privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதனியார் ஆஸ்பத்திரி பணம் பிடுங்கவே அரசு மருத்துவமனை புறக்கணிப்பு

தனியார் ஆஸ்பத்திரி பணம் பிடுங்கவே அரசு மருத்துவமனை புறக்கணிப்பு

-

அரசு மருத்துவமனை
புறக்கணிக்கப்படும் அரசு மருத்துவமனைகள்.

தனியார் ஆஸ்பத்திரிகள் பணம் பிடுங்கவே…
அரசு மருத்துவமனைகள் புறக்கணிக்கப்படுகின்றன

தரமான இலவச சிகிச்சை பெறுவது நமது உரிமை
தரமற்ற சிகிச்சை அளிப்பது குற்றம்

கண்டன ஆர்ப்பாட்டம்
21.11.2013 வியாழன் மாலை 4.00 மணி
பாலக்கரை, உழவர் சந்தை முன்பு, விருத்தாச்சலம்

நமக்காக
நாம்தான் போராட வேண்டும்
அனைவரும் வாரீர்… போராட்ட நிதி தாரீர்

அரசு மருத்துவமனைகளில் அவலங்கள்
விதியே என கருதாமல் – போராடுவோம் வாரீர்

ன்பார்ந்த பொதுமக்களே!

அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு முறை சென்று பாருங்கள். நமது நாட்டின் வளர்ச்சியை, சுகாதாரத்தை, மனிதாபிமானத்தை, மனசாட்சியை, நேர்மையை, மருத்துவ தொழில் தர்மத்தை, முகக் கண்ணாடியாக பார்க்கலாம்.

காலையில் ஓ.பி. சீட்டு வாங்குவதற்கு கால் வலிக்க பல மணி நேரம் நிற்க வேண்டும். சீட்டை வாங்கிட்டு மருத்துவரை பார்க்கப் போனால் வாரச் சந்தை போல் நெரிசல். மருத்துவரை பார்த்தால் கையில் சீட்டைக் கொடுத்து இப்ப இங்க பாத்துக்க என்று சொல்லி சாயங்காலம் 6-00 மணிக்கு தன் மருத்துவமனைக்கு வர சொல்லுகிறார். அனைத்து வியாதிகளுக்கும் ஒரே மாத்திரைதான். ஊசி போட போனால் நாம சிரின்ஜ் வாங்கிட்டு போகணும்.

ஊசி போடுவதற்கு 10 ரூபாய் கட்டணம். பிரசவம் பார்க்க ரூ 800, மஞ்சள் காமாலை பரிசோதனைக்கு ரூ 150, இரத்த பரிசோதனைக்கும் பணம், கட்டு போடுவதற்கு ரூ 20, பிரேத பரிசோதனையா அதற்கு துணி, குவார்ட்டர் செலவு என பிறப்பு முதல் இறப்பு வரை பணம் கறக்கப்படுகிறது. பணம் கொடுக்காமல் பிணம் கூட வெளியே போக முடியாது. நோயால் அவதியுறும் மக்கள் வேறு நாதியில்லாமல்தான் அரசு மருத்துவமனைக்கு போகிறார்கள். இந்த கொடுமை பணிபுரியும் மருத்துவருக்கு, அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற, நாடாளுமன்ற, நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இருந்தும் இத்தகைய அவலம் தொடர்கிறது.

அவசர சிகிச்சை பிரிவு, காசநோய் சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, பல் மருத்துவம், கண் சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை, மகப்பேறு பிரிவு, இரத்த வங்கி, எக்ஸ்-ரே, ஸ்கேன், இ.சி.ஜி என பல பிரிவுகள் உள்ளன. ஆனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவரையும் கடலூர் போ, சிதம்பரம் போ என விரட்டுகிறார்கள். ஆம்புலன்ஸ் செலவு நோயாளி தலையில் விழும். காரணம் எப்போதுமே அரசு ஆம்புலன்ஸ் ரிப்பேராகத்தான் இருக்கும். அப்போதுதான் தனியார் ஆம்புலன்ஸ் வருமானம் பார்க்க முடியும். அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைப்பதை உத்திரவாதப் படுத்தாமல், போனால் போவது என்ற அளிக்கும் சிகிச்சையை பெறுவதற்கு நாம் பிச்சைக்காரர்கள் அல்ல, அவை நமது உரிமை.

அரசு மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால் கோடி கணக்கில் முதலீடு போட்டு, பல லட்சம் செலவு செய்து படித்த டாக்டர்கள் நடுத்தெருவுக்கு வந்து விடுவார்கள். தனியார் மருத்துவக் கல்லூரியில் பரிசோதனைக்கு காசு கொடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் வருமானம் பார்க்கவே, அரசு மருத்துவமனைகள் அவலங்களாக மாற்றப்படுகின்றன. அரசின் கொள்கையே இதுதான்.

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை எலி கடிப்பதும், நோய்களை உற்பத்தி செய்யும் இடமாக மருத்துவமனைகள் காட்சி அளிப்பதும், அதை மருத்துவ அதிகாரி தினமும் பார்த்து செல்வதும் எப்படி சகஜமாக மாறியது? குளிர்சாதன வசதி இல்லாமல் ஒரே அறையில் செத்த நாயை தூக்கிப் போடுவது போல் இறந்த உடல்களை பிணவறையில் போட்டு வைப்பதும், நோய் வராமல் தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாத அரசு, நோய் வந்த பிறகு முறையாக  சிகிச்சை அளிக்கும் என்பதை நம்ப முடியுமா? சுகாதாரமான குடிநீரை அனைவருக்கும் அரசு வழங்குமானால், குப்பைகளை, சாக்கடை கழிவு நீர் முறையாக பராமரிக்கப்பட்டால் பாதி நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

பிரசவத்தை பெரும் நோயாக மாற்றி அச்சுறுத்தி பிரசவத்திற்கு ரூ 30,000-க்கு மேல் வருமானம் பார்க்கிறார்கள். அரசு மருத்துவமனையில் பிரசவம் சரியாக பார்க்காமல் இருப்பதும், தனியார் மருத்துவமனைக்கு வருமானம் வருகிறது என்பதும் ஒன்றை ஒன்று சார்ந்தது.

இலவசம் என்பது மக்களுக்குத்தான், ஆனால் அங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கும், ஊழியர்களுக்கும் பல ஆயிரம் ஊதியம் கொடுக்கப்படுகிறது. நம் மக்களுடைய வரிப்பணம் நாம் ஆரோக்கியமாக வாழ பயன்படவில்லை. எனில் நாம் ஏன் அரசுக்கு வரிப் பணம் செலுத்த வேண்டும். இந்த அரசின் எஜமானர்கள் மக்கள்தான். அரசு மருத்துவமனை மட்டும் அல்ல, அரசுப் பள்ளிகள், அரசு போக்குவரத்து அனைத்தும் நம் சொத்து. அதை பாதுகாப்பதும், பராமரிப்பதும் நம் கடமை. தகுதியான சிகிச்சை அரசு மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். இதை அலட்சியப்படுத்தும் மருத்துவர்களும், ஊழியர்களும், கிரிமினல் வழக்கில் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு பொதுமக்களாகிய நாம் விழிப்புணர்வுடன் போராட வேண்டும்.

ஆர்ப்பாட்டம் போஸ்டர்மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இரயில்வே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக வெளியே கிளினிக் வைத்து கொள்ளக் கூடாதென சட்டம் உள்ளது. மாநில அரசும் அது போல் சட்டம் கொண்டு வர வேண்டும். இன்றைய நிலையில் அரசு மருத்துவமனை என்பது அடிதடி வழக்குகளுக்கு ஏ.ஆர். என்ட்ரி போடவும், பிற மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு ஆள் பிடிக்கும் ஏஜென்ட் வேலை செய்யவும், பிரேத பரிசோதனை செய்யும் இடமாகவும் மாறி வருகிறது. உயிருடன் இருப்பவனுக்கு பயன்படாத நம் அரசு மருத்துவமனையை எதிர்த்து நாம் போராடாமல் யார் போராடுவார்கள்?

திருச்சி ஜோசப் மருத்துவமனையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்த போது 66 பேருக்கு ஒரு கண் பார்வை நிரந்தரமாக பறி போனது. தவறு செய்த மருத்துவர்களை அரசு பாதுகாத்தது. அந்த வழக்கை எமது மனித உரிமை பாதுகாப்பு மையம் எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து போராடியது. உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ரூ 66 லட்சம் இழப்பீடும் பெற்றுத் தந்தோம். மேலும் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவும் பெற்றோம். வழக்கு விசாரிக்கப்பட்டு திருச்சி, பெரம்பலூர் ஜோசப் மருத்துவமனை மருத்துவர்கள்  குற்றவாளிகளாக திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்கள். இந்தியாவில் மருத்துவர்கள் தவறான சிகிச்சைக்காக இழப்பீடு கொடுத்ததுடன் கிரிமினல் வழக்கை எதிர்கொள்வது இதுதான் முதல் முறை.

அது போல் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தவறு செய்த மருத்துவர்கள்  மீது கிரிமினல் வழக்கு தொடரலாம். இழப்பீடும் பெறலாம்.

புகார் அனுப்ப வேண்டிய முகவரி

மாநில மனித உரிமை ஆணையம்
143, குமாரசாமிராஜா சாலை,
கிரீன்வேஸ் ரோடு, சென்னை

இணை இயக்குனர்
அரசு தலைமை மருத்துவமனை
கடலூர் – 04142 230042, 292010

தமிழக அரசே,

  • விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டு முதல் எலும்பு முறிவு சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிகிச்சை பிரிவுகளுக்கும் போதிய மருத்துவர்கள், ஊழியர்களை போர்க்கால அடிப்படையில் பணி அமர்த்து.
  • அனைத்து வகையான மருத்துவ சிகிச்சை பிரிவுகளுக்கும், போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் மருத்துவ உபகரணங்கள் வழங்கு. நாய்க் கடிக்கும், பாம்புக் கடிக்கும் போதிய மருந்து இருப்பில் வை.
  • மருத்துவமனை வளாகத்தை சுகாதாரமாக பராமரிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு. ஏழைகளை மிரட்டி பணம் பறிக்கும் ஊழியர்கள்,  மருத்துவர்கள் மீது கிரிமினல் வழக்கு போடு. விருத்தாசலம் மருத்துவமனைக்கு குளிர்சாதன பிணவறை வசதி செய்து கொடு.

உரிமைகளுக்காக போராட, உறுப்பினராக சேருங்கள்.

தகவல் :

மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்