privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்மணல் மாஃபியா ஆறுமுகசாமியின் கம்பெனி ஓட்டுநருடன் ஒரு உரையாடல் !

மணல் மாஃபியா ஆறுமுகசாமியின் கம்பெனி ஓட்டுநருடன் ஒரு உரையாடல் !

-

டந்த வாரத்தில் ஒரு நாள் சுகவீனமுற்று வேலூர் சி.எம்.சியில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரைக் காண செல்ல வேண்டியிருந்தது. நட்டு போல்ட்டுகள் வரை பெருமூச்சு விட்ட அரசுப் பேருந்தின் உலுக்கல்களுக்கு ஈடு கொடுத்து அந்த மனிதர் காலி இருக்கைகளைத் தேடி கடைசியில் எனக்கருகே வந்தமர்ந்தார்.

“சரியான பேச்சு மாத்துப் பயலுவலா இருக்கானுவோ. எக்ஸ்ப்ரஸ் பஸ்சுன்னு கையில எளுதி ஒட்டிருக்கானுவோ. அதுக்கு பத்து ரூவா அதிகமா?” பொதுவாகக் கேட்கத் துவங்கியவர் கேள்வியை என்னிடம் முடித்தார். நூறு மடிப்புகளாய்க் கசங்கியிருந்த பயணச் சீட்டை சட்டைப் பைக்குள் சொருகிக் கொண்டார்.

”இந்த வால்வோ பஸ்சுங்க வந்து தான் சார் இவனுங்க கொட்டத்தை அடக்கனும்” பதிலளிக்காமலிருந்த என்னிடமிருந்து எதையாவது எதிர்பார்த்தார்.

“தனியாரு தாங்க வால்வோ பஸ்சு விடறாங்க. அதிலயும் டிக்கெட் விலை அதிகம் தானே”

“இருக்கட்டுமே, அதுங்க இன்னா வேகமா போவுது பாத்திருக்கீங்களா. இன்ஜினு பின்னாடி வச்சிருக்கான் சார். ஒரே ஒரு வாட்டி ஓட்டிருக்கேன். படகு சார்…”

”ஓ, நீங்க மோட்டார் லைன்ல இருக்கீங்களா? பஸ் ஓட்டறீங்களா சார்?”

“ம்… இல்லை. டிப்பர் லாரி ஒட்டுறேன்”

“சொந்த வண்டியா சம்பளத்துக்கு ஓட்றீங்களா?” கேள்விக்கு கொஞ்சம் நேரம் தாமதித்து பதிலளித்தார். குரலில் ஒரு மரியாதை கூடியிருந்தது.

“கோயமுத்தூர் ஆறுமுகசாமி இருக்காரில்லே அவர்ட்ட சம்பளத்துக்கு வேலைக்கிருக்கேன் தம்பி”

”மண் குவாரி நடத்திட்டு இருக்கிற ஆறுமுகசாமி தானே?”

”ஆமாமா.. சும்மா மண் குவாரின்னு சொல்லாதீங்க தம்பி. இப்ப அவரு ரேஞ்சு எங்கேயோ போயிடிச்சி”

‘எங்காளு பெரிய வஸ்தாது தெரியுமா’ என்கிற தொனி அவரிடமிருந்தது. சீண்டி விட்டுப் பார்க்கலாமே என்று தோன்றியது.

“என்னாங்க ரேஞ்சு…. ஆர்.டி.ஓ, தாசில்தாருன்னு வாரவன் கைல காலுல விழுந்து பிழைக்கறது ஒரு பிழைப்பாங்க” எனது கேலி அவரை சரியான இடத்தில் தொட்டு விட்டது. ‘ஏய் பூச்சியே, கேள்’ என்பது போலத் துவங்கினார்,

மணற் கொள்ளை“தம்பி, நீங்க நினைக்கிறாப்ல அவரு ஒன்னு ரெண்டு குவாரி வச்சி ஓட்டிகிட்டு இருக்கற ஆளு இல்லை. மெட்ராசை சுத்தி மாத்திரமே 15 குவாரி வச்சிருக்காரு. அதும் போக தெற்கே ஏகப்பட்ட குவாரிங்க இருக்கு. எப்படியும் 150-லேர்ந்து 200 குவாரிங்க வரைக்கும் தமிழ் நாட்டுல மட்டுமே இருக்கு தெரியுமா? அதுவும் போக கர்நாடகாவுல ஹொசப்பேட்னு ஒரு இடத்திலேர்ந்து இரும்பு மண்ணோ என்னாவோ எடுக்கறாங்க. அதாம்பா இந்த சுரங்கத்துலேர்ந்து மண்ணு எடுப்பாங்க இல்ல, அந்த இரும்பு மண்ணு தான். மாசத்துக்கு அம்பது நூறு டிப்பர் லாரிங்க இறக்கறாங்க. தோ… போன வாரம் கூட பாரத் பென்ஸ் லாரிங்க அம்பது இறக்கிருக்காங்க”

“இத்தினி லாரிங்களா? அப்படின்னா அதிகாரிங்களுக்கு லஞ்சமே பலகோடி கொடுக்கனுமே?”

”அதெல்லாம் இன்னா கணக்கோ நமக்குத் தெரியாதுபா.. நம்ப வண்டின்னா எவனும் மடக்க மாட்டான். அவ்வளவு தான். எங்க ட்ரைவருங்களுக்கே என்னா ரூல் போட்ருக்காங்கன்னா, யாராச்சியும் ஊர்க்காரன், ஏரியாக்காரன் பிரச்சினை பண்ணா கூட ஒன்னும் பேசாம வந்துடனும். கண்ணாடியவே ஒடச்சி போட்டாலும் சத்தமில்லாம வந்திடனும். ஆனா.. அடுத்த நாள் நாங்க அதே ஏரியாவுக்குப் போவோம். முந்தா நாள் சத்தம் போட்டவன் ஒருத்தனும் இருக்க மாட்டான். கெவருமெண்டை வச்சி பார்க்கனுமோ போலீசை வச்சிப் பார்க்கனுமோ, எப்டி பார்க்கனுமோ அப்டி பார்த்துக்குவாரு எங்க மொதலாளி. ஆனா எங்க வண்டிய மறிச்சவன் அடுத்த நாள் அங்க இருக்க மாட்டான்”

எப்படி எனது தலைவனின் பெருமை என்பது போல் என் முகத்தைப் பார்த்தார். அதிலிருந்து அவருக்குத் திருப்தியளிக்கும் வண்ணம் பாவனைகள் ஏதும் கிடைக்காததால் மேலும் அவரது முதலாளியின் சாகசங்களை விவரிக்கத் துவங்கினார்.

”அவரு ஏம்பா தாசில்தாரு ரேஞ்சுக்கெல்லாம் இறங்கனும்? அதெல்லாம் கலெக்ட்டரு மினிஸ்டரு லெவல்ல டீலிங் பேசிக்குவாங்களா இருக்கும்பா. பத்து வருசத்திலே இத்தினி தூரம் வளர்ந்திருக்காருன்னா சும்மாவா? கலைன்ஜரோ அம்மாவோ, யாரு ஆச்சியா இருந்தாலும் மணலைப் பொருத்தளவில எங்காளு ராஜ்ஜியம் தான் இங்க நடக்குது தெரியுமா?”

“அடேங்கப்பா.. பத்து வருசத்திலேயே இந்தளவுக்கு செல்வாக்கா வளந்துட்டாரா? அப்படி எத்தனை லாரி வச்சிருக்காருங்க?”

”தம்பி சூப்பர்வைசரு மேனேஜரு மத்த ஸ்டாபுங்க கணக்கே பத்தாயிரத்துக்கு மேல வரும்பா. டிரைவருங்க இருவத்தஞ்சாயிரத்துக்கு மேல இருக்காங்களாம். நானே 6150-வது டிரைவர் தெரியுமில்லே. ஒரு வண்டிக்கு ரெண்டு டிரைவருங்கன்னு கணக்கு போட்டுக்க. எத்தினி லாரி வருது? பத்தாயிரத்துக்கு மேல வருதில்லே? தமிழ்நாட்டுல எந்த ஊர்ல எந்த ஆறு ஓடுது, அதோட கிளைங்க எங்கெல்லாம் ஓடுது, அந்த ஏரியாவுக்கு பஞ்சாயத்து தலைவர் யாரு, அந்த ஊர்ல எத்தினி கட்சி, எந்த கட்சில எவ்வளவு ஆளுங்க இருக்கானுங்க,  ஏரியா லிமிட்ல எத்தினி போலீசு ஸ்டேசன் இருக்கு, எந்தெந்த இடத்தில செக் போஸ்ட் இருக்கு, யாரு தாசில்தாரு, ஆர்டிவோ யாரு, ரெவின்யு டிபார்ட்மெண்ட் யாரு, எவன் கலெக்டரு, மாவட்டத்தோட மந்திரி யாரு, அவன் எந்த கோஸ்டில இருக்கான் எல்லா விவரமும் எங்க அய்யாவோட விரல் நுனில இருக்கும் தம்பி”

“ஒரு லாரி ஒரு நாளைக்கு எத்தனை ட்ரிப் அடிக்கும்?”

”ஒரு நாளும் ஒரு லாரியும் ஓய்ஞ்சி நிக்காதுபா. எப்படியும் மூணுலேர்ந்து அஞ்சி ட்ரிப் வரைக்கும் அடிக்கும்”

“ஒரு லாரியோட கொள்ளளவு எவ்வளவுங்க?”

“டிப்பர் லாரில ரெண்டு டைப்பு இருக்குபா. ஒரு டைப்ல 35 டன் கெப்பாசிட்டி, இன்னொனுல 40 டன் கெப்பாசிட்டி. 40 டன் கெப்பாசிட்டி உள்ள லாரிங்க தான் எங்க கம்பெனில அதிகமா ஓடுது”

மணல் அள்ளும் லாரிகள்சாதாரணமாக ஒரு மனக்கணக்கைப் போட்டுப் பார்த்தேன். ஆறுமுகசாமியின் உற்பத்தி சக்திகளில் 80 சதவீதம் பயன்படுத்தப்பட்டாலே தமிழகத்தின் நீராதாரங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமாராக 12 லட்சம் டன் மணல் அள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. வெடித்துக் கிடக்கும் கிராமத்து வயல்வெளிகளும், கிராமங்களிலிருந்து பஞ்சடைத்த கண்களோடு நகரங்களுக்கு அத்துக்கூலிகளாய் வந்து விழும் விவசாயிகளும் கண் முன்னே ஒரு கணம் தோன்றினர். ஆத்திரம் தலைக்கேறியது. எனினும், இவர் என்ன செய்வார்.

மொத்த தமிழகத்தையும் பெரும் பள்ளமாக தோண்டியெடுத்து விற்கும் வெறியோடு இந்த மணல் மாபியாக்கள் செயல்பட்டு வருவதன் ஒரு சிறிய சித்திரத்தை அவர் வழங்கியிருந்தார். தாகத்தில் தவிக்கும் ஒரு மாநிலத்தில் நீர்பிடிப்பு ஆதாரங்களான மணலை கேட்பாரின்றிக் கொள்ளையடிக்கும் இந்த கும்பல் நமது எதிர்காலத்தை மொத்தமாக அரித்துத் திண்ணும் கரையான்கள். உடனே ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்களும் கூட.

”உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு கிடைக்கும்ங்க?

“ஒரு ட்ரிப்புக்கு 150 ரூபா. ஒரு நாளைக்கு 750 ரூபா வரைக்கும் சம்பாதிக்கலாம். நைட்டு கட்டிங் போட 150 ரூபா செலவாச்சின்னாலும் 600 ரூபா நிக்கும். எங்களுக்கு லீவெல்லாம் கிடையாதுங்க. ஒரு தபா லாரில ஏறிட்டா தொடர்ந்து ரெண்டு மாசமானாலும் ஓட்டலாம், மூணு மாசமானாலும் ஓட்டலாம். வேணும்ங்கற அளவுக்கு துட்டு சேர்ந்ததும் பத்து நாளோ ரெண்டு வாரமோ லீவு போட்டுட்டு ஊருக்கு போயிடுவோம். தோ, இப்ப கூட ரெண்டு மாசம் கழிச்சி நான் ஊருக்குப் போறேன். இந்த வாட்டி இருவத்திரெண்டாயிரம் சேர்த்திருக்கேன். பெரிய பொண்ணு வயசுக்கு வந்துட்டா.. சீரு வச்சிருக்கோம்” அவரது முகத்திலிருந்த பெருமிதம் மறைந்து ஒரு தந்தையின் மகிழ்ச்சி தென்பட்டது. கொஞ்ச நேரம் பேச்சின்றிக் கழிந்த பயணத்தில் திடீரென்று ஏதோ யோசித்துக் கொண்டவராக திரும்பினார்,

“ஏன் தம்பி, தெற்கே இருக்காரில்லே பழனிச்சாமி. அவரும் ஆறுமுகசாமியும் எதாச்சியும் பங்காளிங்களா?”

”யாரைச் சொல்றீங்க? கிரானைட் பி.ஆர்.பியா?”

“அட ஆமாம்பா. அவரு தான்”

”தெரியாதே. ஏன் கேட்கறீங்க?”

“இல்ல, எங்க கம்பெனிலயே அவரு பேர்ல நிறைய லாரிங்க ஓடுதுபா. நான் ஓட்டுற வண்டியே அவரு பேர்ல தான் பதிவாயிருக்குபா”

எங்கள் பேச்சினூடாக வாலாஜாவை நெருங்கியிருந்தோம். அந்த நேரம் அவரது தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. பேசியவர் அவசரமாக எழுந்தார். ( உண்மையில் இந்த பழனிச்சாமி கிரானைட் பி.ஆர்.பி பழனிச்சாமி இல்லை, இவர் ஆறுமுகசாமியின் பினாமியாக கோவை வட்டாரத்தில் இருக்கும் ஒரு பழனிச்சாமி)

“தம்பி, மச்சினன் வாலாஜா பஸ்டாண்டில நிக்கிறானாம். நான் இங்கேயே இறங்கிக்கறேன். பார்க்கலாம் தம்பி” வேகமாக வாசலை நோக்கிச் சென்றார்.

வைகுண்டராஜன், பி.ஆர்.பி வரிசையில் ஆறுமுகசாமி. ஆயாசத்தில் கண்களை மூடினேன். பிரம்மாண்டமான உருவம் கொண்ட எண்ணற்ற அட்டைப்பூச்சிகள் தமிழகத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பது போல் ஒரு காட்சி தோன்றியது.

– தமிழரசன்

  1. கொள்ளக்காரனும் கொல காரனும் இப்பிடித்தாம்பா. கணக்கு போடுவாங்கே..——-

    அந்த ஏரியாவுக்கு பஞ்சாயத்து தலைவர் யாரு, அந்த ஊர்ல எத்தினி கட்சி, எந்த கட்சில எவ்வளவு ஆளுங்க இருக்கானுங்க, ஏரியா லிமிட்ல எத்தினி போலீசு ஸ்டேசன் இருக்கு, எந்தெந்த இடத்தில செக் போஸ்ட் இருக்கு, யாரு தாசில்தாரு, ஆர்டிவோ யாரு, ரெவின்யு டிபார்ட்மெண்ட் யாரு, எவன் கலெக்டரு, மாவட்டத்தோட மந்திரி யாரு, அவன் எந்த கோஸ்டில இருக்கான் எல்லா விவரமும் எங்க அய்யாவோட விரல் நுனில இருக்கும் தம்பி”

    “ஒரு லாரி ஒரு நாளைக்கு எத்தனை ட்ரிப் அடிக்கும்?”

  2. ஒரு காலமும் முன்னேற வாய்ப்பு இல்லை.பிற,படித்த,அறிந்த வளர்ந்தநாடுகளில் அதிககட்சியும்,தலைவர்களும் இல்லை இரு தலைவர்கள் இருப்பார்கள் அவர்கள் தனது திட்டத்தை,சவாலை சில புள்ளி விவரங்களுடன் தெரிவிப்பார் அதை மக்கள் நன்றாக கவனித்து ஆமோதித்து ஆம் இதுசரி என்று முடிவு செய்து வாக்களிப்பார்கள்.அவையனைத்தும் மக்களின் சாதரனகுடிமகனும் வளர்ச்சியடைவதாக இருக்கும். இப்பொழுது இந்த நிலையில் உள்ளது இனி இத்துறையில் இவ்வளவு உயர்த்துவேன் என்பார் ஆனால் இந்தியாவில் அடிப்படையே தெரியாதவன்.மனிதாபிமானம் அற்றவன் உலக அளவில் தன்னை தாராளமாக வளர்த்து தன்னையும் தன் கொள்ளைக்கூட்டத்தையும் வளப்படுத்தி மற்றவர்களை கொல்லும் நாசகார பாசிச ஓநாய்+பேய்த் தனமானவனை மத சாதி அடிப்படையில் கண்ணைமூடிகயிலாசம் போக வழிகாட்டுவார்கள்.நீங்களும்?உங்கள் பாராளுமன்றமும

  3. எனது உயிர்த்தோழர்களே.என்னுடன் பழகியவர்களே,எனது நல்லெண்ணத்தில் கொள்கையில் ஒன்றானவர்களே. எனது குடும்பமே,ஊரே,நாடே நான் பிறந்து வளர்ந்து உலக வாழ்விற்கான விவரங்கள் தெரிந்தவரையில் ஈழமக்களின் உறுதிப்பாடு மிக உயர்ந்ததாகத்தெரிந்தது ஆனால் அவர்களின் எண்ணத்தை செயல் படுத்தமுடியவில்லை.ஒப்பாரிதான் வைத்தேன் ஆனால் நமக்கு அருகில் இருக்கும் இந்த கடற்கரைத்தமிழனுக்கும்,அவர்களை வழிநடத்தும் தலைமைக்கும் நம்மால் முடியக்கூடிய அவர்கள் எதிர்பார்க்கின்ற அந்த போராட்ட உதவிகளை நாமும் ஏறெடுத்தால் என்ன??? இன்னமும் எவ்வளவு காலத்திற்க்கு நடைபிணமாக கண்டும் கானாததுமாய் இருக்கப்போகிறோம்.நாள்க்கள் கூடக்கூட அதிகம் இழக்கவேண்டியதும்.அதிக விளைவுகளை சந்திக்கவேண்டியதும்,பல புதியபிரட்சினைகளுக்கும் ஆளாவோம்.சிந்திப்போம்.முகிலன் சாமியாதல் போல நானும் உங்கள் கால்களில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். அய்யா சால வணக்கம்.

  4. You could have better avoided the number of the innocent driver… anyway this article is not going to make any difference on the people in the power..rather the driver would be punished and he may end up in jobless…..

    • சரவணா, இந்தக் கட்டுரையில் ஓட்டுநரது எண்ணாக குறிப்பிடப்பட்டிருப்பது கற்பனையான எண்தான். உண்மையான எண் அல்ல. அவரது அடையாளம், ஊர், எண் அனைத்தும் தவிர்க்கப்ப்ட்டே இந்த பதிவு எழுதப்பட்டிருக்கிறது. எனினும் அது உண்மையான எண் போல தோற்றமளிப்பது என்ற வகையில் வருந்துகிறோம். இனி இத்தகைய விசயங்களில் இன்னும் பொறுப்பாக இருப்போம் என்று உறுதியளிக்கிறோம். நன்றி

  5. நானும் கோவையை சேர்ந்தவன் ரிப்போர்ட்டரில் ஆறுமுக சாமி அளித்த பேட்டி குறித்து எங்கள் ஊரில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ஆறுமுகசாமியின் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் (அவரும் எங்கள் ஊரே) இடையில் நுழைந்து இவர் தேர்வுகளில் மதிப்பெண் வாங்கும் மாணவ மாணவியருக்கு பரிசளிப்பதை பற்றி சிலாகித்து பேச ஆரம்பித்தார். சரி தம்பி நீ சொல்றது சரிதான் ஆனாலும் இப்பல்லாம் யாரு தம்பி இப்டிலாம் பண்றாங்க இவரு பண்றாருல்ல எங்க கம்பெனி அப்டிங்கறதுனால நான் சப்போர்ட் பண்ணல தம்பி இவர விட்டா வேற யாரும் இத மெயின்டய்ன் பண்ண முடியாது தம்பி…. என்ற ரீதியில் பேச்சை கொண்டு சென்றார்.

    சரி இது இருக்கட்டும் இவர் பரிசளிப்பதை பற்றியும் அதில் ஏதேனும் உள்நோக்கம் இருந்தால் அதை பற்றியும் விரிவாக விளக்கவும். அல்லது வேறு ஏதேனும் கட்டுரை இருந்தால் இணைப்பை தரவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க