கவுண்டர் சாதி வெறிக்குத் துணை போகும் சாதிவெறி போலீசு !

17

டந்த 07/09/2013 அன்று அதிகாலை நாமக்கல் மாவட்டம் ஆமப்பாறை கிராமத்தைச் சேர்ந்த அருள் பாண்டியன் என்கிற ஒட்டர் சாதியைச் சேர்ந்த இளைஞனும், தாரணி என்கிற வெள்ளாளக் கவுண்டர் சாதியைச் சேர்ந்த பெண்ணும் தங்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் ஊரை விட்டு ஓடினர். விடிந்ததும் விசயம் அறிந்த பெண்ணின் தரப்பான ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் கொலை வெறியுடன் ஓடிப் போனவர்களைத் தேடினர்.

சாதிவெறிகாலை 9.30 மணிவரை தேடியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியாததால் அவர்களது வெறியை போலீசின் துணை கொண்டு பையனின் சொந்தக்காரர்கள் மீது காட்டினர். சிலரை போலீஸ் பிடித்துக் கொண்டு போயிற்று. சிலர் பயத்தில் தாமாகவே காவல் நிலையத்திற்கு சென்றார்கள். ஆனால் இதில் யாருக்கும் பையனும், பொண்ணும் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது. கோவிந்தராஜ், கணபதி, ஜெகந்நாதன், விஜயகுமார், ரவி, தமிழ்ச்செல்வன், சின்னப்பிள்ளை, ருக்மணி, ப்ரேமா ஆகியோரை போலீஸ் அடித்து உதைத்து சித்ரவதை செய்தது.

பெண்ணின் சொந்தங்களும் சாதி வெறியுடன் “ஏண்டா கவுண்டன் பிள்ளை கேக்குதாடா” என்று கூறி காவல் நிலையத்திலேயே, போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே அடித்து உதைத்து தங்களது வெறியைத் தீர்த்துள்ளனர். சந்திரா, சின்னத்தம்பி, சரசு, இளங்கோவன் ஆகிய பையனின் சொந்தக்காரர்களை பெண்ணின் தரப்பாகிய கவுண்டர்கள், தங்களுடைய வீட்டிற்கே கொண்டு போய் இரத்தம் வரும் வரை அடித்துள்ளனர்.

இப்படியாக இவர்கள் மீது வழக்கு ஏதும் போடாமலே போலீஸ் ஸ்டேசனிலும், வீட்டிலுமாக அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர். இதில் ருக்மணி, சின்னப்பிள்ளை ஆகிய இருவரையும் 07/09/2013 அன்று இரவு காவல் நிலையத்திலிருந்து அனுப்பி நாளைக் காலைக்குள் பையனைக் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டுமென மிரட்டி அனுப்பியுள்ளனர். அவர்களிருவரும் எங்கே செல்வதெனத் தெரியாமல் வழி தேடி சென்னைக்கு வர, மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தொடர்பு அவர்களுக்கு கிடைத்தது. அதற்குள் இன்னும் சிலரை போலீஸ் கைது செய்தது. வழக்கு போடாமலே அவர்களை சித்ரவதை செய்தது.

சாதிவெறி போலீஸ்தங்களை மிகக் கேவலமாக காவல் நிலையத்தில் பேசியதையும், ஆண்களுக்கு ஏற்பட்ட சித்ரவதையையும் அவர்களிருவரும் கண்ணீரோடு விவரிக்க, மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் செயலில் இறங்கினர்.போலீஸ் பிடியில் இருப்பவர்களை ஒப்படைக்கும் ஆட்கொணர்வு மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது. 13/9/13 அன்று வழக்கு நீதிமன்றத்துக்கு வர, மோகனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன், காவலர்கள் இரண்டு பேர் பையனின் தந்தை கோவிந்தராஜ், சித்தாப்பாக்கள் ஜெகந்நாதன், கணபதி ஆகியோரை அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் அடித்ததை சொல்லக்கூடாது என்று மிரட்டிய இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கோவிந்தராஜை மட்டும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். அவரும் போலீஸ் கூறியபடியே வாக்குமூலம் கொடுத்தார்.

இப்படித்தான் நடக்கும் என்பதை அறிந்திருந்த வழக்குரைஞர்கள் கோவிந்தராஜை வெளியே அழைத்து பேசியபோது காருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற இருவரையும் பற்றிய தகவலை அவர் கூறினார். மனித உரிமை பாதுகாப்பு வழக்குரைஞர்கள் இன்ஸ்பெக்டரிடம் அவர்கள் இருவரையும் உடனே நீதிமன்றத்தில் ஒப்படைக்காவிட்டால், வழக்குரைஞர்களை திரட்டி விடுவோம், நீதிமன்ற வளாகத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் வெளியே செல்ல முடியாது எனக் கூறியுள்ளனர்.

நீதிபதியிடம் எடுத்துச் சொல்லப்பட, மற்ற இருவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட, போலீஸ்காரர்களின் கயவாளித்தனம் அம்பலமானது. எஞ்சியுள்ளவர்களை 14/09/2013 அன்று மதியத்திற்குள் வெளியே விட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தகவல் : மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு