Monday, September 21, 2020
முகப்பு உலகம் அமெரிக்கா செல்லாக்காசாகிறது ரூபாய் ! திவாலாகிறது மறுகாலனியாக்கப் பாதை !

செல்லாக்காசாகிறது ரூபாய் ! திவாலாகிறது மறுகாலனியாக்கப் பாதை !

-

டாலருக்கு எதிராக ரூபாய் உள்ளிட்ட பல நாட்டு நாணயங்களின் மதிப்பும் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக சுமார் 2 டிரில்லியன் டாலர் நோட்டுகளை அடித்து தனது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முயன்ற அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ், உள்நாட்டு பொருளாதார நிலைமை ஓரளவு சீர்பட்டிருப்பதாக கருதுவதால் நோட்டு அடிப்பதை நிறுத்தவிருப்பதாக மே 22 அன்று அறிவித்தது. இது உலகச் சந்தையில் டாலருக்கான வேண்டலை (demand) அதிகப்படுத்தியதுடன் அமெரிக்காவில் வட்டி விகித உயர்வுக்கும் வழி வகுக்குமாதலால், சர்வதேச முதலீட்டாளர்கள் தமது முதலீட்டை அமெரிக்காவுக்கு மாற்றி வருகின்றனரென்றும், இதனால் இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு டாலருக்கு எதிராக அந்நாட்டு நாணயங்களின் மதிப்பு குறைந்து வருகிறதென்று விளக்கமளிக்கப் படுகிறது. பொதுவில் பார்க்குமிடத்து இந்த விளக்கம் சரியே எனினும், மற்ற நாணயங்களைக் காட்டிலும் மிக மோசமான வீழ்ச்சியை ரூபாய் ஏன் சந்திக்கிறது என்ற கேள்விக்கும், ஏப்ரல் 2011 முதல் ஏப்ரல் 2013 வரையிலான காலத்திலேயே டாலருக்கு எதிராக கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மதிப்பை ரூபாய் ஏன் இழந்தது என்ற கேள்விக்கும் இதில் விடையில்லை.

பெருகி வரும் தங்க நகைக் கடைகள்
கார்கள், நகைக் கடைகள் போன்றவைதான் ஒளிரும் இந்தியாவின் சான்றுகளாக தனியார்மயதாசர்களால் காட்டப்பட்டன. அவைதான் இன்றைய நெருக்கடிக்கு காரணம் என்பதன் பொருள், இது மறுகாலனியாக்க கொள்கைகள் தோற்றுவித்துள்ள நெருக்கடி என்பதே.

ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களவையில் அறிக்கை வெளியிட்ட மன்மோகன்சிங், ”எண்ணெய் மற்றும் தங்கத்துக்கான பசியை மக்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று உபதேசித்திருக்கிறார். 2012-ஆம் ஆண்டின் மொத்த இறக்குமதி 488.6 பில்லியன் டாலர்கள். இதில் எண்ணெய் இறக்குமதி மட்டும் 155.6 பில்லியன் டாலர்கள். 1970-களில் தனது எண்ணெய்த் தேவையில் 30% மட்டுமே இறக்குமதி செய்த இந்தியா இன்று 70% இறக்குமதி செய்கிறது. காரணம், ஆட்டோமொபைல் முதலாளிகளின் லாபத்துக்காக பொதுப்போக்குவரத்தை அழித்து கார், இரு சக்கர வாகன விற்பனையை அதிகரிக்கும் கொள்கை, மறுகாலனியாக்க வளர்ச்சியின் அங்கமாகத் திணிக்கப்பட்டதுதான். நகைக் கடைகளின் திடீர் பெருக்கத்துக்கும், தங்க இறக்குமதி அதிகரிப்புக்கும் காரணம், மறுகாலனியாக்கத்தால் ஆதாயமடைந்த தரகு, அதிகார வர்க்க, அரசியல் பிழைப்புவாதக் கும்பல்களின் ஆடம்பரமும், அவர்கள் தமது கருப்புப் பணப் பதுக்கலுக்கும் ஊகபேர சூதுக்கும் தங்கத்தில் முதலீடு செய்ததுதான். கார்கள் நகைக்கடைகள் போன்றவைதான் ஒளிரும் இந்தியாவின் சான்றுகளாக தனியார்மய தாசர்களால் காட்டப்பட்டன. அவைதான் இன்றைய நெருக்கடிக்குக் காரணம் என்பதன் பொருள் இது மறுகாலனியாக்க கொள்கைகள் தோற்றுவித்துள்ள நெருக்கடி என்பதே.

இப்பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் விளக்கமளித்த ப.சிதம்பரம், முதன் முறையாக ஒரு உண்மையைக் ஒப்புக்கொண்டிருக்கிறார். ”2008-ஆம் ஆண்டில் சர்வதேசப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியத் தொழிலகங்களுக்கு ஊக்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த ஊக்கத் திட்டங்கள் இந்தியப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியது. அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சி இந்தியாவைப் பாதிக்காமல் நம்மைப் பாதுகாத்தது. ஆனால் அதன் மற்றொரு விளைவாக நமது நிதிப் பற்றாக்குறையும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அதிகரித்தது” (தினமணி, 28.8.2013). மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள்தான் பற்றாக்குறைக்குக் காரணம் என்று இடையறாமல் மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப் பிரச்சாரத்துக்கு நடுவே, தவிர்க்கவியலாமல் சிதம்பரத்தின் வாயிலிருந்து வெளிவந்திருக்கும் இந்த உண்மை, ஆளும் வர்க்கமும் அவர்களால் இந்த நாடு இழுத்துச் செல்லப்படும் மறுகாலனியாக்க ”வளர்ச்சி”ப் பாதையும்தான் தற்போதைய நெருக்கடிக்குக் காரணம் என்ற உண்மைக்கு சான்று கூறுகின்றன.

”நமது பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாக இருப்பதால் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்போம்” என்று கூறியிருக்கிறார் மன்மோகன் சிங். வளர்ச்சி சாத்தியமா என்பதைப் பரிசீலிப்பதற்கே, தற்போதைய வீழ்ச்சிக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

****

நமது பொருளாதாரத்தின் அடித்தளம் என்று கூறப்பட்ட விவசாயம், தொழில்துறை ஆகியவற்றில், விவசாயத்தின் புறக்கணிப்பையும் அழிவையும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் தீவிரப்படுத்தியிருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கான ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் தொழில்துறையும், அந்நாடுகள் பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்ததன் விளைவாக நலிந்து விட்டன. கடந்த சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் கண்டிருக்கும் வளர்ச்சி என்பது வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி என்றே ஆய்வுகள் கூறுகின்றன.

2011-12-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆவறிக்கை, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைத்துறை, விடுதிகள், வணிகம், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில்கள்தான் நமது பொருளாதாரத்தின் முதன்மையான இயங்கு சக்திகள் என்று கூறுகிறது. மன்மோகன்சிங் கூறுகின்ற அடித்தளம் இதுதான்.

இந்த அடித்தளத்தை இயக்குவதும், நிதியளிப்பதும் பன்னாட்டு மூலதனம் என்பதே உண்மை. எனவே மேற்கூறிய இந்தத் துறைகளிலான வளர்ச்சி என்பது பன்னாட்டு நிதிமூலதனம் இந்தியாவுக்குள் வெள்ளமெனப் பாய்ந்ததனால் ஏற்பட்ட விளைவாகும். 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட ”டாட் காம் குமிழி வெடிப்பு” என்று அழைக்கப்படும் பங்குச்சந்தை வீழ்ச்சியின் காரணமாக பன்னாட்டு நிதிமூலதன நிறுவனங்கள், ஒப்பீட்டளவில் அதிக இலாபம் தருகின்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளை நோக்கித் திரும்பின. இந்தியாவின் மலிவான உழைப்பைக் குறிவைத்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத்துறைகளின் அவுட்சோர்சிங் தொழிலும் வளர்ந்தது.

2003-இல் இந்தியாவின் நிகர உள்நாட்டு உற்பத்தியில் 1%-ஆக இருந்த பன்னாட்டு மூலதனம் (நேரடி மூலதனம், நிதிக்கருவிகள், வங்கி கடன்கள் உள்ளிட்டவை)  2008-இல் 10% ஆக அதிகரித்தது. ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்தல் ஆகியவற்றில் 100% அந்நிய மூலதனம் அனுமதிக்கப்பட்டது. பிரைவேட் ஈக்விடி, ஹெட்ஜ் ஃபண்டு, வென்சர் காபிடல் போன்ற நிதி மூலதனம் மற்றும் நிதி சூதாட்டக் கருவிகள் அனைத்தையும் அந்நிய நேரடி முதலீடாகக் கருதி சலுகைகள் வழங்கப்பட்டன. அடையாளம் தெரியாத அந்நிய முதலீட்டாளர்கள் தாராளமாக அனுமதிக்கப்பட்டனர். இந்தியத் தரகு முதலாளிகள் தங்களது கருப்புப் பணத்தை மொரிசியஸ், கேமேன் தீவுகள் போன்ற வரியில்லா சொர்க்கங்களின் வழியாக அந்நிய முதலீடு என்ற பெயரில் உள்ளே கொண்டு வருவது அனுமதிக்கப்பட்டது. இந்தியத் தரகு முதலாளிகள் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் நேரடியாக கடன் வாங்கிக் கொள்வதற்கும் அனுமதிக்கப்பட்டனர்.

ஏற்றுமதிக்கு காத்திருக்கும் கார்கள்
ஏற்றுமதி செய்வதற்காக சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஹூண்டாய் கம்பெனி கார்கள் : சொகுசு கார் உற்பத்தி பெருகியது: நடப்பு கணக்குப் பற்றாக்குறை வீங்கியது !

இவையனைத்தும் பங்குச் சந்தை, நாணயச் சந்தை, ரியல் எஸ்டேட் போன்ற ஊகவணிகம் சார்ந்த துறைகளில்தான் முதலீடு செயப்பட்டன. இத்தகைய முதலீடுகள் புதிதாக எதையும் உற்பத்தி செயவில்லை. இருக்கின்ற நிலம், மனைகள் மற்றும் பங்குகளின் மதிப்பை மட்டும் உயர்த்தின. இந்த சோப்புக் குமிழிதான் வளர்ச்சி வீதத்தின் அதிகரிப்பு என்றும், பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் எகிறுகின்றன என்றும் கொண்டாடப்பட்டது. இத்தகைய மாய்மாலங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்தபோதே இந்தியாவின் அந்நியக் கடன், வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருந்தது.

****

பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இந்தியா வாங்கிய கடன் 2006-07 இல் 62.3 பில்லியன் டாலர் என்பதிலிருந்து டிச. 2012-இல் 376.3  பில்லியன் டாலராக உயர்ந்தது. இதில் குறுகிய காலக் கடன் மட்டுமே 159.6 பில்லியன் டாலர்கள். மார்ச் 2014-க்குள் 172 பில்லியன் டாலர் அந்நியக் கடனை இந்தியா திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த 172 பில்லியனில் 44 சதவீதத் தொகையானது இந்தியத் தரகுமுதலாளிகள் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் வாங்கியிருக்கும் கடனாகும்.

இந்தியாவின் முதல் பத்து தொழில் நிறுவனங்கள் வாங்கியிருக்கும் கடன் கடந்த 6 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்து தற்போது 120 பில்லியன் டாலராக உள்ளது. இவற்றில் பெரும்பகுதி பன்னாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் வாங்கப்பட்டிருக்கும் கடன்கள். 2007-இல் தொடங்கி இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம் சீரழிந்து வருகிறது என்கிறார் மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ருசிர் சர்மா (டைம்ஸ் ஆப் இந்தியா,28.8.13). ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம், முதலீடு செவதற்கான இந்தியாவின் தர மதிப்பீட்டை (investment rating) (BBB) என்ற ஆகத்தரம் தாழ்ந்த நிலையில் வைத்திருக்கிறது. ”குப்பை” என்ற இதற்கடுத்த நிலைக்குத் தாழ்ந்து விட்டால், பிறகு இந்திய அரசோ, தொழில் நிறுவனங்களோ பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவது மிகவும் கடினமாகி விடும்.

ஆனால் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5%-ஆக உயர்ந்து விட்ட நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைத்து, டாலர் கையிருப்பை அதிகரிப்பதற்கு, வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவதையே ஒரு தீர்வாக அமல்படுத்துகிறது மன்மோகன் அரசு. இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் கடன் சந்தையில் மதிப்பிருக்குமென்பதால், அவர்களை வெளிநாட்டுச் சந்தையில் கடன் வாங்க வேண்டுமென்றும், அரசாங்கத்தைப் போலவே கடன் பத்திரங்கள் வெளியிட்டு டாலரைத் திரட்ட வேண்டும் என்றும், அந்த கடன் பத்திரங்களுக்கான வட்டியை அவர்களே கொடுத்து விட வேண்டும் என்றும் சென்ற மாதம் கூறியிருக்கிறார் ப.சிதம்பரம்.

”வருவாய் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கு மானியங்களை வெட்டுவது, அந்நியச் செலாவணி இருப்பை மேம்படுத்துவதற்கு அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பது – நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவது, சுற்றுச் சூழல் பிரச்சினைகளாலும் நீதிமன்ற வழக்குகளாலும் தடைப்பட்டிருக்கும் நிலக்கரி, இரும்புச் சுரங்கங்களை இயங்க வைப்பது”  என்று அந்நிய முதலீட்டாளர்களை மனம் குளிரச்செய்யும்படியான பத்து அம்ச திட்டத்தை வெளியிட்டு அவர்களைக் கவர்ந்திழுக்க முயன்றிருக்கிறார் சிதம்பரம்.

ஒளிரும் இந்தியா கனவு
2000 ஆண்டுகளின் துவக்கத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட ”டாட் காம் குமிழி வெடிப்பு” என்று அழைக்கப்படும் பங்குச்சந்தை வீழ்ச்சியின் காரணமாக பன்னாட்டு நிதிமூலதன நிறுவனங்கள், ஒப்பீட்டளவில் அதிக இலாபம் தருகின்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளை நோக்கித் திரும்பின. இந்தியாவின் மலிவான உழைப்பைக் குறிவைத்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத்துறைகளின் அவுட்சோர்சிங் தொழிலும் வளர்ந்தது.

மன்மோகனின் அறிக்கையோ வரவிருக்கும் இருண்ட காலத்துக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது. ”ரூபாய் எவ்வளவு வீழ்ச்சியடைந்தாலும், அதன் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக வெளியேறும் அந்நிய மூலதனத்தைத்  தடுக்க மாட்டோம். தனியார்மய – தாராளமய கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டோம். கடந்த காலத்தில் செயப்பட்டவை சுலபமான சீர்திருத்தங்கள். ஓய்வூதிய நிதி மற்றும் காப்பீடு தனியார்மயம், மானிய வெட்டுகள், பொருள்கள் மற்றும் சேவை வரி போன்ற கடுமையான சீர்திருத்தங்கள் வரவிருக்கின்றன. எல்லாக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்” என்றவாறு ஆகஸ்டு 30 அன்று மக்களவையில் பேசியிருக்கிறார் மன்மோகன்.

எதைச் செய்தாவது அந்நிய மூலதனத்தை ஈர்த்தாக வேண்டும் என்ற வெறித்தனத்தின் விளிம்பில் அரசும் ஆளும் வர்க்கங்களும் நின்று கொண்டிருக்கின்றன. அந்நியக் கடன்கள், முதலீடுகள் பெருகப் பெருக, அவற்றுக்கான வட்டியும், இலாப ஈவுத்தொகையும் அதிகரித்த அளவில் வெளியேறுகின்றன. வெளியே செல்லும் இந்த டாலர்கள்  மீண்டும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்கச் செகின்றன. இந்த நச்சுச் சுழல் நாட்டை திவால் நிலையை நோக்கி – முழு அடிமை நிலையை நோக்கிக் கொண்டு செல்கிறது. பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து தற்போது எடுத்துச் செல்லும் இலாப ஈவுத்தொகையின் விகிதம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும்போது) பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்தோடு ஒப்பிடத்தக்கதாக இருக்கிறது என்று கூறுகிறார் ஒரு ஆய்வாளர். (நிர்மல் குமார் சந்திரா, EPW, 5.4.2008)

ரூபாயின் வீழ்ச்சியானது, தனியார்மய-தாராளமய கொள்கைகள் குறித்த பிரமைகளை அகற்றி, மறுகாலனியாக்கத்தின் விகாரமான முகத்தை அம்பலமாக்கியிருக்கிறது. மன்மோகன் குறிப்பிடும் கடுமையான சீர்திருத்தம் என்பது கடுமையான அரசியல் ஒடுக்குமுறைக்கான முன் அறிவிப்பு. நிலப்பறிப்பு தொடங்கி ஜனநாயக உரிமை பறிப்பு வரையிலான எல்லா நடவடிக்கைகளும் தேசிய நலன் கருதி சர்வகட்சி ஒத்துழைப்புடன் நடக்கும். எனவே இதனை முறியடிக்க வேண்டுமானால், அதற்கான போராட்டத்தை நாடாளுமன்ற அரசியல் சட்டகத்துக்கு வெளியே, ஒரு புதிய ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டமாகத்தான் நாம் நடத்த முடியும், நடத்த வேண்டும்.

– தலையங்கம்
_______________________________________

பெட்டிச் செய்தி

ரூபாய் வீழ்ச்சியின் விலையைக் கொடுப்பது யார்?

”உலகம் பொருட்களை உற்பத்தி செய்கிறது. அமெரிக்கா டாலர் நோட்டை உற்பத்தி செய்கிறது” என்றொரு கேலியான சொலவடை உண்டு. 2008 சப் பிரைம் நெருக்கடிக்குப் பிறகு, திவாலாகிப் போன அமெரிக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றைக் கைதூக்கி விட்டு, பொருளாதாரத்தை மீண்டும் இயங்கச் செய்வதற்கு, நோட்டு அடிக்கத் தொடங்கியது அமெரிக்கா. 2007-இல் சுமார் 850 பில்லியன் டாலர்களாக இருந்த டாலர் புழக்கம் 3 டிரில்லியன் டாலர் என்ற அளவை எட்டும் வரை பெடரல் ரிசர்வ் தலைவர் பெர்ன் பெர்னென்கே அச்சு எந்திரத்தை நிறுத்தவில்லை போலும்! வேறு எந்த நாடாவது இப்படி நோட்டு அடித்திருந்தால், அந்த நாட்டின் பணம் மதிப்பிழந்து போயிருக்கும். ஆனால் இங்கோ டாலருக்கு எதிராக பிற நாணயங்களின் மதிப்பு தான் குறைந்து வருகிறது.

காரணம், டாலர் உலகச் செலாவணியாக இருக்கிறது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை நம்பித்தான் பல நாடுகளின் தொழில்கள் இயங்குகின்றன. அரசியல்-ராணுவ ரீதியாக அமெரிக்க மேலாதிக்கம் பெற்றுள்ள வலிமைதான் டாலரின் மதிப்பை தாங்கி நிற்கிறது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்பதன் பொருள் என்ன? இது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும். இந்த விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக, நாம் செலுத்தும் கூடுதல் உழைப்பு, வாங்கும் கடன், பட்டினிச்சாவுகள், தற்கொலைகள் ஆகிய அனைத்தும், டாலருக்கு – அதாவது பன்னாட்டு மூலதனத்துக்கு நாம் கொடுக்கும் ரத்தப்பலி. ரூபாயின் மதிப்பு குறையக்குறைய, முன்னிலும் கூடுதல் உழைப்பையும் கூடுதல் வளங்களையும் ஏற்றுமதி செய்வதற்கு, குறைவான அந்நியச் செலாவணியே (டாலர்) கிடைக்கும். இது, அமெரிக்கா தனது நெருக்கடியை நம் மீது இறக்கி வைக்கும் சதி. உலக முதலாளித்துவம் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகள் எதிர்கொள்ளும் நெருக்கடியின் சுமையை, நம்மீது தள்ளுவது என்பது இதுதான்.
_______________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2013

_______________________________________

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. //ரூபாய் எவ்வளவு வீழ்ச்சியடைந்தாலும், அதன் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக வெளியேறும் அந்நிய மூலதனத்தைத் தடுக்க மாட்டோம். //

  வினவு, இந்த வாக்கியம் புரியவில்லை. தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

 2. MANGO PEOPLE IN BANANA REPUBLIC – ROBERT VADRA சோனியா காந்தியின் மருமகர் எவ்வளவு பெரிய தீர்கதரிசி

  • சொனியா மருமவன் ஏதொ உழைச்சி ,ரேசன் கடையில் கால் கடுக்க நிண்ணு சொறு ஆக்கி தானும் தின்று தனது அத்தைக்கும் கொடுப்பது….உங்களால் தாங்கிகொள்ளமுடியவில்லை

 3. //உலகம் பொருட்களை உற்பத்தி செகிறது. அமெரிக்கா டாலர் நோட்டை உற்பத்தி செய்கிறது”//

  World knows how to eat poop sleep. They will never take the humans to next level.
  America innovates about every product and takes humanity to next level.

  //அரசியல்-ராணுவ ரீதியாக அமெரிக்க மேலாதிக்கம் பெற்றுள்ள வலிமைதான் டாலரின் மதிப்பை தாங்கி நிற்கிறது//

  Russia had military might till 1991. Why dint the world take Ruble as the currency ?
  Whole Europe is united and created EUR, why nobody wants to use it as reserve currency ?

  America is Strong in

  1)Political
  2)Military
  3)Business
  4)Technology innovation

  Let me come back to Rupee decline

  எளிய முறையில் கூறுகிறேன்

  ஒரு கிராமத்தில் 10 கிலோ தங்கம் இருக்கிறது. அவர்கள் 10000 நோட்டுக்களை ( 1கிராம் = 1 நோட்டு) அடித்து உள்ளார்கள் . அவர்களுக்குள்ளாகவே தேவையான பொருள்களை உற்பத்தி செய்து பணமாதிறு செய்து கொண்டார்கள். இப்போது அந்த கிராமத்தில் புது பழக்கம் பரவுகிறது . உப்பு போட்டு உங்கிரார்கள் . உப்பு பக்கத்து கிராமத்தில் தான் கிடைக்கிறது. ஒரு வருடததிக்கு 1கிலோ தங்கம் கொடுத்து வாங்குகிறார்கள்.

  ஒரு வருட முடிவில் அந்த கிராமத்தில் ஒன்பது கிலோ தங்கம் தான் இருக்கும் ஆனால் நோட்துகள் 10000 இருக்கிறது . இப்போது ஒரு நோட்டு 1 கிராம் தங்கதிற்கு குறைவாகவே மதிப்பு பெரும். அந்த கிராமத்தின் நோட்டு மதிப்பு வீழ்ச்சி அடையும். இப்போது அந்த கிராமம் பக்கத்து கிராமத்திற்கு உணவு இரண்டு கிலோ அளவிற்கு ஒரு வருடததிக்கு விற்றால் வருட முடிவில் 10-1+2= 11 கிலோ இருக்கும் .பண மதிப்பு உயரும்.

  இந்த ஏற்றுமததிக்கும் இறுாக்கு மதிக்கும் இதையே உள்ள வித்தியாசம் தங்கத்தின் அளவா குறைத்தாள் அது நடப்பு கணக்கு பற்றாக்குறை

  இப்படி புதிய பொருள்களை ஏற்றுமதி செய்து பொருள் ஈட்டினால் பண மதிப்பு கட்டாயம் உயரும். அப்படி உயரும் போது ஜப்பான் போன்ற நாடுகள் 15 கிலோ தங்கம் இருந்தால் ஊருக்குள் உள்ள 10000 நோட்டுகலேயீ 15000 என உயர்த்தும் . அதனால் 1கிராம் தங்கம் = 1 நோட்டு என்ற அளவில் மட்டு படும்

  அந்த கிராமம் , உழைத்து புதுமை செய்து பொருட்களை ஏற்றுமதி செய்வதை விடுத்து பிற காரணங்களை கூறுவது ஏமாற்றுவதாகும்

  இல்லை உப்பு போட்டு சாப்பிடாமல் இருந்து பழகி கொள்ள வேண்டும்

  • ராமன் சார்…விபூதி…திருச்சூர்ணம்…னாமக்கட்டி எந்தநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்?

   • The so called ‘nama katti’ is being imported by Thitupathi Devasthanam Board from China. There is no import duty on this. So, athukkum ungalukku ‘aappu than. For this Vinayagar Chathurthi, the import bill of ‘arul migu Vinayagar Silai’ from Chila crossed 25 Million dollars. By 2020, it will cross, 100 Million. Again there is no import duty.

    • கொழுக்கட்டையும்,புளியோதரையும் ஏற்றுமதி செய்ய யாராவது முயற்சி / உதவி செய்யுங்கள்….

 4. அந்நிய முதலீடு
  —————-

  இப்போது மூன்றாவது கிராமத்தில் கள்வர் பயம் அதிகமானதால் அந்த கிராம மக்கள் , நமது உதாரண கிராமத்திற்கு ஐந்து கிலோ தங்கம் கொடுத்து பாதிரமாக பார்த்துக்கொள்ளும்படி சொல்கிறார்கள். இப்போது கிராமத்தில் 15 கிலோ தங்கம் இருக்கிறது ஆனால் 10000 நோட்துககளே புழக்கத்தில் உள்ளன.

  ஒரு நோட்டு 1.5கிராம் அளவை ஈடுசேய்கிறது. இதனால் கிராமத்தின் பண மதிப்பு அதிகம் ஆகிவிட்டது. இது நடந்தது வருடம் 2008. இப்போது அங்கு கள்வர் பயம் நீங்கி, அந்த கிராமத்தினர் கொடுத்த தங்கத்தை எடுத்து செல்கிறார்கள்.

  மொத்த தங்கத்தின் அளவு பழைய தங்கத்தின் அளவான 10கிழோவுக்கு போய்வுட்டது. கிராமத்தின் பாண மதிப்பு குறைந்து விட்டது.

  இதை தடுக்க கிராம தலைவர் நீண்ட கால தொலை நூக்கு பார்வையுடன் ஒரு முடிவு எடுக்கிறார். பொது கிணரை விற்றுவிடுவது என்பது தான் அது. பாண மதிப்பை காப்பாற்ற வேறு வழியில்லை என்று கூறுகிறார். கிராம மக்களும் அறிவாளி சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று நம்புகிறார்கள்

 5. ஏற்றுமதி செய்வதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது? மனித வளத்தை தவிர! தற்போது ரூபாய் மதிப்பு குறைவால், வெளினாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் தங்கள் சேமிப்பை ரூபாய் கணக்குக்கு மாற்றி வருகிரார்கள்! ஆனால், இந்தியாவிலிருக்கும் தேச பக்த திருடர்களோ தங்கத்தை இறக்குமதை செய்து, அன்னிய செலாவணியை வீணடிக்கிரார்கள்! இதில் சாமிகளுக்கு தங்கத்தில் தேர், ஆசாமிகளுக்கு சொர்ணாபிஷெகம் செய்ய வரி விலக்குடன் டன் டன்னாக இறக்குமதி! உருப்படுமா இந்தியா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க