அரசுப்பள்ளிகளில் இன்றைய சூழலில் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். இத்தகுதியில் சுமார் 20,000 பள்ளிகள் இருக்கின்றன. மேலும் 100 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என 4 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் படிக்கின்றனர். இத்தகைய மாணவர்கள் எப்படி தரமான கல்வியை கற்க முடியும்? 10,12 இறுதி தேர்வில் தேர்ச்சி அடைவதும், தரமான மதிப்பெண் பெறுவதும் எப்படி சாத்தியம்?.
தனியார் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் கட்டாயமாக இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் மட்டும் 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்தால் பெற்றோர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளை சேர்ப்பார்கள். தனியார் பள்ளிகளுக்கு பெற்றேர்கள் போவதற்கு அடிப்படையான காரணங்களுள் ஒன்று அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர் பற்றாக்குறை. பணி ஓய்வு பெற்றவர்கள், மரணம் அடைந்தவர்கள் அதனால் உருவான காலியிடங்களுக்குத்தான் தற்போது ஆசிரியர் நியமனத் தேர்வு நடக்கிறது. மாணவர்களின் அதிகரித்த தேவைக்கேற்ற அளவில் ஆசிரியர் பணி நியமனம் நடப்பது இல்லை. கல்வி என்பது சேவையாக அரசு பார்க்க தவறுகிறது. அது வணிகம் அல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வியில் தனியார்மயத்தை அனுமதிக்க கூடாது.
அரசுப் பள்ளிகளில் போதிய வகுப்பறைகள் இல்லாமல், மரத்தடியில் மாணவர்கள் கல்வி கற்பது இயல்பான ஒன்றாக மாறியிருப்பதுதான் கொடூரமானது. அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல்வாதிகள் கவனத்தோடுதான் இந்த அநீதி நடந்து கொண்டிருக்கிறது. சுகாதாரமான குடிநீர், கழிப்பறை, சமையலறை, நூலகம், விளையாட்டு மைதானம், பெரும்பாலான பள்ளிகளில் அந்த மாணவர்களுக்கு கானல் நீராகவே உள்ளது. இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம் என்பது வெற்று முழக்கமாகவே இருக்கிறது.
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் அரசுப் பள்ளிகளில், தாய் மொழியில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கு போதிய ஆசிரியர்கள் நியமனம், போதிய வகுப்பறை, பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, சமையலறை, நூலகம், விளையாட்டு மைதானம் அமைத்திடக் கோரி, ஆகஸ்ட் 15 அன்று காலை 10-00 மணிக்கு விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பேரணியும் மறியலும் நடைபெற உள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள், வழக்கறிஞர், பொது மக்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளார்கள். அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வை. வெங்கடேசன், மாவட்டத்தலைவர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
விருத்தாசலம்,கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு 9345067646
அரசு டாஷ்மாக் விற்பனைக்கு இலக்குநிர்ணயம் செய்து மக்களின் தாலி அறுக்கிற வேலையை நன்றாக செய்து வருகிறது!ஆனால் கல்வி என்று வரும் போது தற்குறிகள் தொடர வேண்டும் என்பதில் கொள்கை முடிவோடு செயல் படுகிறது!!