Thursday, May 30, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கவைகுண்டராஜனை நடுங்க வைத்த தூத்துக்குடி பொதுக்கூட்டம்

வைகுண்டராஜனை நடுங்க வைத்த தூத்துக்குடி பொதுக்கூட்டம்

-

தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை அம்பலப்படுத்தும் போஸ்டர்கள் தூத்துகுடி நகரத்தின் சுவர்களெங்கும் முற்றுகையிட்டிருந்தன. “தாதுமணல் கொள்ளையன் V.V.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்!” – என்கிற முழக்கங்களோடு கடந்த சில வாரங்களாய் தோழர்கள் தூத்துகுடி மற்றும் கடலோரப் பகுதிகளில் செய்திருந்த வீச்சான பிரச்சாரங்களின் அடையாளங்களை நகரெங்கும் நம்மால் காண முடிந்தது.

நாம் சரியாக 5:00 மணி அளவில் பொதுக்கூட்டம் நடக்கவிருந்த அண்ணா நகர் பகுதிக்குச் சென்று விட்டோம். வி.வியை எதிர்த்து வி.வியின் கோட்டையான தூத்துக்குடியில் ஒரு பொதுக்கூட்டம் என்பதை மக்கள் வியப்போடு பேசிக் கொண்டார்கள். பொதுக்கூட்ட மேடையின் பக்கவாட்டுப் பகுதியிலும் பின்புறமும் வைகுண்டராசனின் கொள்ளைகளை விளக்கியும் பொதுக்கூட்ட முழக்கங்களைத் தாங்கியும் பெரிய ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. எழுச்சியான பறை முழக்கங்களின் இடையே நிகழ்ச்சி அமைப்பாளர்களின் அறிவிப்பு வெளியானது; கடலோர கிராம மக்கள் நீண்ட தொலைவிலிருந்து பொதுக் கூட்டத்தைக் காண வந்து கொண்டிருப்பதால், அவர்களின் வசதி கருதி கூட்டம் 5:30 மணிக்குத் துவங்கும் என்றது அறிவிப்பு. சரியாக 5:30 மணிக்கு கூட்டம் துவங்கியது.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர் வாஞ்சிநாதன் தலைமையுரை நிகழ்த்தினார். உண்மையறியும் குழுவாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச்  சேர்ந்த வழக்கறிஞர்கள் கடற்கரையோர கிராமங்களுக்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்ற போது சந்தித்த சவால்களையும், தோழர்கள் மக்களின் ஆதரவோடு களத்தில் சவால்களை எதிர்கொண்ட விதம் குறித்தும் விளக்கினார். பெரியதாழையில் மக்கள் பத்து பேருடன் வழக்கறிஞர்கள் 6 பேர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த போது வைகுண்டராசனின் கூலிப்படையைச் சேர்ந்த 150 பேர் சுற்றி வளைத்துக் கொண்டதையும், ஊர் மக்களின் ஆதரவைக் கண்டு அந்த கூலிக் கும்பல் பின் வாங்கிச் சென்றதையும் விவரித்தார். வி.வி மினரல்ஸ் அமைப்பை எதிர்ப்பது இதே தொழிலில் இருக்கும் வேறு முதலாளிகளுக்கு சாதகமாகச் செல்லாது என்றும் நம்முடைய கோரிக்கையே வி.வி மணல் அள்ளக்கூடாது என்பது மட்டுமின்றி வேறு யாரும் தாதுமணல் அள்ளத் தடைவிதிக்க வேண்டும் என்பது தான் என்றும் விளக்கினார்.

தொடர்ந்து பேசிய தோழர் வாஞ்சிநாதன், முதலில் இந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை தடை விதித்ததையும் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை நாடியே ம.உ.பா மையம் கூட்டத்திற்கு அனுமதி பெற்றதையும் குறிப்பிட்டு விட்டு, பிரச்சாரத்திற்கான கால அளவை அதிகரித்தும் இரண்டு முறை வைகுண்டராசனின் முகத்திரையை மக்கள் முன் கிழித்துப் போட வாய்ப்பளித்தும் உதவிய காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தோழர் வாஞ்சிநாதனைத் தொடர்ந்து கடற்கரையோரங்களைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களின் ஊர்கமிட்டித் தலைவர்களும் திருநெல்வேலி மாவட்ட மீனவர் கூட்டமைப்பின் தலைவரான எஸ்.ஏ ஜோசப் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் கருத்துரை வழங்கினர். உவரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வி அந்தோனி அவர்கள் பேசும் போது தான் வாழ பிறரைக் கெடுக்கும் மனநிலை கொண்ட வி.வி கம்பெனியின் அணுகு முறையை விமர்சித்தார். மேலும், ஆபத்தான கணிமங்களைக் கொண்ட மணலை அள்ளுவதும், பாதுகாப்பற்ற சூழலில் அதைப் பிரித்தெடுப்பதும் தங்கள் பகுதியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை விவரித்தார். தனது குடும்பத்திலேயே தனது அண்ணன், அண்ணி மற்றும் அவர்களது மகள் ஆகியோர் புற்றுநோய்க்கு பலி கொடுத்திருப்பதை உருக்கமாக விவரித்தார்.

பொதுக்கூட்ட மேடையின் முன் திரளான மக்கள் அமர்ந்திருந்தனர். இது போக, மேடையின் பக்கவாட்டிலும், மேடையின் பின்புறமும், கூட்டத்தின் இரு பக்கத்திலும் அடைசலாக பலர் நின்று கொண்டு கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஊர்கமிட்டித் தலைவர்கள் பேசத் துவங்கியிருந்த சமயத்தில் மேடையின் பின்புறமிருந்து வலது பக்கவாட்டுப் பகுதிக்கு சிலர் சாராய நெடியோடு நுழையத் துவங்கினர். அதே நேரத்தில் கூட்டத்தின் பின்பக்கமாக 10-20 பேர் நாற்காலிகளை ஆக்கிரமித்து அமர்ந்தனர்.

சில நிமிடங்களில் நான்கைந்து பேர் கூட்டத்தின் பின்பக்கமாக வந்து தாங்கள் ஏற்கனவே உள்ளே அனுப்பிய நபர்களை வெளியே வருமாறு அழைத்து ஒவ்வொருவர் கையிலும் ஐநூறு நூறு ரூபாய்த் தாள்களைத் திணித்தனர். காசை வாங்கியவர்கள் புதிதாக வந்தவர்களோடு சேர்ந்து கொண்டு ‘வேலை வாய்ப்புத் தந்த வள்ளல் வைகுண்டராசன் வாழ்க’ என்று கூச்சலிடத் துவங்கினர். ஏற்கனவே வைகுண்டராசன் அனுப்பியவர்களைத் தவிர கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் யாரும் இவர்களை சட்டையே செய்யவில்லை. பாதுகாப்புக்கு நின்றிருந்த செஞ்சட்டைத் தோழர்களும் ம.உ.பா மைய வழக்கறிஞர்களும் இந்த கும்பலை நோக்கி விரைந்து வரவே பின்வாங்கினர்.

கூட்டத்தின் பின்பக்கத்தில் தாங்கள் ஏற்பாடு செய்திருந்த ‘கலவரம்’ பிக்கப் ஆகவில்லை என்று தெரிந்ததும் மேடையின் வலது பக்கவாட்டில் ’சாராய’ நெடியோடு ஊடுருவிய கும்பல் தங்களது முயற்சியைத் துவக்கியது. ‘யாருலெ எங்க சாதி ஆள கொள்ளையன்னு சொல்லுதா’ என்று கூட்டத்தோடு கூட்டமாக பொதுவாக கொளுத்திப் போடப் பார்த்தனர். மக்கள் கண்டு கொள்ளவில்லை. ப்ரவுன் நிற சிலுக்கு சட்டை போட்டிருந்த 48 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் (இவர் ஈழத் தமிழர்களுக்காக காமென்வெல்த் மாநாடை எதிர்த்து கடையடைப்பு செய்ய மாட்டோம் என்று அறிவித்த போட்டி வணிகர் சங்கத்தின் தலைவர் விக்கிரமராசாவின் சகோதரர் என்றனர்) மேடையை நோக்கி பக்கவாட்டிலிருந்து முன்னேறினார். நடையில் கொஞ்சம் தள்ளாட்டம் இருந்தது.

“தொழிலதிபர் வைகுண்டராசனை கொள்ளையன் என்று எப்படி சொல்லலாம்?” என்று குரல் எழுப்பியது சிலுக்கு சட்டை. கூட்டத்தோடு ஊடுருவியிருந்த மற்ற அல்லக்கைகள் எப்படித் துவங்குவது என்று குழம்பி நின்று கொண்டிருக்க, இரண்டு பேர் மட்டும் ‘எங்க சாதிய எப்படிலே தப்பா பேசுறிய?’ என்று குரல் உயர்த்தி அவரோடு சேர்ந்து கொண்டனர். இதற்குள் பாதுகாப்பு அணியிலிருந்த தோழர்கள் இவர்கள் மூவரையும் சுற்றி வளைத்து அப்புறப்படுதத் துவங்கினர். நிகழ்ச்சியை பொறுப்பாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த உளவுப் பிரிவைச் சேர்ந்த போலீசு ஒருவரும் இவர்களை வெளியேறச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தார். பாதுகாப்புப் பிரிவு தோழர்கள் கையில் நீண்ட லாட்டிக் கம்புகளோடு விரைந்து வருவதை கவனித்துக் கொண்டிருந்த அவருக்கு தாமதித்தால் என்னவாகும் என்று தெரியாதா – சமயோஜிதமாக செயல்பட்டார்.

மேடையின் பின்புறம் இருந்து சட்டம் ஒழுங்கு போலீசாரும் விரைந்து வந்து இம்மூவரையும் அப்புறப்படுத்தினர். இவர்களோடு ஒரு பத்து இருபது அல்லக்கைகளும் மேடையின் பின்னே சேர்ந்து கொண்டனர். செஞ்சீருடையில் இருந்த பாதுகாப்பு அணியைச் தோழர்கள் மேடையின் பின்னே இரண்டடுக்குகளாக அரண் அமைத்து நின்றனர். அவர்களுக்கு முன் போலீசார் எதிர்புறமாகத் திரும்பி வைகுண்டராசனின் ’சாராய அணியை’ தடுத்து பாதுகாத்துக் கொண்டனர். போலீசார் எதிர்புறமாக அவர்களை நெட்டித் தள்ளி அருகிலிருந்த இருட்டுச் சந்துக்குள் கொண்டு சென்று விட்டனர். அங்கிருந்து கொண்டு விசிலடித்துக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தனர்.

இதற்குள் பேசிக் கொண்டிருந்த ஊர்கமிட்டியைச் சேர்ந்தவரிடமிருந்து மைக்கை வாங்கிய தோழர் வாஞ்சிநாதன், போலீசார் இந்த சமூகவிரோத கும்பலை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென்று எச்சரித்தார். மேலும் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் தோழர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும், மக்கள் யாரும் கூட்டத்தை விட்டு விலகத் தேவையில்லை என்றும் அறிவித்தார். விசில் சத்தம் அதிகரிக்கவே கலைக்குழு தோழர்கள் அழைக்கப்பட்டனர். உற்சாகமான பறையொலியும் போர்க்குண மிக்க பாடலும் துவங்கின – விசில் சத்தங்களும் கூச்சல்களும் கீழ் அழுந்தின; மக்களின் கவனம் மேடையை நோக்கிக் குவிந்தது.

நாங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்த கும்பலை நோக்கிச் சென்றோம். எப்படி கோஷம் போடுவது, என்ன கோஷம் போடுவது என்று திட்டமிடாமல் வந்திருந்தனர். ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் கத்தித் தீர்த்தனர். சிலர் வைகுண்டராசன் வாழ்க என்றனர், சிலர் நாடார்களைப் பற்றிப் பேசாதே என்றனர், மொத்தம் 40 பேர் வரை இருக்கலாம். தினத்தந்தியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பொறுப்பாக வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் – புரிந்து கொள்ள முடிந்தது. அந்த கும்பலில் நின்று ஆவேசமாக கத்திக் கொண்டிருந்த ஒருவரை ஏட்டு ஒருவர் விளித்தார்,

“யேல நீ இங்கெ என்னலெ செய்தா?”

“அண்ணாச்சி நீங்களா, நல்லா இருக்கியளா” என்று அவரை நெருங்கியவன், தன் கையிலிருந்த செல்போனில் எதையோ காட்டி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். பின் மீண்டும் கூட்டத்தோடு சேர்ந்து ஆவேச முகம் காட்டத் துவங்கினான். தொழில்முறை நெருக்கமாக இருக்கலாம்; நமக்குத் தெரியவில்லை. மீண்டும் மேடையை நோக்கித் திரும்பினேன். மேடைக்கு வலது பக்கவாட்டில் சிறு கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர், “இன்னிக்கு நல்லா வசமா மாட்டுவானுவனில்லா பாத்தேன், ஓடிட்டானுவளே” என்ற தேனீர் கடைக்காரரிடம் மளிகைக் கடைக்காரர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தோழர்களை சுட்டிக்காட்டினார், “அந்தா பாருவே கைல எந்தாம் பெரிய கம்பு வச்சிருக்காவன்னி… அந்த தெள்ளவாரிப் பயலுவ மாட்டியிருந்தா பல்லைக் களத்தி கையில குடுத்து அனுப்பியிருப்பாவ” என்று சிரிக்கத் துவங்கினார். பக்கத்திலிருந்த பலரும் அதை ஆமோதித்து சிரித்துக் கொண்டனர். மேடையில் வெவ்வேறு கடற்கரை ஊர்களைச் சேர்ந்த கமிட்டி பிரதிநிதிகளும் தலைவர்களும் உரையாற்றத் துவங்கியிருந்தனர்.

வைகுண்டராசன் தங்கள் ஊரிலேயே காசு கொடுத்து உதிரியான நபர்களை வளைத்து வைத்திருப்பதையும், கடற்கரையோர கிராமங்களில் பிளவு ஏற்படுத்தி வைத்திருப்பதையும் வேதனையோடு விளக்கினர். தனக்கு இணங்காதவர்களை நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குவது, எதிர்ப்பவர்களைக் கொல்வது என்று ஒழுங்கமைக்கப்பட்ட மாஃபியா கும்பலைப் போல் வைகுண்டராசன் செயல்பட்டு வரும் விதத்தை ஆற்றாமையோடு விவரித்தனர். தாது மணல் அள்ளுவதால் ஏற்படும் கதிர் வீச்சு அபாயங்களையும் அதனால் ஏற்படும் புற்றுநோய்  தாக்குதலையும் அவர்கள் விவரித்து, இது மீனவர்களின் பிரச்சினை மட்டுமல்ல – எல்லா மக்களுக்குமான பிரச்சினை என்பதையும் கடலும் கடல்சார்ந்த வளங்களும் மீனவர்களுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே சொந்தம் என்பதையும் எடுத்துரைத்தனர்.

ஊர்கமிட்டி தலைவர்களின் கருத்துரைகளைத் தொடர்ந்து ம.உ.பா மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ சிறப்புரை ஆற்றினார். மணல் கொள்ளையன் வைகுண்டராசனுக்கு எதிரான இந்த பொதுக் கூட்டத்திற்கு முதலில் தடைவிதித்த ’அம்மாவின்’ அதே போலீசு தான் இப்போது அனுமதியளித்துள்ளது என்றும், மணல் அள்ள முன்னர் அனுமதியளித்த அதே ‘அம்மா’ தான் இப்போது தற்காலிக தடை விதித்துள்ளார் என்பதையும் சொல்லி விட்டு, வைகுண்டராசனுக்கு எதிராக பேச அனுமதித்த ‘அம்மாவின்’ விருப்பத்திற்கு வைகுண்டராசனின் ஆட்கள் தடையாக இருக்கிறார்கள் என்றும், அப்படி ’அம்மாவின்’ விருப்பத்திற்கு தடையாக இருந்தால் என்ன கதியாகும் தெரியுமா என்றும் லேசாக ஒரு பிட்டைப் போட்டார். அது வரை மேடையின் பின்புறமிருந்து விசிலடித்துக் கொண்டிருந்தவர்கள் மொத்தமாக அடங்கிப் போய் விட்டனர். வடமாவட்ட அக்கினிச் சட்டி சூரியகுல ”சத்திரியர்கள்” தான் அப்படியென்றால் தென்மாவட்ட வலங்கை உய்யகொண்ட ரவிகுல “சத்திரியர்களும்” இப்படித்தான் – ’அம்மா’ என்றால் சப்தநாடிகளையும் ஒடுக்கிக் கொண்டு வாலை தொடையிடுக்கில் சொருகிக் கொள்வது தான் “சத்திரிய தர்மம்” என்பதை செயல்முறையாக விளக்கிக் காட்டினார் தோழர் ராஜூ.

தொடர்ந்து பேசிய தோழர் ராஜூ, மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் முந்தைய போராட்ட அனுபவங்களை விவரித்து போராட்டங்களில் பொய் வழக்குகளையும், சிறைத் தண்டனைகளையும் எதிர்கொள்ளாமல் குறுக்கு வழியில் வெற்றி பெரும் வாய்ப்புகள் இல்லை என்பதை விளக்கினார். மணல் கொள்ளைக்கெதிரான போராட்டம் இந்தப் பொதுக்கூட்டத்தோடு நின்று விடுவதல்ல என்றும் தொடர்ச்சியான போராட்டங்களின் தேவையையும் விளக்கிப் பேசினார்.

தோழர் ராஜூவைத் தொடர்ந்து இறுதியாக சிறப்புரையாற்ற வந்தார் மக்கள் கலை இலக்கியக் கழக  மாநில செயலாளர் தோழர் மருதையன். சந்தன மரங்களை வெட்டிய வீரப்பனைக் கொள்ளையன் என்றால் மணலைத் திருடி விற்கும் வைகுண்டராசனை எப்படி தொழிலதிபர் என்பது என்று கேள்வியெழுப்பினார். மேலும் இன்று காசுக்கும் குவார்ட்டருக்கும் கூச்சலிட வந்திருக்கும் இதே கும்பல், சில்லறை வணிகத்தை அபகரிக்க அந்நிய நிறுவனங்களும் ரிலையன்ஸ் போன்ற பகாசுர கார்ப்பரேட்டுகளும் முயன்ற போது எங்கே போயிருந்தார்கள் என்று கேள்வியெழுப்பினார். பெருவாரியான நாடார் உழைப்பாளிகள் ஈடுபட்டிருந்த சில்லறை வணிகத்தைக் காப்பாற்ற புரட்சிகர அமைப்புகள் முன்னெடுத்த இயக்கங்களை விவரித்த தோழர் மருதையன், தினசரி காலை மூன்று மணி துவங்கி நள்ளிரவு 11 மணி வரை ஓயாமல் உழைக்கும் நாடார்களுக்கு கொள்ளையன் ஒருவனைப் பிரதிநிதி என்று சொல்வது அந்த மக்களை இழிவு படுத்துவதாகும் என்று இடித்துரைத்தார்.

தொடர்ந்து, தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராசன், ஆற்றுமணல் கொள்ளையன் ஆறுமுகசாமி மற்றும் கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிசாமி ஆகியோரை இணைக்கு மையச்சரடு தனியார்மயம் என்பதை புள்ளிவிவரங்களோடு விளக்கினார். இயற்கை வளங்களைத் தனியார்கள் சூரையாடுவதற்கு வழிசெய்யும் விதமாக காட் ஒப்பந்தத்திற்குப் பிறகு சட்டங்களும் விதிமுறைகளும் மாற்றியமைக்கப்பட்டதை விளக்கிப் பேசினார். எனவே இதைத் தனித்தனியான பிரச்சினையாகப் பார்க்காமல் ஒரே கொள்ளைத் திட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் இதை எதிர்த்த போராட்டங்களும் ஒருமுகமான தாக்குதலாக இருக்க வேண்டுமென்பதையும் விவரித்தார்.

தாதுமணல் கொள்ளை பற்றிய பல்வேறு புள்ளிவிவரங்களை சுவையாகவும் எளிமையாகவும் விவரித்த தோழர் மருதையன், இந்தக் கொள்கையும் கூடங்குளம் அணுமின் நிலைய அனுமதியும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார். அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதன் பின்னே நடந்த மறைமுக பேரமாக தோரியம் உள்ள தாதுமணலை ஏற்றுமதி செய்ய இருந்த விதிகள் தளர்த்தப்பட்டன என்பதை அம்பலப்படுத்தினார். எழுச்சிகரமாக இருந்த அந்த உரையின் இறுதியில் எதிரியின் ஆற்றலைப் பார்த்து நாம் அஞ்சத் தேவையில்லை என்றும், அதற்காக ஓட்டுக்கட்சிகளை நம்பி அவர்களின் பின்னே செல்வது தோல்விக்கு வழிவகுத்து விடும் என்றும் சொன்னார். பிரம்மாண்டமான எதிரிகளான போஸ்கோ, டாடா போன்றவர்களை கலிங்காநகர், சிங்கூர், லால்கர் போன்ற பகுதிகளில் நடந்த மக்கள் போராட்டங்களே விரட்டியடித்தன என்பதை விளக்கி மக்கள் போராட்டங்களின் மேல் நம்பிக்கையூட்டினார்.

தோழரின் உரையைத் தொடர்ந்து புரட்சிகர கலைநிகழ்ச்சி நடந்தது. ”திருச்செந்தூரின் கடலோரத்தில்..” என்ற பக்திப்பாடலை பின் வருமாறு ரீமிக்ஸ் செய்திருந்தனர் – “திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராசன் அரசாங்கம்… தேடிக் காலில் விழுவோர்க்கெல்லாம்…” மக்களின் உற்சாகம் கரைபுரண்டோடியது. தொடர்ந்த கலைக்குழுவின் நிகழ்ச்சிகளை இரசித்த மக்கள் பொதுக் கூட்டத்தின் இறுதி வரை கட்டுப்பாட்டோடு இருந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம்

 1. தாதுமணல் குவாரிகளை மூடச் சொன்னால் அம்மா எந்த மன்ணையும் அள்ளவிடாமல் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கு.

 2. //ப்ரவுன் நிற சிலுக்கு சட்டை போட்டிருந்த 48 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் (இவர் ஈழத் தமிழர்களுக்காக காமென்வெல்த் மாநாடை எதிர்த்து கடையடைப்பு செய்ய மாட்டோம் என்று அறிவித்த போட்டி வணிகர் சங்கத்தின் தலைவர் விக்கிரமராசாவின் சகோதரர் என்றனர்) மேடையை நோக்கி பக்கவாட்டிலிருந்து முன்னேறினார். நடையில் கொஞ்சம் தள்ளாட்டம் இருந்தது.//

  I will not allow vikrama raja to conduct any meeting at Maraimalai nagar any more.

 3. ”திருச்செந்தூரின் கடலோரத்தில்..” என்ற பக்திப்பாடலை பின் வருமாறு ரீமிக்ஸ் செய்திருந்தனர் – “திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராசன் அரசாங்கம்… தேடிக் காலில் விழுவோர்க்கெல்லாம்…” அருமை…அருமை…

 4. மணற்கொள்ளையன் வைகுண்டராஜனை கோட்டையை இந்தப் பொதுக் கூட்டம் நிச்சயம் ஆட்டம்காண வைத்திருக்கும்.பதிவைப் படிக்கும் போது மிகவும் பெருமிதமாக இருக்கிறது. மணற்கொள்ளையனின் அடியாட்களின் அடாவடியையும் மீறி பொதுக்கூட்டத்தைச் சிறப்பாக நடத்திய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  வினவு தோழர்களே, முடிந்தால் பொதுக் கூட்ட உரை மற்றும் கலை நிகழ்ச்சிகளின் வீடியோவைப் பதிவேற்றுங்கள். நன்றி!!

 5. போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  இயற்கையை பற்றிய மிக முக்கியம்மான போராட்டம். இன்னைக்கு நாம் அனைவரும் நல்ல காற்று சுவாசிக்க காரணம் நம் முன்னோர்கள் இயற்கையை பாதுகாத்தனாலையே. நாம் இன்னும் புளுவைபோல் இருக்கலாமா…

 6. மனிதன் தன்னையும்,தன்னை சார்ந்தோரையும் அழிப்பதோடு நிறுத்தாமல் இயற்கையையும் சீரழித்தால் அதுவும் பொறுத்துக்கொள்ளும் என்றுக் நினைப்பானாகில்,அதையும் பார்த்து தவறைத்தட்டிக்கேட்டே பழக்கமில்லாத நாம் பொறுமையாகவே இருந்தால் அழியப்போவது தவறு செய்பவர்கள் மட்டுமல்ல நாமும்தாம்.[தூய்மையான மக்கள் கூட்டத்தை பார்த்து மேடையில் கண்ணீர் விட்டது மீனவத்தலைவர் மட்டுமல்ல நானும்தான்.]

 7. வைகுண்டராஜனின் கைத்தடிகள் அடிபடுவதை பார்க்கககும் வாய்ப்பு தூத்துக்குடி மக்களுக்கு கிட்டாமல் போய்விட்டயதே – தோழர்களுக்கு லட்டு தின்னும் வாய்ப்பு நழுவிவிட்டதே!!!

 8. தோழர்களே, பொதுக் கூட்ட உரை மற்றும் கலை நிகழ்ச்சிகளின் வீடியோவைப் பதிவேற்றுங்கள்..

 9. Due to VV annachi supporters oppose, the above said meeting was withdrawn immediately when it starts. Nadungunadhu podhukootamum vanginadhanum rajuvum kotathuku vandhirundha porikigalum dhan… So topic is wrong… VV annachi and his group never goes wrong.. It seems it is a war against NADAR’S

  • அட! ஆமா புல்லட்டு !..

   என்ன? ஒரு சின்ன வித்தியாசம்!! .. வி வி அண்ணாச்சி காலை நக்கிக் குடிக்கிற நாடார்களுக்கு எதிரான வாரு தான் ..

   அது சரி புல்லட்டு!, சென்னையில அங்க அங்க பாத்தா ஒரே மாதிரி அண்ணாச்சிக்கு ஆதரவுள்ள போஸ்டருங்க பல சாதிச் சங்கக்காரனுங்க பேருலயும் ஒட்டிருந்தானுங்களே!!..

   வி.வி. அண்ணாச்சி பொறப்புல ஏதாச்சும் குழப்பமோ!! .. கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கப்பு!!

 10. வினவுக்கு அன்பான வேண்டுகோள் தூத்துக்குடி தாது மணற்கொல்லை கலைனிகழ்ச்சி வீடியோவை விரைவாக போடவும்…………….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க