னித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை 10-ஆம் ஆண்டு தொடக்கவிழா 28.12.13 அன்று மடீசியா அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கிளைத் தலைவர் நல்லகாமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ம.லயனல் அந்தோணிராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

தாது மணல் கொள்ளையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் பெரியசாமி புரத்தைச் சார்ந்த எல்.எ.எழிலன், தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த எல்.எஸ்.ஜானி பூபாலராயர், நெல்லை மாவட்ட மீனவர் கூட்டமைப்பு தலைவர் உவரி எஸ்.ஏ.ஜோசப் ஆகியோர் பாதிப்புகள் பற்றி நேருரையாற்றினர்.

பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த எழிலன் பேசும் போது, “எங்களது கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்கோள பாதுகாப்பு பகுதியாகும். இங்கே அரிய கடல்வாழ் உயிரினங்களாகிய ஆமைகள், கடல் பசுக்கள், மற்றும் பவளப்பாறைகள், நிறைந்துள்ள பகுதியாகும். மத்திய மாநில அரசுகள் இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பலகோடி செலவில் பராமரித்து வருகின்றன. ஆனால் இந்தப் பகுதியில் வைகுண்டராசனின் வி.வி.மினரல்ஸ் கம்பெனி கடலுக்கு உள்ளேயே வந்து தாதுமணலை அள்ளிச் செல்கின்றது. இதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. கீழ வைப்பாறு பகுதியில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு அறிக்கை கொடுத்தார். வி.வியால் எங்களது கடற்கரை பகுதியே அழிந்து விட்டது. கடற்கரையில் நடப்பட்டிருந்த கன்னாச் செடிகள் பனைமரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. பவளப்பாறைகள், கடல் தாவரங்கள், சிப்பிகளின் ஊடாக தூண்போல் ஊடுறுவி தாங்கிநிற்கும் மணல் அனைத்தும் கரைந்து விட்டதால் மன்னார் வளைகுடா உயிர்கோள பாதுகாப்பு பகுதியே காணாமல் போய்விட்டது. கடல் இப்போது ஊருக்குள் வந்து விட்டது. கடற்கரையில் கிடைத்த நிலத்தடி நீர் உப்பாகி குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” என்று விளக்கினார்.

தூத்துக்குடியைச் சார்ந்த ஜானி பூபால ராயர் பேசும்போது, “தாது மணல் கொள்ளையன் வைகுண்டராசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் என்று தூத்துக்குடியில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதுவரை துணிந்து இப்படி யாரும் செய்யவில்லை. மீனவ மக்கள் பயந்தவர்கள் இல்லை. ஆனால் எப்படி செயல்பட வேண்டும் என்பது தெரியாமல் தான் தவித்து வந்தோம். மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் தோழமை அமைப்புகள் வழிகாட்டினார்கள். என் போன்ற இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளது மனித உரிமை பாதுகாப்பு மையம் மட்டும்தான். எதற்கும் போகாதே போகாதே என்று தடை போடுகின்ற என்னுடைய குடும்பத்தினர் இப்போது என்னைக் கட்டித் தழுவி ஊக்கப் படுத்துகின்றனர். அப்படிப்பட்ட இயக்கங்கள் கட்டாயம் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தும். அதற்கு எங்களது முழு ஒத்துழைப்பு உண்டு” என்று கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட மீனவர் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.ஏ.ஜோசப் அவர்கள் பேசும்போது, “மீனவமக்கள் உழைப்பாளிகள், உடல் வலிமை மனவலிமை உடையவர்கள். ஆனால் எங்களால் வி.வியை எதிர்க்க முடியவில்லை. ஆனால் மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர இயக்கங்களும் எதிர்த்துப் போராடுகின்றீர்கள். எங்களிடம் உள்ளது உண்மையான வீரம் அல்ல. உங்களுடைய போராட்டம் தான் வீரம் செறிந்தது. எனவே நாங்களும் இப்படிப்பட்ட போராட்டத்தோடு இணைய வேண்டும். எங்களுக்காக நீங்கள் போராடுகிறீர்கள். உங்களோடு நாங்கள் துணை நிற்போம். இணைந்து போராடுவோம்.” என்று உணர்ச்சிப் பெருக்கோடு உரையாற்றினர்.

“கொலைவழக்கில் சங்கராச்சாரிகள் விடுதலை நடந்தது என்ன?” என்பது பற்றி வழக்கறிஞர் தோழர் பாலன் பேசினார். “பாராளுமன்றம் மீது நடைபெற்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அப்சல்குரு சாட்சியங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் சட்ட விரோதமாக, அநியாயமாகத் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் 24 சாட்சியங்கள், ஒருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறியபின்பும் 10 ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்து, பேரம் பேசி நீதிபதியை விலைக்கு வாங்கியது அம்பலப்பட்டுப்போன, பின்பும் பெரியவாளு, சின்னவாளு எல்லாரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சங்கராச்சாரியும், சங்கரராமனும் ஒரே சைவைப் பார்ப்பனர்கள்தான். ஆனால் சங்கராச்சாரி கார்ப்பரேட்டுகளின் கையாள். சங்கரராமன் ஏழை. அதனால் தான் சங்கர ராமனுக்கு நீதிகிடைக்கவில்லை.

இது எதைக் காட்டுகிறது என்றால் சட்டத்தை உருவாக்குகிறவர்கள் (Law Makers) சட்டத்தை நிர்வகிக்கிறவர்கள் (Law Keepers) சட்டத்தை மீறுகிறவர்கள் (Law Breakers) எல்லோரும் ஒரே ஆட்கள்தான். மெக்காலே சட்டத்தை உருவாக்கும் போதே அதை விலைக்கு வாங்குகின்ற வகையிலே ஒரு பண்டமாகத்தான் (Commodity) உருவாக்குகிறான். எனவேதான் கார்ப்பரேட் பினாமி நீதியை விலைக்கு வாங்கிவிட்டார். ஆனால் எந்தக் குற்றமும் செய்யாத அப்சல் குரு தூக்கில் கொல்லப்பட்டார். அப்படியானால் இந்த சட்டமும் நீதியும் மக்களுக்கானது அல்ல. மக்களுடைய பிரச்னைகளுக்கான தீர்வு, நீதிமன்றங்கள் அல்ல போராட்டக்களங்கள் தான்” என்று பேசினார்.

“கொள்ளையடிக்கத் தில்லைக் கோயில் மீண்டும் தீட்சிதர்களிடமா?” என்ற தலைப்பில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு பேசினார். “10 ஆண்டுகள் சட்டத்தின் மூலமாகவும் மக்களைத்திரட்டியும் போராடி தில்லைக் கோவிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தோம். இப்போது ஜெயா அரசும் சு.சாமியும் சேர்ந்து கொண்டு தில்லைக் கோயிலை கொள்ளையடிக்க மீண்டும் தீட்சிதர்களிடம் ஒப்படைக்க சதி செய்து வருகின்றனர். இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஒத்துழைக்கத் தயாராகின்றனர்.

தில்லைகோவில் மீது தீட்சிதர்களுக்கு ஒருதுளி கூட உரிமை இல்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் கோவில் எங்களுடையது என்று வாதிடுகின்றனர். சுப்பரமணிய சாமி, ‘தில்லைக் கோவிலில் தமிழில் தேவாரம் பாடக்கூடாது. கோவில்களை அரசு நிர்வகிக்க அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 45-ஐ நீக்க வேண்டும். தீட்சிதர்களுக்கு கோவிலைவிட்டால் பிழைப்புக்கு வேறு வழி இல்லை’ என்று சொல்கிறார். ஆனால் கோயிலில் உண்டியல் வைத்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் ரூ 1 1\2 கோடி வசூலாகியுள்ளது. தீட்சிதர்கள் கோவில் சொத்தைக் கொள்ளையடித்தார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள், சிவில் கிரிமினல் கொலைவழக்கு உட்பட அவர்கள் மீது உள்ளன.

‘கோவில், வழிபாடு என்பது ஆன்மீகவாதிகளின் பிரச்சனை. நாத்திகர்களான நீங்கள் ஏன் இதில் தலையிடுகிறீர்கள்’ என்று கேட்கிறார்கள். பக்தர்கள் தங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்குப் போராட முன் வரவில்லை. பெரிய, பெரிய ஆதீனங்கள் மடாதிபதிகள் முன்வரவில்லை. ஆன்மீகப் பெரியோர்கள் மொழி, இனப்பற்றாளர்கள் முன்வரவில்லை. மொழித் தீண்டாமை, ஆலயத் தீண்டாமை அங்கே கடைபிடிக்கப்படுகிறது. அது தமிழன் மீது சுமத்தப்படுகிற அவமானம். அதை எதிர்த்து ஆன்மீக வாதிகள் போராட முன்வராத போது, அந்த அவமானத்தை துடைத்தெறிகிற வகையில் நாங்கள் போராடவேண்டியுள்ளது.

மதத்தைப் போற்றுகிறவர்கள் போராடினால் எங்களுக்கு அந்த வேலை இல்லையே. நாங்கள் போராடுவதற்கு எண்ணற்ற களங்கள் உள்ளன. அங்கே போய் போராடுவோம். போராடிக் கொண்டிருக்கிறோம். தில்லைக் கோவில் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப் படுமானால் தமிழ் மொழி மீதான தமிழன் மீதான அவமானம் தொடரும். அவற்றையெல்லாம் துடைத்தெறியாத வரை எங்களது போராட்டம் ஓயாது” என்று பேசிமுடித்தார்.

கிளையின் துணைத்தலைவர் வழக்குரைஞர் பா.நடராஜன் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவடைந்தது.

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க