தந்தூரி கொலைகாரன் சுசீல் சர்மாவுக்கு தண்டனை குறைப்பு ஏன் ?

21

ஜூலை 2, 1995 இரவில் மத்திய தில்லியில் உள்ள தன் வீட்டில் மனைவி நய்னா சாஹ்னியை (வயது 29) சுட்டுக் கொன்று விட்டு, பின்னர் அக்கொலையை மறைக்க பிணத்தை கூறு கூறாக வெட்டி தந்தூரி அடுப்பில் வைத்து எரிக்க முயன்ற தில்லி இளைஞர் காங்கிரசு தலைவர் சுசீல் சர்மாவுக்கு செசன்சு நீதிமன்றம் 2003-ல் தூக்குத் தண்டனை விதித்தது. அதனை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதி மன்றம் கடந்த அக்டோபர் 8 அன்று உத்திரவிட்டுள்ளது.

சுசீல் சர்மா
தந்தூரி கொலைகாரன் சுசீல் சர்மா

தந்தூரி அடுப்பில் வேக வைக்க முடியாத சாஹ்னியின் பிணத்தில் சுசீல் சர்மா நெய் ஊற்றி எரிக்க முயன்றதால் ரத்த மாதிரிகளை வைத்து இறந்தது அவள்தான் என முதலில் உறுதிப்படுத்த இயலவில்லை. அப்போது பிணத்தின் டி.என்.ஏ மாதிரியை பெற்றோர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் ஜெஸ்வந்த் கௌரின் டி.என்.ஏ மாதிரியுடன் ஒப்பிட்டுதான் இறந்தது நய்னா சாஹ்னி என்றே உறுதி செய்தார்கள். அதன் பிறகு ஹர்பஜன் சிங் யாரையும் தன்னை பார்க்க வர அனுமதிக்கவில்லை. “பெற்ற பெண் குழந்தைக்கு கேவலம் ஒரு நீதியை கூட வாங்கித் தர வக்கற்ற நானெல்லாம் ஒரு தகப்பனா?” என்று பார்க்க வந்த ஒரு சில பத்திரிகையாளர்களிடம் எல்லாம் குமுறிக் கொட்டினார்.

மட்லூப் கரீம் என்ற இளைஞனும், நய்னா சாஹ்னியும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவருமே காங்கிரசின் மாணவர் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தவர்கள். இவர்களுக்குள் காதல் இருந்தாலும் நய்னாவின் பெற்றோர்கள் சம்மதிக்காத நிலையில் பிரிந்து விடுகின்றனர். இதற்கிடையில் தில்லி பிரதேச இளைஞர் காங்கிரசு தலைவராக இருந்த சுசீல் சர்மா தனது கட்சியை சேர்ந்த நய்னா சாஹ்னி மீது காதல் கொள்கிறான். முதலில் காதலிக்க மறுத்த நய்னா சாஹ்னியை மிரட்டியே பணிய வைக்கிறான் சுசீல் சர்மா.

இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என நய்னா சாஹ்னி வற்புறுத்தவே சேர்ந்து மட்டும் வாழ விரும்பிய சுசீல் சர்மா அவர்களது திருமணத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும், தனது அரசியல் எதிர் காலத்தை இந்த திருமணம் பாதித்து விடக் கூடாது என்றும் கூறி யாருக்கும் தெரியாமல் நய்னா சாஹ்னியை மத்திய டெல்லியில் உள்ள கோல் மார்க்கெட் பகுதியில் ப்ளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்க வைக்கிறான். அங்கு அவர்கள் இருவரும் “லிவிங் டு கெதராக” இணைந்து வாழ்க்கை நடத்துகின்றனர். தொடர்ந்து நய்னா தங்களது திருமணத்தை முறையாக பதிவு செய்ய வேண்டும் என சுசீல் சர்மாவிடம் வலியுறுத்தி வந்திருக்கிறாள்.

சுசீல் சர்மா இதனை தட்டிக் கழிக்கவே தனது பழைய காதலனும், நண்பனும், காங்கிரசு ஊழியனுமான மட்லூப் கரீமிடம் இது பற்றி அவ்வப்போது நய்னா பேசி வந்திருக்கிறாள். இதனை தெரிந்து கொண்ட சுசீல் சர்மா தன்னை விட்டு அவள் போய் விடக் கூடாது என்பதற்காக வெளியே வர விடாமல் நய்னாவை பிளாட்டில் அடைத்து வைக்க தொடங்கினான். இவ்வளவுக்கும் நய்னா சாஹ்னி அப்போது காங்கிரசு மகிளா சபாவின் தில்லி பிரதேச பொதுச் செயலாளராகவும் இருந்து வந்திருக்கிறாள். அவள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட விமான ஓட்டியும் கூட. தங்களது திருமணத்தை பதிவு செய்து கொள்ள மறுத்து விட்டு, பிற ஆண்களுடன் மனைவி பேசுவதை சந்தேகத்துடன் பார்க்கும் வக்கிரமான ஆணாதிக்கவாதியாகவே சுசீல் சர்மா இருந்து வந்திருக்கிறான்.

ஜூலை 2 அன்று இரவு மட்லூப் கரீமிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் சாஹ்னி. அங்கு வந்த சுசீல் சர்மாவைப் பார்த்ததும் பயந்து போய் தொலைபேசியை உடனே கீழே வைக்கிறாள். பாய்ந்து வந்த சுசீல் சர்மா தொலைபேசியில் யாரிடம் சாஹ்னி பேசினாள் என்பதைக் கண்டு பிடிக்கிறான். எதிர்முனையில் கரீம் வரவே, இருவருக்கும் கள்ளத் தொடர்பு என முடிவு செய்து உடனே நய்னா சாஹ்னியை சுட்டுக் கொல்கிறான். இப்படித்தான் காவல்துறை குற்றப் பத்திரிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். தலையிலும், கழுத்துப் பகுதியிலும் பாய்ந்த இரு குண்டுகள் நய்னாவின் உயிரைப் பறிக்கின்றன.

பிறகு சுசீல் சர்மா இக்கொலையை மறைக்க முயற்சிக்கிறான். முதலில் நய்னாவின் பிணத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கூறு போட்டு அதனை ஒரு கோணிப்பையில் சேகரிக்கிறான். பிறகு மாருதி காரில் அதனை ஏற்றிக் கொண்டு மத்திய தில்லியில் உள்ள அரசின் அசோகா ஹோட்டல் யாத்ரி நிவாசின் ஒரு பகுதியாக அவன் நடத்தி வந்த பாஹ்யா உணவு விடுதிக்கு கொண்டு வருகிறான்.

அங்கு விடுதியின் மேலாளர் கேசவ் குமாருடன் இணைந்து தான் கொண்டு வந்த நயினா சஹானியின் தசைப் பிண்டங்களை தந்தூரி அடுப்பில் வேக வைக்கிறான். சீக்கிரம் எரிய வைக்க வேண்டும் என்பதற்காகவும், வெளியில் துர்நாற்றம் தெரியக் கூடாது என்பதற்காகவும் அதிகமான நெய்யை அதில் ஊற்றுகிறார்கள். இந்த இடத்தின் அருகில்தான் இந்திய நாடாளுமன்றம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீசு கான்ஸ்டபிள் அப்துல் நசீம் குஞ்சு என்பவருக்கு இந்த துர்நாற்றம் சந்தேகத்தை கிளப்பவே அங்கு சென்று “என்ன செய்கிறீர்கள்?” என விசாரிக்கிறார். அதற்கு பழைய காங்கிரசு பேனர்கள் மற்றும் கொடியை எரிப்பதாக அவர்கள் பதில் கூறியுள்ளனர். மீண்டும் தந்தூரி அடுப்பில் தீ கொழுந்து விட்டு எரியவே அருகில் சென்று பார்க்கிறார் நசீம் குஞ்சு. அருகில் மனித உடலின் சில பாகங்களின் துணுக்குகள் சிதறிக் கிடக்கவே எரிந்து கொண்டிருப்பது மனிதப் பிணம் என்பதை உறுதிப்படுத்தி விட்டு உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டு தீயை அணைக்க முற்படுகிறார் நசீம் குஞ்சு. இதற்குள் சுசீல் சர்மா தப்பி விடுகிறான். மேலாளர் கேசவ் குமார் மட்டும் கைது செய்யப்படுகிறார்.

சுசீல் சர்மா, நய்னா சாஹ்னி
சுசீல் சர்மா, நய்னா சாஹ்னி

தப்பிய சுசீல் சர்மா முதலில் சென்ற இடம் தில்லியிலுள்ள குஜராத் அரசு இல்லத்திற்கு. அங்கு தங்கியிருந்த அவனது நண்பரும், குஜராத் மாநில அரசின் இணைச் செயலர் தகுதியில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான டி.கே. ராவ் சுசீல் சர்மாவுக்கு அடைக்கலம் அளிக்கிறார். மறுநாள் சுசீல் சர்மாவை ஜெய்ப்பூருக்கும் அனுப்பி வைக்கிறார். அங்கிருந்து மும்பை செல்லும் சுசீல் சர்மா, பிறகு சென்னை வருகிறான். இதற்கிடையில் சென்னையில் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் சுசீல் சர்மா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்படவே அவனைத் தேடி தில்லி காவல்துறையினர் சென்னை வருகின்றனர். ஒரு வாரம் கழித்து ஜூலை 11-ல் பெங்களூருவில் காவல்துறையிடம் சரணடைகிறான் சுசீல் சர்மா.

சுசீல் சர்மாவுக்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ராவ் முதலில் முதல்வராக இருந்த சிமன்பாய் படேலிடமும், பிறகு வந்த மோடியிடமும் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தவர். 2002-குஜராத் கலவரத்திற்கு பிறகு சுற்றுலாத்துறைக்கு செயலராக இவரை நியமிக்கிறார் மோடி. அப்போது நடந்த “வைப்ரண்ட் குஜராத்” போன்ற மோடியை முன்னிறுத்தும் விளம்பரங்களுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர்தான். அதற்கு முன்னர் குஜராத் மாநில கைத்தறித் துறைக்கு செயலராகவும் இருந்தார்.

நய்னா சாஹ்னி கொலை வழக்கில் இவரையும் விசாரிக்க செசன்சு நீதிமன்ற நீதிபதி ஜி.பி. தரேஜா தில்லி மாநகர காவல்துறைக்கு தனது தீர்ப்பின் மூலம் உத்திரவிட்ட போதும், மேல்முறையீட்டின்போது தில்லி உயர்நீதி மன்றம் இதனை தள்ளுபடி செய்தது. இவருக்காக அப்போது குஜராத் இல்லத்தில் பணியில் இருந்த அரசு ஊழியர்கள் மூவரையும் முன்னதாகவே விடுவித்திருந்தது செசன்சு நீதிமன்றம். குஜராத் இல்லத்தில் வரவேற்பளாராக இருந்தவர் சுசீல் குமாரை யார் என்றே அடையாளம் தெரியவில்லை என நீதிமன்றத்தில் கூறி விட்டார்.

1995 ஜூலை 27 அன்று செசன்சு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1999 முதல் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற போதிலும் 2003-ல் தான் பத்திரிகை செய்திகளில் இது சூடுபிடித்தது. இடையில் நீதிபதியை, சுசீல் சர்மாவின் வழக்கறிஞரை மாற்றுவது தொடர்பாக பல குளறுபடிகள் இவ்வழக்கில் நடந்தன. 99 சாட்சிகளில் 18 சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறின. அதிலும் 6 சாட்சிகளை மீண்டும் கூப்பிட்டு நீதிமன்றம் விசாரித்தது.

நேரில் இக்குற்றத்தை கண்டு துப்புதுலக்க உதவிய அப்துல் நசீம் குஞ்சு மறுநாள் முதல் தலைமை காவலராக பதவி உயர்வு பெற்றார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக பொறுப்பு வகித்த நாராயண் போன்ற ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு 2000க்கு பிறகு குடியரசுத்தலைவரின் பதக்கமும் வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தில் முதல்நாள் ஆஜராக வந்த சுசீல் சர்மா காவலர் நசீம் குஞ்சை அணுகி ரூ.10 லட்சம் தருவதாகவும், கொலை செய்தது மட்லூப் கரீம் என நீதிமன்றத்தில் மாற்றிக் கூறும்படியும் ஆசை காட்டினான். அதற்கு அவர் மசியவில்லை. பிறகு அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் மிரட்டல் வந்தது. நசீம் குஞ்சு இதற்கெல்லாம் அஞ்சாமல் சுசீல் சர்மாவுக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்ய உதவினார்.

விசாரணை நடந்து தீர்ப்பு நாள் நெருங்குகையில் பாஜக போன்ற எதிர்க்கட்சிகளின் மகளிர் பிரிவினர் செசன்சு நீதிமன்றத்துக்கு வெளியில் சுசீல் சர்மாவுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது தான் தனியார் சேனல்கள் இந்திய சந்தையில் நுழைந்திருந்த காலம் என்பதால் பரபரப்பான செய்தியாக எல்லா சேனல்களும், எல்லா இந்திய மொழிகளிலும் தந்தூரி அடுப்பு கொலையை ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. சுசீல் குமார் பெயர் அதன் பிறகு மக்கள் மத்தியில் “தந்தூர் குமார்” என்று ஆனது.

இந்திய குற்றவியல் வழக்கிலேயே முதன்முறையாக குற்றச் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்தார் நீதிபதியாக இருந்த தரேஜா. கடைசியில் கேசவ் குமாருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தான் ஏற்கெனவே 8 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதால் மீதி ஒரு ஆண்டுக்கு காவல்துறையிடம் நட்டஈடு கேட்கப் போவதாக அப்போது கேசவ் குமார் கூறிக் கொண்டிருந்தார்.

சுசீல் சர்மாவுக்கோ நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது. நீதிபதி தரேஜா தனது தீர்ப்பில், தந்தூரி அடுப்பில் வெட்டி சக மனிதனை வேக வைத்ததை சுட்டிக் காட்டி சுசீல் சர்மாவின் இச்செயல் கொடூரமானது, மனித நாகரிகத்திற்கு புறம்பானது என்று குறிப்பிட்டதுடன், இதனை அரிதினும் அரிதான வழக்காக கருதி தூக்குத்தண்டனை விதிப்பதாக எழுதி இருந்தார். நய்னா சாஹ்னியை கையறு நிலையில் இருந்த பெண் என்றும், அதைக்கூட பாராமல் சுசீல் சர்மா கொலை செய்து விட்டதாகவும், இவர்களை வெளியில் விட்டால் சமூக விரோதிகளாகத்தான் மீண்டும் வருவார்கள் என்றும் தன் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

நவம்பர் 7, 2003-ல் செசன்சு நீதிமன்ற தீர்ப்பு வந்தபோது, தான் தீர்ப்பு பற்றி மேல்முறையீடு செய்யப் போவதில்லை என முதலில் சொன்ன சுசீல் சர்மா பிறகு அதே ஆண்டு டிசம்பரில் தில்லி உயர்நீதி மன்றத்தை நாடினான். அப்போது டெல்லி மாநிலத்திற்கு தேர்தல் நடந்து கொண்டிருந்தது. வெங்காய விலை உயர்வுடன் அப்போது நயினா சஹானி விசயமும் சேர்ந்து காங்கிரசை மண்ணைக் கவ்வ வைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில் டெல்லியில் காங்கிரசு அமோக வெற்றி பெற்றது.

சுசீல் ஷர்மா, நய்னா சாஹ்னி
சுசீல் ஷர்மா, நய்னா சாஹ்னி

உயர்நீதி மன்றத்தில் சுசீல் சர்மாவுக்கு ஆஜரான பிரபல வழக்கறிஞர் சூட் என்பவர், “சுசீல் சர்மா நய்னா சாஹ்னியை திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே கொலை நடந்த போது அவர் நய்னாவின் ப்ளாட்டுக்கு போக தேவையே இல்லையே” என்று நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தார். பிறகு அங்கு இறந்தது ஒரு ஆண் தான் என்றெல்லாம் சொல்லி சுசீல் சர்மாவை தப்பிக்க வழி பார்த்தார்கள். கைத்துப்பாக்கியை கைப்பற்றியது என சொல்வதெல்லாம் காவல்துறையின் ஜோடனைகள் என்றும் நீதிமன்றத்தில் கூறிப் பார்த்தனர். எனினும் பிப்ரவரி 19, 2007-ல் தில்லி உயர்நீதி மன்றமும் அவனது மரண தண்டனையை உறுதி செய்தது.

பின்னர் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2007-ல் தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தனர். கடந்த அக்டோபர் 8 அன்று தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சனா தேசாய், ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்திரவிட்டது.

மூன்று நீதிபதிகளும் கூறிய தீர்ப்புகளின் சாராம்சம் இதுதான். அதாவது சுசீல் குமாருக்கு பழைய குற்றப் பின்னணி ஏதும் கிடையாது. எனவே இதுபோன்ற குற்றத்தை மீண்டும் செய்ய வாய்ப்பிருப்பதாக சொல்ல முடியாது. எனவே அவன் இனி சமூகவிரோத நடவடிக்கைக்கையில் ஈடுபட வாய்ப்பில்லை என தலைமை நீதிபதியும், கொலை நடந்த முறை கொடூரமாக இருந்தாலும், அதற்காக குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது என பெண் நீதிபதி ரஞ்சனா தேசாயும் தங்களது தீர்ப்புகளில் சொல்லி உள்ளனர்.

குற்றவாளியின் பெற்றோர்கள் மிகவும் வயதானவர்கள் என்றும், குற்றவாளி அவர்களது ஒரே மகன் என்றும் ஒரு காரணத்தை தண்டனைக் குறைப்புக்காக நீதிபதிகள் கூறியுள்ளனர். இது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு பொருந்தாதா? என்ற கேள்வி “தமிழரான” சதாசிவத்திற்கு ஏன் புரியவில்லை.?

அடுத்தாற் போல அவர்கள் சொன்னது மிகவும் முக்கியமானது. சுசீல் குமாரின் சமூக அந்தஸ்தை பார்த்தால், அவன் அப்பெண் மீது ஒரு ஆணாக இருந்து அதிகாரம் செலுத்தினான் என முடிவு செய்ய இயலவில்லை என்று கூறியதுடன், அவன் மிகவும் அப்பெண்ணை நேசித்திருக்கிறான், அப்பெண் மீது சந்தேகப்பட முகாந்திரம் இருந்த காரணத்தால், அவள் மீது வைத்திருந்த அதீத சொந்தம் பாராட்டல் (possessiveness) காரணமாக கொலை செய்துள்ளான் என சுசீல்குமாரின் செயலுக்கு வக்கலாத்து வாங்கியுள்ளனர் நீதிபதிகள். அதீத சொந்தம் பாராட்டும் ஆண்கள்தான் பெண்களை கட்டுப்பட்டே ஆகவேண்டிய அடிமைகளாக நடத்துகிறார்கள்.

இது ஒரு பச்சையான ஆணாதிக்கம் என்ற எளிய புரிதல் கூட இல்லாமல் நீதிபதிகள் பேசியிருப்பதாக நம்பமுடியவில்லை. உயர்நீதி மன்றத்தில் தனது மனைவியே இல்லை என வாதிட்ட சுசீல் சர்மாவை உச்சநீதி மன்றத்தில் அதீத சொந்தம் பாராட்டுபவனாக மாற்றிய நீதிபதிகளின் நேர்மையை எந்த தராசில் வைத்து அளப்பது?

வெண்மணியில் 44 விவசாய கூலிகளை தீ வைத்து கொன்ற கோபால கிருஷ்ண நாயுடுவை விடுவிக்க உச்சநீதிமன்றம் கூறிய காரணத்தை போலவே இங்கும் இப்பேர்ப்பட்ட அந்தஸ்துள்ள மனிதன் (சுசீல் சர்மா) பெண்கள் (நய்னா சாஹ்னி) மீது அடக்குமுறை செலுத்துபவனாக இருந்திருக்கிறான் என்பது நம்பும்படியாக இல்லை என தீர்ப்பில் நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.

பெண்ணை தனது உடைமை எனக் கருதி கொலை செய்யுமளவுக்கு துணிந்த ஆணாதிக்கத்திற்கு அது ஒரு அதீத அன்பின் வெளிப்பாடு என்ற நியாயம் இருப்பதாக காட்டி இருக்கின்றனர் நீதிபதிகள். மேலும் இப்படி டெக்னிக்கலாக முந்தைய தீர்ப்பை உடைக்குமாறு தான் செசன்சு நீதிமன்ற தீர்ப்பையே அங்கிருந்த நீதிபதிகள் அமைத்தும் தந்திருந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். உயர்நீதி மன்றத்திலேயே கொலையையையும் (சட்டப் பிரிவு 302 – கொலை), தடயங்களை அழிக்கும் குற்றத்தையும் (சட்டப் பிரிவு 201 – வெட்டி தந்தூரியில் வைத்து எரித்தது) தனித்தனியாக செசன்சு நீதிமன்ற நடுவர் பிரிக்க தவறியதை சுசீல் சர்மாவின் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியும் இருந்தனர்.

இப்படி 18 ஆண்டுகள் கழித்து டெக்னிக்கலாக சட்டத்தை பிரித்து மேய்ந்து ஒரு காங்கிரசு பெருச்சாளியின் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் குறைத்திருக்கின்றனர். இந்த ஆண்டும் மாநில தேர்தல் தில்லியில் இப்போது வர இருக்கிறது. பாஜக இப்போது இத்தண்டனை குறைப்பை எதிர்த்து போராட முன்வரவில்லை. சுசீல் சர்மாவைக் காப்பாற்றிய அதிகாரி மோடியின் மனங்கவர்ந்தவர் என்பது கூட அவர்களது அமைதிக்கு காரணமாக இருக்கலாம்.

அதிகார வர்க்கம், நீதிபதிகள், அரசியல்வாதிகள் எல்லோரும் சேர்ந்து சுசீல் குமார் என்ற கொடூரமான அரசியல் கொலைகாரனை மரணதண்டனையிலிருந்து விடுதலை செய்து இருக்கின்றனர். அதற்கு தந்தூரியில் மனைவியை எரித்த இந்த வழக்கை எல்லாம் அரிதினும் அரிதான வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறி விட்டிருக்கின்றனர் நீதிபதிகள். அப்சல் குரு முதல் வீரப்பனை தேடும் பணி வரை தூக்கிலிடப்பட்ட, சிறையிலிடப்பட்ட பலருக்கும் நீதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது. சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட சாதியினர், சாமான்ய மக்கள் ஆகியோருக்கு விசாரணையே இல்லாமல் தண்டனை தருகின்றன நீதிமன்றங்கள். போலி மோதல்கள் என்ற பெயரில் மனித உரிமை ஆர்வலர்களையும், போராளிகளையும் சட்டத்திற்கு புறம்பாக விசாரணையே இல்லாமல் காவல்துறை தண்டிக்கிறது.

மறுபுறம் காங்கிரசு, பாஜக போன்ற ஆளும் கட்சிகளின், ஓட்டுக்கட்சிகளின் பாசிச கிரிமினல்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் நீதிமன்றங்களின், போலீசாரின் துணையுடன் தொடர்ந்து தப்பிக்க முடிகிறது. மக்களின் சொத்துக்களை சூறையாட தங்களுக்குள் வலைப்பின்னலை அமைத்துக்கொள்ள முடிகிறது.

அதற்கு நல்ல உதாரணம் தற்போதைய சுசீல் சர்மாவின் தண்டனை குறைப்பு. ஏற்கெனவே ஜெசிகா லால் என்ற மது விடுதியில் வேலை செய்த பெண்ணை நேரம் தவறிய பிறகு மது விநியோகிக்க மறுத்த காரணத்துக்காக சுட்டுக்கொன்ற மத்திய காங்கிரசு அமைச்சர் வி.சர்மாவின் மகன் மனுசர்மாவுக்கு 2009-ல் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் சட்டவிரோதமாக பரோல் கொடுத்ததை நாடே அறியும். இப்போது சுசீல் சர்மா.

நய்னா சாஹ்னி ஒரு கையறு நிலையில் இருந்தார் என்பதையும் உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு சாட்சியாகத்தான் அவர் சான்றளிக்கப்பட்ட விமானி என்றும், காங்கிரசு மகிளா சபாவின் மாநில பொதுச்செயலாளர் என்றும் ஆதாரங்களை அடுக்கியுள்ளார் தலைமை நீதிபதி பி.சதாசிவம். முதல் தமிழ் நீதிபதி என்று உச்சி மோந்து பாராட்டுபவர்களுக்கு இந்த “சின்ன கவுண்டரின்” தீர்ப்பு இப்போது உவப்பாக இருக்கிறதா?

இதை விடக் கொடுமை தங்களது தீர்ப்பில் பாதிக்கப்பட்ட பெண் வீட்டார் யாரும் சுசீல் சர்மாவுக்கு மரண தண்டனையை கோரவில்லையே என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். (டெல்லி ஓடும் பேருந்தில் நடந்த பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை கோரினார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்) உண்மைதான் கையறு நிலையில் இருந்த நயினா சாஹ்னியின் தந்தை ஹர்பஜன் சிங் முன்னர் ஒரு நேர்காணலில், “யாருக்கு தண்டனை கொடுத்து என்ன செய்ய.?! அதனால் என் மகளை திரும்ப இந்த உலகத்திற்கு கொண்டு வர முடியுமா?” என்று வேதனையுடன் கேட்டிருந்தார். தலைமை நீதிபதி சதாசிவம் இதனை நேர்பொருளில் எடுத்துக் கொண்டிருப்பார் போலும்.

தனது கடைசி கடிதமொன்றில் சுசீல் சர்மாவிடம் தன்னிலை விளக்கம் அளித்த சகானி இப்படி முடித்திருப்பாள். “…என் பெற்றோர்களிடம் எதைப் பற்றியும் சொல்ல வேண்டாம். அவர்கள் அப்பாவிகள். அவர்களை தண்டிப்பதற்கு பதில் என்னை வேண்டுமானால் தண்டித்து விடு”. இக்கடிதத்தின் படி சுசீல் சர்மா மட்டுமல்ல, இந்த நாட்டின் நீதி அமைப்பும் கூட அந்தப் பெண்ணை தண்டித்திருக்கிறது.

– வசந்தன்.

21 மறுமொழிகள்

 1. மறுபடியும் ஓர் அப்பட்டமான கட்டப் பஞ்சாயத்து. அந்தப் பெண்ணின் தகப்பனாக நான் இருந்திருந்தால் எப்படி அவள் இறந்தாளோ அதே தண்டனையை என் நீதிமன்றத்தில் வைத்து சுசீலுக்கு வழங்கியிருப்பேன். நீதி கிடைக்க 18 வருடங்கள் என்பது கடுப்பேற்றுகிறது. இந்த “அடுக்கடுக்கான நீதி வழங்கல்” முறை அதீத கோபத்திற்குள்ளாக்குகிறது.

   • அது சரி….உங்க மனங்கவர்ந்த மோடி பத்தியும் செய்தி வருதே அதுவும் கரெக்ட் தானா ப்ப்பீயா…..?

    • ஆமா கற்பு

     இன்று – மோடி பிரதமர் வேட்பாளார்
     னாளை – மோடி பாரதப் பிரதமர்

    • கர்ப்பான்..

     முறுக்கும் சுண்டலும் பொரியில் மட்டும் பகுத்தறிவை கண்டு மட்டன் பிரியாணி மற்றும் முட்டை ப்ளம் கேக்கில் பகுத்தறிவை காணாமல் உண்டால் கண்ணில் தான் கோளாறு என்று அர்த்தம். பகுத்து உண்ணுதல் என்பது நல்லது அதை தான் பண்டிகைகள் செய்கிறது…

    • 3 முறை முதல்வர்..

     இன்று – பாரதப் பிரதம்ர் வேட்பாளர்..
     னாளை- பாரதப் பிரதமர்..

     சரிதான் கரப்பான்…

 2. சுசீல் குமாரின் சமூக அந்தஸ்தை பார்த்தால், அவன் அப்பெண் மீது ஒரு ஆணாக இருந்து அதிகாரம் செலுத்தினான் என முடிவு செய்ய இயலவில்லை என்று கூறியதுடன், அவன் மிகவும் அப்பெண்ணை நேசித்திருக்கிறான், அப்பெண் மீது சந்தேகப்பட முகாந்திரம் இருந்த காரணத்தால், அவள் மீது வைத்திருந்த அதீத சொந்தம் பாராட்டல் (possessiveness) காரணமாக கொலை செய்துள்ளான் என சுசீல்குமாரின் செயலுக்கு வக்கலாத்து வாங்கியுள்ளனர் நீதிபதிகள். ////படுகேவலமான பிற்போக்கு வாதத்தை நீதிபதி உதிர்த்துள்ளார்

 3. தந்தூரி கொலைகாரன் “உழைத்து” வேலை செய்த மாமா:மாமா வேலை பார்த்து
  காங்கிரசு கட்சியில் மேலே வந்தவன்…..
  உண்மையில் அவனை தந்தூரி அடுப்பில் போட்டு எரிக்கவேண்டும்!

 4. குற்றவாளிகளாக இருப்பவர்களே தீர்ப்பு சொல்பவர்களாகவும் இருந்தால் இப்படித்தான் இருக்கும் நீதி. இவற்றை எதிர்த்து நாம் இன்றே போராட தொடங்கவில்லை என்றால் நமக்கும் நாளை இருக்காது நாதி.

  • உண்மைதான் தம்பி…
   தனது கழுத்தில் சுறுக்குப் போடும்
   தனது கைகளையே தனக்கு வில்லன் என்பதை
   அறியாத தமிழினம்!

 5. //குற்றவாளியின் பெற்றோர்கள் மிகவும் வயதானவர்கள் என்றும், குற்றவாளி அவர்களது ஒரே மகன் என்றும் ஒரு காரணத்தை தண்டனைக் குறைப்புக்காக நீதிபதிகள் கூறியுள்ளனர். இது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு பொருந்தாதா? என்ற கேள்வி “தமிழரான” சதாசிவத்திற்கு ஏன் புரியவில்லை.?//
  ஒரு பேட்டரிக்கட்டை வாங்கிக்கொடுத்த மாபெரும் குற்றத்துக்கு தூக்காம்…கொன்றதும் இல்லாமல் துண்டுதுண்டாக வெட்டித் தந்தூரி அடுப்பில் வறுத்த காங்கிரசுக் கொடூரனுக்கு ஆயுளாம்…இந்த நாட்டில் ‘நீதி’மன்றங்கள் நீதியை வழங்கும் என இனி எவனாவது சொல்லட்டும்..அப்புறம் இருக்கு..

 6. //நய்னா சாஹ்னி ஒரு கையறு நிலையில் இருந்தார் என்பதையும் உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை//

  இப்படிப்பட்ட நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் போது, மக்களாகிய நாம்தான் கையறு நிலையில் உள்ளோம்.

 7. ஆண்டாண்டு காலமாக அடிமையாக இருந்ததன் விளைவோ என்னவோ ,இன்னும் அடிமையாக இருக்கவே விரும்புகின்றனர் ,அரசியல் அடிமைகள் ,பணத்திற்கு அடிமைகள் ,ஜாதி அடிமைகள் ,மத அடிமைகள் ,இவனுங்க எல்லாம் கட்டபஞ்சாயத்து நடக்குற இடத்துல இருக்கக் கூட தகுதி இல்லாதவங்க எப்படித்தான் நீதிபதி ஆனான்களோ

 8. //நய்னா சாஹ்னி ஒரு கையறு நிலையில் இருந்தார் என்பதையும் உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை//

  Women who is entering living together relationship cannot be considered as an innocent who cant make decesions and intimidated

  She was in a party post. If she was in house arrest , could have asked the police help. She had access to telephone.

  • அவ்வளவு ஏன் சார்….”நய்னா சாஹ்னி தந்தூரி அடுப்பில் குதித்து தற்கொலைன்னுட்டு” போவீங்களா…

 9. மோடி பத்தி எழுதலனா வினாவுக்கு தூக்கம் வராதே !!!!!!!!!!!!

  வினவு நீ பேசாமே கதை எழுதலாமே ?

  ஏன்னா நல்ல கற்பனைத்திரன் உன்கிட்ட இருக்கு.

 10. சூப்ப்பரப்பூ…. கூடவே இருந்து பாத்தாக்கூட இப்படி எழுத முடியாது….நம்ம பவர் ஸ்டார் படத்துக்கு கதை எழுத ஆள் வேணுமாம்… போய் ஒரு எட்டு பாக்கலாம்ல….

  • நீங்கள் போய் எழிதினால் ஆகாதா?
   வேறு வேலை ?
   இருக்கும்,இருக்கும்..நட்வர் சிங்கு,சுரேசு கருமாதி,இவங்களுக்கெல்லாம் முதுகு சொறியனுமா?

 11. பெரும்பாலான (~ 99.9%) கொலைகள் உணர்ச்சி வய பட்ட நிலையிலேயே நடக்கின்றன. அந்த கணத்தில் வரும் ஆத்திரம் காரணமாக நிகழ்பவை.
  மண், பொன், பெண் காரணங்களே இதில் பெரும்பாலும்.
  இம்மாதிரி கொலைகளுக்கு ஆயுள் தண்டனையே.

  மற்றொரு வகை என்பது நிதானமாக சதித்திட்டமிட்டு கொலை செய்வது. கொல்லப்படுபவர் மிக பிரபலமான நல்லவராகவோ, தேச தலைவராகவோ இருப்பின் தூக்கு தண்டனை வழங்கபடுகிறது.

  மூன்றாம் வகை மிக குரூரமாக ரசித்து கொலை புரிவது, சிறுக சிறுக கொள்வது என ஒரு psycho போல செயல்படுவது. மனநிலை பாதிக்கப்பட்டவராக இருப்பின் மனநல மருத்துவமனைக்கு அனுப்பபடுவர். அப்படி இல்லையெனில் தூக்கு தண்டனை கிடைக்க வழி இருக்கிறது.

  சுஷில் ஷர்மா முதல் வகை. அந்த நிமிட கோபத்தில் கொலை செய்து விட்டு பின்பு அதை மறைக்க தந்தூரி அடுப்பில் எரிக்க முயன்றார்.
  இங்கே தந்தூரி அடுப்பில் எரிக்க முயன்றது புதுமையாக இருக்கிறதே ஒழிய அவர் கொலை செய்த வகை உணர்ச்சி வயப்பட்ட கொலையே.

  High court எப்படி தூக்கு தண்டனை உறுதி செய்தது என்று புரியவில்லை.
  Supreme court தண்டனை குறைப்பு செய்தது சரியே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க