Tuesday, September 28, 2021
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் ஈரோட்டில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு பொதுக்கூட்டம் !

ஈரோட்டில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு பொதுக்கூட்டம் !

-

25.8.2013 ஞாயிறு மாலை ஈரோடு, பள்ளிபாளையத்தில்

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம்!
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!!

என்ற தலைப்பிலான பொதுக் கூட்டத்தை காவல் துறை நடத்த அனுமதித்தது. 23.7.2013 அன்று நடக்கவேண்டிய பொதுக் கூட்டத்தை சேலம் ஆடிட்டர் ரமேஷ் இறந்ததை காரணம் காட்டி அனுமதி மறுத்திருந்தது. அவசர அவசரமாக ஏற்பாடான இந்த பொதுக் கூட்டத்திற்கு புதிய ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கத்தலைவர் தோழர் குமரேசன் தலைமையேற்றார். பயங்கரவாதம் என்றால் வெடிகுண்டு வைப்பதைத்தான் சொல்வார்கள். இது என்ன முதலாளித்துவ பயங்கரவாதம் என்ற கேள்வியை கேட்டு தன் தலைமையுரையை துவக்கினார். விசைத்தறி தொழில் மற்றும் தொழிலாளர் நிலையை விளக்கினார்.

அடுத்து தோழர் மோகன் புஜவிதொச செயலாளர் கிட்னி விற்கும் நிலைக்கு பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளியை முதலாளித்துவ பயங்கரவாதம் மிரட்டியுள்ளதை ஆதாரத்துடன் விளக்கினார்.

சிறப்புரையாற்றிய தோழர் முகுந்தன், “பட்டறைப் பாக்கியை கட்டிவிட்டு அடுத்த பட்டறைக்கு போ! என்று அச்சுறுத்துவதுதான், தொழிலாளியின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். மண்ணும், கனிவளங்களும், நீரும், காற்றும் கூட அந்நியருக்கு விலை பேசப்படுகிறது. தனியார் மயம், தாராளமயம் என்ற பெயரில் நாடு மீண்டும் அடிமையாக்கப்படுகிறது.

வெள்ளையர் காலமாகிய 1926-லேயேஓரளவுக்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி கூலியை நிர்ணயம் செய்வதற்கான அடிப்படையையும் அவர்கள் வரையறுத்து செய்தனர். இப்போது அதையும் ரத்து செய்து வருகிறார்கள். மேலும்அரசு நலச் சட்டங்களை இம்மியளவும் சட்டைசெய்வதில்லை” போன்ற விவரங்களையும் உணவு பாதுகாப்பு மசோதா, ஆதார் அட்டை இவற்றில் ஒளிந்துள்ள மக்கள் விரோதத் தன்மையையும் எளிய நடையில் உரிய விவரங்களோடு தெளிவாக விளக்கினார்.

“ஒரு புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் தான் அந்நிய ஆதிக்கத்தை ஒழித்து மக்களின் புதிய ஜனநாயக அரசை நிறுவ முடியும். அதற்கு முதற்படி தொழிலாளர்களும் மக்களும் வர்க்கமாய் திரண்டு அமைப்புகளாக செயல்பட வேண்டும் போராட வேண்டும்” என்று தனது உரையை முடித்தார்.

அடுத்து கலை நிகழ்ச்சியை துவக்கிய ம.க.இ.க.வின் மைய கலைக்குழு தோழர்கள் முதலாளிகளின் பயங்கரவாதத்தை உணர்ச்சி பொங்க மக்களின் மனதில் உரையும்படி நிகழ்ச்சியை நடத்தினார்கள். அம்மாவின் இட்லிக்கடையில் இருந்து மன்மோகனின் உணவுப் பாதுகாப்பு சட்டங்கள் வரை மக்களை ஏமாற்றும் மோசடித்தனம் தான் என அம்பலப்படுத்தினர்.

“இன்று உலகம் முழுவதும் மக்கள் தங்களின் அரசை எதிர்த்தும் அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கும் அந்த நிலை வெகு விரைவில் நிலை கொள்ள துவங்கும். ஆளும் வர்க்கங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு வாழ்க்கையையே சுமையாக்கும் நிலையை உருவாக்கி புரட்சிக்கான அடித்தளங்களை நிறுவுகின்றனர். மக்கள் கொதித்தெழுந்து இந்நிலையை புரட்சியின் மூலம் மாற்றியமைப்பர். அந்த நாளும் வெகு தொலைவில் இல்லை” என்று உணர்ச்சி பொங்க மக்களை தட்டி எழுப்பும் வகையில் நிகழ்ச்சியை நடத்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஈரோடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க