ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் காசிபூர் பகுதியில் உள்ள அரசு உறைவிட ஆரம்ப பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் இதிஸ்ரீ பிரதான் (வயது 27). இவர் பூரி மாவட்டம் டிலாங் பகுதியை சேர்ந்தவர். தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வரும் இவர் அங்குள்ள மாணவியர் விடுதிக்கும் காப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (27.10.2013) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அக்குழந்தைகளுடன் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலர் பள்ளிக்குள் புகுந்து இதிஸ்ரீ பிரதான் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டு பிறகு தப்பி ஓடி விட்டனர். 90 சதவீதம் உடலில் தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் இதிஸ்ரீ பிரதான்.

கடந்த ஜூலை 18-ல் பள்ளியின் ஆய்வாளர் நேத்ரானந்தா தண்டசேனா என்பவர் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது ஆசிரியை இதிஸ்ரீயை பள்ளியிலேயே பாலியல் ரீதியாக அவர் தொந்தரவு செய்துள்ளார். தொடர்ச்சியான பாலியல் அத்துமீறல்களை சகிக்க முடியாத இதிஸ்ரீ, ஆய்வாளர் மீது திக்ரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மாவட்ட கல்வி அதிகாரியிடமும் அவர் மீது புகார் தரப்பட்டது. இரு புகார்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வரின் சிறப்பு செல் வரை தனது புகாரை அனுப்பியிருந்தார் இதிஸ்ரீ பிரதான்.
மூன்று மாத காலமாக பள்ளி கண்காணிப்பாளர் மீது எவ்வித நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை. இம்மாதத் துவக்கத்தில் இது பற்றி விசாரித்த ‘பணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொந்திரவுகளுக்கு எதிரான அரசு கமிட்டி’, ‘பள்ளி ஆய்வாளர் குற்றமிழைத்துள்ளார்’ என்பதை உறுதி செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இதைத் தொடர்ந்து தன் மீது முன்னர் தரப்பட்ட புகாரை வாபஸ் பெறக் கோரி இதிஸ்ரீயிடம் பலமுறை நேரில் மிரட்ட ஆரம்பித்தார் நேத்ரானந்தா தண்டசேனா.
ஞாயிற்றுக் கிழமை இரவும் பள்ளி விடுதிக்கு வந்து இதிஸ்ரீ பிரதானிடம் புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்திய ஆய்வாளர் அவர் மறுக்கவே மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றி உயிரோடு தீ வைத்துக் கொளுத்தினார். இதற்கு பிறகு தான் பள்ளி கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் புகார் மீது நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை துணை உதவி ஆய்வாளர் எம்.டி. பிரதான் ஆகியோர் அரசினால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ”இச்செயல் மனித தன்மையற்ற செயல், காட்டுமிராண்டித்தனமானது” என்று வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர் நவீன் பட்நாயக், பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவச் செலவை முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து தந்து விடுவதாகவும் இப்போது கூறியுள்ளார்.
ஒப்பந்த ஆசிரியைகள் பலரும், பெண்கள் அமைப்பினரும் தலைநகர் புவனேஸ்வரில் தலைமைச் செயலகத்திற்கு முன்பாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘மூன்று மாதங்களுக்கு முன் தரப்பட்ட புகார் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த மனித தன்மையற்ற செயலை தவிர்த்திருக்கலாமே!’ என்று அப்பெண்கள் பலரும் கேட்கின்றனர். பிணையில் வரத்தக்க பிரிவுகளில் வழக்கு தொடர்ந்ததன் மூலம் பள்ளி ஆய்வாளருக்கு உள்ளூர் போலீசார் மறைமுகமாக உதவி புரிந்துள்ளனர் என்பதையும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளனர். இந்திய அளவில் பெண்கள் மீது வன்முறை, பாலியல் அத்துமீறல்கள் நடப்பதில் ஒடிசா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
”தொண்ணூறு சதவீதம் தீக்காயம் இருப்பதால் ஓரளவு அப்பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கிறோம்” என்று மாவட்ட மருத்துவ அலுவலர் கே.வி.எஸ். சௌத்திரி முன்னதாக கூறியிருந்தார். அப்பெண்ணின் மரணம் ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டு விட்டது. ஒட்டிக் கொண்டிருந்த உயிரின் மூலம் மாஜிஸ்டிரேட்டிடம் இதிஸ்ரீ வாக்குமூலம் தந்திருப்பதால் குற்றவாளி பிடிபடும் பட்சத்தில் தண்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை வாக்குமூலம் தருவதற்கு முன்னரே இதிஸ்ரீ இறந்திருந்தால் இதனை தற்கொலை என்றுதான் உள்ளூர் போலீசார் மூடிமறைத்திருப்பார்கள்.
அதற்கு பெண் என்ற ஒரு காரணம் மட்டுமின்றி, அவர் ஒரு ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர் என்பதும் தான். அந்த வறிய வாழ்நிலைமையின் காரணமாகத்தான் அவர்களை தனது வக்கிர புத்திக்கு ‘பயன்படுத்திக்’ கொள்ளலாம் என்ற ஆய்வாளரின் அரசு உத்தியோக அதிகார ஆணாதிக்க புத்தி எடை போடுகிறது. அந்த அதிகாரத்தை கேள்வி கேட்டதோடு மட்டுமில்லாது தண்டனை வாங்கித் தருமளவுக்கு ஒரு எளிய பெண் போவதை ஏற்றுக் கொள்ளாத மாவட்டக் கல்வி அலுவலரும் புகாரை விசாரிக்க மறுக்கிறார். கூடவே பார்ப்பனிய ஆணாதிக்க கண்ணோட்டமும் ஆண்களிடம் செயல்படுகிறது.
மாதம் மூவாயிரம் முதல் ஐயாயிரம் ரூபாய் வரை மட்டுமே சம்பளமாக பெறும் இவர்களுக்கு விடுமுறை காலங்களில் சம்பளம் கிடையாது என்பதுடன் எந்த பணிப்பாதுகாப்பும் கிடையாது. அவர்களது பணிப்பாதுகாப்பு என்பதே பள்ளிக்கு வரும் கல்வித் துறை ஆய்வாளர்களின் கண்ணசைவில் தான் இருக்கிறது. எனவே தான் வரும் ஆய்வாளர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் இந்த தொகுப்பூதிய ஆசிரியர்கள் இருந்து வருகின்றனர்.
ஆரம்பக் கல்வியை கூட மக்களுக்கு தருவதில் இருந்து விலகி விட்ட அரசு, ஒப்பந்த ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மூலமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நியமித்து வருகிறது. இந்த ஆசிரியர்கள் கொத்தடிமைகளை விட கேவலமாக சுரண்டப்படுகின்றனர். இச்சுரண்டல் பெண்களாக இருப்பின் பாலியல் ரீதியிலானதாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. இந்த படித்த கொத்தடிமைகள் தரும் புகார்களை அதனால் தான் மாவட்ட ஆட்சியர், கல்வி அலுவலர் போன்றோர் உதாசீனம் செய்கின்றனர். இதன் விளைவாகத்தான் இதிஸ்ரீ பிரதான் மரணத்தை தழுவ இருக்கிறார். தனது உயிருக்கு ஆபத்து என்றும், மிரட்டல்கள் வருகின்றது என்றும் பலமுறை அவர் புகார் செய்தும் காதுகொடுத்து கேளாத அரசு குற்றவாளி நேத்திரானந்தா தண்டசேனாவை கண்டுபிடிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தவறி விட்டது என்று அதனால்தான் புலம்புகிறார் அவரது சகோதரர்.
மேலும் படிக்க