Friday, June 2, 2023
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்பிராண்டட் ஆடைகள் - பாதையோர ஆடைகள் : இலாப நட்டம் யாருக்கு ?

பிராண்டட் ஆடைகள் – பாதையோர ஆடைகள் : இலாப நட்டம் யாருக்கு ?

-

ஆயத்த ஆடைகள் – ஒப்பந்தப் பணிகளும் தொழிலாளர் பற்றாக்குறையும் – 1

 • சில நாட்களுக்கு முன்னால் எங்கள் தொழிற்சாலையில் நடந்த மூன்றாம் தரப்பு ஆய்வொன்றில் ஃபினிஷிங் பணியாளர்களுக்கு இடம் போதுமானதாக இல்லை என எச்சரிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது.
  குறிப்பு : அன்றைக்கு அத்துறைப் பணியாளர்களில் 40 சதவிகிதம் பேர் சற்றே தொலைவிலிருக்கும் எங்களது துணி கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள்.
 • ஆயத்த ஆடைசென்ற வாரத்தில் எனது சக பணியாளர் ஒருவர் தனது மகளுக்கு அடிக்கடி உடல் நலமில்லாது போவதால் மந்திரிப்பதற்காக தர்காவுக்கு தனது மனைவி மகளுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
  குறிப்பு : அவர் சம்பளம் ரூ 8,500. அவர் குடியிருக்கும் பகுதிக்கும் செல்லும் தர்கா இருக்கும் பகுதிக்கும் அடிக்கொரு பேருந்து இருக்கிறது.
 • இரு நாட்களுக்கு முன்னால் தலா ரூ 500 விலையில் மூன்று ஜீன்ஸ் கால்சட்டைகள் வாங்கினேன். அவை ஒப்பந்தத்தைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டதால் ஸ்டாக் லாட் விற்பனைக்கு அனுப்பப்பட்டவை.
  குறிப்பு : இந்தியாவின் உயர்தர பிராண்டாக கருதப்படும் அந்த கால்சட்டை ஒன்றின் விற்பனை விலை ரூ 3,499. விற்ற நிறுவனம் தவிர்த்து கூடுதலாக இரண்டு நபர்களுக்கு லாபமளித்த பிறகு அவை ரூ 500 ரூபாய்க்கு என்னிடம் விற்கப்பட்டிருக்கின்றன.

மேற்சொன்ன தகவல்கள் தொடரவிருக்கும் கட்டுரையை புரிந்துகொள்ள உதவியாக இருக்கலாம் என்பதால் முதலில் குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் பேரங்காடிகளில் மலிவான விலையில் ஆடை வாங்குபவர் எனில் அந்த ஆடைகள் எப்படி மலிவாக கிடைக்கின்றன என்பதை யோசித்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் விலையுயர்ந்த ஆடைகளை மட்டுமே வாங்குபவர் எனில் அவை தரமானவைதான் என நம்புகிறீர்களா? அல்லது அவை நியாயமான கூலியை கொடுத்து உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்கும் என கருதுகிறீர்களா?

ஆயத்த ஆடை தொழிலாளர்கள்
நீங்கள் விலையுயர்ந்த ஆடைகளை மட்டுமே வாங்குபவர் எனில் அவை தரமானவைதான் என நம்புகிறீர்களா? அல்லது அவை நியாயமான கூலியை கொடுத்து உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்கும் என கருதுகிறீர்களா?

நான் 13 ஆண்டுகளுக்கு முன்னால் ஆயத்த ஆடைத் துறைக்கு வந்தபோது, முதலில் வேலை செய்தது ஆண்களுக்கான ஏற்றுமதி சட்டைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில். முழுமையாக குளிரூட்டப்பட்ட அந்த ஆலையில் எல்லா ஊழியருக்கும் ESI, PF பிடித்தம் செய்யப்பட்டது. பாதுகாப்பு விதிகள் கறாராக பின்பற்றப்பட்டன. எந்திரங்களுக்கிடையே போதுமான இடைவெளி இருந்தது. சரியாக 11 ஆண்டுகளுக்குப் பிறகு நான் மீண்டும் ஆண்கள் சட்டைகளுக்கான ஒப்பந்தங்களை கையாளத் துவங்கியிருக்கிறேன். ஆனால் இப்போது நிலைமை முற்றாக மாறியிருக்கிறது. எங்கள் தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு நபர்கள் ஒப்பந்தப் பணியார்கள், அவர்களுக்கு ESI, PF கிடையாது. தையல் எந்திரங்கள் மிக நெருக்கமாக பொருத்தப்பட்டிருக்கின்றன, வெடிக்கும் சாத்தியமுள்ள நீராவி பாய்லர்கள் அவற்றினிடையே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவசர கால வழி மட்டுமல்ல சாத்தியமுள்ள எல்லா இடங்களிலும் ஏதேனும் ஒரு பொருள் அடைத்துக் கொண்டிருக்கிறது.

தையற்கூடத்தில், தொழிலாளர்கள் கைகள் அதிகமாக துணியில் படும். ஆகவே ஆடையில் வியர்வை ஒட்டுவதை தவிர்க்க முதலில் குறிப்பிட்ட ஆலை குளிரூட்டப்பட்டிருந்தது. அங்கே வரும் இறக்குமதி நிறுவன ஆய்வாளர்கள் ஹாங்காங் கிளையை சேர்ந்தவர்கள், அதிகபட்சமாக இல்லையென்றாலும் குறைந்த அளவில் பாதுகாப்பான பணிச் சூழலை எதிர்பார்ப்பவர்கள். உண்மையான அதிகபட்ச பாதுகாப்பை எதிர்பார்த்தால் அவர்களுக்கே வேலை இருக்காது என்பது எல்லா முதலாளிகளுக்கும் தெரியும்.  ஒருமுறை வந்த ஆய்வாளர் தீயணைக்கும் கருவியை தூக்கிப் பார்த்து, இவை தூக்க கடினமானவையாக இருக்கிறது. ஆகவே இங்கே அதிக எண்ணிக்கையில் பணியிலுள்ள பெண்களும் சுலபமாக கையாளுமளவு எடை குறைவான கருவிகளை வையுங்கள் என குறிப்பு எழுதினார். ஆனால் தீயணைப்பானின் எடையை பார்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு கிடையாது. அப்படிப்பட்ட நபர்களுக்கு பயந்தே அந்த ஆலையில் பாதுகாப்பு அம்சங்கள் ஓரளவு கடைபிடிக்கப்பட்டன.

ஆயத்த ஆடை விற்பனை கடை
அதிக விலையுடைய பொருட்கள் தரமானவை எனும் நினைப்பு ஆகப் பெரும்பாலானவர்களுக்கு உண்டு.

ஒரு தொழிலாளியின் எதிர்கால சேமிப்பு, நிகழ்காலத்துக்கான பணிப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல் இவற்றை இல்லாமல் செய்வதன் வாயிலாக சேமிக்கப்படும் பணமே நாம் வாங்கும் மலிவான ஆடைகளுக்கான அடிப்படை. தொண்ணூறுகளின் இறுதியில் ஒரு ஏற்றுமதி ஆடைக்கு தரப்பட்ட விலை இப்போது கிடையாது. எந்த ஒரு மூலப்பொருளும் விலை குறையாதபோது இந்த விலைக் குறைப்பு தொழிலாளர்களுக்கான நிதியை குறைப்பதன் வாயிலாகவே சாத்தியமாகிறது. சப் காண்ட்ராக்ட் எனும் பெயரில் இந்த உழைப்புச் சுரண்டல் எல்லா தொழிலிலும் வியாபித்திருக்கிறது.

ஆடை உற்பத்தியின் சகல படிநிலையிலும் செலவுக் குறைப்புக்கான ஒரே ஆதாரமாக தொழிலாளர்களின் ஊதியமும் அவர்களுக்கான பிற வசதிகளும்தான் இருக்கின்றன. சில பெங்களூர் நிறுவனங்கள் தங்கள் ஆடைகளை வங்காள தேசத்தில் உற்பத்தி செய்கின்றன. காரணம், அங்கே ஒரு தொழிலாளியின் சராசரி ஊதியம் 2,100 ரூபாய் (பெங்களூரில் ரூ 5,500). மும்பை தொழிலதிபர் ஒருவர் தனது நிறுவனத்தை மூடியதற்கான காரணமாக சொன்னது ஒன்றை மட்டுமே “மும்பையில் ஒரு டெய்லருக்கு ரூ 9,000 சம்பளம் தரவேண்டியிருக்கிறது”. அங்கே பிளாட்பார்மில் வசிக்கவே அந்த சம்பளம் போதாது என்பதைப் பற்றி அவருக்கு எந்த அக்கறையும் இல்லை.

ஒருவேளை நீங்கள் பேண்டலூன் போன்ற விலையுயர்ந்த ஆடைகளை மட்டும் வாங்குபவர் எனில் இந்த பதிவு உங்களுக்கே மிகவும் அவசியமானது. அதிக விலையுடைய பொருட்கள் தரமானவை எனும் நினைப்பு ஆகப் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. ஆடை விசயத்தில் அந்த கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். 1,500 ரூபாய் விற்பனை விலையுடைய லீ கூப்பர் சட்டை மற்றும் 800 ரூபாய் விலையுடைய ஜான் மில்லர் சட்டை இவ்விரு ஆடைகளுக்குமான விலை வேறுபாடு சற்றேறக் குறைய இரண்டு மடங்கு. ஆனால் இவற்றின் துணி விலையில் இருக்கும் வேறுபாடு அதிகபட்சம் 50 ரூபாய் இருக்கலாம். இந்த இரண்டு வகையான சட்டைகளும் ஒரே தளத்தில் ஒரே குழுவினரால் தைக்கப்படுகிறது. இரண்டு ஆடைகளுக்கான தையற் கூலியும் சற்றேறக் குறைய சமம்தான். அப்படியெனில் நீங்கள் கூடுதலாக கொடுக்கும் பணம் எதற்காக? மனதை தேற்றிக் கொள்ளுங்கள்… அது வெறும் லேபிளுக்கான தொகை மட்டுமே. கீழே தரப்பட்டுள்ள ஒரு ஒப்பீட்டை கவனியுங்கள்.

பிராண்ட் விற்பனை விலை

உற்பத்திக்கான கூலி

லீ கூப்பர் 1499 ரூபாய் 90 முதல் 105 ரூபாய் 20 ரூபாய்க்கான சலவை, 21 ரூபாய்க்கான எம்ராய்டரி மற்றும் சில கூடுதல் ஆடை பாகங்கள் உண்டு.
இண்டிகோ நேஷன் 1299  மற்றும் 1399

56 முதல் 61 ரூபாய்

சட்டைப் பையின் உள்ளே கூடுதலாக ஒரு காஜா மற்றும் இரண்டு தையல், பேக்கிங் பொருட்கள் விலை சற்று அதிகம். சலவை கிடையாது.
ஜான் மில்லர் 799 55 ரூபாய் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை. சாதாரண சட்டைகள்.

மேலேயுள்ள தரவுகள் ஒரு உதாரணம். இதில் எல்லா ஆடைகளுக்குமான தையற் கூலி கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதை உணரலாம். ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஒரு சட்டை உருவாக குறைந்த பட்சம் அறுபது பேர் வேலை செய்தாக வேண்டும். வாங்கப்படும் பொருட்கள் தவிர்த்து ஒரு சட்டைக்கு 45 முதல் 60 ரூபாய் வரை கூலி பெறப்படுகிறது. ஆக நீங்கள் வாங்கும் 1,500 ரூபாய் சட்டையின் உற்பத்திக்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபாய் அல்லது அதற்கும் குறைவான தொகையை கொடுக்கிறீர்கள். (நூல்கண்டு வாங்குவது முதல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சரியான முகவரிக்கு சென்று சேர்ப்பது வரையான வேலையை செய்யும் என்னையும் சேர்த்து). கருணைக்கு நன்றி. ஆனால் அந்த சட்டையின் ஒட்டுமொத்த உற்பத்தி விலையான 300 ரூபாயை 60 நாளுக்கு முதலீடாக போட்ட கடமையை மட்டும் செய்த எனது முதலாளிக்கு நீங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் லாபமாக தருகிறீர்கள். அதனை விற்பனை செய்யும் ஆதித்ய பிர்லா மற்றும் ஃபியூச்சர் குழுமத்தின் லாபம் குறிப்பிட்டு சொல்ல இயலாதது.

// அலுவலக நிர்வாகம் மற்றும் உற்பத்தியில் உண்டாகும் இழப்பு ஆகியவற்றுக்கும் தனியே தொகை நிர்ணயிக்கப்பட்டு அது விலையில் சேர்க்கப்படும். ஆகவே இவை லாபத்தில் இருந்து செய்யவேண்டிய செலவல்ல//

ஆயத்த ஆடை தொழிற்சாலை
தையல் எந்திரங்கள் மிக நெருக்கமாக பொருத்தப்பட்டிருக்கின்றன.

வேலையில்லாத தருணங்களில் சில உள்ளூர் தயாரிப்பு ஆடைகளை உற்பத்தி செய்வோம். ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களில் சராசரியாக 325 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் அந்த சட்டைகளுக்கும் இதே உற்பத்திக் கூலிதான் தரப்படுகிறது (உணவகங்களில் தேசையை பார்சல் செய்வது மாதிரி அவை சுருட்டிய வடிவில் பேக்கிங் செய்யப்படும்.. ஒரே வேறுபாடு அது மட்டும்தான்). ஆகவே பிளாட்பார்மில் விற்பனை செய்யப்படும் ஆடைக்கும் பகட்டான ஒரு கடையில் விற்பனை செய்யப்படும் ஆடைக்கும் ஒரு உற்பத்தி தொழிற்சாலை ஊழியனாக எனக்கு எந்த வேறுபாடும் கிடையாது. ஒரு சாலையோர விற்பனை சட்டைக்கு உண்டான அலட்சியத்துடனோ அல்லது உயர்தர !! ஆடையுற்பத்திக்கான அக்கறையோடோ வேலை செய்வது ஊழியரின் விருப்பத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது. இப்போதிருக்கும் வேலை அழுத்தத்தில் அக்கறையோடு வேலை செய்வதற்கான சாத்தியம் பூஜ்ஜியமே.

ஆடைகளை கொள்முதல் செய்கிற நிறுவனங்களுக்கு தெரியாமல் இவை நடப்பதாக நீங்கள் எண்ணி விட வேண்டாம். அவர்களுக்கு தெரிந்தேதான் இவையெல்லாம் நடக்கின்றன. படு குப்பையான ஆடைகளை, உலகின் அதிசிறந்த மூன்றாம் தரப்பு ஆய்வக ஊழியர்களின் ஆய்வுக்குப் பிறகு எவ்வித சிக்கலுமின்றி ஏற்றுமதி செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் கோடிக் கணக்கான ஆடைகளை ஆய்வு செய்து ஒப்புதல் தரும் பணியிலுள்ள என் கல்லூரி நண்பர், முறையான விதிகளின்படி ஆய்வு செய்தால் ஒரு பெட்டியைக் கூட ஏற்றுமதி செய்ய இயலாது என்கிறார். ஐரோப்பிய இறக்குமதி நிறுவனங்களுக்காக எட்டாண்டு காலம் பணியாற்றிய (என்னுடைய) அனுபவத்தில் பார்த்தால் அக்கருத்து 90% சதவிகிதம் உண்மையே.

பிளாட்பார்ம் விற்பனை.
பிளாட்பார்மில் விற்பனை செய்யப்படும் ஆடைக்கும் பகட்டான ஒரு கடையில் விற்பனை செய்யப்படும் ஆடைக்கும் ஒரு உற்பத்தி தொழிற்சாலை ஊழியனாக எனக்கு எந்த வேறுபாடும் கிடையாது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆய்வக சோதனையில் தேறாத மூன்று ஆடை ஒப்பந்தங்களுக்கு ஒற்றை மின்னஞ்சல் வேண்டுகோளில் ஏற்றுமதி ஒப்புதல் பெற்றிருக்கிறோம். ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் பாலியஸ்டர் ஆடைகளில் பெருபாலானவை எலக்ட்ரோ ஸ்டாடிக் பிஹேவியர் சோதனையில் தேறுவதில்லை, ஆனால் ஏற்றுமதி எக்காலத்திலும் தடைபட்டதில்லை. தரமான ஆடை உற்பத்திக்கான கட்டமைப்பு, தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்யும் ஏராளமான சான்றிதழ்கள் இப்போது ஏற்றுமதிக்கு கட்டாயமாகியிருக்கிறது (FWF, OKOTEX,  SA8000 – அவற்றுள் சில). ஆனால் அந்த சான்றிதழ்கள் வெறும் சம்பிரதாயமே, அவற்றை நோகாமல் பெற்றுத்தர பல முகவர்கள் இருக்கிறார்கள்.

வாடிக்கையாளர் மத்தியில் ஆடைகளை வாங்கிக் குவிக்கும் மனோபாவத்தை வளர்க்க மட்டுமே ஆடை விற்பனை நிறுவனங்கள் மெனக்கெடுகின்றன. சரியான நேரத்துக்கு ஒப்பந்தங்கள் பூர்த்தி செய்யப்படுவதுதான் இன்றைக்கு அவர்களது இலக்கு. குறைவான ஊதியம், நெருக்கடியான மற்றும் பாதுகாப்பற்ற பணியிடம், அதீத பணிச்சுமை ஆகியவை ஆடைகளின் தரத்தை குறைத்து விடும் என்பது எல்லா இறக்குமதியாளர்களுக்கும் தெரிந்த செய்திதான். ஆனால் தரமில்லாத ஆடை விற்றதற்காக கோபம் கொள்ளாமல் அடுத்த ஆடை வாங்கி ஸ்டைல் அப்டேட் செய்துகொள்ளும் நமது புத்திசாலித்தனத்தையும் காசாக்கிக் கொள்ளவே அவர்கள் தரக்குறைவை மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள்.

[படங்கள் உதாரணம் காட்டுவதற்காக மட்டுமே]

– வில்லவன்

 1. இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகு…நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும்,பெப்சிநிறுவன சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே கடைகளில் வாங்க முடியும்….
  அம்பிகள் கோவில் குளத்தில் தண்ணீர் எடுக்க முடியாது..கிணறு மூடி பூட்டு தொங்கும்….

  • Hello AAR Bro,
   Can you pls tell me which walmart store give lesser price in USA ? Even Walmart stores are pricing not less than 10 to 15 Dollar per cloths, which you will get in 300 to 600 in India.. Wake up boss..

 2. திருப்பூர் knitted எனப்படும் பனியன் துணியை அடிப்படையாகக்கொண்டு இயங்குகிறது… நீங்கள் குறிப்பிடுவது woven எனப்படும் காடா துணியை கொண்டிருக்கிறது.. பொதுவாக இரண்டுக்கும் உள்ள பிரச்சினைகள் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் சற்று ஆழமாக பார்த்தால் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்…

  தொடர்கிறேன்..
  நன்றி வில்லவன்

 3. ஆழமாக பார்த்தால் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்…

  பத்து யூரோ அல்லது பத்து அமெரிக்கன் டாலர் உள்ள ஆய்த்த ஆடைகள் பெற்றுள்ள நிறுவன ஒப்பந்தங்கள் சொல்லும் தரம் சார்ந்தவிசயங்களை கவனித்தால் புரியும் சிவா. இது போன்ற ஆடைகளின் விற்பனை என்பது பத்து மடங்கு அதிகம். ஏறக்குறைய 99.99. யூரோ. இது போன்ற ஆடைகள் ஸ்பெயின் நாட்டில் அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றது.

 4. Until textiles are ultimately sold to a consumer they get stuck between lot of things. The importer or a buyer acquires the goods first and sells them to wholesaler or a stockist – then it reaches the retailer from whom the consumer purchases the merchandise. All these persons want to pocket their maximum profit for their investment in money ,time and effort. The retail price varies according to time and the very last stages of transactions tender wide ranging discounts.All their merchandise are not sold in pre arranged manner as their anticipation may fail.
  Hence retail prices mentioned on the tags never tallies with the selling prices at different legs.There is another evaluation error in the article on the output as with 60 people the supplies will tend to be more. However, the situation today in the textile industry is , that those who have the know how, skill and practice and who were previously employed in larger factories get taller and are turning out to be the proprietors of the businesses.There are too many failures in garment business due to the negligence in practicing proper method of accounting,no precaution (ECGC policy,per buyer policies not taken etc,agreeing for non LC DA bills,agreeing to put the name of buyer as consignee where air shipments are there etc ) ,not taking advantage of currency movements by Forward bookings,diverting bank funds for personal use etc
  Hence the price on the tags is never realized by a sole person. However the article substantiated the fact that brands carry value despite the fact that raw materials for diverse brands and process remain the same.

  • கட்டுரையின் வாயிலாக சொல்ல வந்த செய்தி, தொழிலாளர்களுக்கான நிதியை குறைப்பதன் வாயிலாகவே விலை குறைப்பு சாத்தியமாகிறது மற்றும் பொருளின் தரம் இப்போது இரண்டாம்பட்சமாகியிருக்கிறது என்பதே. உங்களுடைய மறுமொழி ஜவுளித்துறையின் முதலாளிகளது சிக்கலையே பெருமளவு பேசுகிறது.

   ஆடைத்துறையின் சிக்கலை சிறப்பாக அவதானிக்கும் உங்களிடமிருந்து இங்கேயிருக்கும் உழைப்புச்சுரண்டல் குறித்தான கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

 5. //கட்டுரையின் வாயிலாக சொல்ல வந்த செய்தி, தொழிலாளர்களுக்கான நிதியை குறைப்பதன் வாயிலாகவே விலை குறைப்பு சாத்தியமாகிறது//

  இல்லை. ஆதாரமில்லாத தகவல். Actually labour costs are rising faster than inflation rates for the past several years. And it is crazy to assume that production costs have been slashed only by slashing labour costs. Nonsense. Innovation, new technologies, efficient management technics, methods, etc play a larger part in this reduction of cost. Also economies of scale by enlarging the size of the companies thru growth and development. Try comparing the picture of the 60s and 70s.

  நண்பர் ஜோதி,

  நீங்க திருப்பூர் வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்று ஒரு சராசரி டைலர் அங்கு வாங்கும் சம்பள்ம், 1993உடன் ஒப்பிட்டு சொல்லுங்க. (விலைவாசி எத்தனை மடங்கு உயர்ந்துள்ளாது எனப்தை சம்மளம் எத்தனை மடங்கு உயர்ந்துள்ளது என்பதுடம் ஒப்பிட்டு சொல்லுங்களேன்).
  மேலும் ஆட்கள் பற்றாகுறை என்பது எங்கும், எல்லா இடங்களிலும் இப்ப அதிகரிக்த்துள்ளது. விவசாயத்தில் முக்கியமாக. ஆனால் ஜனத்தொகை கடந்த 30 வருடங்களில் இருமடங்காகி இன்று 125 கோடியை தாண்டுகிறோம். குறைவான ஜனத்தொகை இருந்த போது ஏற்படாத ஆட்கள் பற்றாகுறை, இன்று மிக அதிகம் ஜனத்தொகை உயர்ந்து பிறகு எப்படி உருவானது. வேலை காலி இல்லை என்ற போர்டுகள் ஒரு காலத்தில் சகஜமாக இருந்தது போய், ஆட்கள் உடன் தேவை என்ற போர்டுகள் இன்று.

  ஆனாலும் வாழ்கை போராட்டம் தான் பலருக்கும். மறுக்கவில்லை. வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, வறுமையை குறைக்க மாற்று வழி, உருப்படியான வழி வேறு எதுவும் இல்லாததால், இந்த அரைகுறை முதலாளித்துவத்தை ஒழுங்கா செயல்படுத்த விழைகிறோம். இதற்க்கு மாற்றாக முன்பு முயலப்பட்ட mixed economy with commanding heights for govt sector, with closed economic polices மிக மோசமான பொருளாதார விளைவுகளை உருவாகியதால், இன்று அந்த பழைய இடதுசாரி கொள்கைகளுக்கு திரும்ப யாரும் கோராவில்லை..

 6. அதியமான பதிவில் எழுத வேண்டியதை நீண்டதாக இருந்தாலும் இங்கே எழுதியே ஆக வேண்டிய சூழ்நிலை.

  சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் கைபேசியில் பேச அவருடன் தொடர்ந்து உரையாட என்னங்க நீங்க கம்யூனிஸ்ட் மாதிரி யோசிக்கீறீங்க என்றார்.
  சென்னையில் மாசி உடன் உங்களுடன் ஒரு வரி விவாதத்தை இங்கே விபரமாக சொல்கின்றேன்.

  ஒரு டைலர் 75 ரூபாய் வாங்கிய சம்பளம் இன்று 250 முதல் 350 ரூபாய் வாங்குகின்றார். அன்றுள்ள விலைவாசிகளை இப்போதுள்ள விலைவாசிகளை விட்டு விடுவோம். எப்படி நம் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறிய தொகையில் கூட வாழ முடியும். ஆனால் இங்கே வேறொரு பிரச்சனை உருவாகின்றது. மாதம் தோறும் அன்று மருத்துவத்திற்கு செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. அல்லது மிக மிக குறைவு.
  இன்று அந்நிய முதலீடு வேண்டும் என்று சொல்லிச் சொல்லி குடிக்கிற தண்ணீரைக்கூட விலை கொடுத்து வாங்க சூழ்நிலை. புகையும் தூசியும் உருவாக்கிய சுகாதார சீர்கேடு மற்றும் அரசாங்கம் உருவாக்கிய குடிப்பழக்கம் இரண்டும் என்ன உருவாக்கி உள்ளது தெரியுமா? வலுவற்ற ஆரோக்கியம், உழைக்காமல் உயர என்ன வழி என்பதைத்தான் ஊடக விளம்பரங்கள் ஒவ்வொருவருக்கும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
  திறந்த வெளி சந்தைப் பொருளாதாரம் கொடுத்த தாக்கம் இதுவே. இன்று நாம் வாழும் வாழ்க்கையின் முதல் படி இது.

  எப்போதும் போல நீங்கள் சொல்லும் அன்று தீபாவளிக்கு மட்டும் தான் உடைகள் எடுத்தோம். இன்று நினைத்தால் எடுக்க முடிகின்றது. கிழிசல் இல்லாமல் உடுத்த முடிகின்றது. உண்மைதான். அன்று கடன் வாங்குவதை தற்கொலை செய்து கொள்வது போல நினைத்த சமூகம் என்பது மாறி இன்று கடனில் தான் வாழ்க்கை என்று மாறி உள்ளது. நேற்று படித்த ஒரு பதிவில் ஐடி துறையில் பணிபுரிபவர் என் ஐந்து இலக்க சம்பளம் இரண்டாவது நாளில் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் காட்டுகின்றது என்கிறார். முப்பது நாளும் மன அழுத்தம், விட்டு விட்டு வெளியே வர முடியாத அடிமைத்தனம் போன்றவற்றை வளர்ச்சி என்ற பெயரில் நம் இன்று அனுபவிக்கும் வாழ்க்கை நரக வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
  நீங்க சொல்லும் பொருளாதார மேதைகள் காட்டும் வழிகள் என்ன தெரியுமா? பணத்தை சேமிக்காதே? உடனே செலவளி. அப்போது தான் பண சுழற்சி நடக்கும். பொருளாதாரம் மேலேறும். நம் நாடு வளரும் போன்ற பம்மாத்து வார்த்தைகளால் ஒவ்வொருவருக்கும் ஆசைகளை ஊட்டி இன்று வருக்கி ரொட்டி கூட விலை உயர்ந்து விட்டது. சேமிப்பு என்பதை உயிர் மூச்சாக வாழ்ந்த நம் மக்களின் மனோபாவம் முற்றிலும் மாறிவிட்டது.
  சந்தைப்பொருளாதாரம் தந்த இரண்டாவது பரிசு இது.

  அதிகப்படியான வெளிநாட்டு நாணயம் நம்மிடம் இருப்பதால் உலகவங்கியில் கையேந்தும் நிலையில் இருந்து மீண்டுள்ளோம் என்பது உங்கள் வாதம். நடைபயிற்சிக்கு செல்பவர்கள் கூட தன்னுடைய எரிபொருள் அதிகம் தேவைப்படும் வண்டியில் போய் இறங்கி நடந்து விட்டு மீண்டும் வீட்டுக்கு வரும் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் யார்? மொத்தத்தில் பத்து சதவிகித மக்கள் அனுபவிக்கும் ஆடம்பரத் தேவைகள் அனைத்து அடித்தட்டு மக்களை அன்றாடங் காய்ச்சியாக மாற்றி அதன் எண்ணிக்கையை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டேயிருப்பதன் அளவீடு தெரியுமா?
  இது மூன்றாவது பரிசு.

  ஒரு பெண்கள் அணியும் ஆடையின் அடக்க விலை நான்கு யூரோ என்று வைத்துக் கொள்ளுங்க. இங்கே இருப்பவர்கள் 120 நாள் கடனுக்கு செய்து கொடுக்கின்றார்கள். இதில் அரசாங்க ஊக்கத் தொகையோடு 20 சதவிகித லாபம் என்று வைத்துக் கொண்டாலும் 140 நாட்கள் கழித்து வங்கிக்கு வந்து சேரும் போது 5 சதவிகித லாபம் கூட கைக்கு வந்து சேராது. ஆனால் வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படுகின்ற ஐரோப்பா தேசங்கள் அனைத்தும் நம்மிடம் பிச்சை எடுத்து வாழ்வதோடு இங்குள்ள நீர் நிலம் மாசு போன்றவற்றை உங்கள் பொருளாதார மேதைகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் நம் குழந்தைகள் நமக்குப் பின்னால் எப்படி வாழப்போகின்றார்கள் என்பது யோசிப்பது கூட குற்றமா?
  வசதியான வீடுகள், வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது போன்ற அனைத்தும் எப்படி தெரியுமா? உடம்பில் என்ன நோய் இருக்கிறது என்று தெரியாமலே மேலும் மேலும் கழிம்பு தடவி அப்போதைக்கு ஆற்றிக் கொள்ளும் மனோபாவம். காரணம் நாம் இன்றைய வாழ்க்கை சந்தோஷத்திற்கு இந்த பொருளாதார மாற்றத்தை வரவேற்கின்றோம். 60 சதவிகித நடுத்தரவர்க்கத்தை வளர்த்துள்ளோம். அடிப்படை மாண்புகளை அடகு வைத்து.

  வில்லவன் சொன்னது மற்றொரு விசயம். லாபத்தோடு அடக்க விலையான ஒரு சட்டையின் விலையான அதிகபட்சம் 400 ரூபாய் வரக்கூடிய ஒரு பொருளை தன்னுடைய பெயர் என்ற காரணத்தை மட்டும் வைத்து 5 மடங்கு விற்பதும் அதை வாங்கிப் போடும் கிறுக்கன்களைப் பற்றியும் மேலோட்டமாகத்தான் சொல்லி உள்ளார். இது போன்ற ஆடைகள் தயாரிக்கும் இடங்களைப் போய் ஒரு முறை பாருங்கள். மூச்சடைந்து செத்து விடுவோம். அவர் சொன்னது போல மனிதவளத்துறை சட்டத்திட்டங்கள் என்பது பெரும்பாலும் பம்மாத்து வேலைகள். உள்ளே நுழைந்து நொங்கெடுத்தால் அவர் சொன்னது போல ஒரு ஆடைகள் கூட வெளியே போகாது.
  அதெல்லாம் சரி? ஒரு தொழிலாளிக்கு இப்படி செய்ய வேண்டும் என்று சட்டதிட்டங்கள் போடும் பன்னாட்டு நிறுவனங்கள் உன் சாயப்பட்டறைகள் எப்படி செயல்படுகின்றது என்று எவரும் வந்து பார்ப்பதில்லையே ஏன்? இதன் காரணமாகத்தான் குஜராத் அரசாங்கம் கணஜோராக கடலில் கலந்து விட்டுக் கொண்டிருக்கின்றது.

  திருப்பூரில் ஆள் பற்றாக்குறை என்பதற்கு மற்றொரு காரணம் உண்டு. ஒரு அலுவலக வேலை செய்பவர் 40 வருடங்கள் தொடர்ந்து உழைக்க முடியும். நான் பார்த்த வரைக்கும் 5 வருடங்கள் கூட தொடர்ந்து உழைக்க முடியாதவர்கள், காணாமல் போனவர்கள், துறை மாறியவர்கள், அடக்குமுறையை சகித்துக் கொள்ள முடியாதவர்கள், ஆரோக்கியம் இழந்தவர்கள் என்ற பட்டியலின் காரணமாகத்தான் பற்றாக்குறை உருவாக்கின்றது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும். இதற்கு மேலும் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் அறவே போய்விட்டது என்பதான மனிதர்கள் தான் அதிகமாக உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

  எவன் எவனோ எங்கேயோ வளர நாம் இங்கே உழைத்து எலும்பாய் மாறிக் கொண்டிருக்கின்றோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது தொழில் துறையை வைத்தே என்பது உங்கள் வாதம். என் பார்வையில் அடிப்படையை சரியான முறையில் உருவாக்காத வரைக்கும், சில பிணம் தின்னும் கழுகுகளுக்காக நம் நாட்டையே விலை பேசிக்கொண்டிருப்பவர்கள் வரைக்கும் நாம் போராடி வாழ்ந்து இறந்து விடுவோம். நமக்கு பின்னால் வருபவர்களுக்கு போராடக்கூட தெம்பிருக்காது. ஆப்ரிக்கா தேச வறுமைக்காட்சிகளை இப்போதே குழந்தைகளுக்கு ஆவணமாக எடுத்து வைத்து காட்டி விடுங்க. மனம் ஆறுதல் அடையும்.

 7. //நீங்க சொல்லும் பொருளாதார மேதைகள் காட்டும் வழிகள் என்ன தெரியுமா? பணத்தை சேமிக்காதே? உடனே செலவளி. அப்போது தான் பண சுழற்சி நடக்கும். பொருளாதாரம் மேலேறும். //

  அப்படி யாரும் சொல்லவில்லை ஜோ. சேமிப்பு மிக முக்கியம். Disposable income இன்று அதிகரித்துள்ளது என்பது நல்ல விசியம் தான். இன்றும் மிக விவேகத்துடன் சேமித்து, சிக்கனமாக வாழ்பவர்கள் சதம் அதிகம் தான். பொதுப்படையா பேசுகிறீர்கள் நீங்க.

  சுற்றுசூழலை மாசுபடுத்துவது நிஜ முதலாளித்துவம் அல்ல. போலி முதலாளிகளும், போலி முதலாளித்துவமும் தான். (போலி கம்யூனிஸ்டுகள் இருப்பதை போல் தான் இதுவும் !!). உண்மையான லிபரல் ஜனனாயக அடிப்படை முதலாளித்துவத்தில் மாசுகட்டுபாட்டு விதிகள் (மற்றும் இதர சட்டங்களும்) சரியாக கடை பிடிக்கப்படும் / பட வேண்டும். மே.அய்ரோப்பிய நாடுகளை ஓரளவு சொல்லலாம்.

  லஞ்சம் கொடுத்து மாசுகட்டுபாட்டு அதிகாரிகளை சரிகட்டிவிட்டு, சாய கழிவுகளை இஸ்டத்துக்கு ஆற்றில் விடுபவர்கள் கிர்மினிலக்ள். உண்மையான முதலாளிகள் அல்ல். குழப்பிக்காதீங்க.

  60களுக்கு முன்பு இருந்த working conditions, முக்கியமாக நூற்பாலைகளில், தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் பற்றி இன்று ஒப்பிடுக. அன்னூர் அருகே எமது நண்பர் ஒரு air-jet loom mill நடத்துகிறார். தினமும் 300 ரூ அளவு சம்பளம். குளிர் பதனப்படுத்தப்பட்ட மில். ஓரளவு முறையான இலவச தங்குமிடம், உணவு. ஆனாலும் ஆட்கள் பற்றாகுறை. அலைகிறார்கள் ஆட்களுக்காக. 1980இல் அதே பகுதியில் விவசாய கூலி தொழிலாளர்கள் நிலை, தலித் மக்கள் நிலை, கிடைத்த சம்பளம், சுதந்திரங்கள் (சாதிய அடக்குமுறையில் இருந்து) இவைகளை இன்று உள்ள நிலையோடு ஒப்பிட்டால் தெரியும்.

  படிப்படியாக தான் முன்னேறிய நாடாக மாறி, வறுமையை குறைக்க முடியும். நூற்றாண்டுகள் ஆகும்.

  என்னாதான் செய்யாலாம் என்று தெளிவா சொல்லுங்களேன் ? 1991க்கு முன்பு இருந்த மூடிய பொருளாதார கொள்கைகளுக்கு மீண்டும் செல்ல வேண்டுமா ? வரிகளை அன்று இருந்த மிக அதிக விகிததுக்கு உயர்த்தலாமா ? பெரும் தனியார் நிறுவனங்களை அரசுடைமையாக்கலாமா ? அன்னிய நிறுவனங்களை துரத்திவிடலாமா ? செய்து பாருங்க. அப்ப தான் புரியும். கம்யூனிஸ்ட் புரட்சி தான் அல்லது ஒரே தீர்வா ?(வினவு சொல்வது போல்). அது மொதல்ல சாத்தியமில்லை. மேலும் ஏற்கனவே நடந்த புரட்சிகள் படிப்படியாக சீர்ழிந்து ஃபாசிச அடக்குமுறையாக மாறிய வரலாறு மீண்டும் நிகழாது என்பதை வினவு தோழர்கள் வேண்டுமானால் நம்பலாம். எல்லோரும் அப்படி மயக்கதில்லை இல்லை.

  • என்னாதான் செய்யாலாம் என்று தெளிவா சொல்லுங்களேன்

   1. விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை அரசாங்கமே நேரிடையான கொள்முதல் நிலையம் உருவாக்கி விவசாயிகள் பிழைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்குதல்.

   2. தங்க நாற்கர சாலை, வெள்ளி நாற்கர சாலை போன்ற வசதிகளைக் காட்டிலும் மாவட்டம் தோறும் விளைவிக்கும் உணவுப் பொருட்களுக்கு குளிர்பதன கிடங்கு அமைத்து சேதாரத்தை குறைத்தல்.

   3. வங்கி என்பது விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல் என்ற நிலையை உருவாக்குதல்.

   4. பெருகி வரும் நகர்புற பகுதிகளில் உள்ள நெரிசலைக் குறைக்க தேவையற்ற அலுவலகத்தை துறை சார்ந்த மாவட்டங்களுக்கு மாற்றுதல். மீன்வளர்ச்சித்துறை தூத்துக்குடி போன்ற மாவட்டத்தில் தானே இருக்க வேண்டும். சென்னையில் எதற்கு? இது போன்ற ஒவ்வொரு துறையும்.

   5. கல்வி, மருத்துவம், பொதுசுகாதாரம் மூன்றும் அரசு மக்களுக்கு இலவசமாக கொடுத்தல்.

   7. வருடந்தோறும் ஒரு லட்சத்திற்கு மேல் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கும் நமது தொழில் நுட்ப கல்லூரிகள் என்ன சாதித்து உள்ளது. இன்னமும் ஆராய்ச்சி மனப்பான்மை இல்லா படிப்பும் இன்று வரையிலும் வெளிநாட்டு தொழில் நுட்பத்தையும் தானே இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம். கல்லூரியின் அங்கீகாரம் என்பது இது போன்ற மாணவர்களை வருடந்தோறும் உருவாக்காவிட்டால் ஆப்பு என்று சொல்லிப்பாருங்கள். ஆய் சாரி ஆடிப் போய்விடுவார்கள்.

   8. உணவு சம்மந்தப்பட்ட பொருட்கள் ஆன் லைன் வர்த்தகம் என்ற பிசாசை முற்றிலும் விரட்டி அடித்து துடைத்தல்.

   9. எந்த பொருளும் இங்கே பற்றாக்குறைய இல்லாதபட்சத்தில் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதித்தல். இது போன்ற விசயங்களில் அந்தந்த மாநில அரசே அந்த பொருட்கள் குறித்து முடிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வருதல். இருக்குற பஞ்சு, வெங்காயம் மட்டுமல்ல சரத்பவார் வாய்ப்பு கிடைச்சா நம்ம வீட்டு ஆளுகளையும் ஏற்றுமதி செய்ய முடியுமா? என்று யோசிக்கக்கூடியவர்.

   10. இந்தியாவில் தொழிலில் போடப்படும் அந்நிய முதலீட்டுக்கு சொல்லப்படும் வரையறைகள் போலவே பங்குச் சந்தையில் வந்து இறங்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் குறிப்பிட்ட காலம் வரைக்கும் எடுக்க முடியாத நிலைக்கு சட்டங்களை கொண்டு வருதல். ஆடு புலி ஆட்டம் நடத்துவதை முற்றிலும் நிறுத்த முடியும்.

   11. வராக்கடன் அனைத்தையும் குறிப்பாக மல்லையா போன்ற ஆட்களிடம் உடனடியாக வசூல் செய்தல். இந்த வராக்கடன் (இந்தியாவில்) நாலேகால் லட்சம் கோடியாம். தெரியுமா?

   போதுமா? இன்னமும் வேண்டுமா?

   குறிப்பாக ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அடிப்படையில் இருந்து உருவானால் மட்டுமே அது படிப்படியான வளர்ச்சி. தற்போது மேல் மட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளை வைத்துக் கொண்டு பங்கு சந்தையை குறிப்பிட்டுக் காட்டி இதனை வளர்ச்சி என்று வீக்கம் என்று சைபால் தேடி அலைந்து கொண்டிருக்கின்றார்கள். இதைப் பற்றியெல்லாம் பேசினால் பிழைக்கத் தெரியாதவன் என்பார்கள்.

 8. ஜோ,

  விவசாயத்த பத்தி உங்க அக்கரை சரிதான். ஆனால் அரசு கொள்முதல் செய்ய மேலும் பணம் தேவை. பற்றாகுறை பட்ஜெட்டு மேலும் அதிகரிக்கும் போது விலைவாசி தொடர்ந்து உயரும். ஆனாலும் விவசாயத்தில் உள்ள அடிப்படை சிக்கலை பற்றிய எமது சமீபத்திய பதிவு (இந்த மாதம் ஆழம் இதழில் கட்டுரையாக வெளியாகி உள்ளது) :

  இந்திய விவசாயம் வளர்ச்சியடையாதது ஏன் ?
  http://nellikkani.blogspot.in/2013/08/blog-post.html

  ஆன்லைன் வர்த்தகத்தால் பெரிய சிக்கல் இல்லை. பல விவசாயிகள் பெரும் பயன் அடையவே செய்கிறார்கள். ஊக வணிகத்திற்க்கு அடிபடை காரணம் பண வீக்கம். ஆன்லைன் டெக்னாலஜி உருவாகும் முன்பு இந்தியாவில் இருந்த பணவீக்க விகிதம் மிக அதிகம் இருந்த காலங்களில், விலை அதிகரிப்பு மற்றும் ஊக வணிக சிக்கல்கள் மிக அதிகம். 80கள் வரை சுமார் 40 ஆண்டுகள் எங்க குடும்பத்தினர் மஞ்சள் மற்றும் கடலை மண்டி கடை வைத்திருந்தவர்கள். அன்று இருந்த ஊக வணிக சிக்கல்கள், wild swings of prices, tax rates, evasion, high interest rates for farmers, etc பற்றி நேரடி அனுபம் உண்டு. இன்று மெந்தால் விவசாயிகள் மற்றும் பல இதர விவசாயிகளுக்கு ஆன்லை வர்தக மையங்களான MCX போன்றவை உதவும் விதம், இடை தரகர்களை அழித்து நேரடி விற்பனைகான சாத்தியங்கள் பற்றி விரிவாக பேச முடியும்.

  பங்கு சந்தையில் அன்னிய நேரடி முதலீடுகளுக்கு இப்படி கட்டுபாடு விதித்தால் பிறகு அவை இங்கு வராது. பிறகு 90களுக்கு முன்பு இருந்த நிலை போல அய்.எம்.எஃப் இடம் டாலர் கடன் வாங்கி திவால் நிலைக்கு தான் செல்ல வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமில்லை.

  கல்வி, மருத்துவம் இவைகளில் அரசு செலவு செய்யவது அதிகரித்தும், பயன் உரிய முறையில் உருவாகவில்லை என்பதை பத்தி தான் இந்த பதிவே.

  வராகடன்கள் பொதுதுறை வங்கிகள் அளவுக்கு தனியார் வங்கிகள் இல்லை. மல்லையாவிடம் அளித்த பல நூறு கோடி கடன்களை அய்.சி.அய்.சி வங்கி திரும்ப வாங்கிவிட்டது. Personal guarantee வாங்க அரசு துறை வங்கி தவறிவிட்டன. ஏன் ? மேலும் debt recovery laws இங்கு இன்னிம் வீக்கா தான் இருக்கு.

  பஞ்சு மற்று சர்கரை ஏற்றுமதி / இறக்குமதியில் முன்பு போல் இனி ஊழல் சாத்தியமில்லை. எனவே கட்டுபாடுகளும் தேவையில்லை. கட்டுபாடு என்றாலே ஊழல் செய்ய வாய்ப்பு என்று இங்கு பொருள்.

 9. உலகம் முழுக்க ஒரே கரன்சி.. ஒரே பொருளாதார நிலை.. என்பது சாத்தியமாகுமா? ஆனால் அது எப்படி இருக்கும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க