுமையான வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ள வேண்டி வரும்” என மிரட்டிப்பார்த்தார்.

பிறகு, “இது என்னோட முடிவு அல்ல SP-யோட உத்தரவு” என  நழுவ முயற்சி செய்தார். தோழரோ, “அது யாரோட முடிவாயிருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, மக்களுக்கான உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். இதுதான் எங்களுக்கு வேலை, கைது செய்வதுதான் உங்கள் வேலை என்றால் நீங்கள் செய்து கொள்ளுங்கள். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை” என்று சொன்னதும், “என்னங்க சார் இப்படி பேசறீங்க, எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து முன் கூட்டியே தெரிவித்திருந்தால் நாங்கள் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருப்போம்” என ஆலோசனை கூற முயற்சி செய்தார். “இப்ப என்ன ஆச்சு, அதே வேலையை இப்போதும் செய்யுங்கள்” என சொன்னதற்கு, “எங்களை மதிக்கவே இல்லை நீங்கள், நாங்கள் எப்படி திடீரென்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய முடியும்” என சிலிர்த்துக் கொண்டு, “போராட்டத்திற்கு வரும்போது பேசிக் கொள்வோம்” என போனை துண்டித்துக் கொண்டார்.

திட்டமிட்ட தேதியில் மூன்று வாகனங்கள் ஏற்பாடு செய்துகொண்டு (டாடா ஏஸ்) ஏறக்குறைய 75 மாணவர்கள், 80-க்கும் மேற்பட்ட தோழர்கள், மக்கள் என அலுவலகத்தை நோக்கி சென்றனர். இந்தப் போராட்டத்திற்கு முன்பே போராட்டக் காட்சிகளை படமெடுப்பதற்காக இரு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தோம் (அவர்கள் தொழில் நடத்துபவர்கள்). நாம் போராட்டத்திற்கு போகும் முன்பே இவர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு சென்று விட்டதால் போலீஸ் ஓடிவந்து கேமராக்களை பிடுங்கிக் கொண்டு முதலில் இருவரையும் கைது செய்தது.

பிறகு நாம் அழைப்பு கொடுத்ததின் பேரில் வருகை தந்த புதிய தலைமுறை, சன் நியுஸ் நிருபர்களை விரட்ட ஆரம்பித்தார்கள். அவர்கள் நாங்கள் பத்திரிக்கை நிருபர்கள் என வாதாடியும் அவர்கள் கேமராவை பிடுங்க முயற்சி செய்தார்கள். பிடுங்கும் போது அவர்கள் வைத்திருந்த மைக்குகளில் பத்திரிக்கையினுடைய பெயர் இருந்தால் பிறகு தவிர்க்க முடியாமல் அவர்களை அனுமதித்தனர் இதற்குள் 10-க்கும் மேற்பட்ட போலீசு நம்மை கைது செய்வதற்கு தயாராகினர். அதை  தெரிந்து கொண்ட அமைப்பு தோழர்கள் மாணவர்கள் அனைவர்களையும் முன்வரிசைகளிலும், அதற்கடுத்து பெண்களையும், அடுத்த வரிசையில் தோழர்கள் என வரிசைப்படுத்தி அனைவரையும் தயார் நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

போராட்டத்திற்கு செல்வதற்கு முன் தோழர்களை உறுதிபடுத்தும் வகையில் சிறிதுநேரம் உரையாற்றினார். குறிப்பாக “மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இருப்பதால் நம் தோழர்கள் அலுவலகம் முன் செய்வதற்கு முன் போலீசு நம்மை தடுத்து கைது செய்ய முயற்சிக்கிறது. நாம் அனைவரும் அப்படி கைது செய்ய வரும் போது நம்முடைய இலக்கை நோக்கி போலீசுனுடைய தடையை மீறி நாம் முன்னேற வேண்டும். அப்படி முன்னேறும் போது சரிபாதி மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதால் அனைவரையும் கைது செய்வதில் போலீசு யோசிக்கும்.  அதையும் மீறி கைது செய்யும் பட்சத்தில் ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு கொண்டே அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும்” என பேசி முடித்ததும் தயார் நிலையில் இருந்த மாணவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற சொல்லி விண்ணதிர முழக்கமிட்டனர்.

இந்த மாணவர்கள் அனைவரும் 8-ம் வகுப்புக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் போர்க்குணமாக முழக்கமிட்டதை பார்த்த போலீசு திகைத்துப்போய் உடனடியாக மாணவர்களை பிரிக்க சூழ்ச்சி செய்தனர். அதற்கு மாவட்ட உதவி கல்வி அதிகாரியை உடனடியாக வரவழைத்தனர். போராட்ட இடத்திற்கு வந்த அதிகாரி தோழர் அம்பேத்கரிடம், “உங்கள் கோரிக்கைகளை யெல்லாம் உடனடியாக நிறைவேற்ற நாங்கள் கவனம் செலுத்துகின்றோம். ஆகையால் எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள். அவர்களை பாதுகாப்பாக பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றோம்” என கெஞ்சிப்பார்த்தார்.

அவர்களை தனியாக பிரிக்க அனுமதிக்கமாட்டோம் என தொடர்ந்து முழக்கமிட்டுக்கொண்டேயிருந்ததனால் முகம் சோர்ந்துபோன அதிகாரி “நம்மிடம் நீங்கள்போடுகின்ற கோரிக்கை முழக்கத்தையாவது கொடுங்கள்” என வாங்கிக் கொண்டு பரிதாபமாக ஒதுங்கிவிட்டார்.

எடுத்த முயற்சி பலிக்காத வெறியில் காவல்துறை கைது என்ற பெயரில் மாணவர்களை மட்டும் போலீசு வாகனத்தில் ஏற்றியது. இதை புரிந்து கொண்ட தோழர்கள் எங்களையும் கைது செய்யுங்கள என முரண்பட்டனர். ஆனாலும் மாணவர்களை தனியாக போலீசு வாகனத்தில் ஏற்றுவதை நிறுத்தியபாடில்லை. அமைப்பு வழிகாட்டுதலின் அடிப்படையில் உடனே தோழர்கள் சுதாகரித்து கொண்டு மற்ற மாணவர்களை கைது செய்வதை தடுத்ததோடு அல்லாமல் மாணவர்களோடு தோழர்களும் சேர்ந்து கைதாக வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் வாகன வாயிற்படியில் நின்று கொண்டிருந்த போலீசை தள்ளி விட்டு வாகனத்தில் ஏறினர்.

இங்கேயும் தோற்றுபோன போலீசு மூன்று வாகனத்தில் அனைவரையும் கைதுசெய்து திருமண மண்டபத்தில் அடைத்தது. இந்த சூழ்நிலையில் தோழர்களை ஏற்றிவந்த மூன்று வாகனத்தையும் கைப்பற்றி  காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்றது.

இது ஒருபுறம் இருக்க முன்கூட்டியே கைது செய்த கேமராமேன்கள் இருவரையும் அழைத்து, “நீங்கள் இவர்களோடு சேர்ந்து கைதாக போகிறீர்களா” என மிரட்டி, “தனியாக வந்தால் சிம்பிளான கேஸ் போடுவோம்” என பிரிக்க முயற்சித்தார்கள். கேமராமேன்களே, “நாங்கள் தோழர்களோடு இணைந்தே கைதாகிறோம்” என்று சொன்னவுடன் முகம் இருண்டுபோய், அடுத்தகட்டமாக எப்படியாவது தோழர்களை பிரித்து வழக்கு பதிவு செய்து விட வேண்டுமெனறே நோக்கத்தில் போராட்டத் தலைவரை அழைத்து, “தயவுசெய்து மாணவர்களை தனியாக பிரித்து எங்களிடம் ஒப்படையுங்கள்.  அவர்களை எங்கள் வாகனத்திலேயே அழைத்துச் சென்று பள்ளியில் கொண்டு சேர்த்து விடுகிறோம். பிறகு பிரவன்டெட் அரஸ்டு என்ற பெயரில் உங்களை மாலை 6 மணிக்கு விடுதலை செய்கிறோம்” என மூன்றாவது முறையாக காவல்துறை உதவி ஆய்வாளர் மாணவர்களை பிரிக்க முயற்சி செய்தார்.

போராட்டத்தின் தலைவரோ, “அவர்களுடைய பிரச்சனைகளுக்காகத்தான் நாங்களும் போராட வந்திருக்கிறோம். ஆகையால் போராட்டத்தை அவர்களும் பார்க்கவேண்டும் என்ற அடிப்படையில் அவர்களை பிரிக்க அனுமதிக்கமாட்டோம். அப்படி நீங்கள் பிரிக்க முயற்சி செய்தால் உங்களுடைய அதிகார துஷ்பிரயோகத்தை (அடித்து பிரிப்பது) வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்”  என்றதும், “நீங்கள் மாணவர்களுக்கு தவறான பயிற்சி கொடுக்கிறீர்கள். பிஞ்சு மனதிலேயே அவர்களுக்கு இதுபோன்ற விசயங்கள் பதிவாகிவிட்டதால் அவர்களும் இதையே கடை பிடிப்பார்கள் என பொறுப்பாக பேசவந்தார். நமது தோழரோ கடைபிடிக்கட்டும், நல்லதுதானே. இப்பொழுது நடந்து முடிந்தது என்பது சமூக விரோத குற்றங்களில் ஈடுபடும் செயலா?”  என விளக்கியதும், அதன்பிறகு “நான் சொல்வதை சொல்லிவிட்டேன். நான் பிள்ளைகள் பேரிலும் வழக்கு பதிவு செய்து தனிச் சிறையில் (ஹோம் செல்) அடைப்பேன்” என்று பயமுறுத்தி பார்த்தார்.

நமது தோழர்களோ, “எந்த போராட்டத்திற்கு என்னென்ன வழக்குபதிவு செய்ய வேண்டும் என்பது எங்களுக்கும் தெரியும். அப்படி நீங்கள் மீறி சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டால் நீங்களும் நீதி மன்றத்திற்கு வர நேரிடும்” என்று சொன்னவடன், “நீங்கள் எதையாவது பேசுங்கள். நான் என்னுடைய வேலையை செய்கிறேன்” என்று போனை எடுத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

இதற்கிடையில் மண்டபத்திற்குள் அடைக்கப்பட்டிருந்த நமது தோழர்கள், மாணவர்கள் தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தனர். வெளியேறிய உதவி ஆய்வாளர் நமது தோழரை அழைத்து, “உங்களை விடுதலை செய்யச் சொல்லி மேலிருந்து எங்களுக்கு உத்தரவு வந்துவிட்டது” என சொல்லி, “நீங்கள் வைத்திருக்கின்ற கோரிக்கைகளுக்கெல்லாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கான வேலையை தொடங்குவார்கள்” என சொல்லி, “உங்கள் வாகனம், உங்கள் கேமரா அனைத்தையும் நாங்கள் ஒப்படைத்துவிடுகிறோம். ஆகையால் நீங்கள் அனைவரும் வீட்டுக்கு போகலாம்” என சுண்டெலி போல சுருங்கிப் போன  முகத்தோடு நம்மை வழியனுப்பி வைத்தார்.

சாதாரண ஒரு அடிப்படை பிரச்சனைகளுக்கு போராடினால் கூட போலீசு ஓடிவருவது என்பது மக்களுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை திரும்ப திரும்ப மக்களுக்கு நாம் புரிய வைப்பதற்கு நல்ல ஒரு வாய்ப்பாக சமீபத்தில் பகுதியில் நடந்த இரண்டு போராட்டங்களும் நமக்கு உதவின என்பதை உணரமுடிந்தது. மேலும் போலீசுக்கும் நமக்கும் முரண்பாடு நடந்துகொண்டு இருக்கும்போது அருகாமையில் நின்றுகொண்டிருந்த ஒருவர், “144 போன்ற எந்த தடை உத்தரவுக்கும் அஞ்சமாட்டார்கள் போலிருக்கிறது”  என இன்னொருவரிடம் சொல்லிகொண்டிருந்தார். இன்னொருவர், “போலீசும் எப்படியாவது பிரிக்கலாம்னு பார்க்கிறது, கட்சிகாரர்களும் அதை சட்டை செய்யாமலே அவர்கள் போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்கள்” என சொல்லிக் கொண்டிருந்தார்.

பொதுவாக திரளான மாணவர்கள் கலந்து கொண்டதினால் எடுத்த உடனேயே நம்முடைய கருத்தை முடக்கி கைது செய்ய முடியவில்லை. மக்களோடு நாம் அரசியலை கொண்டு சென்று அதை மக்கள் புரிந்துகொண்டு நம்மோடு இணைந்து போராட தயாராகிவிட்டதால் எப்படிப்பட்ட போலீசையும் வெல்லமுடியும்.

முழக்கங்கள்

விவசாயிகள் விடுதலை முன்னணி – வாழ்க!
புதிய ஜனநாயக புரட்சி – ஓங்குக!

1. போராட்டம் இது போராட்டம்!
அதிகாரிகளை கண்டித்து!
நடந்தும் இந்த போராட்டம்
மாணவர்களுக்கான  போராட்டம்!
மக்களுக்கான போராட்டம்!

2. ஆனத்தூர் காரப்பட்டு! குமாரமங்கலம்  இருவேல்பட்டு!
பொய்கையரசூர் கிராமத்தில்!
இன்னும் பல கிராமத்தில்!
ஆரம்ப பள்ளியின் லட்சணத்தை!
அடுக்காய் சொல்லுரோம் கேளுங்க!

3. ஒவ்வொரு பள்ளியின் உயரத்திலும்!
ஒய்யாரமாய் டேங் இருக்கும்!
பீளியை திறக்க முடியாது!
திறந்தாலும் தண்ணீர் வராது!
காரணம் கேட்டால் வாத்தியாரு!
கையை  விரிப்பார் தெரியாது!

4. சுற்றித்திரியும் நாய்கள் கூட!
சுவரைத் தேடுது சிறுநீர்கழிக்க!
ஆனால் மாணவ மாணவிகள்!
திறந்த வெளியில் ஒன்றாய் இணைந்து!
சிறுநீர் கழிக்கும் கொடுமை என்பது!
சிறுவயதிலேயே பண்பை கெடுக்குது!

5. பள்ளிக்கூடங்கள் என்பதெல்லாம்!
பாதுகாப்பாய் இருந்த்தால்தான்!
மாணவர் சிந்தனை சிதறாது!
ஆடுமாடுகள் நுழையாது!
ஆனால் ஒவ்வொரு பள்ளியிலும்!
சுற்றுச்சுவர் இல்லாமல்!
குறுக்கும் நெடுக்கும் ஆடுமாடுகள்!
பாரியடிக்குது பகல் நேரத்தில்!
இரவு நேரத்தில் படித்துறங்கி!
இனிமையாய் கழிக்குது சாணத்தை!

6. பிணத்தை எரிக்கும் சுடுகாட்டில்கூட
சுற்றுமதில்கள் இருக்கும் போது!
பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில்
திறந்த வெளியாய் காட்சியளிக்குது!
ஆட்சிகள் என்பது மாறிவந்தாலும்!
காட்சிகள் என்பது மாறாத்துயரம்!

7. தாய்திட்டம் சேய்திட்டம்!
வாய்கிழிய சொன்னாலும்!
ஆய்கழிக்க இடமில்லாமல்
நாய் கொடுமைகள் தொடருமென்றால்
ஆட்சிமாறி என்ன பயன்!
ஆணையிடுமா அம்மா உடனே!

8. எச்சரிக்கை, எச்சரிக்கை!
எச்சரிக்கை செய்கின்றோம்
ஏறெடுத்து பார்க்காமல்
இருமாப்பாய் பேசுகின்ற
அதிகாரிகளே, உங்களுக்கு
எச்சரிக்கை செய்கின்றோம்!
எங்கள் வரியில், உங்கள் வாழ்க்கை!
எங்கே போகுது, உங்கள் கவனம்!

9. ஒழித்துக்கட்டுவோம், ஒழித்துக்கட்டுவோம்!
அரசு பள்ளிகளை நலிவடையச் செய்து!
தனியார் பள்ளிகளை வாழ வைக்கும்!
தனியார்மயம், தாராளமயத்தை
ஒழித்துக்கட்டுவோம், ஒழித்துக்கட்டுவோம்!

10. சாதி மதத்தை தூக்கியெறிந்து
வர்க்கமாக ஒன்றிணைவோம்
ஆதிபாதையை தூக்கெறிந்து
புதிய பாதைக்கு அணிவகுப்போம்
புரட்சிப்பாதைக்கு தோள்கொடுப்போம்!

11.  பெரியோர்களே! தாய்மார்களே!
மாணவர்களே, இளைஞர்களே!
மாற்றுக்கட்சி நண்பர்களே!
விதியை எண்ணி பயனில்லை!
வீதியில் இறங்கிபோராடு!
போராட்டங்கள் இல்லாமல்
யாராட்டமும் வெல்லாது

அடிப்படை வசதி செய்யகோரி
போராடிய தோழர்களை
கைது செய்யும் பொலீசு
ஜெயலலிதாவின் அடியாள் என்பதை
புரிந்துகொள்வோம், புரிந்து கொள்வோம்
பொதுமக்களே, நாம் புரிந்துகொள்வோம்

சாதிகலவரம் நடக்கும்போது
போலீசு செல்ல தாமதம்
மதக்கலவரம் நடக்கும்போது
போலீசு செல்ல தாமதம்
கொள்ளையர்களை தடுத்து நிறுத்த
போலீசு செல்ல தாமதம்
பொதுமக்களின் நலன் கருதி
போராட வந்த தோழர்களை
அடக்கி ஒடுக்க விரைந்துவரும்
இதுதான் போலீசின் மாவீரம்.

_______________________________________________________

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி
திருவெண்ணைநல்லூர் வட்டாரம்
9655587276

_______________________________________________________

  1. போலீசையும், அதிகாரிகளையும் எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று விளக்குவது போல் இருக்கிறது இந்தப் போராட்டம். அருமையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது அறிக்கை. இது நிச்சயமாக மற்ற பகுதியில் போராடும் தோழர்களுக்கு உத்வேகம் அளிக்கும். போராடிய தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்!

  2. சிதைக்க சிதைக்க கூடு கட்டும் சிலந்தி பூச்சி,போலீஸ் மாணவர்களை பிரிக்க பிரிக்க சேர்ந்து வின்னதிரும் முழக்கமிட்டது விவசாயி விடுதலை முன்னணி. வளர்க போராட்டம், வாழ்க விவிமு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க